Published:Updated:

"கிரிவெசிபுர..!’’ இலங்கையை பரபரப்பாக்கும் தமிழ் மன்னன்

இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, விரைவில் திரைக்கு வரவிருக்கும் `கிரிவெசிபுர'.

"கிரிவெசிபுர..!’’ இலங்கையை பரபரப்பாக்கும் தமிழ் மன்னன்
"கிரிவெசிபுர..!’’ இலங்கையை பரபரப்பாக்கும் தமிழ் மன்னன்

இலங்கையின் கடைசித் தமிழ் மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனின் வாழ்க்கை வரலாற்றை இதுவரை இலங்கைத் திரையுலகம் கண்டிராத வகையில் பெரும் பொருள்செலவில் தயாரித்துள்ளார், சிங்கள இயக்குநர் தேவிந்த கோங்கஹகே. இப்படத்தில், சிங்களர் - தமிழ்த் திரைக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றியுள்ளார்கள். கண்டி மன்னன்தான் இலங்கையின் கடைசி சிங்கள மன்னன் என்று நிலவி வந்த கருத்தைப் பொய்யாக்கி, தமிழ்ப் பேசும் மன்னரான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன்தான் கடைசி மன்னன் என்ற வரலாற்று உண்மையை முதல் முறையாக `கிரிவெசிபுர’ என்ற திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் வைக்கிறார்கள்.

கிரிவெசிபுர என்றால், மலைவாழ் மக்கள் வாழும் இடம் என்று அர்த்தம். இலங்கையில் ஒரு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படுவதைத்தான் பெரிய பட்ஜெட் படம் என்று சொல்வார்கள். ஆனால், `கிரிவெசிபுர' 13 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது. நாம் `பாகுபலி'யைக் குறிப்பிடுவதுபோல் `கிரிவெசிபுர'வை பிரமாண்டமான படம் என்று இலங்கை ஊடகங்கள் கொண்டாடி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. இலங்கையைக் கடைசியாக  ஆண்டது,  தமிழ் மன்னன்தான் என்று வரலாற்று ரீதியாக நிறுவவுள்ள இப்படத்தை, சிங்களரே இயக்கியுள்ளதால், வெளிவந்த பின் சிங்கள அமைப்புகள் எதிர்வினை ஆற்ற வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இப்படத்தில் மன்னர் காலத் தமிழில் பாடல் எழுதியுள்ள பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினிடம் இப்படம் பற்றிக் கேட்டோம். ``ஏரெடுத்து உழுதவன் வாளெடுத்து வரலாறு படைத்த கதை இது. ஆலமரமாய் அகல விரித்திருக்கும் அதிகாரத்தைத் தாங்கி நிற்பது எதுவென்று ஆய்ந்து பார்த்தால், அதன் ஆணிவேராய் சதிகளும், நம்பிக்கைத் துரோகங்களும் புதைந்து கிடக்கும். அதிகாரம் செய்வது என்பது மலர் பஞ்சணையில் மல்லாக்கப் படுத்துறங்குவதல்ல, நெருப்பாற்றில் நீந்துவது போன்றது. ஒரு கண்ணை மற்றொரு கண் காலி பண்ண நினைப்பது, அதிகாரம் வெறி கொள்ளும் இடத்தில் சாத்தியம். அதிகாரம் செய்வதற்குத் துரோகம் செய்கின்றனர். பின், துரோகத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்து அதிகாரம் செய்கின்றனர். இதுதான், இப்படத்தின் கரு.

அதிகாரத்தில் இருந்த மன்னனை மரணம் தின்று தீர்க்கிறது. அவன் அருகில் இருந்த அமைச்சர் ஆட்சியில் அமர ஆசைப்படுகிறான். அதனால், சதிகளின் முன்னே சரணடைகிறான். எங்கோ இருக்கும் உழவனை அழைத்து வந்து அவனை அரியணையேற்றி அழகு பார்க்கிறான்.  அவனை நம்பி கோட்டையிலிருந்துகொண்டே, கோட்டையைப் பிடிக்கத் திட்டமிடுகிறான். ஏர் ஏந்தி நின்றவன் வாளேந்தும் அதிகாரத்துக்கு வந்தவுடன், விவசாயிடம் வீரத்தை எதிர்பார்க்காத அமைச்சர், அவன் அருகில் இருந்துகொண்டே பல சதி வலையைப் பின்னுகிறான். அதிகாரத்தைக் கைப்பற்ற துரோகத்திடம் மண்டியிடுகிறான். நாட்டை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்தாவது அதிகாரத்தை அடையலாம் என்று சூழ்ச்சி செய்கிறான். இந்த ஆடு புலி ஆட்டத்தில் மந்திரியின் தலை உருளுகிறது. மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்ற கன்னசாமியின்  வாழ்வுதான், இது. 

இது நூற்றாண்டு தாண்டிய நிஜமாக இருந்தாலும், இதுதான் நிகழ்கால அரசியலிலும் நிஜம்!. அதிகாரம் எங்கெல்லாம் சிறகு விரிக்கிறதோ, அங்கெல்லாம் துரோகத்தின் வேட்டுகள் கேட்டுக்கொண்டே இருக்கும் என்பதை இப்படம் உணர்த்தும். சமீபத்தில் எங்கள் படக்குழுவினர் தமிழகம் வந்து வேலூரில் இருக்கும் விக்கிரம ராஜசிங்கனின் நினைவு மண்டபத்துக்கு அஞ்சலி செலுத்தினோம். இலங்கையின் மறைக்கப்பட்ட மன்னனின் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியாகவும், உண்மையை ஆவணப்படுத்தும் விதமாகவும் இப்படம் அமைந்துள்ளது.'' என்றார். 

சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் கலந்து கொண்டனர். இப்படத்தில் இலங்கையின் பிரபல திரை நட்சத்திரங்களான புபுது சதுரங்க, நிரஞ்சனி ஷண்முகராஜா, எல்ரோய் அமலதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

``படத்தில் மூன்று மொழிகளையும், மும்மதங்களையும் சார்ந்தவர்கள் பணியாற்றியுள்ளார்கள். தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்று மொழிகளும் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாடல்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. அதனால், இத்திரைப்படம் இலங்கையில் சமூக நல்லிணக்கத்திற்கு உந்து சக்தியாக அமையும்.'' என்று இயக்குநர் தேவிந்த கோங்கஹகே நம்பிக்கையாகப் பேசினார். இலங்கைத் திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை 'கிரிவெசிபுர' ஏற்படுத்தும் என்கிறார்கள்.