சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பரிந்துரை: இந்த வாரம் சினிமா - இயக்குநர் செழியன்

பரிந்துரை: இந்த வாரம் சினிமா - இயக்குநர் செழியன்
பிரீமியம் ஸ்டோரி
News
பரிந்துரை: இந்த வாரம் சினிமா - இயக்குநர் செழியன்

ஒருமுறை மட்டும் பார்த்தால் சாதாரணமான படமாகத் தெரியலாம்

‘ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் இயக்குநர் செழியன்.

பரிந்துரை: இந்த வாரம் சினிமா - இயக்குநர் செழியன்

“ஒரு பெரிய வீட்டில் வசதியாக வாழ்கிற அம்மா அப்பாவுக்கு நான்கு குழந்தைகள், அந்த வீட்டில் ஒரு பாட்டி, இரண்டு வேலைக்காரப் பெண்கள், கார் ஓட்டுநர், வளர்ப்பு நாய் எனச்   செழிப்பாக வாழும் குடும்பத்தில் யாருடைய கதையைச் சொல்லலாம்? சிறுவயதில் தன்னை வளர்த்த வேலைக்காரப்பெண்ணின் நினைவாக அவளது கதையையே சொல்ல முடிவு செய்கிறார் இயக்குநர் அல்போன்ஸோ க்யூரான். 

பரிந்துரை: இந்த வாரம் சினிமா - இயக்குநர் செழியன்

இவரது முந்தைய படம் Gravity.  விண்ணில் நடக்கும் கதையைச் சொன்ன  க்யூரான் யதார்த்தமான ரோமாவை தனது அடுத்த படமாக எடுக்கிறார். 1970களில் மெக்ஸிகோவில் நடந்த கார்பஸ் கிறிஸ்டி என்ற மாணவர் கலவரத்தின் பின்னணியில் ஒரு குடும்பத்தின் கதையை எடுத்து அந்தக் குடும்பத்தில் ஒரு அங்கமாக இணைந்திருக்கிற வேலைக்காரப் பெண்ணின் கதையைக் கறுப்பு வெள்ளையில் படம் பிடித்ததன் மூலம் அற்புதமான திரைப்பட அனுபவமாக மாறுகிறது `ரோமா’.

காட்சிமொழியில் எப்படிக் கதை சொல்ல வேண்டும் என்பதற்கு உதாரணமாக ரோமாவின் முதல் காட்சியைச் சொல்லலாம். க்ளியோ என்கிற அந்த வேலைக்காரப்பெண் பாட்டுப் பாடிக் கொண்டே வேலை செய்கிறாள். குழந்தைகளைத் தூங்க வைக்கிறாள். எழுப்புகிறாள். ஞாயிற்றுக் கிழமைகளில் காதலிக்கிறாள்... கர்ப்பமாகிறாள். கதையின் மைய இழைகளில் ஒன்றாக இது இருந்தாலும், ஒரு வேலைக்காரப் பெண் அந்த வீட்டில் வளர்கிற குழந்தைகளின் மூலம் தன் தாய்மையை உணர்கிறாள். அவள் எவ்வளவு அன்பாக இருக்கிறாள் என்பதும் அவள்மீது குடும்பத்தினர் எவ்வளவு அன்பாக இருக்கிறார்கள் என்பதும்தான் மனதை நெகிழ்த்துகிறது.

பரிந்துரை: இந்த வாரம் சினிமா - இயக்குநர் செழியன்

க்ளியோ குடும்பத்தலைவியிடம் தனியாகப் பேசவேண்டுமென்று சொல்வாள். ‘சொல்லு க்ளியோ, என்ன?’ என்று கேட்க அவள் அழுது கொண்டே தான் கர்ப்பமாக இருப்பதைச் சொல்லுவாள். கோபப்படுவாள் என்று நினைத்த குடும்பத்தலைவி ஆறுதலாகப் பேசுவதை நினைத்து க்ளியோ அழுவாள். அப்போது அங்கு ஓடிவரும் சிறுவன் (இது சிறுவயது க்யூரான் ஆகக்கூட இருக்கலாம்) ‘க்ளியோ ஏம்மா அழுது’ என்று அம்மாவிடம் கேட்பான். அவளுக்கு வயிற்று வலி என்று அம்மா சொன்னதும் அந்தச் சிறுவன் க்ளியோவின் வயிற்றைத் தடவி pain pain go away என்று பாடுவான். க்ளியோ அவனைக் கட்டிக்கொண்டு அழுவாள். எத்தனை முறை பார்த்தாலும் கண்களைக் கலங்கவைக்கும் காட்சி அது.

க்ளியோவாக நடித்த யலிட்ஸா புதுமுகம் என்றாலும், சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் போட்டியில் இருந்தார். மருத்துவமனையில் அவளது கர்ப்பம் குறித்து மருத்துவர் விசாரிக்கும் காட்சியில் க்ளியோவின் முகபாவங்களைக் கவனியுங்கள். 

பரிந்துரை: இந்த வாரம் சினிமா - இயக்குநர் செழியன்

வெனிஸில் தங்கச்சிங்கம் தொடங்கி ஆஸ்காரில் பத்து விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு மூன்று விருதுகள் பெற்றது... ஓர் இயக்குநர் சிறந்த ஒளிப்பதிவுக்காக ஆஸ்கார் வாங்குவது இதுதான் முதல் முறை. ஏனெனில், க்யூரான் தான் ரோமாவின் ஒளிப்பதிவாளர். அத்துடன் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கார் விருதை ஒரு மெக்ஸிகோ படம் வாங்குவதும் இதுதான் முதல் முறை.

சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம். அற்புதமான ஒளிப்பதிவின் வழியே காட்சிகளை அணுகும் முறையிலிருந்து கதை சொல்லும் பாணியும் மனதுக்கு நெருக்கமாக இருந்தது. ‘டுலெட்’ படத்தில் இசை இல்லை என்று முடிவு செய்ததும் சில உத்திகளைப் படத்தில் பயன் படுத்தியிருந்தேன். ஆச்சர்யமாக அதே உத்திகள் பின்னணி இசை இல்லாத ரோமாவிலும்  இருக்கின்றன. ஒருமுறை பார்த்தால் சாதாரணமான படமாகத் தெரியலாம். மூன்று முறையாவது பாருங்கள். ரோமா மறக்க முடியாத அனுபவமாக மாறும்.”