சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“ஆண்களை விஞ்சிய ஆக்‌ஷன்!”

“ஆண்களை விஞ்சிய ஆக்‌ஷன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஆண்களை விஞ்சிய ஆக்‌ஷன்!”

“ஆண்களை விஞ்சிய ஆக்‌ஷன்!”

‘கத சொல்லப்போறோம்’, ‘குலேபகாவலி’, ‘காத்தாடி’ படத்தைத் தொடர்ந்து, ஜோதிகாவை வைத்து கல்யாண் இயக்கியிருக்கும் படம், ‘ஜாக்பாட்.’ படத்தின் டப்பிங் பரபரப்புகளுக்கு நடுவில் நம்மோடு பேசினார் கல்யாண்.  

“ஆண்களை விஞ்சிய ஆக்‌ஷன்!”

“எனக்கு 7-ஆம் வகுப்பு படிக்கும்போதே சினிமா ஆசை வந்துருச்சு. அப்பவே நிறைய கதைகள் எழுதுவேன். ஒருநாள் ஸ்கூல்ல மேடம் பாடம் எடுக்கும்போது கதை எழுதிக்கிட்டு இருந்தேன். மேடம் பிடுங்கிப் பார்த்துட்டு பிரின்சிபால்கிட்ட கொடுத்துட்டாங்க. ‘போச்சு, அடி பின்னப்போறாங்க’ன்னு நினைச்சேன். ‘பாதிக் கதைதான் எழுதியிருக்க, மீதி எங்கே... போய் எழுதிக் கொண்டுவா’ன்னு அனுப்பிட்டாங்க. என்னைக் கதாசிரியர்னு சொன்ன முதல் ஆள் என் பிரின்சிபால் சாந்திநாதன் சார்தான். பிறகு, நிறைய கதைகளை எழுத ஆரம்பிச்சேன். குறும்படங்கள் எடுக்கலாம்னு யோசனை வந்தப்போ, ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு நிறைய கத்துக்கிட்டேன். நலன், ரவிக்குமார், ‘ராட்சசன்’ ராம்குமார்னு எல்லோரும் எனக்கு ‘லோ பட்ஜெட் கல்யாண்’ணு பட்டப் பெயர் வெச்சாங்க. ஏன்னா, அவங்க கொடுக்குற காசுக்குள்ள படத்தை முடிச்சிடுவேன். இப்படித்தான் சினிமாவுக்கு வந்தேன்.”
 
“முதல் படம் எப்படி டேக் ஆஃப் ஆச்சு?”

“சின்னப் பசங்களை வெச்சு ‘கத சொல்லப் போறோம்’னு ஒரு படம் பண்ணினேன். சில நண்பர்களின் உதவியோடு அந்தப் படத்தை நானே தயாரிச்சேன். ரிலீஸ் சமயத்துல கொஞ்சம் சிரமப்பட்டேன். படம் வெளிவந்த பிறகு வெற்றிமாறன் சார், தனஞ்செயன் சார், சேரன் சார்னு பெரிய கலைஞர்கள் பாராட்டினாங்க. அதுக்கப்புறம்தான் ‘குலேபகாவலி’.”

“ ‘குலேபா’ பாட்டு உருவான கதை சொல்லுங்க?”

“விவேக் - மெர்வின் அந்தப் பாட்டை கம்போஸ் பண்றப்போ பிரபுதேவா சாரும் கூடதான் இருந்தார். சில விஷயங்களை மாத்தச் சொன்னார். டியூன்லாம் ஃபைனல் ஆகிடுச்சு. ‘யாரைப் பாட வைக்கலாம்’னு நினைக்கும் போது, அனிருத் இதுக்குப் பாடினா ரொம்ப நல்லா இருக்கும்னு நானும் தயாரிப்பாளரும் நினைச்சோம்.  அனிருத்தும் சம்மதிச்சார். அந்தப் பாட்டுக்கு செட் போட 9 நாள் ஆச்சு. ஷூட் முடிய குறைந்தபட்சம் 3 நாள் ஆகும்னு நினைச்சேன். அப்போ என்கிட்ட விளையாட்டா, ‘எத்தனை நாள்ல முடிக்கணும்னு ஆசைப்படுறீங்க கல்யாண்’ணு பிரபு சார் கேட்டார். ‘ஒரு நாள்ல  முடிச்சிட்டாக்கூட சந்தோஷம் தான் சார்’னு நானும் விளையாட்டா சொன்னேன். ‘அவ்வளவுதானே முடிச்சிட லாம்’னு சொல்லி 12 மணிக்கு ஆரம்பிச்சு 8 மணிக்கு முடிச்சுக் கொடுத்துட்டார். அதே கலர் ஃபுல்லோட ‘ஜாக்பாட்’ படத்துல ‘ஷீரோ ஷீரோ’ன்னு ஒரு பாட்டு இருக்கு. வெயிட் பண்ணிப் பாருங்க!”

“ஜாக்பாட்ல ஜோதிகா?”

“ `ஜாக்பாட்’ படத்தின் கதையை முழுக்கவே ஜோதிகா மேமை வெச்சுதான் எழுதினேன். முதல்ல ‘2டி’ ராஜசேகர் சார் கிட்ட கதை சொன்னேன். இன்னைக்கு நாளைக்குன்னு இழுத்தடிக்காம உடனே, ‘கதை சூப்பரா இருக்கு, பண்ணலாம்’னு சொல்லி அட்வான்ஸ் கொடுத் துட்டார். ஆனா, ஷூட்டிங் ஆரம்பிக்க ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் ஆகும்னு சொன்னார். சரி சார் பரவால்ல, வெயிட் பண்றேன்னு சொன்னேன். ஒரு நாள் போன் பண்ணி பவுண்டட் ஸ்க்ரிப்ட் கேட்டார். ரெடி பண்ணிக் கொடுத்தேன். ஜோ மேமுக்குக் கதை ரொம்பப் பிடிச்சது. ‘ஷூட்டிங் ஆரம்பிக்கலாம்’னு சொல்லிட்டாங்க.”

“ஆண்களை விஞ்சிய ஆக்‌ஷன்!”

“இது என்ன மாதிரியான கதை?”

“ஒரு முக்கியமான விஷயத்தைத் தேடிப் போறதுதான் ‘ஜாக்பாட்’ படக்களம். கிட்டத்தட்ட 1800-ல ஆரம்பிச்சு இப்போ வரைக்கும் நடக்கிற மாதிரியான கதை. ஜோதிகா மேமுக்கு இந்தப் படத்துல வித்தியாசமான ரோல். ‘என்னுடைய முதல் படத்துல நடிக்கிற மாதிரி இருக்கு’ன்னு சொன்னாங்க. சும்மா வந்தாங்க, போனாங்கன்னு இல்லாம ஒரு ஹீரோ என்ன பண்ணுவாரோ, ஜோதிகா மேம் இந்தப் படத்துல அதைப் பண்ணுவாங்க.”

“ஓ... நிறைய சண்டைக் காட்சிகள், பஞ்ச் டயலாக்கெல்லாம் இருக்குமா?”

“கண்டிப்பா நிறைய இருக்கும். படத்துல நடிச்ச சில ஆண்கள், சின்னதா ஸ்டன்ட் காட்சிகளுக்கு ரோப் கட்டணும்னு சொன்னாலே ‘ஐயய்யோ ரோப்பா’ன்னு ஜெர்க்கானாங்க. ஆனா, ரேவதி மேமும், ஜோ மேமும் ‘நாங்க பண்றோம். எங்களுக்கு நீங்க கயிற்றைக் கட்டுங்க’ன்னு சொல்லி டூப் போடாம சில ஸ்டன்ட் காட்சிகள் பண்ணியிருக்காங்க. ஒரு டேம் மேல இருந்து குதிச்சு, தண்ணியில நீச்சல் அடிச்சு வர்ற மாதிரியான காட்சி. செட்டெல்லாம் ரெடி பண்ணி மறுபடியும் ‘பண்றதுக்கு ஓகேவா, இல்லை டூப் போட்டுக்கலாமா’ன்னு கேட்டோம். ‘அதெல்லாம் பண்ணலாம் கல்யாண்’ணு சொல்லி அந்த ரிஸ்க்கான ஸீனை ரெண்டு பேருமே டூப் போடாம நடிச்சுக் கொடுத்தாங்க. ஷாட் முடிஞ்சதும் மொத்த செட்டுமே கை தட்டினாங்க. ஜோ மேம் 10 பேர்கூட சண்டை போடுறது, ரன்னிங், சேஸிங்னு படத்துல வேற லெவல் பண்ணியிருக்காங்க.”

“ ‘குலேபகாவலி’ படத்துக்குப் பிறகு இதுலேயும் ரேவதி நடிக்கிறாங்களே?”

“ ‘குலேபகாவலி’ படத்துல மாஷா கேரக்டரை அவங்களுக்காகவே உருவாக்கினேன். ‘அரங்கேற்ற வேளை’ என் வாழ்க்கையில மறக்க முடியாத படம். அதான் ரேவதி மேமை மாஷாவா நடிக்க வெச்சேன். ‘ஜாக்பாட்’ல கொஞ்சம் எக்ஸ்ட்ராவா அவங்களுக்கு டான்ஸ், ஆக்‌ஷன், சென்டிமென்ட் டெல்லாம் இருக்கு. அவங்களை அப்படியெல்லாம் நடிக்க வெச்சதைப் பார்த்துட்டு ‘என்ன கல்யாண், ரேவதி மேமை எப்படியெல்லாம் பார்த்திருக்கோம், இப்படிக் காட்டியிருக்கீங்க, வித்தியாசமா இருக்கு’ன்னு சூர்யா சொன்னார். ‘கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும் சார்’னு சொன்னேன்.”

“படத்துல ஜோதிகா போலீஸா?”


“படத்துல ஜோதிகா மேமுடைய பெயர் அக்‌ஷயா. முழுக்கவே போலீஸ் கதாபாத்திரமா நடிக்கலை. ஆனா, போலீஸாவும் வருவாங்க. இதுக்கு மேல சொன்னா கதை தெரிஞ்சுடும். ஜோதிகா - ரேவதி மேமைத் தவிர படத்துல யோகி பாபுவும் நடிச்சிருக்கார். இதுவரைக்கும் அவர் பண்ணாத கேரக்டர். செம ரகளையான கேரக்டர். அப்புறம் ஆனந்த்ராஜ் சார், ஜெகன், அந்தோணி தாசன், ‘மொட்டை’ ராஜேந்திரன், மன்சூர் அலிகான்னு ‘குலேபகாவலி’ படத்துல நடிச்ச அதே பட்டாளம் ‘ஜாக்பாட்’லேயும் இருக்கு. படம் முழுக்க காமெடிதான்.”

தார்மிக் லீ