சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“அப்பா எனக்குப் பேர் தந்தார்!”

“அப்பா எனக்குப் பேர் தந்தார்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அப்பா எனக்குப் பேர் தந்தார்!”

“அப்பா எனக்குப் பேர் தந்தார்!”

முன்னணி மிமிக்ரி கலைஞர்களில் முக்கியமானவர், சேது. வி.எஸ்.ராகவனைப் பார்க்கும்போது கண்டிப்பாக சேது நினைவுக்கு வந்துவிடுவார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் குரல்களையும் பிசிறு தட்டாமல் பேசுபவர்.

‘`எப்போது மிமிக்ரி ஆர்வம் வந்தது?’’

‘`நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, ‘நீ ஒழுங்கா படிச்சா உன்னை பிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்த்துவிடுறேன். இல்லைன்னா, மாடு மேய்க்கத்தான் போகணும்’னு அப்பா பலகுரல் மன்னன் சிவகங்கை சேதுராஜன் சொன்னார். அதுக்கு பயந்து படிச்சேன். அப்பாவுக்கு மிமிக்ரி அத்துப்படி. யாராவது வீட்டுக்கு வந்துட்டுப்போனா, அவங்களை மாதிரி பேசிக் காட்டுவார். அவரைப் பார்த்துதான் எனக்கும் மிமிக்ரி ஆர்வம் வந்தது.’’

“அப்பா எனக்குப் பேர் தந்தார்!”

‘`உங்க அப்பாவின் பெயரில்தான் பிரபலமாகியிருக்கீங்கபோல?’’

‘`ஆமா. என் ஒரிஜினல் பெயர் சுப்ரமணி. சேது சுப்ரமணின்னு அப்பா பெயரையும் சேர்த்துக்கிட்டேன். எல்லோரும் சுருக்கமா ‘சேது’ன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க, அதுவே என் பெயர் ஆகிடுச்சு. அப்பாவுக்குச் சொந்த ஊர், சிவகங்கை. ‘பலகுரல் மன்னன் சிவகங்கை சேது ராஜன்’ என்ற பெயரை அறிஞர் அண்ணாதான் அப்பாவுக்குச் சூட்டினார். அப்பா, அறிஞர் அண்ணாவுக்கு உதவியாளரா இருந்தார். பிறகு, கலைஞரோடு இணைந்தார். அதுக்கப்புறம் எம்.ஜி.ஆர் கூப்பிட்டதனால, அவர் பக்கம் போனார். இதனால, கலைஞர் அப்பாமீது கோபமாகிட்டார். இப்படியே பல வருடம் கடந்திடுச்சு. அப்பா இப்போ உயிரோட இல்லை. அவர் ஏதோ பெரிய குற்றம் பண்ணிட்டு கட்சியை விட்டுப் போனதா நினைச்சு, கலைஞர் ஐயா இருந்தவரைக்கும் எங்க குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் பார்க்க விரும்பல.

எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாம அமெரிக்காவில் சிகிச்சைக்காக இருந்தப்போ, எம்.ஜி.ஆர் இறந்துட்டதா தகவல் பரவி, பலரும் தற்கொலை பண்ணிக்கிட்ட சம்பவம் நடந்தது. அப்போ, ‘நான் உயிரோடுதான் இருக்கிறேன்’ என எம்.ஜி.ஆர் மாதிரி பேசி வானொலியில் வெளியிட்டு மக்களின் பதற்றத்தை நீக்கியது, எங்க அப்பாதான். எம்.ஜி.ஆருடன் அப்பா இவ்வளவு பிணைப்போடு இருந்ததனால, அப்போதைய அரசு அப்பாவைக் கெளரவித்து, சிஐடி நகரில் ஒரு வீடு கட்டிக் கொடுத்துச்சு. அப்பா இறக்கும் வரை அந்த வீட்டுலதான் வாழ்ந்தார். போன மாசம் அந்த ஹவுசிங் போர்டு வீட்டை இடிச்சுட்டாங்க. அதைத்தான் என்னால தாங்கிக்கவே முடியல. இதை யார்கிட்ட முறையிடுறதுன்னும் தெரியல!”

‘`வி.எஸ்.ராகவன் குரல்தான் உங்க ஸ்பெஷாலிட்டி, இல்லையா?!”

‘`எனக்கு வி.எஸ்.ராகவன் சார் குரல் நல்லா வரும் என்பதால், அதுவே என் அடையாளம் மாதிரி ஆகிடுச்சு. நிறையபேர் ‘உங்க அப்பா வி.எஸ்.ராகவன் நல்லா இருக்காரா’ன்னு விசாரிப்பாங்க... அதேபோல, ‘கரகாட்டக்காரன்’ சண்முக சுந்தரம் சாரையும் என் அப்பான்னு பலர் நினைச்சுக்கிட்டிருக்காங்க. வி.எஸ்.ராகவன் ஐயா என்னைக் கூப்பிட்டுப் பலமுறை பாராட்டியிருக்கார். ‘நீ மிமிக்ரி பண்ண ஆரம்பிச்சு, என்னை ஞாபகப்படுத்தினதால எனக்குப் பல வாய்ப்புகள் வருது தம்பி, நன்றி’ன்னு சொன்னார்.

இப்போ வரைக்கும் எட்டுப் படங்கள் வரை நடிச்சிருக்கேன். ‘கலகலப்பு’ படத்துல நடிச்சுக்கிட்டிருந்தப்போ, வி.எஸ்.ராகவனின் மகனா நடிக்க வாய்ப்பு வந்தது. அதேநேரம் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தில் மீனவனா நடிச்சுக்கிட்டிருந்தேன். இதுல தாடி வளர்த்து நடிக்க வேண்டியிருந்தது. ‘கலகலப்பு’க்காக ஷேவ் பண்ணிட்டு வாங்கன்னு சொல்லிட்டார், சுந்தர் சி. மணிரத்னம் என்னை விடலை. அதனால, ராகவன் சார்கூட நடிக்க முடியாமப்போயிடுச்சு.”

“அப்பா எனக்குப் பேர் தந்தார்!”

“இந்தத் துறைக்கு வரும்போது உங்க கனவு என்னவாக இருந்தது?’’

‘`நிச்சயமாக சினிமாக் கனவுதான் இருந்தது. நடிகர் வையாபுரியுடன் இணைந்து சினிமா, மிமிக்ரி வாய்ப்புகளைத் தேடி அலைஞ்சேன். வையாபுரிக்கு நடிப்புமீது மட்டுமே தேடுதல் வேட்கை இருந்தது. நான் எது கிடைத்தாலும் செய்ய ஆரம்பித்தேன். சினிமா, சீரியல், விளம்பரங்கள், மிமிக்ரி ஷோ எல்லாவற்றிலும் கால் பதித்தேன். அதனாலதான், இப்போவரை வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு.

விஜய் டி.வியில் ‘கலக்கப்போவது யாரு’ ஆரம்பமாவதற்கு முன்பு, ‘சகல VS ரகள’ ஷோ பண்ணினோம். அந்த நிகழ்ச்சி செம்ம ஹிட். பிறகு, ‘ஜுஜுபி டி.வி’ நிகழ்ச்சி. இதில் பிரபலங்களின் கெட்டப் போட்டு அவர்கள் வாய்ஸ்ல பேசுவேன். ‘கலக்கப்போவது யாரு’ ஆரம்பிச்சப்போ என்னையும் அதில் கலந்துக்கச் சொல்லிக் கேட்டாங்க. எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டேன். அதனால, தொகுப்பாளராகப் போட்டாங்க. என் முதல் கோ ஆங்கர் டிடி-தான். அடுத்து, ரம்யா.

ஆரம்ப காலங்கள்ல எத்தனையோ இடங்கள்ல சாப்பாடு மட்டும் போட்டு, காசு கொடுக்காம அனுப்பியிருக்காங்க. பல அவமானங்களை, நிராகரிப்புகளைத் தாண்டிதான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். என் அண்ணா மற்றும் மூன்று சகோதரிகள் இல்லைன்னா, நான் என்னவாகியிருப்பேன்னு தெரியல. இன்னைக்கு நான் வளர்த்துவிட்ட பலரும் பெரிய உயரத்தைத் தொட்டுட்டாங்க. எனக்கு இன்னும் சரியான ஒரு இடம் அமையலைங்கிற வருத்தம் எனக்குள்ள இருக்கு. எல்லாம் இருந்தும் ஏதோ ஒண்ணு மிஸ் ஆன மாதிரி இருக்கு.”

‘`மிமிக்ரியில் ஆர்வமாக இருக்கும் இளைஞர்களுக்கு உங்க அட்வைஸ்?!”

‘`நான் இருந்த காலத்தில் தூர்தர்ஷன் சேனல் மட்டும்தான் இருந்தது. இப்போ சோஷியல் மீடியாவிலேயே நிறைய வாய்ப்புகள் இருக்கு. அதையெல்லாம் இளைஞர்கள் பயன்படுத்திக்கணும். அரைத்த மாவையே அரைக்காம புதுசு புதுசா எதையாவது பண்ணிக்கிட்டே இருக்கணும். ஒரு விஷயத்துக்கு அதிக கைத்தட்டல் கிடைச்சா, உடனே அதை நிறுத்திட்டு அடுத்த விஷயத்துக்குப் போயிடுங்க.”

- வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ப.பிரியங்கா