சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

K-13 - சினிமா விமர்சனம்

K-13 - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
K-13 - சினிமா விமர்சனம்

K-13 - சினிமா விமர்சனம்

ரு நாள்... ஒரு ஆள்... ஒரு ப்ளாட்... ஒரு மரணம் - இவற்றையெல்லாம் முடிச்சுப்போட்டு நம்மை சீட் நுனிக்கு அழைத்துவந்தால் அதுதான் K-13.

துணை இயக்குநரான அருள்நிதிக்கு படம் இயக்கும் வாய்ப்பு காலிங்பெல் அடிக்கிறது. அந்தக் குஷியில் நண்பர்களோடு பார்ட்டிக்குச் செல்கிறார். அங்கே ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை சந்திக்கிறார். கட்...! மறுநாள் ஒரு வீட்டில் மயங்கிய நிலையில் நாற்காலியோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறார் அருள்நிதி. அவருக்குப் பின்னால் ரத்தம் சொட்டச் சொட்ட பிணமாகக் கிடக்கிறார் ஷ்ரத்தா. என்ன நடந்தது என அருள்நிதியோடு சேர்ந்து நாமும் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதுதான் இந்த திக்... திக்... த்ரில்லர்!

K-13 - சினிமா விமர்சனம்

அருள்நிதியின் படமென்றாலே வித்தியாசமான கதைக்களம் என்பது மினிமம் கியாரன்டி. அந்த நம்பிக்கையை இதிலும் தக்கவைக்கிறார். தேவைப்படும் இடங்களில் உணர்ச்சிகளைக் கொட்டி, தேவைப்படாத இடங்களில் அடக்கி வாசித்து எனக் கதையோடு ஒன்றிப்போகிறார். தமிழ்சினிமாவில் த்ரில்லர் படங்களுக்கெனவே அளவெடுத்துச் செய்த ஹீரோ அருள்நிதிதான்!

மெயின்ஸ்ட்ரீம் நாயகிகள் அவ்வளவு சுலபமாக ஓகே சொல்லிவிடாத வித்தியாச ரோல். ஆனாலும் வரும் காட்சிகளில் எல்லாம் திகில் கிளப்புகிறார் ஷ்ரத்தா. சிலையாக உட்கார்ந்திருக்கும் அவரை வெவ்வேறு கோணங்களில் பார்க்கும்போது பயப்பந்து தொண்டைக்குள் எழும்புகிறது. காயத்ரி இரண்டு நிமிடங்களே வந்தாலும் கதைக்குத் தேவையானதைச் செய்கிறார். யோகிபாபு, ரிஷி, ஜாங்கிரி மதுமிதா, ரமேஷ் திலக் போன்றவர்கள் வந்தது தெரியாமல் காணாமல் போகிறார்கள்.

K-13 - சினிமா விமர்சனம்

சாம் சி.எஸ்ஸின் இசையில் பாடல்கள் ஈர்க்கவில்லை. ஆனால் பின்னணி இசை, த்ரில்லருக்குண்டான டெம்போவைத் தக்கவைக்கிறது. வீட்டின் மூன்றாவது ஜோடிக் கண் போல மிக இயல்பாக குறுக்கும் நெடுக்குமாகப் பாய்கிறது அரவிந்த் சிங்கின் கேமரா. டெக்னிக்கல் குழுவில் எடிட்டர் ரூபனின் கத்தரிக்குத்தான் எவ்ளோ வேலை! விரல் வீங்கியிருக்கும்போல... மிகச்சிறப்பாகவே செய்திருக்கிறார்.  

ஒரே ஒரு ப்ளாட்டில் சுற்றிச் சுற்றி நடக்கும் கதை. கொஞ்சம் பிசகினாலும் மொத்தமாகப் படுத்துவிடும். ஆனாலும் முடிந்தவரை திரைக்கதை கொண்டு தூக்கி நிறுத்துகிறார் இயக்குநர் பரத் நீலகண்டன். இரண்டாம் பாதியில் சில நிமிடங்கள் இழுவையாக இருந்தாலும் அதையும் க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் கொண்டு சரிக்கட்டுகிறார்.

K-13 - சினிமா விமர்சனம்

மரணம் நிகழ்ந்த இடத்திலிருந்து தப்பிச் செல்ல வாய்ப்புகள் இருந்தும் ஒருவர் திரும்பி அதே வீட்டுக்கு வந்து எல்லாவற்றையும் நோண்டுவாரா என்ன? கதைக்காக எந்த எல்லைக்கும் ஒரு படைப்பாளி செல்வார் என்பதை நம்பமுடிகிறது. ஆனால், இந்த `எல்லை’யைத்தான் நம்பமுடியவில்லை.

கொஞ்சம் நம்பகத்தன்மை கூட்டியிருந்தால் பாக்கெட் சைஸ் டைனமட்டாக வெடித்திருக்கும் இந்த K-13.

  - விகடன் விமர்சனக் குழு