சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

தேவராட்டம் - சினிமா விமர்சனம்

தேவராட்டம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
தேவராட்டம் - சினிமா விமர்சனம்

தேவராட்டம் - சினிமா விமர்சனம்

“வெட்டுக்குத்துலாம் வெந்நீர் வைக்கிற மாதிரி” என்னும் வில்லனும் “கத்திக்குத்துலாம் காது குத்துற மாதிரி” என்னும் ஹீரோவும் ரத்தம் தெறிக்க ஆடும் ஆட்டம் இந்த `தேவராட்டம்.’

தேவராட்டம் - சினிமா விமர்சனம்

அங்கம் மணக்கும் மதுரைக்குள்ளே தங்கம் கணக்கா ஆறு அக்கா. தங்கமான ஆறு அக்காவுக்கும் தங்கக்கம்பியாக ஒரு தம்பி. வக்கீலுக்குப் படித்தும் கோர்ட்டுக்குப் போகாமல், கொலைவெறியோடு திரிகிறார். மொட்டைத்தலையோடு  கட்டப் பஞ்சாயத்து பண்ணித் திரியும் கொடும்பாவி கணேசன், அவர் மகன், மோசமான காமுகன் முன்னா ஆகியோரைப் போட்டுத் தள்ளுவதற்குள் நம் சட்டையெல்லாம் ரத்தம், காது கிழியும் சத்தம்!

நாயகன் வெற்றியாக கௌதம் கார்த்திக். முகமெல்லாம் முடி, கெட்டவனைப் பார்த்தால் அடி என அராத்தான கதாபாத்திரம். படம் முழுக்க பலர் கைகளை உடைத்து, கழுத்தைத் திருகி, தலையை வெட்டித் தாண்டவமாடுகிறாரே தவிர, ரசிக்கும்படி ஒரு காட்சியும் இல்லை. ஹீரோயின் மஞ்சிமா. அப்பா, ஆத்தா யாருன்னு தெரியலை, கறுப்புக்கோட்டு மாட்டி கதாநாயகன் பின்னாலேயே சுற்றும் பாவப்பட்ட ஜென்மம். ஓவர் ஆக்டிங்கில் உச்சத்துக்குப் போகிறார், வீறிட்டு அழும் வினோதினி. ‘என்னத்த’ போஸ் வெங்கட், ‘ஏனோதானோ’ வேல ராமமூர்த்தி என்று ஏகப்பட்ட பாத்திரங்கள். கத்திக்குத்து போதாதென்று காமெடி மொக்கைக்குத்து குத்தி, சுடும் வெயிலில் சுண்ணாம்பு தடவுகிறார் சூரி. வெட்டி பந்தா வில்லன்களும் கத்தி தூக்கிக் கடுப்பைக் கிளப்பு கிறார்கள்.

தேவராட்டம் - சினிமா விமர்சனம்

மூணு பத்தி இப்படி எழுதுவ தற்குள் மூச்சு வாங்குகிறது. ஆனால் படம் முழுக்கவே இப்படி எல்லோருமே எதுகை மோனை வசனங்கள் பேசிப் பாடாய்ப் படுத்துகிறார்கள்.

ஏற்கெனவே ரணகள ரைமிங் வசனங்களால் காது பஞ்சராகும் நேரத்தில், நிவாஸ் கே.பிரசன்னா இசையும் நம் காதுகளைப் பதம் பார்க்கிறது. மதுரையின் வெக்கையை அப்படியே படம் பிடிக்கிறேன் எனக் கண்களைக் கூசவைக்கிறது சக்தி சரவணனின் ஒளிப்பதிவு.

ஹீரோ சட்டக்கல்லூரி படிக்கிறாராம். ஆனால் ஒருநாள்கூட வகுப்புக்குச் செல்வதாய்க் காட்சியில்லை. பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்கிறார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்காடுவதேயில்லை. சட்டம் படிக்கும் ஓர் இளைஞன் மூலமே சட்டத்திற்கு விரோதமான வன்முறைகளை முன் வைப்பது மோசமான முன்னுதாரணம்.

தேவராட்டம் - சினிமா விமர்சனம்

படம் முழுக்க வன்முறை, மோசமான வசனங்கள், ‘யாரை வேண்டுமானாலும் கொல்லலாம்’ என்று இளைஞர்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் மோசமான வழியைக் காட்டியிருக்கிறார் முத்தையா. பெண்களை ஆண்கள் பாதுகாக்கும் உடைமையாகவே பார்க்கும் கடைந்தெடுத்த பிற்போக்குத்தனத்தைக் காட்சிகள் மூலமும் வசனங்கள் மூலம் நியாயப்படுத்துவதும் அபத்தம்.

அரதப்பழசான கதை, ஆபத்தான கருத்துகள், அலுப்பூட்டும் திரைக்கதை ஆகியவற்றால் ஆட்டம், ஆட்டம் காண்கிறது.

- விகடன் விமர்சனக் குழு