சமீபத்தில் வெளியான 'எல்.கே.ஜி' படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை ஹயாத் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ஆர். ஜே பாலாஜி, நாஞ்சில் சம்பத், ப்ரியா ஆனந்த், ஜே.கே ரித்தீஷ், தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், மயில்சாமி, ராம்குமார் கணேசன், திங்க் மியூசிக் நிறுவனத்தின் தலைவர் சந்தோஷ் மற்றும் பா.விஜய் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது, ``சினிமாவுல இப்படியொரு இடத்துக்கு வருவேன்னு கனவுலகூட நெனச்சுப் பார்த்ததில்லை, ஆசைப்பட்டதுமில்லை. ஆருயிர் தம்பி ஆர்.ஜே பாலாஜி என்னை 'அப்பா'னு சொல்லும்போது எனக்கு கொஞ்சம் கூச்சமா இருக்கு. ஏன்னா, என்னுடைய வயதை யார்கிட்டயும் சொன்னது கிடையாது. ஆர்.ஜே பாலாஜி இந்தப் படத்துக்காக என் நிலைமை அறிந்து தேடி வந்தாரா, இல்லை அவரா வந்தாரானு தெரியலை. `நீங்க நடிக்கிறீங்களா'னு கேட்டதும், 'எனக்கு நடிக்கத் தெரியும்'னு நினைக்கிறீங்களா'னு பதிலுக்குக் கேட்டேன். `இல்ல, நீங்க வந்தா மட்டும் போதும்'னு சொன்னாங்க. 'சரி'னு ஒத்துக்கிட்டேன்.
எனக்கு நண்பர்கள் கிடையாது, போன்ல யார் நம்பரையும் பதிவு பண்ண மாட்டேன். யார்கிட்டயும் நெருங்கிப் பழக மாட்டேன். எப்போதும் வாசிச்சுக்கிட்டும், எழுதிக்கிட்டும் இருக்குற ஒரு கேரக்டர் நான். அதிகாலை ஐந்து மணிக்கு கோயம்பேடு ரோகினி தியேட்டர்ல படம் பார்த்துட்டு வெளிய வரும்போது, இளைஞர்கள் சூழ நின்னுகிட்டு இருந்த சமயத்துல, `புதிதாய் பிறந்தது' போல உணர்ந்தேன்.
என்னுடைய கிராமம் மணக்காவிளை, தமிழும் மலையாளமும் கலந்து பேசக்கூடிய ஒன்னு. அங்க இருக்கும்போது வெளிய போய் அக்கம் பக்கத்து ஆள்கள்கூட பேசுனதே கிடையாது. பட ரிலீஸுக்குப் பிறகு ஊருக்குப் போகும்போது, அங்க உள்ளவங்க எனக்குக் கொடுத்த வரவேற்பை பார்த்தப்போ அழுதுட்டேன். சினிமாவுல இருக்குறவங்க தலைக்கனமா இருப்பாங்கனு நெனச்சுட்டு இருந்தேன். நான் ஏற்கெனவே தலைக்கனம். இதுல இவங்க வேற தலைக்கனமா இருந்துட்டா, எனக்கும் இவங்களுக்கு முட்டிக்கிடுமோனு நெனச்சேன். ஆனா, ரொம்ப நல்லா பழகுனாங்க. இதுவரை நான் சாப்பிடாததெல்லாம் ஷூட்டிங்லதான் சாப்பிட்டேன். இனி தினமும் ஷூட்டிங் இருந்தா நல்லாயிருக்கும்னு நினைக்குற அளவுக்கு எனக்கு அந்த இடம் சந்தோஷத்தைக் கொடுத்துச்சு.
நான் கல்லூரியில படிக்கும்போது வாரியார் ஸ்வாமிகள்கிட்ட இருந்து `ஞானச் சிறுவன்'ங்கிற விருதை வாங்கினேன். அன்னைக்கு அவர்கூட இரவு டின்னர் சாப்பிட்டேன். அந்த மாதிரியான ஓர் உணவை என் வாழ்நாள்ல சாப்பிட்டதே கிடையாது. அப்போ அவர் என்கிட்டே, `நீ என்கூட வர்றியா? உன் நாக்குல சரஸ்வதி குடியிருக்கா. என்கூட நீ வந்தா இன்னும் ஆறு மாசத்துல என்னை மாதிரி ஆகிடலாம்'னு சொன்னார். நான் போகணும்னு முடிவெடுத்துட்டேன். ஏன்னா அந்த சாப்பாடு அவ்வளோ அருமையா இருந்துச்சு. இந்தப் படத்துல நடிச்சதுக்கு அப்புறம் நான் கொஞ்சம் உயரமா வளர்ந்துட்ட மாதிரி உணர்றேன். பேருந்துல போகும்போது, பீச்ல வாக்கிங் போகும்போது தம்பிமார்கள் செல்ஃபீ எடுத்துக்க வருவாங்க. இனிமேல் அந்த எண்ணிக்கை கூடும். என்னுடைய மகன் ஆர்.ஜே பாலாஜியின் வளர்ச்சிக்கு என்னால் உதவ முடியாது. ஆனா, அந்த வளர்ச்சியைப் பார்த்து என் அளவுக்கு வேறு யாராலும் பெருமைப்பட முடியாது' என்று முடித்தார்.