Election bannerElection banner
Published:Updated:

``கேட்டதும் பிடிக்கும் ராகமில்லை; ஸ்லோ பாய்ஸனும் இல்லை... யுவன் இதில் தலைகீழ்!" - #22yearsofYuvanism

``கேட்டதும் பிடிக்கும் ராகமில்லை; ஸ்லோ பாய்ஸனும் இல்லை... யுவன் இதில் தலைகீழ்!" - #22yearsofYuvanism
``கேட்டதும் பிடிக்கும் ராகமில்லை; ஸ்லோ பாய்ஸனும் இல்லை... யுவன் இதில் தலைகீழ்!" - #22yearsofYuvanism

யூ-டியூபில் `ரெளடி பேபி' பாடல் 200 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி ஹிட் அடித்துக்கொண்டிருக்கிறது. `இது ஒரு யுவன் ஷங்கர் ராஜா மியூசிக்கல்’ என்று ஃபேஸ்புக்கில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். `ரெளடி பேபி' மட்டுமல்ல, யுவன் இசையில் உருவான பல பாடல்கள், `ரிப்பீட் மோட் பிளே லிஸ்டில்’ சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும். 125-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, இன்னும் அள்ளித் தெளிக்கும் இசையைக் கொடுத்துக்கொண்டிருக்கும் யுவன், இசையமைக்க தொடங்கி 22 வருடங்கள் ஆகிவிட்டன.

`அரவிந்தன்' படத்தில் `ஈரநிலா விழிகளில் மூடி..' என்ற மெலடியில் தொடங்கி, `பேரன்பி'ல் `அன்பே அன்பின் அத்தனையும் நீயே..' வரை.. ஒவ்வொரு பாடலிலும் இசை வழியே உணர்ச்சிகளை அனுப்பியிருப்பார், யுவன்.

ஒரு கட்டுரை எழுதுவதாக இருந்தால், முதல் பத்தியின் பத்து வரிகளாவது படிப்பதற்கு ஆர்வமாக இருந்தால்தான் வாசகர்கள் படிப்பதைத் தொடர்வார்கள். இசைக்கும் இதே விதிதான். பாடலின் தொடக்கத்தை நேர்த்தியாகக் கம்போஸ் செய்வதில் யுவன் கில்லாடி. ஒரு பாடல் ஹிட், ஹிட் இல்லை என்பதைத் தாண்டி, குறைந்தது முதல் 30 நொடிகளாவது கேட்க வைத்துவிடுவார் யுவன். `காதல் வெப்சைட் ஒன்று..', `முன் பனியா..', `மன்மதனே நீ கலைஞன்தான்...', `ஆராரிராரோ..', `இறகைப் போலே..', `அறியாத வயசு புரியாத மனசு..', `சுடச்சுடத் தூறல்..' என இவர் இசையமைத்த பல பாடல்களின் தொடக்கமே சிலிர்ப்பாக இருக்கும்.

யுவனின் பாடல்கள், கேட்டவுடன் பிடித்துப் போகிற ரகமும் இல்லை, ஸ்லோ பாய்ஸனும் இல்லை. யுவனின் பாடல்களைக் கேட்டு `சூப்பரா மியூசிக் பண்ணியிருக்கார்' என்று பாராட்டத் தோன்றாது. நீங்கள் கேட்கும்போதே, அந்தப் பாடலின் இசை உங்கள் செவி வழியே மனதைத் தொட்டிருக்கும். பாடலுக்கேற்ப உங்களது நினைவுகளை அசைப்போடத் தொடங்கிருப்பீர்கள். `இந்தப் பாட்டு எனக்கே போட்ட மாதிரி இருக்கு' என்ற ஃபீலிங் கொடுப்பது, யுவனின் ஸ்பெஷல். அதனால்தான் என்னவோ, சொல்லிக்கொள்ளும்படியான விருதுகள் இவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், `கிங் ஆஃப் பிஜிஎம்’, `யூத் ஐகான்’ என ரசிகர்கள் அவருக்கு விருதுகளைக் கொடுத்திருக்கிறார்கள். 

காதல் வலியில் இருப்பவர்கள் யுவனிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். பொதுவாக, சோகமான நேரத்தில் பாடல்கள் நம்மை ஆசுவாசப்படுத்தும் என்பார்கள். யுவன் விஷயத்தில் அது தலைகீழ். யுவனின் காதல் சோகப் பாடல்களைக் கேட்டால் உணர்ச்சி பிதுங்கி அழுகை கொட்டிவிடும். அல்லது, யுவனின் இசையில் தெரியும் `வலியிலும் ஓர் இன்பம்’ ஃபீல் உங்களை மீண்டும் காதலிக்கத் தூண்டும். `கண்ணை விட்டு கண்ணிமைகள் விடைகேட்டால்...', `தொட்டுத் தொட்டுப் போகும் தென்றல்...' என்று சோகத்தைக் கொண்டாடும் மெட்டுகளும், `ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டிப் பறக்குது...', `பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்..' எனக் கேட்கும்போதே புன்சிரிப்பைத் தரும் மெலடிகளும், யுவனின் இசையில் ஏராளம்!. `சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்..', `தேவதையைக் கண்டேன்..', `கண் பேசும் வார்த்தைகள்..', `ஒரு கல் ஒரு கண்ணாடி..', `காதல் வளர்த்தேன்..', `போகாதே..', `என் காதல் சொல்ல நேரமில்லை..' எனப் பட்டியல் நீளும்.

காதல் மட்டுமல்ல, `நட்புக்குள்ளே இங்கு பிரிவொன்று வந்தது..', `ஜல்ஸா பண்ணுங்கடா..' எனத் தோழமைகளுடன் சண்டையோ, கொண்டாட்டமோ யுவனிடம் ஸ்டாக் உள்ளது. `ஆராரிராரோ..', `ஆனந்த யாழை..', `தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும்..' எனச் சில பாடல்கள் அழவைக்காமல் விடுவதில்லை. யுவன் காதல் பாடல்களைவிட, காதல் சோகப் பாடல்கள்தாம் பலரது ஃபேவரைட். அதிலும், அதை யுவனே பாடியிருந்தால் இன்னும் நோகடிக்கும். யுவன் காதலின், பிரிவின் வலி சொல்லும் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. `ஒரு கல் ... ஒரு கண்ணாடி' பாடலின் அத்னன் சாமி வெர்சன் கேட்ட அனைவருக்கும் கேட்கும் யுவனின் குரலில் இருக்கும் மேஜிக். பையா படத்தின் ஆடியோ சிடியில் இல்லாத `ஏதோ ஒன்று' பாடலும் இதே ரகம்தான்.

யுவன் ரசிகராக இல்லாதவரும், `சர்வம்' படத்தில் இடம்பெற்ற `நீதானே.. நீதானே..', `சிறகுகள் வந்து எங்கோ செல்ல..' பாடல்கள் பிடிக்கும் என்று சொல்வதுண்டு. யுவன் - முத்துக்குமார், யுவன் - செல்வராகவன், யுவன் - ராம், யுவன் - வெங்கட் பிரபு, யுவன் - சிம்பு, யுவன் - தனுஷ் என இத்தனை காம்போக்களைக் கொண்டாடியதுபோல, விஷ்ணுவர்தன்-யுவன்-பா.விஜய் காம்போ நேரடியாகக் கொண்டாடப்படவில்லை. `அறிந்தும் அறியாமலும்', `பட்டியல்', `பில்லா', `சர்வம்', `ஆரம்பம்' என இந்தக் கூட்டணியில் அமைந்த ஆல்பங்கள் செம ஹிட்!. அதிலும் பில்லாவுக்கான யுவனின் தீம் ஒரு யுனிவர்சல் ஹிட். அதுவும் `நான் மீண்டும் நானாக வேண்டும்' பாடலுக்கு அமைத்த மெட்டை தீமாக்கி, அது அதிரி புதிரி வைரல் ஆனதெல்லாம் வேற லெவல் வரைல். படம் முழுக்க அவ்விசை நம் காதுகளில் விழுந்தபடியே இருக்கும். `சில் சில் சில் மழையே..', `ஏதேதோ எண்ணங்கள் வந்து..', `என் பியூஸும் போச்சே..', `காற்றுக்குள்ளே', ரீமிக்ஸ் என பா.விஜய் வரிகளுக்கு யுவனின் இசை கச்சிதம். கிட்டத்தட்ட பில்லாவுக்கு இப்படியாக ஒரு தீம் போட்டாகிவிட்டது. இப்போது சக்ரியின் இயக்கத்தில் பில்லா 2. அந்த தீமை அப்படியே அப்கிரேட் செய்திருப்பார். பில்லா 2 வின் படத்தின் `இதயம் என் இதயம்', யுவனின் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளாத எவர்க்ரீன் மெலடி. மௌனம் பேசியதே படத்தில் த்ரிஷா `கௌதம்' எனச்  சொன்னதும், சூர்யா காட்டும் ரியாக்ஷனுக்கு வரும் பின்னணி இசையாகட்டும், 7G ரெயின்போ காலனி படத்தின் இறுதியில் கதிர் அமர்ந்திருக்க வரும் பின்னணி இசையாகட்டும், இப்போது கேட்டாலும் முதல் காதலை நினைவுபடுத்த மறுப்பதில்லை.    

பெரிய பேனர், இயக்குநர் என்றெல்லாம் பார்க்காமல் ராஜாவுக்குப் பின், அதிக ஆல்பம் கம்போஸ் செய்தது யுவன்தான். 20 ஆண்டுகளில் நூறு சினிமாவை யுவன் ஸ்கோர் செய்ய இதுதான் காரணம். `பேசு' என்றொரு படம். எப்போது வந்தது என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. யுவனுக்கே சற்று சந்தேகம்தான். யுவனின் குரலில் வெண்ணிற இரவுகள் என்றொரு பாடல் பாடியிருப்பார். அல்ட்டி ரகம். யுவனின் குரலில் ஒரு மாடர்ன் வெஸ்டெர்ன் அப்பாடல். முடிந்தால் கேட்டுப் பாருங்கள். அதே போல் வெளிவராத படங்கள் பட்டியலில் இருக்கும் இரண்டு படங்கள். அகத்தியனின் காதல் சாம்ராஜ்யம், ஆர்யாவின் தம்பி அறிமுகமான காதல் டு கல்யாணம். இரண்டு காதல்களும் யுவனுக்குக் கைகூடவில்லை. `எனக்காக உனக்காக வெண்ணிலவின் சாரல்கள்', `தேடி வருவேன்' போன்ற ஹிட் பாடல்கள் என்று திரைக்கு வரும் என்பதெல்லாம் யாருக்கு வெளிச்சமோ. அந்தப் பட்டியலில் இடம் பொருள் ஏவல் படத்தின் பாடல்களும் சேர்ந்துவிடக் கூடாது என்றும் மட்டும் பிரார்த்திக்கிறேன். யுவனின் குரலில் வரும் அத்துவான காட்டுக்கு பாடலும், வைக்கம் விஜயலட்சுமி குரலில் வரும் எந்த வழி பாடலும் ஒரே மெட்டுதான். வைரமுத்துவின் வரிகளும், யுவனின் இசையும் நம்மை அசைத்துப் பார்ப்பது உறுதி. 

யுவனின் கச்சேரி ஒன்றுக்கு யுவன் இசையமைத்த பாடல்தான் என்றும் யுவனுக்கும், யுவன் ரசிகர்களுக்குமான பந்தம். `I will be there for You'. யுவன் என்றுமே தன் ரசிகர்களுக்காக இசையமைத்துக்கொண்டிருக்கிறார். இசைத்துக்கொண்டே இருங்கள் யுவன் யுவனிஸம் தொடரும்!.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு