Published:Updated:

``ராஜா, ரஹ்மான், யுவன்... தேடிச்செல்லும் வரிசையில் நீங்களும் இருக்கிறீர்கள் வித்யாசாகர்!’’ - #HBDVidhyasagar

``ராஜா, ரஹ்மான், யுவன்... தேடிச்செல்லும் வரிசையில் நீங்களும் இருக்கிறீர்கள் வித்யாசாகர்!’’ - #HBDVidhyasagar
``ராஜா, ரஹ்மான், யுவன்... தேடிச்செல்லும் வரிசையில் நீங்களும் இருக்கிறீர்கள் வித்யாசாகர்!’’ - #HBDVidhyasagar

இசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

நம்மில் பலரும் திரைப் பாடல்களின் மூலம்தான் நமது பெரும்பாலான உணர்வுகளை அனுபவித்து முடிக்கிறோம். நம் எல்லையில்லா மகிழ்ச்சியையும் சொல்ல முடியாத சோகங்களையும் பகிர்ந்துகொள்ளவும் கரைக்கவும் இசையையே நாடிச் செல்பவர்கள் இங்கு பலர் உண்டு. அப்படி இளையராஜா, ரஹ்மான், யுவன் எனப் பலரைத் தேடிச்சென்ற வரிசையில் வித்யாசாகரிடமும் தஞ்சம் புகுந்திருப்போம். அவரின் மெல்லிசைக் கடலில் உற்சாகமாக நீந்தியிருப்போம். அந்த ‘மெலடி கிங்’ வித்யாசாகர் பிறந்தநாள் இன்று.

80-களின் இறுதியில் இசையமைப்பாளராக அறிமுகம் எனினும்,1994-ல் அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த ‘ஜெய்ஹிந்த்’ திரைப்படம்தான்  தமிழில் இவருக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது. ‘தாயின் மணிக்கொடி’, ' கண்ணா என் சேலைக்குள்ள ',  ‘முத்தம் தர ஏத்த இடம்’ போன்ற பாடல்களால் ஆல்பம் ஹிட்டடித்தது.

அடுத்த ஆண்டு அர்ஜூன் - வித்யாசாகர் காம்பினேஷனில் மீண்டும் ஒரு ஆல்பம் வெளியாகிறது. ரஹ்மானின் ‘உயிரே உயிரே’, ராஜாவின் ‘மஹாராஜனோடு ராணி வந்து’ என அல்டிமேட் மெலோடிகளுக்கு நடுவே இவரின் ஒரு மெலோடிப் பாடலும் மக்களின் கவனத்தைப் பெற்றது. அதுதான், `கர்ணா’ படத்தில் வரும் ‘மலரே…மெளனமா.’ எஸ்.பி.பி, ஜானகி பாடிய இப்பாடல், கேட்போரை மயங்கச் செய்து வானில் சஞ்சரிக்க வைத்தது. பல்லவி தொடங்கும் முன் வரும் புல்லாங்குழல் இசை, குருவிச் சத்தம் எனப் பாட்டுக்கு நம்மைத் தயார் செய்துவிட்டு எஸ்.பி.பி குரலில் அந்த முதல் வரி… `மலரே… மெளனமா’ வரும்... வாவ்! மெலோடி பிரியர்களுக்கு இன்றுவரை ஆல்டைம் ஃபேவரைட் பாடல் இது. அதே வருடத்தில்தான் சுந்தர்.சி-யின் `முறைமாம'னில் `ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் வந்தே’ என்ற கிளாஸிகல் ஹிட் பாடலைக் கொடுத்தார். `வில்லாதி வில்லன்’, `ஆயுத பூஜை’ எனத் தொடர் ஹிட்களால் அந்த வருடம் நிறைந்தது.

பிறகு, மலையாள சினிமாவுக்குச் சென்றவர், 1998-ல் அஜித் நடித்த `உயிரோடு உயிராக’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். அந்த வருடத்தில் மட்டும் அவ்வளவு அழகான மெலோடிகளைத் தமிழ் ரசிகர்களுக்குக் கொடுத்தார். `உயிரோடு உயிராக’ படத்தில் `அன்பே அன்பே’ பாடல் மெஸ்மரைஸ் செய்யும். `பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது’ என ஸ்ரீனிவாஸ் தொடங்கும்போதே நமக்கும் சிறகு முளைக்கும் உணர்வைக் கடத்தி, வானத்துக்கும் பூமிக்கும் பறக்கத் தொடங்கியிருப்போம். `தாயின் மணிக்கொடி’யில் `நூறாண்டிற்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா’ அந்த வருடம் காதலித்தவர்களை எல்லாம் பித்துப் பிடிக்கச் செய்தது. அதே வருடம் `நிலவே வா’ படத்தில் வரும் `நீ காற்று நான் மரம்’ பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். வைரமுத்து எழுதிய கவிதைக்கு மெட்டு அமைத்து உருவான இந்தப் பாடல், வித்யாசாகரின் டாப் 5 மெலடிகளில் ஒன்றாக இருக்கும். முதல் சரணம் முடிந்து வரும் இடையிசை மட்டும் போதும் வித்யாசாகர் யாரென்று சொல்ல! இறுதியில், ``நீ காற்று நான் மரம்’ என்ற வரியை ஹரிஹரன், சித்ரா ஹை பிட்சில் ஏற்றி இறக்கிப் பாடும் விதம்… ஆஹா! 

2000-ல் `சிநேகிதியே’ படத்துக்காக இவர் இசையமைத்த `ராதை மனதில்’ பாடல் இன்றும்கூட கல்லூரி ஆண்டு விழாக்களில் ஒலிக்கின்றன. அந்தப் பாடல் மட்டுமல்லாமல், மொத்த ஆல்பமுமே ரசனையான பாடல்களைக் கொண்டிருக்கும். `தில்’ படத்தில் இடம்பெற்ற `உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா’ என்ற ஸ்லோ ரொமான்டிக் மெலோடி பாடலும் இருக்கும், `கண்ணுக்குள்ள கெளுத்தி’ என்ற ஃபாஸ்ட் பீட் பாடலும் இருக்கும். `பூவெல்லாம் உன் வாசம்’ படம் மற்றுமொரு டிரேட் மார்க் வித்யாசாகர் ஆல்பம். யேசுதாஸ், சங்கர் மகாதேவன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, மலேசியா வாசுதேவன், சுஜாதா மோகன், ஸ்வர்ணலதா போன்ற டாப் சிங்கர்களை வைத்து உருவான ஆல்பம். ‘தாலாட்டும் காற்றே வா’, ‘காதல் வந்ததும்’ எனப் பல எமோஷனல் பாடல்கள் இன்றும் நம் ப்ளே லிஸ்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.    

வித்யாசகர் பாடகர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் வல்லவர். மெலோடிப் பாடல்களுக்கு இவர், குத்துப் பாடல்களுக்கு இவர் எனப் பிரித்துவைக்காமல், பாடகர்களை வைத்தே பாட்டுக்கு வித்தியாசமான சாயல் பூசி `அட’ என ஆச்சர்யப்பட வைப்பார். உதாரணத்துக்கு, நாட்டுப்புற இசைக் கலைஞர் புஷ்பவனம் குப்புச்சாமியை `தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா’ என பாப் ஸ்டைலில் பாடவைத்தும், கர்நாடக சங்கீத வித்வான் சீர்காழி சிவ சிதம்பரத்தை `முத்து முத்தா பேஞ்ச மழ தன்னே நன்னானே’ எனச் செம்மையான குத்துப் பாட்டைப் பாடவைத்து அழகு பார்த்திருப்பார். மாணிக்க விநாயகத்தை `ரன்’ படத்தில் ‘தேரடி வீதியில்’ பாடலைப் பாடவைத்தவரும் இவர்தான், `தில்’ படத்தில் `கண்ணுக்குள்ள கெளுத்தி’ பாடவைத்தவரும் இவர்தான்.

`ரன்’ பலருக்கும் தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த ஆல்பம். ‘பொய் சொல்லக் கூடாது காதலி’, ‘மின்சாரம் என்மீது’, ‘பனிக்காற்றே’ போன்ற அல்டிமேட் மெலோடிப் பாடல்கள் ஒரு பக்கம் இருக்க, அதே ஆல்பத்தில் ‘தேரடி வீதியில்’, ‘காதல் பிசாசே’ என பெப்பி நம்பர்களிலும் ஸ்கோர் செய்திருப்பார் வித்யாசாகர். அதே ஆண்டில் `வில்லன்' படத்தில் `ஆடியில காத்தடிச்சா’ பாடல் மூலம் அனைவரது கண்களிலும் கண்ணீர் வரச் செய்திருப்பார்.

`பூவாசம் புறப்படும் பெண்ணே (அன்பே சிவம்)’, `ஆலங்குயில் கூவும் ரயில் (பார்த்திபன் கனவு)’, `காற்றின் மொழி (மொழி)’, `டிங் டாங் கோயில் மணி (ஜி)’, `சித்திரையில் என்ன வரும் (சிவப்பதிகாரம்)’, `ஆசை ஆசை (தூள்)’, `கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் (சந்திரமுகி)’, `கவிதை இரவு இரவுக் கவிதை (சுள்ளான்)’, `கண்டேன் கண்டேன் (பிரிவோம் சந்திப்போம்)’, `காதல் வந்தால் சொல்லி அனுப்பு (இயற்கை)’ என இவர் இசையமைத்த காலத்துக்கும் நிலைத்து நிற்கும் மெலோடிகளின் பட்டியல் நீளம். 

இப்படிப் பல கிளாஸிக் பாடல்கள் இருந்தாலும், ஒருவிதப் புத்துணர்ச்சி தரும் ‘என்னைக் கொஞ்சக் கொஞ்ச (ஆதி)’ பாடலும், `கில்லி'யில் இடம்பெற்ற `ஷாலலா' பாடலும் அதிக முறை ரசிக்கப்பட்ட பாடல்கள். ‘தடக்கு தடக்கு’ எனப் பெப்பியாகத் தொடங்கி, கடிகாரத்தில் எப்போது சின்ன முள் நகர்கிறது என்பது தெரியாததைப்போல், எப்போது ‘என்னைக் கொஞ்சக் கொஞ்ச கொஞ்ச வா மழை’ என்ற மெலடிக்குத் தாவும் என்பதைக் கேட்பவர்களுக்கே தெரியாதபடி இசையைக் கோர்த்திருப்பார். இடையில் வரும் கிளாஸிகல் டச் எல்லாம் வேற லெவல்! 

மெலோடி மட்டுமல்லாமல், ‘கொக்கரக் கொக்கரக்கோ’, `வாடி வாடி நாட்டுக் கட்ட’, `அப்படிப் போடு போடு’, `கொடுவா மீச அறுவா பார்வ’, `வாடியம்மா ஜக்கம்மா’ இப்படிப் பல ஃபாஸ்ட் பீட் பாடல்களையும் கொடுத்து, தமிழ் ரசிகனின் சகல இசைத் தேவைகளுக்கும் ட்ரீட் வைத்தார் வித்யாசாகர். `தில்’, `பூவெல்லாம் உன் வாசம்’, `மொழி' படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநில விருதைப் பெற்ற இவர், தற்போது அதிகம் தமிழ் சினிமாவில் இசையமைக்காவிட்டாலும், தமிழ் சினிமாவுக்குக் காலம் தந்த அற்புதக் கலைஞன்!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் வித்யசாகர்!

அடுத்த கட்டுரைக்கு