Published:Updated:

``எனக்குப் பிறந்த நாளும்... இறந்த நாளும் பல முறை நடந்திருக்கு!'' - கே.ஆர்.விஜயா #HBDKRVijaya

கு.ஆனந்தராஜ்

`` `உன் உடல்நிலை ஒத்துழைக்கிற வரை தொடர்ந்து நடி. யாரைப் பத்தியும் கவலைப்படாதே. எப்போதும் பூ வெச்சுக்கோ. பொட்டு வெச்சுக்கோ. உனக்குப் பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணிகிட்டு, சந்தோஷமா இரு'னு ஆசீர்வாதம் பண்ணிட்டுதான் போனார்."

``எனக்குப் பிறந்த நாளும்... இறந்த நாளும் பல முறை நடந்திருக்கு!'' - கே.ஆர்.விஜயா #HBDKRVijaya
``எனக்குப் பிறந்த நாளும்... இறந்த நாளும் பல முறை நடந்திருக்கு!'' - கே.ஆர்.விஜயா #HBDKRVijaya

`புன்னகை அரசி’ நடிகை கே.ஆர்.விஜயாவின் பிறந்த தினம் இன்று. மூன்று தலைமுறைகளாக நடித்துக்கொண்டிருக்கிறார். அமைதியும் எளிமையுமாகத் தனிமையில் வசித்துவருகிறார். பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அவரிடம் பேசினோம். மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார்...

`` `கற்பகம்’ படம் மூலமா சினிமாவில் அறிமுகமானேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நடிச்சேன். நிறைய பட வாய்ப்பு வர, எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் உட்பட எல்லாப் பெரிய ஹீரோக்களுக்கும் ஜோடியா நடிச்சேன். அப்போ வருஷத்துக்குக் குறைந்தபட்சம் பத்து படங்களாவது என்னோடது ரிலீஸாகிடும். குறுகிய காலத்துலயே முன்னணி நடிகையானேன். ஒவ்வொரு படத்துக்கும் எல்லோரும் குழுவா வேலை செய்வோம். கதைகளுக்கு மட்டுமே முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுச்சு. அதனால அப்போதைய சினிமா சூழல் ஆரோக்கியமா இருந்துச்சு. அந்நிலையை இன்னைக்கு எதிர்பார்க்க முடியாது.

இந்நிலையில பீக்ல இருக்கும்போதே கல்யாணம் பண்ணிகிட்டேன். சினிமாவிலிருந்து ஓய்வு எடுக்கலாம்னு நினைச்சேன். ஆனாலும் வாய்ப்புகள் வந்துகிட்டே இருந்துச்சு. `நல்லா படிச்சவங்களே வேலை வாய்ப்புக்காக கஷ்டப்படுறாங்க. நீ பெரிசா படிக்கவும் இல்லை. ஆனா, உன் நடிப்புத் திறமைக்கும் அழகுக்கும் இப்போக்கூட வாய்ப்புகள் வருது. எல்லோருக்கும் அமையாத இந்த வாய்ப்பை, சரியா பயன்படுத்திக்கோ'னு என் கணவர் வேலாயுதம் சொன்னார். அதன்படி தொடர்ந்து நடிச்சேன். என் பொண்ணு பெரியவளா வளர்ந்த பிறகும்கூட ஹீரோயினாவே நடிச்சேன்’’ என்கிறார் பெருமிதத்துடன்.

``பணத்தேவையை எதிர்பார்த்து ஒருபோதும் சினிமாவில் நடிக்கும் நிலை எனக்கு வரலை. சினிமா துறைக்கு வந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிடுச்சு. முன்பு பரபரப்பா நடிச்சுகிட்டு இருந்ததால, அப்போதைய புகழை நினைச்சு சந்தோசப்பட நேரமில்லை. இப்போதான் அதற்கான நேரமும் வாய்ப்பும் கிடைச்சிருக்கு. செல்வத்திலும் புகழிலும் எனக்கு எந்தக் குறையுமில்லை. நல்ல நிலையில் இருக்கிறேன். இவையெல்லாம் இந்தப் பிறப்புக்குப் போதும். `உன் உடல்நிலை ஒத்துழைக்கிற வரை தொடர்ந்து நடி. யாரைப் பத்தியும் கவலைப்படாதே. எப்போதும் பூ வெச்சுக்கோ. பொட்டு வெச்சுக்கோ. உனக்குப் பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணிகிட்டு, சந்தோஷமா இரு’னு ஆசீர்வாதம் பண்ணிட்டுதான் போனார். அதனாலதான் தொடர்ந்து சினிமாவைவிட்டு விலகாம செலக்டிவா நடிச்சுகிட்டு இருக்கேன். 

அவ்வப்போது எங்க காலத்து கலைஞர்களுடன் போன்ல பேசுவேன்; நேரில் மீட் பண்ணுவோம். மத்தபடி சென்னையில நான் தனியாதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். இந்தத் தனிமையும் எனக்குப் பிடிச்சிருக்கு. கோயிலுக்குப் போறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். முன்பு தெய்விக படங்கள்ல அதிகம் நடிச்சேன். அப்படங்களின் ஷூட்டிங் கோயில்ல நடக்கும். இப்போ ஓய்வு நேரம் அதிகம் கிடைக்கிறதால, தவறாம கோயில்களுக்குப் போயிட்டு இருக்கேன்’’ என்றவர்,

பிறந்த நாள் பற்றி கூறும்போது, ``விக்கிப்பீடியா உட்படப் பல இடங்கள்ல என் பிறந்த நாள் தேதி மாறுபட்டு இருக்கு. சிவராத்தி நாளான இன்னைக்குதான் என் பிறந்த நாள். எனவே, வருஷத்துக்கு எனக்கு ஒருமுறை மட்டும் பிறந்த நாள் இல்லை. நான் இறந்துட்டதா முதலில் தவறான செய்தி வந்தப்போ, வருத்தமா இருந்துச்சு. பிறகு, அதே செய்தி பலமுறை வந்ததால பழகிட்டுச்சு. என் பிறந்த நாளும் சரி, இறந்த நாளும் சரி... பல முறை நடந்திருக்கு. இதுவும் ரசிகர்களின் ஒருவித அன்பின் வெளிப்பாடுதான். அதனால என்னைப் பத்தி வரும் எந்தச் செய்தியையும் நல்ல செய்தியாகவே எடுத்துக்கிறேன். அதனால, இப்போ எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் பணியாற்றியிருக்கிற இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உட்பட எல்லா சினிமா கலைஞர்களுக்கும் நன்றி’’ என்று நெகிழ்ச்சியாகக் கூறி முடித்தார் கே.ஆர்.விஜயா.