Published:Updated:

``படம் பார்க்காதீங்க... சிம்பிள்!" - `90 எம்எல்' விமர்சனங்களுக்கு ஓவியா பதிலடி!

``படம் பார்க்காதீங்க... சிம்பிள்!" - `90 எம்எல்' விமர்சனங்களுக்கு ஓவியா பதிலடி!
``படம் பார்க்காதீங்க... சிம்பிள்!" - `90 எம்எல்' விமர்சனங்களுக்கு ஓவியா பதிலடி!

ஓவியா நடிப்பில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் '90 எம்எல்'. இப்படத்தின் எதிர்மறை விமர்சனங்களுக்குப் பதில் சொல்லியிருக்கிறார், நடிகை ஓவியா.

மீபத்தில் வெளியான `90 ml' திரைப்படத்துக்கு பல வகையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவிவரும் நிலையில், இது குறித்து ஓவியாவிடம் பேசினோம். ``என் படத்தை யாருமே பார்க்கலைனாகூட பரவாயில்லை. எனக்கு நடிப்பு பிடிச்சிருக்கு, நான் நடிக்கிறேன். அதைப் பார்க்கப் பிடிக்கலைனா பார்க்காதீங்க... சிம்பிள். மத்தவங்களுக்காக வாழ்றதைவிட நமக்காக வாழ்ந்தாலே போதும். லைஃப் நல்லாயிருக்கும்!" என்று அதிரடியாகப் பேச ஆரம்பித்தார், ஓவியா. 

`` `களவாணி'யில வர்ற மகேஷ் கதாபாத்திரம் `கே 2' படத்துல எப்படி மாறியிருக்கு?"

`` `கே 2' படத்துல நாட்டுக்கோட்டை தலைவியா  நடிச்சிருக்கேன். `களவாணி' படத்துல சின்னப் பொண்ணா இருந்த மகேஷுக்குக் கல்யாணமாகி, அந்தக் கிராமத்துக்கே தலைவியா இருப்பாங்க. அந்தச் சமயத்துல அவங்களுக்கு நடக்கிற பிரச்னைகள், சண்டைகள் எல்லாம் சேர்ந்த சென்டிமென்ட் கதைதான், `கே 2'. இந்த மாதிரியான படங்கள் இப்போ ரொம்பக் கம்மியாதான் வருது. அதனால, ஃபேமிலி ஆடியன்ஸுக்கு இது நிறைவான ஒரு படமா இருக்கும்." 

``புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஓவியாவுக்கு இருக்கா?"

``நான் கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு. திருவிழா நேரங்கள்ல ஒயின் குடிக்கிறது எங்க பழக்க வழக்கங்களில் ஒண்ணு. அப்புறம், ஃப்ரெண்ட்ஸ்கூட பார்டிக்குப் போனா குடிப்பேன். நான் ஒரு சோஷியல் ட்ரிங்கர். ஒரு பொண்ணு மாடர்னா இருந்தா, `அது கெட்ட பொண்ணுதான். கேரக்டர் சரியில்லை'னு சொல்றது மாறணும். தவிர, ஒருத்தரோட பழகிப் பார்த்தாதான், அவங்க எப்படிப்பட்டவங்கனு தெரியும். சும்மா ஜீன்ஸ் போட்ட பொண்ணுங்கன்னாலே கெட்டவங்க, சுடிதார் போட்ட பொண்ணுங்க நல்லவங்கனு சொல்லக் கூடாது. ஒரு பொண்ணு கொஞ்சம் ஓப்பனா பேசுனா உடனே, `கேரக்டர் சரியில்லை'னு சொல்றது அறியாமையின் வெளிப்பாடு. எல்லாத்தையும் மூடி மறைக்கிற பொண்ணுங்களோட மனசு மட்டும் சுத்தமா இருக்குனு எப்படிச் சொல்ல முடியும்?! '90 ml' படம் மூலமா இந்தப் பார்வை மாறும்னு நினைக்கிறேன்." 

`` `90 எம்.எல்' படம் பற்றிய சோஷியல் மீடியா விமர்சனங்களை எப்படி எடுத்துக்குறீங்க?" 

``முதல்ல நடிகர்கள் ஒரு படத்துல நடிச்சா, படத்துல வர்ற கதாபாத்திரம் மாதிரிதான் ரியல் லைஃப்லேயும் இருப்பாங்கனு சொல்ல முடியாது. நாங்க வெறும் நடிகர், நடிகைகள்தான். எங்களுக்குப் பின்னாடி கதை எழுதுறவங்க இருக்காங்க. அவங்க சொல்ற மாதிரிதான் நாங்க நடிப்போம். `90 ml' ஒரு அடல்ட் படமா இருந்தாலும், இந்தக் கதாபாத்திரம் மறுபடியும் என் சினிமா வாழ்க்கையில கிடைக்குமானு தெரியலை. தவிர, இந்த ஜானர் படங்கள்ல நடிக்கிறதுக்கும், அதை இயக்குறதுக்கும் தனி தைரியம் வேணும். இந்தப் படத்துக்கு அப்புறம் `கே 2' ரிலீஸாகும். அதுல, செம ஹோம்லியா இருப்பேன். இப்படி விதவிதமா நடிக்கணும்னுதான் என் ஆசை." 

``பொண்ணுங்க லைஃப் ஸ்டைல் `90 எம்.எல்'ல காட்டியிருக்கிற மாதிரித்தான் இருக்குனு நினைக்கிறீங்களா?" 

``பொண்ணுங்களோட பெர்ஷனல் வாழ்க்கை `90 ml' படத்துல காட்டியிருக்கிற மாதிரிதான் இருக்கும். பசங்களைப் பத்தி பேசுவாங்க, அவங்க யார்கூடயாவது ரிலேஷன்ஷிப்ல இருந்தா, அதை ஷேர் பண்ணிப்பாங்க. ஆனா, பசங்க இந்த மாதிரி விஷயங்களை சைலண்டாதான் வெச்சுப்பாங்க. அவங்களுக்கு செக்ஸுவல் ரிலேஷன்ஷிப்ல ஒரு பிரச்னை இருந்துச்சுனா, அதைப் பெருசா வெளிய சொல்லமாட்டாங்க. ஆனா, பொண்ணுங்க எல்லாத்தையும் ஃபிரெண்ட்ஸ்கிட்ட சொல்லி, அதுக்குத் தீர்வு கேட்பாங்க. இதுதான் பொண்ணுங்களோட இயல்பு. அதைத்தான் படத்துல காட்டியிருக்கோம். எதையுமே மிகைப்படுத்திச் சொல்லலை."  

``இப்போ உங்களுக்கு வர்ற பட வாய்ப்புகள் எப்படி இருக்கு?"

`` `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு முன்னாடி வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கல. சில கதைகள் கிடைச்சாலும், அதுல என் கதாபாத்திரம் சொல்லிக்கிற அளவுக்குப் பெருசா இல்லை. அதையும் மீறி அந்தப் படங்களில் நடிச்சேன். அதுல சில படங்கள் ரிலீஸாகாமலே போயிடுச்சு. 'பிக் பாஸு'க்குப் பிறகு ரிலீஸாகாத படங்களெல்லாம் சேர்ந்து ரிலீஸ் பண்ணாங்க. அது எனக்குப் பிடிக்கலை. 'பிக் பாஸு'க்கு அப்புறம் எனக்கு நல்ல பெயர் கிடைச்சிருக்கு. அதுக்கு முன்னாடி நடிச்ச படங்கள் இப்போ ரிலீஸானா, 'ஓவியா ஏன் இப்படி ஒரு படத்துல நடிச்சிருக்காங்க'னு யோசிப்பாங்க. அதனால, அந்தப் படங்கள் ரிலீஸாகாம இருக்கிறதே பெஸ்ட்!. இப்போ, நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பிச்சிருக்கு. கதைக்கு முக்கியத்துவம் இருக்கிற படங்கள்ல நடிக்கணும்னு ஆசைப்படுறேன்."

``உங்க நண்பர்கள் மத்தியில் `90 எம்.எல்' படம் எப்படிப் பேசப்படுது, உங்களுக்கு வர்ற விமர்சனங்கள் எப்படியிருக்கு?" 

``பொண்ணுங்க அவங்களோட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட எவ்வளவு ஓப்பனா பேச முடியுமோ, அவ்வளோ ஓப்பனா பேசுவாங்க. அதைத்தான் இந்தப் படத்துல காட்டியிருக்கோம். மத்தவங்க விமர்சனம் பண்ணனும்னு இந்தப் படத்தை எடுக்கலை. தவிர, இது எல்லோருக்குமான படமும் கிடையாது. காலேஜ் பொண்ணுங்ககிட்ட இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. பொண்ணுங்களால மட்டும்தான் இந்த மாதிரியான விஷயங்களைப் புரிஞ்சுக்க முடியும். இது முழுக்க முழுக்க அவங்க உலகம். எல்லோரும் இந்தப் படத்தை படமா மட்டுமே பார்த்தா, எந்தச் சிக்கலும் இருக்காது. இந்தப் படத்துல நடிச்சது எனக்குப் பெருமையா, மனசுக்கு நிறைவா இருக்கு. 

என் ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிச்சிருக்கு. எனக்கு எந்தப் பிரச்னை இருந்தாலும், என் ரசிகர்கள் சமூக வலைதளங்கள்ல எனக்குப் பக்கபலமா இருந்திருக்காங்க. என் நண்பர்களுக்கும் இந்தப் படம் பிடிச்சிருக்கு. என்னோட அடுத்த படமான `காஞ்சனா 3' மற்றும் `களவாணி 2' படத்துல வர்ற கதாபாத்திரம் முற்றிலும் வேறமாதிரி இருக்கும். வெயிட் அண்ட் வாட்ச்!" 

அடுத்த கட்டுரைக்கு