தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

அவள் சினிமா: உயரே

அவள் சினிமா: உயரே
பிரீமியம் ஸ்டோரி
News
அவள் சினிமா: உயரே

அவள் சினிமா: உயரே

ர் ஆணின் மீது பெண்ணுக்குக் காதல் ஏற்பட கொஞ்சம் அன்பும் அனுசரணையுமே போதுமானதாக இருக்கிறது. இதில் பெண்ணின் பிழை ஒன்றும் இல்லை. ஆனால், இந்த எளிய அன்புக்கு ஆண் தகுதியானவனாக இருக்கிறானா?

அவள் சினிமா: உயரே

காதலுக்கு அன்பை மட்டுமே காட்டத் தெரியும். அதற்கு சுயநலம் கிடையாது. காதலியை உடைமையாக நினைக்காது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காதலை துண்டித்துக் கொள்ள விரும்பினால், அதையும் காதல் ஏற்றுக்கொள்ளவே செய்யும். ஆனால், சமீப காலமாகக் காதலரால் அல்லது அப்படிச் சொல்லிக்கொள்பவர்களால் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அப்படியொரு காதலால் பாதிக்கப்பட்டவள்தான் பல்லவி.  

அறிவு, தன்னம்பிக்கை, சுயசிந்தனையோடு செயல் படும் பல்லவியை பள்ளிக் கால நண்பன் கோவிந்த் காதலிக்கிறான். மகளின் விருப்பத்துக்காக கோவிந்தைச் சந்திக்கிறார் பல்லவியின் அப்பா. அவருக்கோ அந்தச் சந்திப்பு ஏமாற்றமாக அமை கிறது. அவன்மீது காதல் வர என்ன காரணம் என்று மகளிடமே கேட்கிறார். 14 வயதில் தாயை இழந்த துயரத்தில் இருந்தபோது, அவன் அனுசரணையாக நடந்துகொண்டான் என்கிறாள் பல்லவி.

அவள் சினிமா: உயரே

விமானியாக வேண்டும் என்கிற லட்சியம் கொண்ட பல்லவிக்கு, மும்பையில் பயிற்சிபெற வாய்ப்பு வருகிறது. கோவிந்துக்கு அதில் விருப்பமில்லை. அவனுக்கு, தன் அன்பைச் சொல்லிவிட்டு, பறந்துசெல்கிறாள் பல்லவி. காதல் என்கிற உரிமையில் அதீத அழுத்தம்கொடுத்து, அவள் வகுப்பில் இருக்கும்போதுகூட பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் கோவிந்த். அவள் பேச முடியாத ஒரு தருணத்தில் தன் கையைக் கத்தியால் கீறி, ரத்தம் சொட்டும் படத்தை அனுப்பிவைக்கிறான். துடித்துப்போன பல்லவி, நேரில் வந்து சமாதானம் செய்கிறாள்.

விமானி பயிற்சியில் பல்லவி சிறப்பாகத் தேர்ச்சிபெறுகிறாள். அதைக் கொண்டாடும் விதத்தில் நண்பர்களுடன் டின்னருக்குச் செல்கிறாள். அப்போது கோவிந்த் அழைக்கிறான். தான் நண்பர்களுடன் வெளியே சென்றதைச் சொன்னால், பிரச்னை செய்வான் என்பதற்காக அறையில் தூங்கிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறாள் பல்லவி. அவள் எதிர்பாராதவிதமாக, தங்கியிருக்கும் வீட்டின் வாசலில் நிற்கிறான் அவன். பேசக் கூடாத வார்த்தைகளை எல்லாம் கொட்டிவிடுகிறான். அதுவரை அத்தனை வலிகளையும் காதலுக்காகப் பொறுத்திருந்த பல்லவி, அவனை வாழ்க்கையிலிருந்தும் அந்த இடத்திலிருந்தும் வெளியேறிவிடுமாறு கூறுகிறாள்.

இரவு முழுவதும் அழுது தீர்த்த பல்லவி, காலையில் பயிற்சிக்குக் கிளம்புகிறாள். வாயிலில் கோவிந்த் நிற்கிறான். சட்டை செய்யாமல் கிளம்பும் பல்லவி மீது ஆசிட்டை ஊற்றிவிடுகிறான்.

அமிலவீச்சு ஒரு கொடுந்துயர். அதை ஒரு காதலனே தான் காதலித்ததாகச் சொல்லும் ஒரு பெண்மீது நிகழ்த்துவது மிகப் பெரிய துயரம். இப்போது, தன் முகத்தின் ஒரு பாகத்தை மட்டுமல்ல, பார்வைக் குறைபாட்டால் தன் லட்சியத்தையும் இழந்து நிற்கிறாள் பல்லவி. தோழியும் அப்பாவும் அவளைத் தேற்றுகிறார்கள். கோவிந்த் மீது புகார் கொடுக்கிறாள். தான் அமிலம் வீசவில்லை என்று மறுக்கிறான் அவன். வழக்கு நீள்கிறது.

அவள் சினிமா: உயரே

விமானத்தில் பணிபுரியும் தோழி, பல்லவியை டெல்லிக்கு அழைக்கிறாள். அங்கே, அமில வீச்சில் பாதிக்கப்பட்டு மீண்டவர்களைச் சந்திக்கிறாள் பல்லவி. புதிய நம்பிக்கை பிறக்கிறது. ஏற்கெனவே அறிமுகமான விமான நிறுவனத்தைச் சேர்ந்த விஷாலையும் சந்திக்கிறாள். விஷால் மூலம் விமானப் பணிப்பெண் வேலையில் சேர நேரிடுகிறது. விமானியாகப் பறக்க முடியாவிட்டாலும் பணிப்பெண்ணாகவாவது பறக்க முடிந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

ஒருநாள், அவள் சென்ற விமானத்தில் கோவிந்த் வருகிறான். அவளைக் கோபப் படுத்துகிறான். ஒருகட்டத்தில் பொறுமை இழக்கும் பல்லவி. அவன்மீது தண்ணீரை ஊற்றி விடுகிறாள். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது. கோவிந் தின் புகார் காரணமாக, ஒரு மாதத்தில் பல்லவியின் வேலை பறிபோக இருப்பதாகச் சொல்லிவிடுகிறார்கள். வாழ்க்கையைக் கெடுத்ததோடு இல்லாமல், வேலைக்கும் உலைவைக்கும் கோவிந்த்மீது கோபம் வருகிறது.

அன்று விமானம் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விமானிக்கு  நெஞ்சுவலி. இணை விமானிக்கு அவசர கால அனுபவம் இல்லை என்பதால் பதறுகிறான். இக்கட்டான சூழலில் பல்லவி விமானத்தை இயக்கி, எல்லோரையும் பத்திரமாகத் தரை இறக்குகிறாள். ஆனால், இந்தச் செயலுக்காக அவளை அதிகாரிகள் கண்டிக்கின்றனர்.

தரையில் இறங்கிய விமானம் மீண்டும் கிளம்புகிறது. எல்லோரும் எழுந்து நின்று பல்லவிக்கு பாராட்டுத் தெரிவிக்கின்றனர். பின்னால் அமர்ந்திருந்த விஷாலும் வாழ்த்து கிறான். நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் தன் கடமைகளைச் செய்ய ஆரம்பிக்கிறாள் பல்லவி. இந்த வேலை நிலைக்குமா என்பதைப் பற்றிய பயம் எதுவும் இல்லாமல், தன்னால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கையில் உயரே உயரே பறக்கிறாள் பல்லவி. கோவிந்தை மன்னிக்கவும் செய்கிறாள்.

பறத்தல் என்பது யாவருக்கும் சுகம். பெண்ணுக்கோ, பறத்தல் என்பது சுதந்திரம்... அளவிட முடியாத நம்பிக்கை. பெண்ணின் மனத்தை பறத்தல் வாயிலாக நேர்த்தியாகப் படம்பிடித்திருக்கிறார் `உயரே' மலையாளப் படத்தின் இயக்குநர் மனு அசோகன். பல்லவியாக வாழும் `பூ' பார்வதி, நடிப்பாலும் பாத்திரப்படைப்பாலும் நம் உள்ளத்தைக் கொள்ளைகொள்கிறார். பல்லவிகள் உயரே உயரே பறக்க வாழ்த்துகள்!

-விஜயா ஆனந்த்