Published:Updated:

"தில்லோத்தமா கண் சிமிட்டி, தலை சாய்த்துப் புன்னகைத்ததை மறக்க முடியுமா?!" - #21YearsOfKaadhalMannan

"தில்லோத்தமா கண் சிமிட்டி, தலை சாய்த்துப் புன்னகைத்ததை மறக்க முடியுமா?!" - #21YearsOfKaadhalMannan
News
"தில்லோத்தமா கண் சிமிட்டி, தலை சாய்த்துப் புன்னகைத்ததை மறக்க முடியுமா?!" - #21YearsOfKaadhalMannan

`காதல் மன்னன்’ திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இப்படம் குறித்த ஒரு ரீவைண்ட் கட்டுரை.

பார்த்த முதல் நொடியே தன்னிலை மறக்கச் செய்யும் ஒரு பெண்ணைச் சந்தித்தால்... பெயர், முகவரி என எந்த விசாரிப்புகளுக்கும் இடம் கொடுக்காது மனம் அவள் வசம் சென்றால்... அவளின் பார்வைக்காக, அவளின் புன்னகைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனக் கற்பனை கரைகடந்தால்... இந்தப் `பார்வைக் காய்ச்சல்’ அந்தப் பெண்ணின் நிச்சயதார்த்தத்தின்போது நிகழ்ந்திருந்தால்... அவள் எங்கு சென்றாலும் அவனும் ஜென் நிலையில் அவளைப் பின்தொடர்ந்தால்... எதிர்பாராத விதமாக அந்தப் பெண் அவனுக்கு அறிமுகமானால்... அவளுக்கும் இவன்மீது காதல் வந்தால்... தவறா, சரியா... நடக்குமா, நடக்காதா.. என நிச்சயதார்த்தம் நடந்துவிட்ட அவளும் யோசித்தால்... வேண்டாம் என விலகி நடக்க எத்தனித்தாலும், கால்கள் அனிச்சையாக முன்னோக்கி நகர்ந்தால்... இனிப்பு, கசப்பு, நேரம், மழை, வெயில் நண்பர்கள் என எல்லாமே ஒன்றாகிப்போன பித்துநிலைக்குப் போனால்... அவரைப் பற்றி யோசிக்கவே கூடாதென நினைத்தபடியே நொடி தவறாமல் அவரையே நினைத்தால்... வேதனை... ஐஸ்கட்டியைப்போல உஷ்ணமும் குளிரும் ஒன்றாக நின்று ஏதோ செய்தால்... சுக வேதனையான அந்த `வேண்டா- வேண்டும்’ காதலின் ஊடாட்டத்தில் திளைக்கும் காதல் கதைதான் சிவா - தில்லோத்தமாவுடையது. `காதல் மன்னன்’ தமிழ் சினிமாவின் மறக்க முடியாத காதல் கதை. `A celluloid Love Letter’ என்ற கேப்ஷனுடன் 21 வருடங்களுக்கு முன் இதே நாளில் வெளியானது. 

"தில்லோத்தமா கண் சிமிட்டி, தலை சாய்த்துப் புன்னகைத்ததை மறக்க முடியுமா?!" - #21YearsOfKaadhalMannan

1998-ல் வெளியான `காதல் மன்னன்’ அஜித்தின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான திரைப்படம். அதுவரை 15 திரைப்படங்களில் நடித்திருந்தார் அஜித். `ஆசை’, `காதல் கோட்டை’ போன்ற எவர்கிரீன் படங்கள் அந்தப் பட்டியலில் இருந்தது. ஆனால், `காதல் மன்னன்’ மேட்ச்லெஸ் பைக்கில் வலம் வரும் ஒரு ஸ்வேகான அஜித்தை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
"தில்லோத்தமா கண் சிமிட்டி, தலை சாய்த்துப் புன்னகைத்ததை மறக்க முடியுமா?!" - #21YearsOfKaadhalMannan

ஒரு ரூபாய் பெட் கட்டியதற்காக டெல்லி போலீஸிடம் வழியச் சென்று மாட்டி, வாய் திறக்காமல் அடிவாங்கிக்கொண்டு, தமிழ் பேசும் போலீஸின் குழந்தையைக் காப்பாற்றிவிட்டு, சொடக்கு போடும் அட்டகாசமாக அறிமுகக் காட்சி, `அழுக்குச் சட்டைப் போட்டாலும்... அழகாய்த் தெரியும் பேரழகன்...’ என்ற அறிமுகப் பாடல் என அமர்களப்படுத்தியிருப்பார் இயக்குநர் சரண். சரணுக்கு இது முதல் படம். இசையமைப்பாளர் பரத்வாஜுக்கும் இதுவே முதல் படம். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நடிகராக இதுதான் முதல் படம். மேன்ஷன் ஒன்றில் நண்பன் ஒய்யாவுடன் ( விவேக்) தங்கியிருக்கிறார் பைக் மெக்கானிக் சிவா (அஜித்). கண்ணதாசன் மெஸ் வைத்து நடத்தும் எம்.எஸ்.விஸ்வநாதன் என அன்றாடம் போகிறது. காதல் திருமணம் செய்துகொண்டதால் பிரிந்து வாழும் தில்லோத்தமாவின் அக்கா, சிவாவிடம் பெட் கட்டித் தில்லோத்தமாவிடம் கடிதம் கொடுக்கச் சொல்கிறார். தில்லோத்தமாவின் அப்பா, காதலை வெறுக்கும் ரிட்டையர்டு மிலிட்டரி மேன். கடிதம் கொடுக்கப்போகும் சிவா, பார்த்த முதல் பார்வையிலேயே திலோவிடம் மனதைப் பறிகொடுக்கும் `வேண்டும்- வேண்டா’ காதல் கதை. 

"தில்லோத்தமா கண் சிமிட்டி, தலை சாய்த்துப் புன்னகைத்ததை மறக்க முடியுமா?!" - #21YearsOfKaadhalMannan

சுவாரஸ்யம் சற்றும் குறையாத வகையில் பாடல்கள், நகைச்சுவை, காதல் காட்சிகள் என முதல் படத்திலேயே சரண் முத்திரை பதித்திருப்பார். தோன்றும் காட்சிகளில், காட்சிக்குத் தகுந்த பாடலைப் பாடி அசத்துவார் எம்.எஸ்.வி. விவேக் உடன் சேர்ந்து நகைச்சுவையிலும் அசத்தியிருப்பார். கரண் இந்தப் படத்தில் தில்லோத்தமாவுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பணக்கார `ஸ்ரூவ்வ்வ்வ்’ மாப்பிள்ளை. படத்தில் அவர் கார் ரேஸர். ஜெயிக்க வேண்டும் என்பதற்காகக் காரில் `டைம்பாம்’ வைத்துக்கொண்டு போட்டி போடும் வில்லன் பாத்திரம். க்ரிஷ் கர்னாட் காதலை விரும்பாத பிடிவாதமான முரட்டு அப்பா. `காதலிக்கிறது தப்பா’ எனத் தில்லோத்தமா கேட்க, தனது கார் ஷெட் கதவை மூடி அனைத்து கார்களையும் ஆன் செய்து புகையில் இருமி திலோவை `பிளாக்மெயில்’ செய்யும் முரட்டு அப்பாவாக நடித்திருப்பார். படத்தின் ஒட்டுமொத்த பலமே அஜித் - மானுவின் நடிப்புதான். காட்சிக்குக் காட்சி இருவரும் அசத்தியிருப்பார்கள். சாக்லேட் பாயாக இருந்த அஜித், இந்தப் படத்துக்குப் பிறகு ரஃப் பாயாக மாறியிருப்பார். இடது கையால் அடிக்கடி சொடக்கு போட்டு  அசத்துவார். `உன்னைப் பார்த்த பின்பு நான்... நானாக இல்லையே!’ எனப் படத்தின் தொடக்கத்தில் காதலால் தவிப்பார். விவேக்குடன் முரண்படும் காட்சிகளில் முறைப்பது, கரணுடன் மல்லுக்கு நிற்பதென அஜித் வலுவாக ஸ்கோர் செய்த படம். க்ளைமாக்ஸில் பனியனோடு பைக்கை மானுவின் வீட்டுக்குள் ஓட்டிச்சென்று, மானுவின் அப்பாவுக்கு சவால்விட்டு சொடக்குப் போடுகையில் அஜித்தின் ஆரம்பகால ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்திருப்பார்கள். 

"தில்லோத்தமா கண் சிமிட்டி, தலை சாய்த்துப் புன்னகைத்ததை மறக்க முடியுமா?!" - #21YearsOfKaadhalMannan

`ஆசை’ திரைப்படத்தில் `தில்லோத்தமா’ எனப் பாடல் வரி ஒன்று வரும். இதில் நாயகியின் பெயரே அதுதான். மானு தமிழில் நடித்தது இரண்டே படங்கள்தாம். இன்றுவரை தில்லோத்தமாவாகவே தமிழ் சினிமாவில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். உலகில் இதுவரை பிறக்காத பேரழகுடன் வடிவமைக்கப்பட்ட பெண் சிலைக்கு, பிரம்மன் உயிரூட்டி 'தில்லோத்தமா' எனப் பெயர் வைத்தாகப் புராணக் கதை உண்டு. அவர் கண்களைச் சிமிட்டி, தலை சாய்த்துப் புன்னகைத்ததை இன்னும் 20 வருடங்களுக்குப் பிறகும் ரசிகர்களால் மறக்க முடியாது. தன் அப்பாவிடம் `காதல்தான்பா உலகத்திலேயே பெரிய தப்பு’ எனக் கலங்கி நிற்பார். காதல் திருமணம் செய்து பிரிந்த சகோதரிக்காக அப்பாவிடம் பேச முயற்சி செய்வது, அஜித்தின் மோதிரத்தை மாற்றி அணிந்து குழம்புவதில் தொடங்கி, அஜித்தை நேசிப்பதும் தவிப்பதும், தந்தைக்கு அஞ்சுவதும், கரண் குடும்பத்துக்கு பயந்து கிடப்பதுமாக சராசரி தமிழ்ப் பெண்கள் பலரை பொருத்திப்பார்க்க வைத்திருப்பார். அஜித்தை கரண் அடித்துவிட, அவரை நேரில் போய் சந்தித்து `ஒரு நீரோடை மீனுக்கு, கரைமேல் ஆசை வந்ததே, இனி என்னென்ன நேர்ந்திடுமோ’ என உருகுவார். க்ளைமாக்ஸில் கையறுநிலையில் தற்கொலைக்கு முயன்று, அஜித்தைக் கரம்பிடிப்பதென முடிவெடுக்கும் மானு, மறக்கவே முடியாத தில்லோதம்மா.

"தில்லோத்தமா கண் சிமிட்டி, தலை சாய்த்துப் புன்னகைத்ததை மறக்க முடியுமா?!" - #21YearsOfKaadhalMannan

தமிழ் சினிமாவில் ஆல்பம் ஹிட் ஆன படங்களின் வரிசையில், `காதல் மன்னனு’க்குத் தனி இடமிருக்கும். தனது முதல் படத்திலேயே வெரைட்டி காட்டியிருப்பார் பரத்வாஜ். மெலடி, தேவா குரலில் ஒரு கானா பாடல், கிளாஸிக் மெட்டில் எம்.எஸ்.வி குரலில் ஒரு பாடல்... என அசத்தியிருப்பார். சரண் - பரத்வாஜ் - வைரமுத்து காம்போ பின்னாள்களில் பல ஹிட் ஆல்பங்களைக் கொடுத்தது. காதலன், காதலியின் ஒவ்வொரு சூழலுக்குத் தகுந்தவாறு பாடல் வரிகள், இசை என அதகளம் செய்திருக்கும் இந்தக் கூட்டணி. 

"தில்லோத்தமா கண் சிமிட்டி, தலை சாய்த்துப் புன்னகைத்ததை மறக்க முடியுமா?!" - #21YearsOfKaadhalMannan

சரண் முதல் படத்திலேயே தனக்கான ஸ்டைல் ஒன்றை நிறுவியிருப்பார். தமிழின் ஜனரஞ்சக இயக்குநர்களில் சரணுக்கு முக்கிய இடமுண்டு. குடும்பப் படங்களாக மட்டுமே இல்லாமல், இளைஞர்களைக் கவரும் வகையில் வித்தியாசமான கதைகளை எடுத்து வெற்றியும் பெற்றவர். கதாபாத்திரங்களின் பெயர் தொடங்கி, கண்ணதாசன் மெஸ், அஜித்தின் ரூமில் மாட்டியிருக்கும் மாடல் பைக் என சின்னச் சின்ன விஷயங்களிலும் கலக்கியிருப்பார். படத்தில் பெண்கள் கல்லூரியில் உடை சார்ந்த போராட்டத்தின்போது, கல்லூரி முதல்வர் பெரியாரைக் குறிப்பிட்டுப் பேசுவார். க்ளைமாக்ஸில் ஸ்டைலான பின்னணி இசையில் அஜித், மானுவின் கையைப் பிடித்தபடி நீண்ட சாலையில் ஓடுவார். `காதல் மன்னனு’க்குப் பிறகு ஒரு வருடம் கழித்து வெளியான அஜித்தின் `அமர்க்களம்’ க்ளைமாக்ஸும் இதேபோல இருக்கும். மனித மனங்களுக்குக் காதல் விடுதலையளிப்பதைப்போல இருக்கும் இந்தக் க்ளைமாக்ஸ் காட்சிகள். சரண் - அஜித் கூட்டணி அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கூட்டணி. அந்த அசலான கூட்டணியின் ஆரம்பம் `காதல் மன்னன்’ படம்தான்.