Published:Updated:

``உங்க காமெடிலாம் சூப்பருங்கன்னார் ஓ.பி.எஸ்.!'' - அ.தி.மு.க-வில் ரவிமரியா

``உங்க காமெடிலாம் சூப்பருங்கன்னார் ஓ.பி.எஸ்.!'' - அ.தி.மு.க-வில் ரவிமரியா
News
``உங்க காமெடிலாம் சூப்பருங்கன்னார் ஓ.பி.எஸ்.!'' - அ.தி.மு.க-வில் ரவிமரியா

"மூணு வருடமா இவங்க ஆட்சியை நல்லா கவனிச்சுக்கிட்டு இருக்கேன். இது மக்களுக்கான ஆட்சியாகத்தான் நான் பார்க்கிறேன். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இரவு 11 மணி வரைக்கும் கட்சி ஆபீஸில் இருக்காங்க."

திரைத்துறையிலிருந்து அரசியல் பிரவேசம் எடுத்தவர்கள் பலர். அதில் சிலர் தனியாகக் கட்சி தொடங்கி அரசியலில் தன் பலத்தைக் காட்டுவர். சிலர் ஏற்கெனவே இருக்கும் கட்சியில் இணைந்து பொறுப்புகள் பெற்று சினிமாவில் இருந்துகொண்டே கட்சிப் பணிகளையும் கவனித்துக் கொள்வர். அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடிகர் ரவிமரியா தன்னை அ.தி.மு.க-வில் இணைத்துக்கொண்டார்.   

``திடீர் அரசியல் பிரவேசத்திற்குக் காரணம் என்ன?"  

``என் அப்பா எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர். அதனாலோ என்னவோ, எனக்கு சின்ன வயசுல இருந்தே அ.தி.மு.க மீது ஈடுபாடு அதிகம். புதுசா வந்த படங்களைவிட எம்.ஜி.ஆர் படங்களைத் தியேட்டரில் வெளியிட்டால், மிஸ் பண்ணாமப் பார்த்திடுவேன். காலேஜ் முடிச்சுட்டு சினிமாவுக்குப் போகணும்னு எண்ணம் வந்தது. அதற்கான முயற்சி, போராட்டம்னு முழுவேலையும் சினிமாகவே இருந்ததுனால அரசியல்ல இறங்குறது பத்தி நான் யோசிக்கலை. இத்தனை வருடம் சினிமாவுல இருந்ததுனால எனக்குனு நல்ல பெயர் வாங்கிட்டேன். பொருளாதார ரீதியாகவும் வளர்ந்திருக்கேன். அரசியல் கட்சியில சேரலாம்னு எண்ணம் வந்ததும், அ.தி.மு.க-வுல சேர்ந்திருக்கேன்."

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``இப்போதைய அ.தி.மு.க ஆட்சியை எப்படிப் பார்க்குறீங்க?" 

``நான் அ.தி.மு.க-வில் சேர்ந்ததுக்கு எம்.ஜி.ஆர் ஐயா மட்டுமே காரணமல்ல. இப்போ இருக்கிறவங்களும்தான். மூணு வருடமா இவங்க ஆட்சியை நல்லா கவனிச்சுக்கிட்டு இருக்கேன். இது மக்களுக்கான ஆட்சியாகத்தான் நான் பார்க்கிறேன். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இரவு 11 மணி வரைக்கும் கட்சி ஆபீஸில் இருக்காங்க. அதேபோல, காலையில 8 மணிக்கு நடக்கிற விழாவிலும் கலந்துக்கிறாங்க. 24 மணி நேரமும் அவங்களை எளிமையா அணுகுற அளவுக்கான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்காங்க. நாம நினைக்கிற மாதிரி அரசியல்வாதிகள் ரொம்ப சொகுசா இல்லை. மக்கள் நலனுக்காக ரொம்ப மெனக்கெடுறாங்க. ஒரு இக்கட்டான சூழல்ல ஆட்சி நடந்துக்கிட்டிருக்குனு எல்லோருக்கும் தெரியும். இந்தச் சூழலிலும் மக்களுக்கான நலத் திட்டங்களைத் தினமும் செயல்படுத்திக்கிட்டு இருக்காங்க. சினிமாவுல இருக்கிற அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளர்கள் பலர் கடந்த ரெண்டு வருடமாவே என்கிட்ட கேட்டுக்கிட்டு இருந்தாங்க. அவங்களுடைய அன்பும், என்னுடைய உணர்வும்தான் என்னைக் கட்சியில இணைய வெச்சிருக்கு." 

``கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்காகப் பிரசாரம் பண்ணீங்களே?"

``நானும், சீமானும் அண்ணன் - தம்பி மாதிரி. அந்தப் பழக்கத்துலதான் கடந்த சட்டசபைத் தேர்தல்ல அவருக்கு ஆதரவா பிரசாரம் பண்ணேன். ஒரு சகோதரனாதான் ஓட்டுக் கேட்டேனே தவிர, நாம் தமிழர் கட்சியில் நான் தீவிரமா இருந்ததில்லை. அந்தக் கட்சியில இருந்து என்னை எம்.எல்.ஏ வேட்பாளராகூட அறிவிச்சாங்க. சில காரணங்களால நான் தேர்தல்ல நிற்கலை. தவிர, முழு ஈடுபாட்டோட அந்தக் கட்சியில நான் இல்லை. முக்கியமான காலகட்டத்துல ஒரு நடிகனா என்னை அவங்க பயன்படுத்திக்குவாங்க. ஒரு சகோதரனா அவங்களுக்கு நான் பயன்படுவேன்."  

``நாடாளுமன்றத் தேர்தல்ல அ.தி.மு.க-வுக்கு ஆதரவாப் பிரசாரம் பண்ணுவீங்களா?"

``கழகப் பேச்சாளரா என்னை நியமிக்கிறதாச் சொல்லியிருக்காங்க. அதுக்கான அறிவிப்பு வந்தபிறகு, 40 தொகுதியிலும் அ.தி.மு.க கூட்டணிக்காகப் பிரசாரம் பண்ணுவேன். நடிகன் என்ற அடையாளம்தான் அரசியல்ல எனக்கான முகமா இருக்கு. அந்த முகத்தை அரசியலுக்கும், இந்தக் கட்சிக்கும் எப்படிப் பயன்படுத்திக்கப்போறாங்கனு எதிர்காலத்துல தெரியும்." 

``உங்க படங்களைப் பற்றி முதல்வர் ஏதாவது பேசினாரா?"  

``முதல்ல ஓபிஎஸ் சாரைத்தான் பார்த்தேன். எந்த ஊர், என்ன படிச்சிருக்கீங்கனு என்னைப் பத்தி முழுமையாக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டார். தினமும் டிவியில உங்க காமெடிகள்தான் என்டர்டெயின்மென்ட்னு சொன்னார். என் நண்பர் சிங்கம்புலிக்கு, ஓபிஎஸ் தாய்மாமா முறை. நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து நடிச்ச படங்களைப் பத்தி சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தோம். `காலையில தலைமைக் கழகத்துக்கு வாங்க. அவரும் இருப்பார், இணைஞ்சுடலாம்'னு சொன்னார். பிறகு, முதல்வருக்குப் பூங்கொத்து கொடுத்து சந்திச்சேன். `வாங்க வாங்க... ரொம்ப சந்தோஷம்'னு சொல்லி வரவேற்றார். என்னை நடுவுல நிற்கவெச்சு, ரெண்டுபேரும் எனக்கு சால்வை போர்த்தி மரியாதை பண்ணாங்க."

``வில்லன் டு காமெடி... இந்தப் பயணத்தைச் சொல்லுங்களேன்?!" 

``என் முகம்தான் சீரியஸா இருக்கும். ஆனா, நான் குழந்தைத்தனமான காமெடியன். காலேஜ்ல மிமிக்ரி, மோனோ ஆக்ட்னு மதுரை ஏரியாவுல நடக்கிற பல போட்டிகளில் பரிசு வாங்கியிருக்கேன். இயக்குநர் வசந்தபாலன் காலேஜ்ல என் ஜூனியர். பி.ஜி முடிச்சுட்டு வர்றதுக்குள்ள, அவர் எனக்கு முன்னாடி சினிமாவுக்கு வந்துட்டார். அவர்தான், `வெயில்' படத்துல வில்லனா நடிக்க வெச்சார். `என்னை காமெடி கேரக்டர்ல நடிக்கவைங்க. வில்லனுக்கு நான் சரிபட்டு வரமாட்டேன்'னு சொன்னேன். `உங்களுக்கு காமெடி சென்ஸ் நல்லாயிருக்கு. ஆனா, முகம் சீரியஸா இருக்கே'னு சொன்னார். எழில் சார்தான், நான் அடிக்கிற கமென்ட்ஸ் பார்த்துட்டு, `உங்களை யாருங்க வில்லன் ஆக்குனது, நீங்க பக்கா காமெடியன்'னு சொன்னார். `நீங்கவேணா அந்த ரிஸ்க்கை எடுங்க'னு அவர்கிட்டயே சொன்னேன். `மனம் கொத்திப் பறவை' படத்துல எழில் சார் எடுத்த ரிஸ்க் வொர்க் அவுட் ஆச்சு."

``என்னென்ன படங்கள் கைவசம் இருக்கு?"

```ஜெயில்', `வெண்ணிலா கபடிக்குழு 2', `காட்டேரி', `பூமராங்', `ஜெகஜால கில்லாடி' இப்படிப் பல படங்கள் வரிசையா இருக்கு. யோகிபாபுகூட `கூர்கா' படத்துல `3.0' குட்டி கெட்டப்ல நடிக்கிறேன்."