Published:Updated:

``வடிவேலுவின் `இம்சை அரசன் 24-ம் புலிகேசி' பிரச்னைகள்... முடித்து வைப்பாரா சீமான்?!'' #VikatanExclusive

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``வடிவேலுவின் `இம்சை அரசன் 24-ம் புலிகேசி' பிரச்னைகள்... முடித்து வைப்பாரா சீமான்?!'' #VikatanExclusive
``வடிவேலுவின் `இம்சை அரசன் 24-ம் புலிகேசி' பிரச்னைகள்... முடித்து வைப்பாரா சீமான்?!'' #VikatanExclusive

வடிவேலு நடிக்க, சிம்புதேவன் இயக்குவதாக இருந்த `இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் பல பிரச்னைகளால் ஷூட்டிங் நடைபெறாமல் இருந்தது. இப்படத்தின் பிரச்னை குறித்த விரிவான தகவல்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மிழில் வெளியான `மிகச்சிறந்த நகைச்சுவைத் திரைப்படங்கள்’ என்ற பட்டியல் தயாரித்தால் அதில், `இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்துக்கு முக்கியமான இடமுண்டு. இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பு, வடிவேலுவின் நடிப்பு... என்று அந்தப் படம் தொடங்கும்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அது, விகடனில் கார்ட்டூனிஸ்ட்டாக இருந்த சிம்புதேவன் இயக்குநராக அறிமுகமான படம். அவருடைய கார்ட்டூன் கேரக்டருக்கு வடிவேலு உயிர் கொடுத்துப் ‘புலிகேசி’யாக உலவினார் என்றுதான் சொல்லவேண்டும். வடிவேலு - ஷங்கர் - சிம்புதேவன் என்ற இந்த காம்பினேஷன்தான், அந்தப் பட வெற்றிக்கான காரணம்.

பிறகு, சிம்புதேவன் வேறுசில படங்களை இயக்கினார். அவை வணிகரீதியில் வெற்றி பெற்றிருந்தாலும் ‘புலிகேசி’ அளவுக்கு மக்களிடம் சென்று சேரவில்லை. அதேபோல, வடிவேலும் வரலாறு, புராணம், பீரியட் கதையம்சம் உள்ள சில படங்களில் ஹீரோவாக நடித்தார். அவை, ‘புலிகேசி’ அளவுக்கு வெற்றிபெறவில்லை. ‘புலிகேசி’ மாதிரியான ஒரு வரலாற்று நகைச்சுவைத் திரைப்படம் வர வேண்டுமென்றால், மீண்டும் வடிவேலு - சிம்புதேவன் காம்பினேஷன் இணைந்தால்தான் உண்டு என்கிற அளவுக்கு இருந்தது சூழல்.

அந்த சமயத்தில்தான், அதே காம்பினேஷனிடமிருந்து ‘23-ம் புலிகேசி’யின் அடுத்த பாகமாக, ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்துக்கான அறிவிப்பு வந்தது. முதல் பாகம் போலவே சினிமா ஆர்வலர்களிடம் இரண்டாம் பாகத்துக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. படப்பிடிப்பும் தொடங்கியது. தமிழ் சினிமாவின் வரலாற்றில் தடம் பதிக்கும் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாகக் காத்திருந்தனர். 

இந்த நிலையில், அதன் படப்பிடிப்பு தொடங்கிய சில நாள்களிலேயே திடீரென நிறுத்தப்பட்டது. இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. வடிவேலுக்கும் சிம்புதேவனுக்குமான மனக்கசப்பால்தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்று கிசுகிசுத்தனர். இரு தரப்புக்கும் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தன. ஆனால், பலனில்லை. அந்த நேரத்தில்தான் படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கர், வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். 

இந்தப் பிரச்னையை நன்கு அறிந்த தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம். அதில் ஒரு தயாரிப்பாளர் கூறுகையில், “இந்தப் படத்தின் கதையை முழுவதுமாகக் கேட்ட பிறகே இதில் நடிக்க வடிவேலு 70 நாள்கள்  கால்ஷீட்  கொடுத்திருக்கிறார். படப்பிடிப்புக்காக சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமான இரண்டு அரங்குகள் அமைக்கப்பட்டன. படப்பிடிப்பு தொடங்கும் நாளன்று ஒரு பாடல் காட்சியைப் படமாக்கத் திட்டமிட்டிருந்தார் சிம்புதேவன். அது வடிவேலு ஏற்கெனவே கேட்டுவிட்டு ஓகே சொன்ன பாடல். ஷூட்டிங் தொடங்கிய சிறிது நேரத்துக்குள் படப்பிடிப்பை நிறுத்தச் சொன்ன வடிவேலு, ‘எனக்கு காஸ்ட்யூம் பிடிக்கலை. இந்தப் பாட்டும் பிடிக்கலை. மாத்தி சரி பண்ணுங்க. பிறகு ஷூட்டிங்கை வெச்சுக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார். பிறகு, ஈவிபி ஃபிலிம் சிட்டியை விட்டுக் கிளம்பியவர் யாரிடமும் சொல்லாமல் திடீரென விமானம் ஏறி மதுரைக்குச் சென்றுவிட்டார்’’ என்றார். வடிவேலுவின் இந்தச் செயலால் யூனிட்டே அதிர்ந்து நின்றிருக்கிறது. 

கதையை, தன் கதாபாத்திரத்தின் தன்மையை வடிவேலு மாற்றச் சொல்லியிருக்கிறார். வடிவேலு தலையீட்டால்தான் அவரின் முந்தைய படங்களான `தெனாலிராமன்’, `எலி’ போன்றவை தோல்வியடைந்தன. அதேநிலை ‘24-ம் புலிகேசி'க்கும் ஏற்பட வேண்டுமா’ என்று கூறி, ஸ்கிரிப்டில் வடிவேலுவின் தலையீட்டை சிம்புதேவன் விரும்பவில்லை. இந்தக் கருத்து வேறுபாட்டால்தான் படப்பிடிப்பு நின்றுபோனது என்பதே உண்மை.

ஒரு கட்டத்தில் படத்துக்காகப் போடப்பட்ட அரண்மனை, தர்பார் செட்டுகள் வெயில், மழையில் வீணாகிப்போகின. நிலைமை எல்லைமீறிப் போகவே, ஷங்கர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். ஃபெப்சி சங்கத்தின் தலைவர் செல்வமணியை அழைத்து  ஆலோசனை நடத்தியது தயாரிப்பாளர் சங்கம். பிறகு, `` ‘24-ம் புலிகேசி’ படத்தில் நடித்துக்கொடுக்கும் வரை வடிவேலு வேறு படங்களில் நடிக்கக் கூடாது. அப்படி நடித்தால், அந்தப் படத்தில் ஃபெப்சி தொழிலாளர்கள் வேலை செய்ய மாட்டார்கள்’’ என்று பகிரங்கமாக அறிவித்தார் செல்வமணி. அதன் பிறகும் வடிவேலு `புலிகேசி’ படத்தில் நடிக்கவில்லை. கவுன்சிலுக்குப் பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. தனக்குப் பதில் தனது மேனேஜரை மட்டுமே அனுப்பி வைத்திருக்கிறார்.  

இந்தப் படத்துக்காகக் கால்ஷீட் கொடுத்த 70 நாள்களில் 10 நாள்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார் வடிவேலு. அதேபோல் அவருக்குப் பேசப்பட்ட சம்பளத்தில் பாதிப் பணத்தை வாங்கிவிட்டார். இந்நிலையில், வடிவேலு நடிக்கவிருந்த கேரக்டரில் யோகி பாபு நடிக்கப்போகிறார் என்று செய்தி பரவிவருகிறது. ஆனால், அதில் உண்மையில்லை. வடிவேலுவை நடிக்க வைக்கவே ஷங்கரும் சிம்புதேவனும் முயன்று வருகின்றனர். இந்தப் படத்தை முடித்துக்கொடுக்காமல் அவர் வேறு புதுப்படங்களில் நடிக்கக் கூடாது என்று வாய்மொழி உத்தரவையும் தயாரிப்பாளர் சங்கம் போட்டுள்ளது. 

‘மருதமலை’, `கத்திச்சண்டை’ படங்களின் இயக்குநர் சுராஜ், தன் அடுத்த படத்தில் நடிக்க வைக்க வடிவேலுவை அணுகியிருக்கிறார். இதேபோல், `சார்லி சாப்ளின்’ பட இயக்குநர் ஷக்தி சிதம்பரமும் தன் படத்தில் நடிக்க வைப்பதற்காக வடிவேலுவை சந்தித்திருக்கிறார். இந்த விஷயம் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பார்வைக்குப் போக, சம்பந்தப்பட்ட இரு இயக்குநர்களையும் அழைத்த கவுன்சில், `வடிவேலுவை ஒப்பந்தம் செய்யக் கூடாது’ என்று கறாராகக் கூறியுள்ளனர். `பாரதி’ பட இயக்குநர் ஞான ராஜசேகரனும் வடிவேலு தன் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியதை அறிந்த கவுன்சில், அவருக்கும் தடை போட்டுள்ளது. 

இந்நிலையில், ஷங்கர் தரப்பிடமும் வடிவேலுவிடமும் சமாதானம் பேசும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான். `இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாராம் சீமான்.  

``ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் அவங்க வீட்டு ரேஷன் கார்டுல மட்டும்தாண்ணே என் பேரு இல்ல. மத்தபடி, நான் அவங்க வீட்டுல ஒரு மெம்பர்தாண்ணே’’ என்று வடிவேலு அடிக்கடி சொல்வார். அது ஒருவகையில் உண்மையே! நாட்டு நடப்புகளைக் கிண்டலடித்து, இன்று சமூக வலைதளங்களில் வரும் மீம்ஸ்களுக்கான ஆதாரமே வடிவேலுவின் விதவிதமான பாவனைகள், வசனங்கள்தான். அந்த வகையில், தமிழர்களின் மனதில் வடிவேலுவுக்கு என்றுமே நீங்காத இடமுண்டு என்பது மறுப்பதற்கில்லை. அள்ள அள்ள நகைச்சுவையை வழங்கிய வடிவேலும் இந்த இடைவெளியைப் போக்கும் வகையில் நமக்கு நகைச்சுவை உணவளிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். 

கலை வடிவத்தைவிட கலைஞர்கள் உயர்ந்தவர்கள் அல்ல என்ற உண்மையை உணர்ந்து வடிவேலும் சிம்புதேவனும் ‘24-ம் புலிகேசி'யாக இறங்கிவருவார்கள் என்று நம்புவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு