Published:Updated:

போராட்டங்கள், ஃபீல்குட் சினிமா, புது முயற்சிகள்... தமிழ் சினிமாவின் பெண் இயக்குநர்கள்!

போராட்டங்கள், ஃபீல்குட் சினிமா, புது முயற்சிகள்... தமிழ் சினிமாவின் பெண் இயக்குநர்கள்!
போராட்டங்கள், ஃபீல்குட் சினிமா, புது முயற்சிகள்... தமிழ் சினிமாவின் பெண் இயக்குநர்கள்!

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை... ஆண்கள் கோலோச்சும் தமிழ்த் திரையுலகில், பெண் படைப்பாளிகள் அரிது. அப்படிப்பட்ட கோலிவுட்டில், படைப்புகள் மூலம் தங்களின் இருப்பைப் பதிவு செய்த பெண் இயக்குநர்களை இந்தப் பெண்கள் தினத்தில் நினைவு கூரும் தொகுப்பு இது.

மிழ் சினிமாவில் மட்டுமல்ல, திரைத்துறையிலேயே பெண் படைப்பாளிகளின் எண்ணிக்கை குறைவு. அதையும் தாண்டி, தங்களின் திரைப் படைப்புகள் மூலம் இருப்பைப் பதிவு செய்த பெண் இயக்குநர்களைப் பற்றிப் பார்ப்போமா?! 

டி.பி.ராஜலட்சுமி:

தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி, முதல் பெண் இயக்குநர் இரண்டுமே டி.பி.ராஜலட்சுமிதான். தமிழின் முதல் பேசும்படமான `காளிதாஸி'ல் கதாநாயகியாக நடித்தார். தமிழ், தெலுங்கில் 23 படங்களில் கதாநாயகியாக நடித்தவர், `மிஸ் கமலா', `மதுரை வீரன்' ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். மேலும், சுதந்திரப் போராட்டக் காலத்தில் `தமிழ்த் தாய்' என்ற படத்தைத் தயாரித்து, தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார்.  

மதுமிதா:

உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் திரைப்படமான `பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியனில்' பணியாற்றிவிட்டு, `வல்லமை தாராயோ' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், மதுமிதா. பார்த்திபன் நடிப்பில் வெளியான அப்படம், வெற்றிகரமாக நூறு நாள்களை நிறைவு செய்தது. பிறகு, `கொலகொலயா முந்திரிக்கா', `மூணே மூணு வார்த்தை' ஆகிய படங்களை இயக்கிய மதுமிதா, பல குறும்படங்களையும்  இயக்கியிருக்கிறார். 

நந்தினி:

திரைப்படக் கல்லூரியில் இயக்குநருக்கான படிப்பை முடித்த நந்தினி, கோல்டு மெடலிட்ஸ்ட். இயக்குநர் பிரியாவிடம் `கண்ட நாள் முதல்' படத்தில் உதவி இயக்குநராக இருந்தவர், அஜ்மல் நடித்த `திருதிரு துறுதுறு' படத்தின் மூலம் இயக்குநர் ஆனார். இவர் இயக்கிய `ஓட்டம்' குறும்படம் தமிழக அரசின் இரண்டு விருதினை வென்றுள்ளது. திரைப்படங்கள், குறும்படங்கள் மட்டுமல்லாது, பல விளம்பரப் படங்களையும் இயக்கியிருக்கிறார், நந்தினி. 

ஐஸ்வர்யா ஆர்.தனுஷ்:

`விசில்' திரைப்படத்தில் இடம்பெற்ற `நட்பே நட்பே' பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார், ஐஸ்வர்யா. பின்பு, `ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர், கணவர் தனுஷை வைத்து `3' படத்தை இயக்கினார். `3' படத்தில் இடம்பெற்ற `கொலவெறி' பாடல் உலகளவில் வைரலாகியது. தொடர்ந்து, கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த்தை வைத்து `வை ராஜா வை' படத்தை இயக்கினார். 2016-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதுவராகத் தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யா, பிரபலங்களுடைய குழந்தைகள் பற்றி `ஸ்டேண்டிங் ஆன் தி ஆப்பிள் பாக்ஸ்’ என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். 

சுஹாசினி மணிரத்னம்:

திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படித்த சுஹாசினி, ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் `உதிரிப்பூக்கள்', `ஜானி' படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். பின்னர், தமிழ், மலையாளப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர், அனுஹாசனும், அரவிந்த்சாமியும் நடித்த `இந்திரா' படத்தின் மூலம் இயக்குநரானார். மேலும், கணவர் மணிரத்னம் இயக்கிய `திருடா திருடா', `இருவர்', `ராவணன்' படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார்.  

கிருத்திகா உதயநிதி:

`லைஃப் ஸ்டைல்' பத்திரிகையில் எடிட்டராக வேலை பார்த்த கிருத்திகா, உதயநிதி ஸ்டாலினை மணந்துகொண்டார். தனது கணவரின் தயாரிப்பில் உருவான `வணக்கம் சென்னை' படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு இயக்குநராக அறிமுகமானார். `வணக்கம் சென்னை' தந்த வெற்றிக்குப் பிறகு, விஜய் ஆண்டனியை வைத்து `காளி' படத்தை இயக்கினார். இவர் இயக்கிய பல குறும்படங்கள் விருதுகளைக் குவித்திருக்கின்றன. மூன்றாம் பாலினத்தவரின் வலிகளைப் பேசும், சந்தோஷ் நாராயணன இசையில் வெளியான 'சதையை மீறி' பாடலுக்கு வீடியோ வடிவம் கொடுத்து இயக்கியதும் இவர்தான்.

லட்சுமி ராமகிருஷ்ணன்:

குடும்பத்தினருடன் மஸ்கட்டில் வசித்துவந்த லட்சுமி, 2005-ல் இந்தியா திரும்பினார். பின்னர், 6 குறும்படங்களை இயக்கியவர், மலையாள இயக்குநர் லோகிதாஸ் இயக்கிய `சக்கர முத்து' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 2012-ல் `ஆரோகணம்' படத்தை  இயக்கியவர், தொடர்ந்து `நெருங்கி வா முத்தமிடாதே', `அம்மணி' படங்களையும் இயக்கினார். 

சௌந்தர்யா ரஜினிகாந்த்:

தன் தந்தை ரஜினியின் `படையப்பா' படத்தின் மூலம் கிராஃபிக்ஸ் டிசைனராக சினிமாவுக்கு அறிமுகமானார், சௌந்தர்யா. பின்னர், 2010-ல் `கோவா' படத்தைத் தயாரித்தவர், இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் படமான `கோச்சடையான்' மூலம் இயக்குநரானார். பிறகு, தனுஷ் நடிப்பில் `வேலையில்லா பட்டதாரி 2' படத்தை இயக்கியவர், கல்கியின் புகழ்பெற்ற வரலாற்று நாவலான `பொன்னியின் செல்வன்' கதையை வெப் சீரிஸாக வெளியிடும் முயற்சியில் இருக்கிறார். 

பிரியா:

மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த பிரியா, `கண்ட நாள் முதல்' திரைப்படத்தின் மூலமாக இயக்குநரானார். எவ்வித வன்முறைக் காட்சிகளும் இல்லாமல் அழகான ஃபீல்குட் கதையாக இப்படத்தைத் தந்திருந்தார். தொடர்ந்து சத்யராஜை வைத்து, `கண்ணாமூச்சி ஏனடா' படத்தை இயக்கியவர், கன்னடத்தில் `ஆதி லட்சுமி புரணா' என்ற படத்தை எடுத்திருக்கிறார். சமீபத்தில், `கண்ட நாள் முதல்' படத்தில் நடித்தவர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டனர். விரைவில், `கண்ட நாள் முதல் 2' பற்றிய அறிவிப்பு வருவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. 

சுதா கொங்கரா:

மணிரத்னத்திடம் 7 ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுதா கொங்கரா, ஸ்ரீகாந்த் - விஷ்ணு விஷால் நடித்த `துரோகி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பெரும் இடைவெளிக்குப் பிறகு, மாதவன் - ரித்திகா சிங் நடிப்பில் `இறுதிச்சுற்று' படத்தை இயக்கினார். தற்போது, சூர்யா நடிக்கும் படத்தை இயக்கும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். 

இவர்களைத் தவிர, காயத்ரி, ரேவதி, ஷோபா சந்திரசேகர், ஸ்ரீப்ரியா, உஷா கிருஷ்ணன், அனிதா உதிப் எனப் பல பெண் இயக்குநர்களைக் கோலிவுட் தந்திருக்கிறது. இன்னும் பல பெண் படைப்பாளிகள் தமிழ் சினிமாவில் உருவாக, இந்த உலகப் பெண்கள் தினத்தில் வாழ்த்துவோம்! 

அடுத்த கட்டுரைக்கு