Published:Updated:

``சைக்கோ... கொலைகாரர்களின் சைக்காலஜி, மாபெரும் காதல், உச்சகட்ட பயம்!’’ - மிஷ்கின்

``சைக்கோ... கொலைகாரர்களின் சைக்காலஜி, மாபெரும் காதல், உச்சகட்ட பயம்!’’ - மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் நடித்திருக்கும் `சூப்பர் டீலக்ஸ்’ படம் குறித்தும், இயக்கிக்கொண்டிருக்கும் `சைக்கோ’ படம் குறித்தும் பேசியிருக்கிறார்.

``சைக்கோ... கொலைகாரர்களின் சைக்காலஜி, மாபெரும் காதல், உச்சகட்ட பயம்!’’ - மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் நடித்திருக்கும் `சூப்பர் டீலக்ஸ்’ படம் குறித்தும், இயக்கிக்கொண்டிருக்கும் `சைக்கோ’ படம் குறித்தும் பேசியிருக்கிறார்.

Published:Updated:
``சைக்கோ... கொலைகாரர்களின் சைக்காலஜி, மாபெரும் காதல், உச்சகட்ட பயம்!’’ - மிஷ்கின்

வித்தியாசமான படைப்பைத் தரும் இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். உதயநிதியை வைத்து `சைக்கோ’ படத்தை இயக்கியிருப்பவர் தியாகராஜன் குமாரராஜாவின் `சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சிறுபகுதியை எழுதி அதில் நடித்துமிருக்கிறார். அவரிடம் பேசினேன். 

`` `சூப்பர் டீலக்ஸ்’ படத்தோட கதையை தியாகராஜன் சொன்னதும், உங்க மைண்ட்ல வந்த முதல் விஷயம் என்ன?’’

``தியாகராஜன் எனக்கு நல்ல நண்பன். ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை என்னைப் பார்க்க வருவான். `சூப்பர் டீலக்ஸு’க்கு ஒரு கதை கேட்டான், எழுதினேன். நானே கேரக்டருக்கு `அற்புதம்’னு பெயர் வெச்சுட்டேன். சின்ன வயசுல எங்க வீட்டுக்குப் பக்கத்துல இட்லிக் கடை வெச்சிருந்த ஒரு அம்மாவோட பெயர் இது. இப்போ, அவங்க இல்லை. அவங்க ஞாபகமா இந்தப் பெயர் இருக்கு. கதை எழுதித் தர்றேன், நடிக்கச் சொல்லிடாதேனு சொல்லித்தான் அனுப்பினேன். `நீங்கதான் நடிக்கணும்’னு உறுதியா சொல்லிட்டான். என்மேல ரொம்பப் பாசமா, அன்பா இருக்கிற தியாகராஜன் பேச்சைத் தட்டிக் கழிக்க முடியலை. நடிச்சுக் கொடுத்துட்டேன்.’’ 

``படத்தோட டிரெய்லர் உங்களுக்கு என்ன மாதிரியான அனுபவம் கொடுத்தது?’’ 

``ரொம்ப ஸ்மார்ட்டான டிரெய்லர் அது. மீனைப் பிடிக்கத் தூண்டிலில் எதை வைக்கிறோம்ங்கிறதுதான் விஷயம். பசை, மண்புழு, சமயத்துல மீனையே தூண்டில்ல வெச்சு மீனைப் பிடிப்பாங்க. ஆனா, இவன் திமிங்கிலத்தைத் தூண்டில்ல வெச்சு மீன் பிடிச்சிருக்கான். மத்தபடி, எல்லோரும் படம் பார்த்து முடிச்ச பிறகுதான், நமக்கான கிரெடிட் கிடைக்கும். அதுக்காகக் காத்திருக்கேன். தவிர, எனக்கு டிரெய்லர்ல எல்லாம் நம்பிக்கை கிடையாது. `விக்ரம்’ படத்தோட டிரெய்லரைப் பார்த்துட்டு, இந்தப் படம் இந்திய சினிமாவையே புரட்டிப்போடும்னு நினைச்சேன். படத்துல பெருசா எதுவும் இல்லை. டிரெய்லர் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் எலமென்ட்டா இருக்கணும். `சூப்பர் டீலக்ஸ்’ல தியாகராஜன் அதை சரியா பண்ணியிருக்கான். அவனுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம்தான். நாமதான் பார்த்துட்டு பித்துப் பிடிச்சு அலையிறோம்.’’

``விஜய் சேதுபதியின் திருநங்கை கேரக்டர் எப்படி வந்திருக்கு..?’’ 

``விஜய் சேதுபதி, கூத்துப் பட்டறையில் இருந்து வந்தவர். கூத்துப் பட்டறை முத்துசாமி பெரும் ஆளுமை. நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கார், நாடகங்கள் பண்ணியிருக்கார். அவர்கிட்ட இருந்து வர்றவங்களுக்கு நடிப்பின் சுவை எப்படி இருக்கும்னு தெரியும். ஒரு கதாபாத்திரத்துக்கு தன்னை எப்படித் தயார் பண்ணிக்கிறதுனு விஜய் சேதுபதிக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. நடிகனுக்கு ஒரு நல்ல இயக்குநர், நல்ல கதை, வித்தியாசமான களம்... இது கிடைச்சா தேனை உள்ளங்கையில எடுத்து சுவைக்கிற மாதிரி. இந்தக் கதை வேற ஒரு நடிகர்கிட்ட போயிருந்தா, `என் லெவல் என்ன, நான் எப்படிப்பட்ட ஆள், என்னோட ரேஞ்சுக்கு இப்படியொரு கதையை என்கிட்ட சொல்லலாமா’னு கேட்டிருப்பாங்க. விஜய் சேதுபதியால மட்டும்தான் இந்தக் கதையைப் பண்ண முடியும்.’’ 

``யூடியூப்ல அத்தனை குறும்படங்கள் குவிஞ்சிருக்கு. சமூக வலைதளங்களில் அத்தனை பேர் சினிமா குறித்துப் பேசுறாங்க... சினிமா என்ற ஃபேன்டஸி எல்லோரையும் ஈர்த்து உள்ளே கொண்டு வருதுனு நினைக்கிறீங்களா?’’ 

``அப்படிதான், தமிழ்நாட்டுல குறும்படங்கள் எடுக்காத ஆள்களே இல்லை. என் சமையல்காரரும் நானும்தான் இன்னும் குறும்படம் எடுக்கலைனு நினைக்கிறேன். எல்லோரும் சினிமா பேசுவாங்க. கிம் கி டுக் எடுத்த படங்களில் ஒண்ணுதான் நான் பார்த்தேன். பார்த்ததுக்குப் பிறகு, அவரோட ஆளுமை எனக்குத் தெரிஞ்சது. ஆனா, எனக்கு அது எந்த வகையிலும் உதவி பண்ணாது. தமிழில் இருக்கிற கதைகள் மட்டும்தான் எனக்கு உதவி பண்ணும். 11 வருடமா சினிமாவுல இருந்தும், இன்னும் நான் எதுவும் கத்துக்கலை. 

என்கிட்ட வர்ற உதவி இயக்குநர்கள் ஏற்கெனவே குறும்படங்கள் பண்ணிட்டு வர்றாங்க. விசிட்டிங் கார்டுக்காக என்கிட்ட வர்றாங்க. என்னை ஒரு போகப் பொருளா பார்க்கிறாங்க. சினிமாவுல ஆபரேஷன் பண்ற மாதிரி ஒரு காட்சி வந்தா, எல்லோரும்தான் பார்க்குறாங்க. பார்த்ததும், நாமும் ஆபரேஷன் பண்ண முடியுமா... அதுக்குப் பெரும் முயற்சியும் பயிற்சியும் தேவை. சினிமா 24 கலைகளை உள்ளடக்கிய பெரும் கலை. நான் யாரையும் குறைச்சு மதிப்பிடலை. கலையை மட்டும்தான், ஒரு குரு மூலமாகக் கத்துக்க முடியும். தனியா அதைக் கத்துக்க முடியாது.’’ 

`` `சைக்கோ’ அப்டேட்ஸ்?’’

``கொலைகாரர்களைப் பற்றி நம்ம தமிழ் சினிமா இல்லை. ஒரு இன்வெஸ்ட்டிகேஷன் ஜானர் மட்டும்தான் பார்த்திருக்கோம். கொலைகாரர்களின் சைக்காலஜி செட்டப் பற்றிய படம் இது. ஏன், அவங்க மனம் மாறுனாங்க. சமூகம் இதுக்கு என்ன பண்ணுச்சு, அப்படியான குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கணும்... இதை ஆய்வு பண்ற படமா `சைக்கோ’ இருக்கும். அதுக்குள்ளே ஒரு மாபெரும் காதல் கதை இருக்கு. உச்சகட்ட பயத்தையும் படத்துல வெச்சிருக்கேன். நானும் என் சினிமாவும் கொஞ்சம் மேம்பட்டிருக்கோம்னு இந்தப் படத்தை எடுக்கிறப்போ உணர்ந்தேன். ரொம்ப சின்சியரா நடிச்சிருக்கார் உதயநிதி.’’