Published:Updated:

``என்னை ஏம்மா கவர்ச்சி வேடங்கள்ல நடிக்க வெச்சே?’’ - ஜோதி மீனாவின் ஆதங்கம்

``என் மேலயும் தப்பு இருக்கு. நான் பொறுமையில்லாதவ. ஒரு விஷயத்துக்கு ஆசைப்பட்டால், அது உடனே நடந்தாகணும்னு நினைப்பேன். அதனாலயே நல்ல சினிமா வாய்ப்புகளை இழந்துட்டேன்.’’

``என்னை ஏம்மா கவர்ச்சி வேடங்கள்ல நடிக்க வெச்சே?’’ - ஜோதி மீனாவின் ஆதங்கம்
``என்னை ஏம்மா கவர்ச்சி வேடங்கள்ல நடிக்க வெச்சே?’’ - ஜோதி மீனாவின் ஆதங்கம்


 

``ஹீரோயின் வாய்ப்புகள் நிறைய வந்தும், அதையெல்லாம் மறுத்துட்டேன். பிறகு கவர்ச்சி வேடங்கள் மற்றும் கவர்ச்சி நடனத்துல அதிக கவனம் செலுத்தினேன். அந்த முடிவு தப்புனு இப்போ உணர்ந்து, வருத்தப்படுறேன். ஒருவேளை ஹீரோயினாவே நடிச்சிருந்தால், நிச்சயம் என் பாதை வேறு மாதிரி போயிருக்கும்’’ - என சற்று ஆதங்கத்துடன் பேசுகிறார்  நடிகை ஜோதி மீனா. மறைந்த நடிகை ஜோதி லட்சுமியின் மகள். தற்போது மீண்டும் நடிப்புப் பயணத்தைத் தொடங்கவிருக்கிறார் ஜோதி மீனா. அது குறித்து உற்சாகமாகப் பேசுகிறார்.

``நீண்ட காலமா சினிமாவிலிருந்து விலகியிருந்தது ஏன்?’’

``கல்யாணமான பிறகு குடும்பம், குழந்தைனு இருந்தேன். ஒரே பொண்ணுங்கிறதால, அம்மா என்னை ரொம்பச் செல்லமா வளர்த்தாங்க. அவங்க அரவணைப்புலயே வளர்ந்தேன். அம்மாவின் இறப்புக்குப் பிறகு அவங்க நினைவாகவே இருக்கு. கணவர் டாக்டர். பையனும் எம்.பி.பி.எஸ் படிக்கிறான். இப்போ நான் வீட்டுல சும்மாதான் இருக்கேன். அதனால மறுபடியும் நடிச்சா உற்சாகமா இருக்கும்னு நினைக்கிறேன். தெலுங்கில் சில பட வாய்ப்புகள் வந்துச்சு. அவை எனக்குப் பிடிக்கலை. இப்போ நல்ல சினிமா வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன். ஆனா, எக்காரணம் கொண்டும் கவர்ச்சி வேடங்கள்ல நடிக்கப்போவதில்லை. இனி நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, கேரக்டர் ரோல்ல மட்டுமே நடிப்பேன். அது, சினிமா மற்றும் சீரியல் எதுவானாலும் சம்மதம்தான்.’’

``முன்பு நடிச்ச கவர்ச்சி வேடங்களால் வருத்தம் உண்டா?’’

``17 வயசுல சினிமாவில் அறிமுகமானேன். அந்தச் சின்ன வயசுல, `நல்லது கெட்டது பத்தி எனக்கு எதுவும் தெரியலை. சினிமா உலகம் பத்தியும் பெரிசா புரிதல் இல்லை. அம்மா சிறந்த டான்ஸர். அப்போ அம்மாவும் சினிமாவுல கிளாமர் டான்ஸ் மற்றும் சோலோ டான்ஸ்தான் அதிகம் ஆடுவாங்க. அம்மாவைப் பார்த்தே வளர்ந்ததால, எனக்கும் டான்ஸ் இயல்பாவே நல்லா வரும். தவிர முறைப்படி டான்ஸ் கத்துகிட்டேன். படிப்புலயும் சரியா கவனம் செலுத்தலை. இந்நிலையில எனக்கும் சினிமா வாய்ப்புகள் வந்துச்சு.’’

குஞ்சுமோன் சார் தயாரிப்பில், `சிந்துநதிப் பூ’ படத்துல முதலில் எனக்கு ஹீரோயின் வாய்ப்பு வந்துச்சு. பிறகு, கஸ்தூரி ராஜா சாரின் படத்திலும் ஹீரோயின் வாய்ப்பு வந்துச்சு. அப்போ நடிக்கிறதுக்கு ரொம்பப் பயப்படுவேன். டான்ஸ்னா, சில நாள்கள்ல ஷூட்டிங் முடிஞ்சுடும். ரொம்ப ரிஸ்க் எடுக்க வேண்டியதில்லைனு அந்த ஹீரோயின் வாய்ப்புகள் மற்றும் அதற்குப் பிறகு வந்த நடிப்பு வாய்ப்புகளைத் தவிர்த்துட்டேன். இதனால் ஒருகட்டத்திலிருந்து கிளாமர் டான்ஸ் வாய்ப்புகள் வர, சுலபமான வேலைனு சந்தோஷமா நடிச்சேன். கல்யாணத்துக்குப் பிறகு, என் பொறுப்பை உணர்ந்தேன். அப்போ என் கணவருடன் என் முந்தைய படங்களைப் பார்க்கும்போது, எனக்கே கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு. மேலும், என் பையன் பெரியவனா வளரும் வரை அவனுக்கு என் முந்தைய நடிப்பு பத்தி எதுவும் சொல்லலை. நான் கவர்ச்சி வேடங்கள்ல நடிச்சேன்னு என் பையன்கிட்ட எப்படிச் சொல்ல முடியும்? அதனால ரொம்ப வருத்தப்பட்டேன். பையனுடன் நான் அதிக முறை பார்த்தப் படம், `உள்ளத்தை அள்ளித்தா’ மட்டும்தான்.’’

``உங்க ஆதங்கத்தை அம்மாகிட்ட சொன்னீங்களா?’’

`` `நீ தானேம்மா என் படங்களைத் தேர்வு செய்வே. அப்போ நான் சின்னப் பொண்ணு. எனக்கு விவரம் தெரியலை. நானே மறுத்திருந்தாலும், என்னைக் கட்டாயப்படுத்தி, நல்ல கேரக்டர் ரோல்கள்ல நடிக்க வெச்சுருக்கலாமே...’னு பலமுறை அம்மாகிட்ட கேட்டிருக்கேன். ஆனா, என் மேலயும் தப்பு இருக்கு. நான் பொறுமையில்லாதவ. ஒரு விஷயத்துக்கு ஆசைப்பட்டால், அது உடனே நடந்தாகணும்னு நினைப்பேன். அதனாலயே நல்ல சினிமா வாய்ப்புகளை இழந்துட்டேன். இப்போ வருத்தப்பட்டு என்ன பண்றது?’’

``சில படங்களில் காமெடி வேடங்கள்லயும் நடிச்சீங்களே. அப்படியாவது தொடர்ந்து நடிச்சிருக்கலாமே...’’

`` `உன்னால நல்லா நடிக்க முடியும்’னு, `உள்ளத்தை அள்ளித்தா’ படத்துல இயக்குநர் சுந்தர்.சி என்னை நடிக்க வைத்தார். நமக்கு நடிப்பும்கூட நல்லா வரும்னு அப்போதான் எனக்கு நம்பிக்கை வந்துச்சு. பிறகு, சில படங்கள்லதான் நடிச்சேன். கல்யாணமாகி, நடிப்பை நிறுத்திட்டேன். அந்தக் காலகட்டங்கள்லதான் அம்மா சீரியல்களில் கேரக்டர் ரோல்கள்ல நடிக்க ஆரம்பிச்சாங்க. அப்போ கவர்ச்சி நடிகைங்கிற முத்திரை மாறினதால், அம்மாவும் மகிழ்ச்சியடைந்தாங்க. அப்போ எனக்கு நடிக்க விருப்பம் இல்லைனாலும், அம்மா மகிழ்ச்சியா நடிக்கப் பக்கபலமா இருந்தேன்.’’

``இனி எத்தகைய வேடங்களில் நடிக்க ஆசை?’’

``அம்மா, அக்கா, அண்ணினு பக்கா ஃபேமிலி மற்றும் சவாலான கேரக்டர்களில் நடிக்க ரொம்ப ஆசையா இருக்கு. இயக்குநர் சுந்தர்.சி மற்றும் குஷ்பு ஆகியோர் என் நீண்டகால நண்பர்கள். ஆனா, அவங்களை சந்திச்சு நீண்டகாலமாச்சு. சமீபத்துல குஷ்புவைப் பார்த்தேன். நலம் விசாரித்தவர், மீண்டும் நடிங்கனு வாழ்த்தினார். சுந்தர்.சி படத்தில் குடும்ப சென்டிமென்ட் நிறைய இருக்கும். எனவே, அவர் படத்தில் நடிக்க முயற்சி செய்வேன்.’’