
தேவி 2 - சினிமா விமர்சனம்
`தேவி’யில் தேவிக்குப் பேய் பிடித்தது. நமக்கும் படம் பிடித்தது. `தேவி 2’-ல் கிருஷ்ணாவுக்குப் பேய் பிடிக்கிறது. பார்ப்பவர்களுக்குப் பைத்தியம் பிடிக்கிறது.

பணியிட மாற்றம் காரணமாக, கிருஷ்ணாவும் தேவியும் மொரீசியஸில் குடியேறுகிறார்கள். தினமும் வீடு விட்டால் வேலை, வேலை விட்டால் வீடு என நாள்களை நகர்த்துகிறார் கிருஷ்ணா. திடீரென அவர் நடத்தையில் சில மாற்றங்கள். அதற்குக் காரணம் அவர் உடம்பில் இருக்கும் பேய்தான் என இயக்குநர் சொல்வதற்கு முன்பே நமக்குத் தெரிந்துவிடுகிறது. பேய் ஏன் உடம்புக்குள் வந்தது, பேயானதற்கு யார் காரணம், அதை எப்படி விரட்டுவதென அடுத்தடுத்து வரும் எல்லாக் கேள்விகளுக்கும் நமக்கு விடை தெரிந்திருந்தும், ஒரேயொரு கேள்விக்கு மட்டும் விடை தேடித் தவித்துக்கொண்டிருந்தோம்...

‘எப்போ படம் முடியும்?’
கிருஷ்ணாவாக பிரபுதேவா. என்றும் குறையாத எனர்ஜி! ஆனால், வெளியில் தெரியும் ஒரு உருவத்திற்கும் உள்ளே இருக்கும் இரண்டு ரூபங்களுக்கும் அவர் நடிப்பில் காட்டியிருக்கும் வித்தியாசம், உண்மையில் ஆயாசம். தேவியாக தமன்னா, நன்றாகத்தான் நடித்திருக்கிறார், நடனமாடியிருக்கிறார். நினைத்துப் பார்க்கையில் பாவமாய் இருக்கிறது. பேய்ப் படங்களில் பேய்கூட இல்லாமலிருக்கலாம். ஆனால், கோவை சரளா இருப்பார். இதிலும் இருக்கிறார். நந்திதா, டிம்பிள் ஹயாதி, அஜ்மல் ஆகியோர் அளவாக நடித்திருக்கிறார்கள். சில காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி!
அதே பிரபுதேவா, அதே தமன்னா, அதே பேய், அதே இயக்குநர் விஜய்! ஆனால், `தேவி’யில் இருந்த ஒருவித மேஜிக், `தேவி 2’-ல் மொத்தமாய் மிஸ்ஸிங்.

பலமுறை பார்த்த படத்தையே, மீண்டும் ஒருமுறை பார்த்த உணர்வு. எந்த இடத்திலும் படம் மனதோடு ஒட்டவே இல்லை. அயனங்கா போஸின் ஒளிப்பதிவு, திடீரெனத் தொலைக்காட்சித் தொடர் மோடுக்கு மாறிவிடுகிறது. சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை அப்படி மாறவெல்லாம் இல்லை; ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான் இருக்கிறது. படத்தொகுப்பாளர் ஆன்டனிக்கு, படத்தில் வரும் பிரபுதேவாவின் வீடு மிகவும் பிடித்துவிட்டதுபோல. காட்சிக்குக் காட்சி இடைச்செருகலாய் வெட்டி, ஒட்டி கடுப்படிக்கிறார்.
`தேவி’ படம் பிடித்தவர்கள் `தேவி 2’ பார்க்கலாம். என்ன, அதன்பிறகு `தேவி’யையும் உங்களுக்குப் பிடிக்காமல் போய்விடும் அபாயமிருக்கிறது... சல்மார்!
- விகடன் விமர்சனக்குழு