பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

கொலைகாரன் - சினிமா விமர்சனம்

கொலைகாரன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
கொலைகாரன் - சினிமா விமர்சனம்

கொலைகாரன் - சினிமா விமர்சனம்

கொலை செய்யப்பட்டது யாரெனத் தெரிந்துவிட்டது, கொலையாளியும் கூட! அதன்பின்பும் சீட் நுனியில் உட்கார வைத்து விறுவிறுப்பாகக் கதை சொன்னால் அது ‘கொலைகாரன்.’

கொலைகாரன் - சினிமா விமர்சனம்

பாதி எரிந்த நிலையில் கண்டெ டுக்கப்படுகிறது ஒரு பிணம். கொலை செய்யப்பட்டது யாரெனத் தெரிந்தபின் கொலை தொடர்பான விசாரணை ஒரு அம்மா - மகள் பக்கம் திரும்புகிறது. வழக்கை விசாரிக்கும் அதிகாரியான அர்ஜுன் அவர்களை நெருங்கும்போது சடாரென வந்து ‘நான்தான் செஞ்சேன்’ என ஆஜராகிறார் விஜய் ஆண்டனி. சாட்சியங்களும் அதை உறுதிசெய்கின்றன. மற்றவர்கள் வழக்கமாக ‘சுபம்’ போடும் இந்த இடத்தில் வரிசையாக சில ட்விஸ்ட்களை ஓபன் செய்து மேலும் மேலும் த்ரில்லைக் கூட்டிக் கதை சொல்லி முடிக்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்.

தனக்கு செட்டாகும் கதையை மட்டுமே தேர்ந்தெடுத்த விதத்தில் விஜய் ஆண்டனிக்கு தம்ஸ் அப். ஆனால். ஏற்ற இறக்கங்கள் இல்லாத குரல், உணர்ச்சிகளைக் காட்டாத ஒரேமாதிரியான உடல்மொழி போன்றவற்றில் அவர் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். கண்களில் தேடலும் சந்தேகமும் தேங்கி நிற்க, அலைபாயும் போலீஸ்காரராக, துப்பறியும் கதாபாத்திரத்திற்கு செம பொருத்தம் அர்ஜுன்.

அம்மா - மகள் காம்போவில் சீதாவும் ஆஷிமா நர்வாலும் த்ரில் டெம்ப்போவை முடிந்தவரை ஏற்றுகிறார்கள். நாசருக்கு இது வழக்கமான ரோல்களுள் ஒன்று. சைமன் கிங்கின் பின்னணி இசை தொடக்கத்தில் ஈர்க்கிறது. ஆனால், படம் முழுக்க அதே இசை தொடர்வதுதான் சோகம். சிவப்பு, மஞ்சள், வெள்ளை என அந்தந்த மூடுக்கேற்ப ஒளிப்பதிவில் வித்தை காட்டுகிறார் ம்யூக்ஸ்!

கொலைகாரன் - சினிமா விமர்சனம்

பக்காவான இடங்களில் காட்சிகளை ஒட்டித் தைத்துப் படமாக்கியிருக்கிறார் எடிட்டர் ரிச்சர்ட் கெவின். பாடல்கள் இரண்டுமே கேட்க ஓகேவாக இருந்தாலும், விறுவிறுவெனச் செல்லும் கதையை வீம்பாக இழுத்துப் பிடித்து நிறுத்துகின்றன. முதல்பாதியில் இப்படி இழந்த வேகத்திற்கும் சேர்த்து ஆக்ஸிலேட்டர் முறுக்கியிருக்கிறார் இயக்குநர். இந்தத் திரைக்கதை வேகத்தில் லாஜிக் கேள்விகள் அடிபட்டுப்போகின்றன.

அர்ஜுன் - விஜய் ஆண்டனிக்கு இடையே நடக்கும் பூனை-எலி விளையாட்டு இந்தக் கொலைக்களத்திற்கு சூப்பராகப் பொருந்துகிறது. ஆனால் விஜய் ஆண்டனி இந்த விளையாட்டை விளையாடுவதாகக் கடைசியில் சொல்லும் காரணம்தான் இடறுகிறது.

தமிழில் எப்போதாவது வரும் நல்ல த்ரில்லர் சினிமாக்களில் நல்வரவு இந்த ‘கொலைகாரன்.’

- விகடன் விமர்சனக் குழு