Published:Updated:

``சரியான நேரத்துல அங்கீகாரம் கிடைச்சிருந்தா, `ஆயிரத்தில் ஒருவன் 2’ வந்திருக்கும்!’’ - ஜி.வி.பிரகாஷ்

விகடன் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், பெண் நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

``சரியான நேரத்துல அங்கீகாரம் கிடைச்சிருந்தா, `ஆயிரத்தில் ஒருவன் 2’ வந்திருக்கும்!’’ - ஜி.வி.பிரகாஷ்
``சரியான நேரத்துல அங்கீகாரம் கிடைச்சிருந்தா, `ஆயிரத்தில் ஒருவன் 2’ வந்திருக்கும்!’’ - ஜி.வி.பிரகாஷ்

லகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் விகடன் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது, பெண் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஜி.வி.பிரகாஷ் அளித்த பதில்களின் தொகுப்பு இது. 

``வசந்தபாலனின் `வெயில்' படத்தில் இசையமைப்பாளரா அறிமுகமானீங்க. இப்போ அவர் இயக்கத்தில் `ஜெயில்' படத்தில் ஹீரோவா நடிச்சிருக்கீங்க. இந்த அனுபவம் எப்படியிருந்தது?"

``ஹாரிஸ் ஜெயராஜ், ரஹ்மான் சார்கிட்ட உதவி இசையமைப்பாளரா வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன். இடையில நிறைய விளம்பரப் படங்களிலும் வேலை பார்த்தேன். அப்போ, பி.ஆர்.ஓ சந்துரு நான் வொர்க் பண்ணுனதை வசந்தபாலன் சார்கிட்ட கொடுத்திருக்கார். அது வசந்தபாலன் சாருக்குப் பிடிச்சதுனால, தயாரிப்பாளர் ஷங்கர் சார்கிட்ட கொடுத்திருக்கார். அப்போ, நான் ரொம்ப சின்னப் பையனா இருந்ததுனால, ஷங்கர் சாருக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனா, வசந்தபாலன் சார் என்மேலே நம்பிக்கை வெச்சு, அந்த வாய்ப்பைக் கொடுத்தார். `வெயில்' படத்தின் ஆடியோ லான்ச் முடிஞ்சதும், அடுத்தடுத்து பல படங்கள்ல கமிட் ஆனேன். வசந்தபாலன் சாருக்கு இந்த நேரத்துல நன்றி சொல்லணும். பிறகு, அவர்கூட `அங்காடித் தெரு' படத்துல வொர்க் பண்ணேன். இடையில கொஞ்சம் பேசாம இருந்தோம். பிறகு, என் கல்யாணத்துக்கு நேரில் போய் கூப்பிட்டேன், வந்து வாழ்த்தினார். தொடர்ந்து பேச ஆரம்பிச்சோம். திரும்ப என்கூட ஒரு படம் பண்ண நினைச்சார், அது வொர்க் அவுட் ஆகலை. அப்புறம், `ஜெயில்' கதையைக் கொண்டு வந்தார். நல்ல படம். அரசியலுக்கும், சினிமாவுக்கும் இந்தப் படம் முக்கியமான ஸ்டேட்மென்ட்டா இருக்கும்."  

``நிறைய சமூகப் பணிகளைப் பண்றீங்க. கடைசிவரை சமூக சேவையில் மட்டுமே இருப்பீங்களா, இல்ல அரசியல் ஐடியாவும் இருக்கா?!" 

``ஜல்லிக்கட்டுப் பிரச்னைக்குப் பிறகு பல சமூகப் பிரச்னைகளைப் பேசுறேன். ஏன்னா, நாம எதுவும் சொல்லாமப் போயிட்டா, அடிச்சுட்டுப் போய்க்கிட்டே இருக்காங்க. இளைஞர்கள் கேள்வி கேட்கும்போதுதானே தப்பு பண்றவங்களுக்குப் பயம் வரும். அதனால, தொடர்ந்து கேள்விகள் கேட்கிறேன். என்னைப் பார்த்து ஒரு பத்துப் பேராவது கேள்விகள் கேட்பாங்க. இந்த எண்ணத்துலதான் இதெல்லாம் பண்றேனே தவிர, அரசியலுக்கு வர்ற ஐடியா இல்லை."  

``பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுக்குறீங்க. ஆனா, சில வருடங்களுக்கு முன்னாடி `அட்ரா அவளை; வெட்ரா அவளை'ங்கிற பாடல் வரிகளுக்கு நீங்கதான் மியூசிக். இந்தப் பாடலுக்கு மியூசிக் பண்றப்போ என்ன மனநிலையில இருந்தீங்க?" 

``அந்தச் சமயத்துல நான் ரொம்ப சின்னப் பையன். அப்போ எனக்குள்ள எந்த ஐடியாவும் இல்லை. கண்டிப்பா, எதிர்காலத்துல இந்த மாதிரியான பாடலுக்கு மியூசிக் பண்ணமாட்டேன். அந்த நம்பிக்கையை இப்போ கொடுக்கிறேன்." 

``சின்ன வயசுல இருந்தே அப்பா அரவணைப்புல வளர்ந்த பையன் நீங்க. அம்மாவை மிஸ் பண்ணியிருக்கீங்களா?!"

``கண்டிப்பா!. சின்ன வருத்தம் எனக்குள்ள இருந்துக்கிட்டேதான் இருக்கும். ஆனா, இதைத் தாண்டி என் கவனத்தைத் திசை திருப்பிக்கிட்டேன். என்னோட குறிக்கோள்மேல தீவிரமா இருந்தேன். சினிமாவுல ஜெயிக்கணும்னு ஆர்வமா இருந்தேன். அம்மாவும், அப்பாவும் பிரிஞ்சது அவங்க தனிப்பட்ட விருப்பம். அதையும் நான் மதிக்கிறேன்."  

``ஏ.ஆர்.ரஹ்மானுடனான உங்க பயணம்?" 

``சின்ன வயசுல அவர்கூட நிறைய நேரங்கள் செலவு பண்ணியிருக்கேன். அம்மா, அப்பா பிரிஞ்சதுக்குப் பிறகு ரஹ்மான் சார்கூட இருக்கிற நேரம் குறைஞ்சது. அதுக்குப் பிறகு பல வருடம் கழிச்சு ரஹ்மான் சார்கிட்ட கீ-போர்ட் பிளேயரா சேர்ந்தேன். திரும்பவும் எங்க உறவு ஸ்ட்ராங் ஆச்சு. அப்புறம், நானும் சினிமாவுக்கு வந்துட்டேன். அப்பப்போ ஃபேமிலியா அவரைச் சந்திப்போம். சினிமா குறித்த விவாதம் அப்போ அதிகமா இருக்காது. ரஹ்மான் சார் என்னோட பெரிய இன்ஸ்பிரேஷன்." 

`` `த்ரிஷா இல்லைனா நயன்தாரா' ஜி.வி.பிரகாஷூக்கும், `சர்வம் தாள மயம்' ஜி.வி.பிரகாஷூக்கும் இருக்கிற வித்தியாசம் என்ன?" 

``நடிக்க வந்த புதுசுல காதல், காமெடி, என்டர்டெயின்மென்ட் படங்கள்தான் பண்ணணும்னு நினைச்சேன். அப்படிதான் பண்ணேன். பாலா சார்தான் என் திறமையைக் கண்டுபிடிச்சு, `நாச்சியார்'ல நடிக்க வெச்சார். `நீ இப்படியும் படங்கள் பண்ணலாம்'னு அவர்தான் சொன்னார். அதுக்கு அப்புறம்தான், `சர்வம் தாளமயம்' வாய்ப்பு வந்தது. இந்தப் படத்துக்காக மிருதங்கம் கத்துக்கிட்டேன். லைவ் சவுண்ட்ஸ் பயன்படுத்தினாங்க. நிறைய சிங்கிள் ஷாட், பெரிய டேக்ல நடிச்சேன். ராஜீவ் சார் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தார். இந்தப் படம் மூலமா நிறைய கத்துக்க முடிஞ்சது."  

`` `த்ரிஷா இல்லைனா நயன்தாரா' மாதிரியான படத்துல நடிச்சதுக்காக எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா?" 

``சினிமாவுல பல வகைகள் இருக்கு. இந்தப் படம் ஒரு வகை. தவிர, நடிப்பை நான் பெர்ஷனல் வாழ்க்கையோட தொடர்புப்படுத்திக்கிறதில்லை. கண்டிப்பா, எதிர்காலத்துல இது மாதிரியான படங்கள் பண்ணமா இருக்க முயற்சி பண்ணுவேன். அதேசமயம், நான் நிறைய நல்ல படங்கள்லேயும் நடிச்சிருக்கேன்." 

``சமீபத்துல `ஆயிரத்தில் ஒருவன்' படத்தை ஸ்பெஷல் ஸ்கிரீனிங் பண்ணாங்க. அந்தப் படத்தைப் பலரும் பாராட்டிப் பேசுனாங்க. தாமதமான இந்த அங்கீகாரத்தை எப்படிப் பார்க்குறீங்க?"   

``இந்த வலி பெருசுதான். ஒரு இசையமைப்பாளரா என் பெஸ்ட் வொர்க் `ஆயிரத்தில் ஒருவன்' படத்துல இருக்குனு நினைக்கிறேன். ஆனா, அப்போ இந்தப் படத்துக்கு எந்தவொரு சின்ன அங்கீகாரம்கூட கிடைக்கலை. விருது விழாக்களில்கூட இதைப் பற்றிப் பேசலை. இவ்வளவு நல்லா வொர்க் பண்ணியிருக்கோம்; யாருமே கண்டுக்கலையேனு ஃபீல் பண்ணேன். சொல்லப்போனா, இந்தப் படத்தைப் பார்த்துதான், அனுராக் காஷ்யப் அவர் படத்துல எனக்கு வாய்ப்பு கொடுத்தார். பாலிவுட் இயக்குநர் ஒருத்தருக்கு இந்தப் படத்தோட அருமை தெரிஞ்சது சந்தோஷம். ஆனா, தமிழில் யாரும் இதைக் கண்டுக்கலை. ஒரு படத்துக்கான அங்கீகாரம் எப்போ கிடைக்கணுமோ, அப்போ கிடைக்கணும். லேட்டா கிடைக்கிறது, வேஸ்ட்! ஒருவேளை, அப்போவே அங்கீகாரம் கிடைச்சிருந்தா, `ஆயிரத்தில் ஒருவன் 2' வந்திருக்கும். இப்போ, அது சாத்தியமானு தெரியலை."  

``வெற்றி மாறன், விஜய், செல்வராகவன்... இந்த மூன்று இயக்குநர்களுடனான ஜி.வி.பிரகாஷின் பயணம் பற்றி?" 

``கிரியேட்டிவ் மைண்ட் எனக்கும் செல்வாவுக்கும் டோட்டலா வேறயா இருக்கும். செல்வா யோசிக்கிறதெல்லாம் வேற லெவல்ல இருக்கும். செல்வா நல்ல ரைட்டரும்கூட!. அவரே பாட்டு எழுதுவார். அவர்கூட வொர்க் பண்றது ஈஸியா இருக்கும். இவர்கூட ரெண்டே ரெண்டு ஆல்பம்தான் வொர்க் பண்ணினேன். ரெண்டுமே பெஸ்ட்!  

விஜய்கிட்ட, ரொம்ப உரிமை எடுத்துக்கலாம். என்கிட்ட ஒரு பாட்டு இருந்தா, அதைக் கட்டாயப்படுத்தி படத்துல பயன்படுத்தச் சொல்வேன். `மதராசப்பட்டினம்' படத்துல `பூக்கள் பூக்கும் தருணம்...' பாட்டு அப்படிக் கொடுத்ததுதான்.  

வெற்றி மாறன் தனித்துவ மனிதர். அவருக்கு எல்லாமே சரியா இருக்கணும். மூணு படம் அவர்கூட சேர்ந்து வொர்க் பண்ணினேன். நாலாவதா `அசுரன்' படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். திடீர்னு போன் பண்ணி இந்தப் படத்துல வொர்க் பண்ணச் சொன்னார். நானும் சரினு சொல்லிட்டேன்."

``தனுஷுக்கும் உங்களுக்குமான மனவருத்தம் சரியாகிடுச்சா?" 

``நண்பர்கள்னா, சின்னச் சின்ன சண்டைகள் வந்து அப்புறமா சரியாகிறது சகஜம்தானே! ஆனா, எங்களுக்குள்ளே நடக்கிற விஷயத்தை என்னனுகூட தெரியாத மூணாவது ஆளு கமென்ட் பண்ணா, கஷ்டமா இருக்கும். இப்போ, என்னோட `ஜெயில்' படத்துல ஒரு பாட்டுகூட பாடிக்கொடுத்திருக்கார், தனுஷ்."  

``பெண் இயக்குநர் சுதாவுடன் வொர்க் பண்ற படம் பற்றி?" 

``ஏற்கெனவே ஒரு பெண் இயக்குநர்கூட நான் வொர்க் பண்ணியிருக்கேன். `நர்த்தகி' என்ற டாக்குமென்டரி  படம் அது. சுதா எனக்கு ரொம்ப நல்ல நண்பர். `வெயில்' படத்துல இருந்தே அவரை எனக்குத் தெரியும். `இறுதிச்சுற்று' படத்துக்கு நான்தான் மியூசிக் பண்ண வேண்டியது. சில காரணங்களால முடியாமப் போச்சு. இப்போ, சூர்யாகூட வொர்க் பண்ற படத்துக்கு மியூசிக் பண்றீங்களானு கேட்டாங்க, கமிட் ஆகிட்டேன்."