Published:Updated:

``15,000 பணம் இருந்தா, பிள்ளைங்க ஸ்கூலுக்குப் போயிடுவாங்க!’’ - பாடகர் சுந்தரைய்யர்

``15,000 பணம் இருந்தா, பிள்ளைங்க ஸ்கூலுக்குப் போயிடுவாங்க!’’ - பாடகர் சுந்தரைய்யர்
``15,000 பணம் இருந்தா, பிள்ளைங்க ஸ்கூலுக்குப் போயிடுவாங்க!’’ - பாடகர் சுந்தரைய்யர்

``ஃபீஸ் கட்டாததுனால என் பசங்களை வகுப்பிலிருந்து அனுப்பிட்டாங்க. ஒரு மாசமா ரெண்டுபேரும் ஸ்கூலுக்குப் போகலை. அதுவும் கடைசி நாள் ரெண்டுபேரையும் மற்ற மாணவர்கள்கிட்ட இருந்து பிரிச்சு, தனியா ஓர் அறையில உட்காரவெச்சுட்டாங்க சார்!’’ எனக் கதறி அழுகிறார் பாடகர் சுந்தரைய்யர்.

``15,000 ரூபாய் இருந்தா என் பிள்ளைங்க ரெண்டுபேரும் இப்போ ஸ்கூலுக்குப் போயிருப்பாங்க!’’ - பாடிய முதல் சினிமா பாடலிலேயே தன் கவர்ச்சியான குரலை வைத்து இந்தியா முழுக்கத் தன் பெயர் தெரியும்படி, `தேசிய விருது’ வாங்கிய பின்னணிப் பாடகர் சுந்தரைய்யர் கண்ணீர் நிரம்பப் பேசிய வார்த்தைகள் இவை.

எப்படியாவது சாதித்துவிட வேண்டும் எனக் கோடம்பாக்கம் பக்கம் ஒதுங்கிய பல கலைஞர்களில் இவரும் ஒருவர். என்றாலும், தனக்குக் கிடைத்த ஒருசில வாய்ப்புகளைக்கூட வீணடிக்காதவர் சுந்தரைய்யர். ஷான் ரோல்டன் இசையில் `ஜோக்கர்’ படத்தில் இவர் பாடிய `லவ் யூ லவ் யூ ஜாஸ்மீனு’ தமிழகத்தின் எல்லா மூலைகளிலும் ஓங்கி ஒலித்து, அப்படியே குடியரசுத் தலைவர் மாளிகைக்கும் தேசிய விருதுக்காக இவரை அழைத்துச் சென்றது.

``15,000 பணம் இருந்தா, பிள்ளைங்க ஸ்கூலுக்குப் போயிடுவாங்க!’’ - பாடகர் சுந்தரைய்யர்

தொடர்ச்சியாக `அறம்’ படத்தில், `புது வரலாறே...’ பாடலைப் பாடி, படத்தின் மொத்த உணர்ச்சிகளையும் தன் குரலில் சுமந்து திரையரங்குகளைக் கண்ணீரில் மூழ்கடித்தார். தர்மபுரியின் தூரத்துக் கிராமமொன்றில் பிறந்து வளர்ந்து, தற்போது சினிமாவை நம்பி சென்னையில் குடியேறியிருக்கும் இவருக்கு, எஞ்சியிருப்பது வறுமை மட்டுமே! கிடைக்கும் வாய்ப்புகள்தான், வாழ்வாதாரத்துக்கான அடிப்படை என்பதை உணர்ந்தே இருக்கிறார் அவர். ``நான் யாருகிட்டேயும் உதவி கேட்டு நிற்க விரும்பல சார். வாய்ப்புதான் கேட்குறேன். அது கிடைச்சா, நினைத்தை சாதிச்சிடுவேன் சார்!’’ என்கிறார். 

சுந்தரைய்யருக்கு இரண்டு பிள்ளைகள். மகன் இயற்கை. மகள் இசைமழை. ``ஆங்கில மோகத்துல வீட்டம்மா ஆசைப்பட்டாங்கனு அவசரப்பட்டு ஒரு தனியார் பள்ளியில சேர்த்துட்டேன். அரசுப் பள்ளியில சேர்க்கலாம்னு நான் எவ்ளோ சொல்லியும் கேட்கல. கெளரவக் குறைச்சலாம்! மகன் ஆறாம் வகுப்பு படிக்கிறான். மகள் எல்.கே.ஜி ரெண்டுபேரையும் போன டிசம்பர் மாசம்தான் தனியார் பள்ளியில சேர்த்தேன். அப்போவே அட்மிஷன், இனிஷியல் ஃபீஸ் 47,000 ரூபாய் செலவாச்சு. அதுவே விகடன் உட்பட சில பத்திரிகைகள் போட்ட செய்தியைப் படிச்ச சிலர் உதவியதால கிடைச்ச பணம்தான். 

ஆனா, இப்போ டேர்ம் ஃபீஸ் கட்டச் சொல்லியிருக்காங்க. நான் பிள்ளைகளைச் சேர்க்கும்போதே, என் நிலையைச் சொல்லி டைம் கேட்டிருந்தேன். ஸ்கூல் அதிகாரிங்க அப்போ எல்லாத்துக்கும் சரின்னு சொல்லிட்டு, இப்போ பசங்களை வெளியே அனுப்பிட்டாங்க. ஒரு மாசமா ரெண்டுபேரும் ஸ்கூலுக்கே போகலை. அதுவும் கடைசி நாள் ரெண்டுபேரையும் மற்ற மாணவர்கள்கிட்ட இருந்து பிரிச்சு, தனியா ஒரு அறையில உட்கார வெச்சுட்டாங்க சார்!’’ எனக் கதறி அழுதார்.

``15,000 பணம் இருந்தா, பிள்ளைங்க ஸ்கூலுக்குப் போயிடுவாங்க!’’ - பாடகர் சுந்தரைய்யர்

``திரைத்துறையிலிருந்து யாரும் உதவி செய்யவில்லையா?’’ என்றேன். ``என் நிலைமை தெரிஞ்சு, இயக்குநர் கோபி நயினார் அடுத்த படத்துக்கு அட்வான்ஸ்னு சொல்லிப் பணம் கொடுத்தார். அதுதான், இப்போ குடும்பத்தைச் சமாளிக்க உதவியா இருக்கு. மத்தபடி, எனக்குத் தெரிஞ்ச எல்லா இசையமைப்பாளர்கள்கிட்டேயும் வாய்ப்பு கேட்டுட்டேன். பல இயக்குநர்களிடமும் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கேன். எல்லோரும் சரின்னுதான் சொல்லியிருக்காங்க. ஆனா, என் குரல் தேவைப்படும்படியான பாடலா இருக்கணும்ல... அதான், இப்போவரைக்கும் வாய்ப்பு கிடைக்க கொஞ்சம் டைம் ஆகுது. கண்டிப்பா எனக்கான பாடல் வரும்போது, கூப்பிடுவாங்க. அந்த நம்பிக்கையிலதான் இருக்கேன். பொதுவா எல்லோரும் என்னைப் பற்றிச் சொல்லும்போது, `அவனுக்கு சினிமாதுறையில இருக்கிற அரசியல் புரியலை’னு சொல்வாங்க. உண்மைதான். நான் கேட்கிறவரைக்கும் கேட்கிறேன்... வாய்ப்பு கிடைக்கும்’’ என்கிறார்  நம்பிக்கையாக!  

``அந்தப் பள்ளியில் மீண்டும் ஒருமுறை பேசிப் பார்க்கலாமே...’’ என்றால், சலிப்பான பதில் வருகிறது. ``ஆமா. பலமுறை பேசியாச்சு சார். வெறும் 15,000 ரூபாய் பணம். சில நிகழ்ச்சிகளுக்கு என்னைச் சிறப்பு விருந்தினராகக் கூப்பிடுவாங்க. அங்கேபோனா, கொஞ்சம் பணம் கிடைக்கும். இப்போகூட ஒரு நிகழ்ச்சி இருக்கு. அதையெல்லாம் கணக்கு பண்ணித்தான் நான் டைம் கேட்டிருந்தேன். ஆனா, கடைசிவரை சேர்த்துகலை. இன்னும் என் பசங்களுக்கு ஒழுங்கான புத்தகங்களே அந்த ஸ்கூல் நிர்வாகம் தரலை. என் பொண்ணுகூட பரவாயில்லை.. எல்.கே.ஜி-தான் படிக்குது. அடுத்த வருடம் பார்த்துக்கலாம்னு இருக்கச் சொல்லிடலாம். ஆனா, பையனை மட்டுமாச்சும் சேர்த்துக்கிட்டா போதும்’’ என்றவர், ``ஆனா இந்த ஒரு வருடம்தான் சார் இப்படி... என்ன ஆனாலும், அடுத்த வருடத்துல இருந்து ரெண்டுபேரும் கண்டிப்பா அரசுப் பள்ளியிலதான் படிப்பாங்க. அதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்று உறுதியாக இருக்கிறார். 

தொடர்ந்து பேசியவர், ``படிப்பைப் பாதியில விட்டுட்டு அரசுப் பள்ளிக்குப் போக முடியாது. ரெண்டு மாசம்தானே ஆச்சு, ஆரம்பத்துல கட்டிய 47,000 ரூபாய் ஃபீஸைத் திருப்பித் தந்திடுங்கனுகூட கேட்டுப் பார்த்துட்டேன். அதுக்குப் பதில் சொல்லல. கிட்டத்தட்ட 50,000 ரூபாய் பணம். அது இருந்தா, நான் ஐந்து மாசம் குடும்பத்தை ஓட்டிடுவேன். இப்போ அதுவும் இல்ல, இதுவும் இல்லனு ஆகிடுச்சு’’ என்று முடிக்கிறார்.

தேசிய விருது பெற்றதால், சுந்தரைய்யரின் வறுமை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சினிமாவில் இன்னும் எத்தனையோ சுந்தரைய்யர்கள் ஏழ்மை இருளிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பணம் படைத்த பெரும் கலைஞர்களின் ஆடம்பரத்தைப் பார்த்து வாய் பிளக்கும்போது, அதே திரைத்துறையில் இருக்கும் சுந்தரைய்யரைப் போன்றவர்களின் கதைகள் நம் வாயை அடைக்கின்றன. 

அடுத்த கட்டுரைக்கு