Published:Updated:

சமூக நீதிக்காக ஒரு ஆக்‌ஷன் ஹீரோ! - ‘லாபம்’ எக்ஸ்க்ளூசிவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சமூக நீதிக்காக ஒரு ஆக்‌ஷன் ஹீரோ! - ‘லாபம்’ எக்ஸ்க்ளூசிவ்
சமூக நீதிக்காக ஒரு ஆக்‌ஷன் ஹீரோ! - ‘லாபம்’ எக்ஸ்க்ளூசிவ்

சமூக நீதிக்காக ஒரு ஆக்‌ஷன் ஹீரோ! - ‘லாபம்’ எக்ஸ்க்ளூசிவ்

பிரீமியம் ஸ்டோரி

யக்குநர் ஜனநாதன் படம் என்றாலே அழகியல் நுட்பமும் அரசியல் தெளிவும் கைகோக்கும். ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்த விஜய்சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை ஜனநாதன் இயக்குகிறார். அதுவும் பொதுவுடைமைவாதியான அவரது படத் தலைப்பு ‘லாபம்’ என்றால் எதிர்பார்ப்பு எகிறத்தானே செய்யும்?

சமூக நீதிக்காக ஒரு ஆக்‌ஷன் ஹீரோ! - ‘லாபம்’ எக்ஸ்க்ளூசிவ்

“உங்கள் படத் தலைப்பு என்றாலே அதில் அரசியல் இருக்கும். ‘லாப’த்தின் அரசியல் சொல்லுங்கள்...”

“லாபம் என்பது மூலதனத்துக்குக் கிடைத்த பரிசு என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மார்க்சியத்தின்படி லாபம் என்றால், உபரிமதிப்பு. உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் பயன்படுத்தியதுபோக, உபரியாக எஞ்சுகிறது. இது மூலதனத்துக்கோ முதலாளிக்கோ கிடைத்த பரிசு அல்ல; உழைப்புக்குக் கிடைத்த அசல். ஆனால் முதலாளிகளோ லாபத்தைத் தாங்கள் எடுத்துக்கொண்டு, அதற்குக் காரணமான  உழைப்பாளிகளைச் சுரண்டுகிறார்கள். இந்த உபரிமதிப்பின் அடிப்படையில் உலக வரலாற்றை காரல்மார்க்ஸ் விளக்கினார். அதனால்தான்  ‘லாபம்’ டைட்டிலுக்குக் கீழே ஆங்கிலத்தில் ‘டே லைட் ராபரி’ என்று போட்டிருக்கிறேன். அதாவது ‘பகற்கொள்ளை.’

இங்கிலாந்து என்பது வளங்கள் இல்லாத சின்னஞ்சிறு நாடு. ஆனால், ஆங்கிலேயர்கள் வளம் நிறைந்த இந்தியாவை 300 ஆண்டுகளாக ஆக்கிரமித்து ஆண்டார்கள். இங்கேயுள்ள வளங்களை எல்லாம் தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்துகொண்டார்கள். ‘வெள்ளைக்காரன் இல்லைனா இந்தியாவுக்கு ரயில் வந்திருக்காது, விமானம் வந்திருக்காது’ என்று சிலர் சொல்வார்கள். உண்மைதான். ஆனால் நம் வளங்களைக் கொள்ளையடித்துச் செல்வதற்காக ஆங்கிலேயர்கள் உருவாக்கிய வசதிகள்தான் இவை.

  உணவு உற்பத்தியில் தன்னிறைவுபெற்ற இந்தியாவில் இருந்து கரும்பு, பருத்தி போன்றவற்றை உலகச்சந்தைக்குக் கொண்டு சென்று பணப்பயிராக்கி வெள்ளைக்காரர்கள் லாபம் பார்த்தனர். சுதந்திரம் பெற்ற பிறகும் இந்தியர்களே நாட்டைச் சுரண்டும் நிழற்கொள்ளை நடந்துவருகிறது. இப்போதுகூட இங்கே உற்பத்தியாகும் பால், சர்க்கரைதான் உலகச் சந்தையில் விலைமதிப்புமிக்க பொருளாகி சாக்லேட்டாக விற்கப்படுகிறது. எல்லோருக்கும் வேண்டிய பொருள்களை உற்பத்திசெய்து கொடுக்கும் உழைக்கும் வர்க்கம் பட்டினி கிடக்கிறது.  இங்கிலாந்து வெள்ளைக்காரர்கள் செய்த சூழ்ச்சியையும், இந்தியக் கொள்ளைக்காரர்கள் செய்துவரும் தந்திரத்தையும் முழுவதும் உணர்ந்த நாயகன்தான் பக்கிரி என்னும் விஜய்சேதுபதி. விவசாயிகள் சங்கத் தலைவராக நடித்திருக்கிறார்.”

சமூக நீதிக்காக ஒரு ஆக்‌ஷன் ஹீரோ! - ‘லாபம்’ எக்ஸ்க்ளூசிவ்

“விஜய் சேதுபதி எப்படி ‘பக்கிரி’ ஆனார்?”

“ஏற்கெனவே நான் இயக்கி, விஜய்சேதுபதி நடித்த ‘புறம்போக்கு’ படப்பிடிப்பு முடிவடையும்போது, ‘சார் நாம ரெண்டுபேரும் சேர்ந்து இன்னொரு படம் செய்வோம். இப்பவே வெள்ளைப் பேப்பர்ல கையெழுத்துப் போட்டுத்தர்றேன்’ என்று சொன்னார். அதன்பிறகு விஜய்சேதுபதி மார்க்கெட் உச்சத்துக்குப் போய்விட்டது. வெவ்வேறுவிதமான கதாபாத்திரங்களில் பிரமாதமாக நடித்துவரும் விஜய்சேதுபதியிடம் ‘லாபம்’ படத்தின் கதையைச் சொன்னேன். அவருக்குப் பிடித்துவிட்டது. சமூக நீதிக்காகப் போராடும் ஆக்‌ஷன்  ஹீரோவாக நடிப்பதால் இந்தப் படத்துக்கென்று உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளக் கடும்பயிற்சி செய்து வருகிறார்.”

“மற்ற தமிழ் சினிமாக்கள்போல் இல்லாமல் உங்கள் படங்களில் நாயகி பாத்திரத்துக்கும் சமமான முக்கியத்துவம் இருக்கும். ஸ்ருதிஹாசனுக்கும் அது இருக்குமா?”

“நிச்சயமாக. ‘லாபம்’ படத்துக்காக நான் உருவாக்கி வைத்திருக்கும் ஸ்ரீரஞ்சனி கதாபாத்திரத்துக்கு ஸ்ருதிஹாசன் ரொம்பவே பொருத்தமானவர். தமிழச்சியான ஸ்ருதிஹாசன் உலகில் உள்ள பலமொழிகளில் இசை ஆல்பம் தயாரித்து வெளியிடும் பெண்ணாக நடிக்கிறார். இயல்பாகவே அவர் இசையைக் கற்றவர் என்பதால் முழு ஈடுபாட்டுடன் நடித்துவருகிறார்.

நாயகனின் சமூக உணர்வும் நாயகியின் இசையார்வமும் இணைந்தே பயணிக்கும். விஜய்சேதுபதியின் சமூகப் போராட்டங்களில் ஈர்க்கப்பட்டு ஸ்ருதியும் படம்முழுக்க ஹீரோவுடன் பயணம் செய்கிறார். வில்லனாக நடிக்கிறார் ஜெகபதிபாபு. கலையரசனும் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். லாபம் படத்தை ஆறுமுகக்குமார் தயாரிக்கிறார்.”

சமூக நீதிக்காக ஒரு ஆக்‌ஷன் ஹீரோ! - ‘லாபம்’ எக்ஸ்க்ளூசிவ்

“விஜய்சேதுபதியின் சொந்த ஊரான ராஜபாளையத்தில் ஷூட்டிங் நடத்திய அனுபவம்..?’’

 “அவரை வேடிக்கை பார்க்க ஏகப்பட்ட கூட்டம் கூடிவிட்டது. ஒருமுறை படப்பிடிப்புக்கு இடையூறாக, இரண்டுபேர்  பேசிக்கொண்டே இருந்தனர்.  நான் சத்தம்போட ‘இவர் எங்கள் ஊர்க்காரர். எங்களையே பேசவிடாம தடுக்கிறீங்களா?’ என்று உரிமையோடு சண்டைபோட ஆரம்பித்தனர். ‘இதுவரை 25 படத்துக்கும் மேல விஜய்சேதுபதி நடிச்சிட்டார். இப்போதான் முதல்முறையா பொறந்த ஊருக்கு அழைச்சுட்டு வந்திருக்கீங்க. உங்களுக்கு ரொம்ப நன்றிசார்’ என்று அவர்கள் அன்பாகச் சொன்னபோது உண்மை யிலேயே நெகிழ்ந்துபோய்விட்டேன். ‘லாபம்’ படத்தின் கதைக்குத் தேவையான தொழிற்சாலைகள் ராஜபாளையத்தில் அதிகம் இருக்கின்றன. குற்றாலம், அம்பாசமுத்திரத்தில் கரும்பாலைகள் இருப்பதால் அங்கேயும் படப்பிடிப்பு நடத்தினோம்.” 

சமூக நீதிக்காக ஒரு ஆக்‌ஷன் ஹீரோ! - ‘லாபம்’ எக்ஸ்க்ளூசிவ்


“தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராகப் போட்டியின்றி பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டிருக்கிறாரே?”

“50 வருஷத்துக்கு முன்னாடி சில ஆயிரங்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு இடம் வாங்கிப்போடத் திட்டமிட்டார், பழம்பெரும் இயக்குநர் ஏ.பி.நாகராஜன்.  ஒரு வருடத்துக்கு 250 படங்கள் வெளியாகின்றன. நான் இயக்குநர் சங்கத்தின் பொருளாளராக இருந்தபோது, பத்திரிகையாளர் களுக்குச் சிறப்புக்காட்சி போடும்போது ஒரு படத்துக்குப் பத்தாயிரம் ரூபாய் வசூலித்துவிடுவேன். என் படம் ரிலீஸானபோது இயக்குநர்கள் சங்கத்துக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தேன். அதுபோல பல இயக்குநர்களும் தலா ஒரு லட்சம் கொடுத்தனர். இப்போது சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கக் கட்டடம், ஒரு காலத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியின் சொந்த வீடு. எங்கள் சங்கத்தின் கட்டடத்துக்கான நிதி, முழுக்க முழுக்க உறுப்பினர்கள் வசூலித்த நிதிதான்.

 முழுதாகக் கட்டடத்தை முடித்தபிறகு சங்கத்தில் வைப்பு நிதியை வைத்துவிட்டு, பொறுப்பை வி.சேகரிடம் ஒப்படைத்துக் கையெழுத்து வாங்கிவிட்டு வந்தேன். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்த இயக்குநர் சங்கத் தேர்தலில் நான் பொருளாளர், செயலாளர், தலைவர் என்று மூன்று பதவிகளுக்கும் போட்டியிட்டேன்.  என்னைப்போலவே சேரன், அமீரும் மூன்று பதவிகளுக்கும் போட்டி போட்டனர். செல்வமணி, பாரதிராஜாவைத் தலைவராக அறிவித்தார்.
அவர் மிகப்பெரிய இயக்குநர் என்பதால் நாங்கள் மூவரும் தலைவர் போட்டியிலிருந்து விலகிக்கொண்டோம். பிறகு நான் பொருளாளர் பதவிக்கும், அமீர் செயலாளர் பதவிக்கும், சேரன் துணைத்தலைவர் பதவிக்கும் போட்டியிட்டோம். இறுதியில் நானும், சேரனும்  போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டோம். இப்படி தேர்தல் முறையாக நடந்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவதுதான் சரி. முதலில் தேர்தலில் போட்டியிட்டுத் தலைவராக விக்ரமன் ஜெயித்தார். இரண்டாவதுமுறை தேர்தலே நடத்தாமல் விக்ரமனைத் தேர்வுசெய்தது தவறு. அதுபோலவே இப்போது பாரதிராஜாவை அவ்வாறு தேர்வு செய்ததும் தவறு.”  

சமூக நீதிக்காக ஒரு ஆக்‌ஷன் ஹீரோ! - ‘லாபம்’ எக்ஸ்க்ளூசிவ்

“சமீபத்தில் பரபரப்பாக நடந்த நடிகர் சங்கத் தேர்தல் குறித்து?”

 “பொதுவாக இயக்குநருக்கும், நடிகருக்கும், தயாரிப்பாளருக்கும், தொழிலாளர்களுக்கும்  பிரச்னை ஏற்பட்டால், இரு தரப்பிடமும் பேசி சரிசெய்யத்தான் சங்கமே உருவானது. சமீபகாலமாக பிரச்னைகள் எல்லாமே சங்கத்துக்குள்தான் நடக்கின்றன. ஏதோ நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் அளவுக்கு  நடிகர் சங்கத்தேர்தலை முன்னிலைப்படுத்துவது தவறு.”

“எதிர்ப்புகளை மீறி மீண்டும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்திருப்பதை, ஓர் அரசியல் உணர்வுள்ள படைப்பாளி என்ற முறையில் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“முதலில், இந்தியாவில் தேர்தல்  ஜனநாயக முறையில் நடப்பதில்லை. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரு இடத்தில்கூட ஜெயிக்காத பா.ஜ.க-தான் இப்போது இந்தியாவை ஆளும் கட்சி. இந்த மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவமில்லை. இது முழுமையான ஜனநாயகமில்லை; ஆரோக்கியமான போக்கும் இல்லை.

ஜனநாயகம் என்பது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பிரதிநிதித்துவமுறை. ஆனால் மூன்று மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக மோடியைப் புறக்கணித்துத் தங்கள் உணர்வுகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள். ஆனால், அதற்கு எந்த மதிப்பும் இல்லை. போதிய பிரதிநிதித்துவமும் தென்னிந்தியர்களுக்கு இல்லை எனும்போது, இதைச் சரியான நடைமுறை என்று எப்படிச் சொல்லமுடியும்? எல்லா மக்களின் உணர்வுகளையும் உள்வாங்கிக்கொண்ட தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால்  எதிர்காலத்தில் ஜனநாயகத்துக்குப் பெரும் ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது என்பது என்னுடைய கருத்து.”
 

சமூக நீதிக்காக ஒரு ஆக்‌ஷன் ஹீரோ! - ‘லாபம்’ எக்ஸ்க்ளூசிவ்

“ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஐந்தே ஐந்து கம்யூனிஸ்ட் எம்.பி-க்கள். ஒரு மார்க்சிஸ்டாக இந்தச் சரிவு குறித்து உங்கள் கருத்து..?”

“மேற்கு வங்க முதல்வராக இருந்தவர் ஜோதிபாசு. ஒருமுறை அவருக்குப் பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே நிராகரித்தது. ‘நாடாளுமன்றத்தை ஆள்வது நோக்கமல்ல’ என்று காரணம் சொன்னது கம்யூனிஸ்ட் கட்சி. உண்மையில் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி,  தங்கள் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் இடதுசாரிகள் முனைப்பு காட்டியிருக்க வேண்டும். அதற்குப்பிறகு மேற்குவங்கம், திரிபுரா என்று தங்கள் செல்வாக்குள்ள பகுதிகளை இழந்துவருகிறார்கள். கம்யூனிசம் என்ற மாபெரும் தத்துவத்தை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் கம்யூனிஸ்ட்டுகள் தோல்வியடைந்திருக்கிறார்கள்.”

 “தமிழகத்தில் நாங்கள்தான் மாற்று என்று சீமான், கமல் சொல்கிறார்களே?”

“மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு  அதற்கான பிரதிநிதித்துவம், முக்கியத்துவம் வேண்டும். அந்தவகையில் சீமான் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதில் தவறில்லை. ஆனால், ஆவேசமாகவும் சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டும் பேசுவதால் அவர் தவறாகப் பேசுவதாகத் தோன்றுகிறது. கமல் மட்டுமல்ல, அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தியத் தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளைக் களைவதற்காகக் குரல் கொடுப்பதில் முனைப்பு காட்ட வேண்டும்.”

குணா எம்.எல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு