Election bannerElection banner
Published:Updated:

"பட்டுச் சேலையின் கதை மட்டுமல்ல; உழைப்பின் மதிப்பைச் சொன்னது 'காஞ்சிவரம்'!" - #10YearsOfKanchivaram

விகடன் விமர்சனக்குழு
"பட்டுச் சேலையின் கதை மட்டுமல்ல; உழைப்பின் மதிப்பைச் சொன்னது 'காஞ்சிவரம்'!" -  #10YearsOfKanchivaram
"பட்டுச் சேலையின் கதை மட்டுமல்ல; உழைப்பின் மதிப்பைச் சொன்னது 'காஞ்சிவரம்'!" - #10YearsOfKanchivaram

`காஞ்சிவரம்’ திரைப்படம் குறித்த ஒரு ரீவைன்ட் கட்டுரை.

உழுபவனுக்கு நிலம் இல்லை என்பது போன்று, நெய்பவனுக்கு ஆடை இல்லை என்ற எதார்த்த முரணைப் பேசியது `காஞ்சிவரம்.’ உலக அளவில் பட்டுக்குப் பிரசித்திபெற்றது இன்றைய காஞ்சிபுரம். அரசரின் போர், வெற்றி, காதல் போன்றவை மட்டும் வரலாறு ஆகிவிடாது. இவை ஒவ்வொன்றுக்குமான காரணம் மற்றும் விளைவுகளை ஆராய வேண்டும். குறிப்பாக, இதன் மூலம் மக்களின் வாழ்வில் ஏற்பட்ட பாதிப்புகளை உணர வேண்டும். அதுபோல், `காஞ்சிப்பட்டு’ என்ற பெருமைக்குப் பின்னால் இருந்த நெசவாளர்களின் வாழ்க்கையை, வரலாற்று ரீதியில் நியாயம் சேர்த்தது ப்ரியதர்ஷன் - பிரகாஷ் ராஜ் கூட்டணியிலான `காஞ்சிவரம்.’

`வெறுமனே உயிரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான வாழ்வாதாரங்களுடன் மட்டுமே பெரும்பாலான தொழிலாளர்கள் வாழ்வது இல்லை. மாறாக, சமூக நிலையில் தேவைப்படும் வாழ்வாதாரங்களும் உயிர் வாழத் தேவையாக அடிப்படையாக அமைதல் வேண்டும். தொழிலாளர்களின் தேவை என்ன என்பதை இயற்கை மட்டுமே தீர்மானிப்பதில்லை. சமூக பழக்க வழக்கங்களும் தீர்மானிக்கிறது. உழைப்பு ஆற்றலுக்கான மதிப்பை வரையறை செய்வதில் வரலாற்று, சமூக நீதி அடிப்படையிலான உறுப்பு ஒன்று நிலவுகிறது’ என்ற மார்க்ஸிய கோட்பாடே காஞ்சிவரம் படத்தின் சாரம்.

தொழில், வழிப்பாடு, சூழல் சார்ந்து மக்களுக்கென்று தனித்துவமான பழக்கவழக்கங்கள் உள்ளன. இந்தியா போன்ற பல இனக்குழுக்கள் வாழும் நாட்டில் அதீதமாகவே உள்ளது எனலாம். அந்தவகையில், காஞ்சிபுரத்து நெசவாளர்கள் பட்டைத் தங்கள் பண்பாட்டின் குறியீடாகக் கருதினர். தங்கள் சமூக விழாக்களில் பட்டுத் துணியைப் புனிதமான பொருளாக்கினர். திருமணத்தில் பட்டாடை உடுத்தினால் வாழ்வு வளமாக அமையும் எனவும், இறப்பவர்களைப் பட்டுத் துணியால் போர்த்தினால், சொர்க்கத்துக்குச் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை. தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் அத்தகைய பட்டை நெசவாளனால் பெறமுடியாது. அப்படிப்பட்ட ஓர் நெசவாளனின் வாழ்க்கை போராட்டத்தைப் பேசியது இப்படம். 

காஞ்சிவரத்தின் கைதேர்ந்த பட்டு நெசவாளர் வேங்கடம் (பிரகாஷ் ராஜ்). வரப்போகும் மனைவிக்குப் பட்டுச் சேலை உடுத்தி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது ஆசை. அது நிராசையாக, தன் மகளைப் பட்டுச் சேலை உடுத்தி திருமணம் செய்துவைப்பேன் என்று சபதம் எடுக்கிறார். நடக்காததை ஏன் கனவு காண வேண்டும் என்று வேங்கடத்தைச் சுற்றியிருந்தவர்கள் கடிந்துகொண்டனர். ஏனெனில், பெரிய பெரிய ஜமீன்தார்கள் மட்டுமே பட்டு பயன்படுத்த முடியும். பட்டுக்கான மூலப்பொருளைக்கூடப் பெறமுடியாத சூழலில், வேங்கடத்தின் லட்சியத்தில் நகர்கிறது படம்.

ஆரம்பக் காட்சியில் இருளில் கொட்டும் மழைத்துளிகளுடன் வேங்கடத்தின் துயர நினைவலைகளும் கரைகிறது. இப்படி ஒவ்வொரு காட்சியும் காலனியாதிக்கத்தில் மக்களின் வாழ்வை நேர்த்தியாக வெளிப்படுத்தியது. நெசவாளர்களைப் பல பரிசோதனைகளுக்குப் பிறகு கோயிலில் நெய்ய வைக்கிறார்கள். பட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருமுறை வேங்கடம் திருடும்போதும் அச்சம் பார்வையாளனைத் தொற்றிக்கொண்டது. ஒருகட்டத்தில், கம்யூனிஸ்ட் எழுத்தாளருடன் நெசவாளர்களுக்குத் தொடர்பு ஏற்படுகிறது. அதன் அடிப்படையில் கூலி உயர்வுக்காக வேலைநிறுத்தப் போராட்டம் என்று இறங்குகிறார்கள். போராட்டத்துக்கு வேங்கடம் தலைமை தாங்க, முதலாளிகள் பொருட்படுத்தாமல் தொழிலாளர்களோ ஒவ்வொரு நாளும் வதைந்துகொண்டிருந்தனர். திடீரென்று, மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட, கொள்கை, உறவு, லட்சியத்துக்கிடையே திக்குமுக்காடிப்போகிறார் வேங்கடம். இப்படி துயரமும் அதன் நிமித்தமுமாகவே திரைக்கதை பயணிக்கிறது.

காந்தி இறந்த மறுநாள் என்பதால் ரேடியோவில் சோகப்பாடல் ஒலிப்பது முதல் மோட்டார் காரை ஊரே கூடி வேடிக்கை பார்ப்பது, இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனும் ரஷ்யாவும் சேர்ந்ததால் இங்கு கம்யூனிஸ்ட் கட்சி தடையை நீக்குவது போன்ற காட்சிகள் பீரியட் படத்துக்காக வலு சேர்க்கின்றன. ஆங்கிலேய ஆட்சியின் குறிப்புகளைக் கொண்டே `காஞ்சிவரம்’ என்று பெயர் வைக்கப்பட்டது. ஒரு இடதுசாரி எப்படி குடும்பத்துக்காகக் கொள்கையை விடுவான், ஒரு தோழர் அடிவாங்கும்பொழுது சக தோழர்கள் எப்படி வேடிக்கை பார்ப்பார்கள் போன்ற விமர்சனங்கள் காஞ்சிவரத்தின் மீது வைக்கப்பட்டன. ஆரம்ப காட்சியில் பட்டைத் திருடிவிட்டான் என்று பலமான தொழிலாளி ஒருவனை வேலைக்காரன் அடிப்பான். சொல்லுங்க சாமி! என்று ஒடுங்கிப்போய்தான் நெசவாளர்கள் நிற்பார்கள். ஜமீன்தார் - நெசவாளர்கள் என்பது, முதலாளி - தொழிலாளி உறவுமட்டுமல்ல இங்கு அவர்கள் ஜாதிய ரீதியாக அடக்கிவைக்கப்பட்டுள்ளார்கள். அந்த `பயபக்தியே' நெசவாளர்களை எதிர்வினையாற்ற முடியாமல் முடக்கி வைத்துள்ளது. இதைக் காட்சிகளில் அப்பட்டமாக விலக்கியிருப்பார் இயக்குநர்.

படம் முழுக்க சோகங்களைக் கொண்ட கலைப்படம். பிரகாஷ் ராஜ் போன்ற நன்கறிந்தவர் நடிப்பது, படத்தின் தாக்கத்துக்குச் சவாலாக அமையும். ஆனால், தன்னை முழுமையாகத் தயார்படுத்திக்கொண்டார். தான் யார் என்பதை முழுமையாக மறந்து இயக்குநரின் விருப்பத்துக்கேற்றவாறு முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டேன் என்கிறார் பிரகாஷ் ராஜ். வில்லனாக மிரட்டவும் காமெடியனாக சிரிக்க வைக்கவும் அதே நேரத்தில் கலங்க வைக்கவும் முடியும் என்பதை நிரூபித்தார் பிரகாஷ் ராஜ். இப்படத்துக்காக, சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். மனைவி பாத்திரத்தில் நடித்த ஸ்ரேயா ரெட்டி வறுமை மற்றும் துயரின் முழு உருவமாகப் பிரதிபலித்தார்.

பேருந்து, நெசவாளர்களின் குடியிருப்பு மற்றும் குறைந்த நிகழ்விடங்களில் சாபு சிரிலின் கலையின் தாக்கம் முழுமையடைந்திருந்தது. பொலிவற்ற வாழ்வு என்பதாலோ என்னமோ படம் முழுக்க ஒருவித இருள் சூழ்ந்திருந்தது. அதில் பட்டை மட்டும் வண்ணமாக ஜொலிக்க வைத்தது, விளக்கின் ஒளியில் காட்சியை விளக்கியது என்று தனித்துக் கதை சொன்னார் ஒளிப்பதிவாளர் திரு. சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது,  டொரோன்டோ திரைப்பட விழாவில் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டுகள் மற்றும் பாராட்டுகளைப் பெற்றது காஞ்சிவரம்.

ஒரு திரைப்படம் எந்தளவுக்குச் சூழலில் எதார்த்தத்தை எதிரொலிக்கிறதோ, அது உலக சினிமாவாகப் பாராட்டப்படுகிறது. உண்மையை மறுத்து, புனைவு வாழ்வியலைக் கொண்டாடும் வேளையில் காஞ்சிவரத்தை சமரசமற்று வழங்கினார் இயக்குநர் ப்ரியதர்ஷன். சமூக கலையான திரைப்படத்தில் சமூக அடுக்குகளில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை வெளிப்படுத்தியதே காஞ்சிவரத்தின் வெற்றி. தன் சம்பிரதாயப்படி திருமணத்துக்கு முடியவில்லை என்றாலும், மகளின் சடலத்துக்குப் பட்டை போற்றுகிறான் வேங்கடம். தலை மூடினால் கால் தெரிய, கால் மூடினால் தலை தெரியத் தனது நிலையைப் பூர்த்தி செய்யாமல் பார்க்கும் வேங்கடத்தின் பார்வை, ஏற்றத்தாழ்வு சமூகத்துக்கான எச்சரிக்கை!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு