Published:Updated:

சிவகார்த்திகேயன் vs விஜய் தேவரகொண்டா... யார் ஹீரோ... யார் ரியல் ஹீரோ?

சிவகார்த்திகேயன் vs விஜய் தேவரகொண்டா... யார் ஹீரோ... யார் ரியல் ஹீரோ?
சிவகார்த்திகேயன் vs விஜய் தேவரகொண்டா... யார் ஹீரோ... யார் ரியல் ஹீரோ?

'விஸ்வாசம்’ படத்தின் விநியோகஸ்தர் கே.ஜே.ராஜேஷ் தயாரிக்க 'இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்க சிவகார்த்திகேயன் நடிப்பில் `ஹீரோ’ என்ற படம் தயாராகிறது. அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் ஆரம்பித்தது. கல்யாணி பிரியதர்ஷன், இவானா, அர்ஜுன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். 

அதேவேளையில், `காக்காமுட்டை’ மணிகண்டனின் இணை இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கும் தெலுங்குப் படத்தின் தலைப்பும் `ஹீரோ’ என்று வைத்துள்ளதாகச் செய்திகள் வந்தன. மேலும், இந்தத் தலைப்பு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் பதிவு செய்துள்ளதாகவும் படக்குழு குறிப்பிட்டிருந்தது. ஏற்கெனவே, விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'டியர் காம்ரேட்’ திரைப்படம் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.         

இந்நிலையில் தற்போது, `ஹீரோ’  தலைப்பு  யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வெடித்துள்ளது. தமிழின் மிக முக்கியமான கதாநாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் படத்துக்கும், ஆந்திரா, தமிழ் எனத் தென்னிந்திய சினிமாவில் முக்கியமான கதாநாயகனாக இருக்கும் விஜய் தேவரகொண்டா படத்துக்கும் தமிழில் `ஹீரோ’ என்ற டைட்டில் எப்படி வழங்கப்பட்டது என்ற குழப்பத்தைத் தீர்த்துக்கொள்ள சிவகார்த்திகேயன் படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷுடன் பேசும்போது, ” ’ஹீரோ’ என்ற டைட்டில், நான் விண்ணப்பித்து தயாரிப்பாளர் சங்கம் (கவுன்சில்) எனக்கு கன்ஃபார்ம் செய்து கொடுத்த டைட்டில். அதற்காகத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் துரைராஜ் கையெழுத்திட்டக் கடிதம் என்னிடத்தில் உள்ளது. நாங்கள் கவுன்சில் விதிமுறைகளின் படியே இந்தத் தலைப்பைப் பெற்றுள்ளோம். இதில் முக்கியமான விஷயம் இந்தத் தலைப்பை எங்களுக்குமுன் இசையமைப்பாளர், இயக்குநர் எஸ்.எஸ். குமரன் வைத்திருந்தார். அவர் கொடுத்த தடையில்லா சான்றுக்குப் பிறகே, இந்தத் தலைப்பு எங்களுக்கு வந்தது’’ என்றார்.

படத்தின் தலைப்பை இயக்குநர் மணிகண்டனின் டிரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் 2017-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, அதன்பின் 14.06.2018-ம் தேதி புதுப்பிக்கப்பட்டது. அதற்கான ரசீது இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை வசம் இருக்கிறது. அதில், 14.6.2019 வரை அந்தத் தலைப்பு டிரைபல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து விஜய் தேவரகொண்டா படத்தின் இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை பேசும்போது, ``நாங்கள் புதுப்பித்து இருக்கும்போது அது எப்படி மற்றவர்களிடம் இருக்கும். எங்களிடம் தலைப்பு இருக்கும்பட்சத்தில்தான் புதுப்பிக்கவே முடியும். பதிவு செய்யும்போதும் புதுப்பிக்கும்போதும் கொடுக்கப்பட்ட அத்தனை சான்றுகளும் எங்களிடம் இருக்கின்றன. இதுபற்றி மேலும் தயாரிப்பாளர் சங்கத்தில்தான் பேச வேண்டும்’’ என்றார்.

இத்ற்கிடையே தயாரிப்பாளர் ராஜேஷ் கூறிய இயக்குநரும் தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினருமான எஸ்.எஸ். குமரனைத் தொடர்புகொண்டோம். அப்போது, ``நான் வைத்திருந்த ஒரு அப்பா மகன் கதைக்கு 'ஹீரோ' என டைட்டிலை சென்ற வருடமே பதிவு செய்திருந்தேன். இந்நிலையில் சிவகார்த்திகேயன் - மித்ரன் படத்துக்கு இந்த டைட்டிலை வைப்பதற்காக என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். நான் என் கதைக்காக இருக்கும் டைட்டிலை எப்படித் தருவது என யோசித்தேன். ஒரு மூன்று மாதம் அந்தப் படக்குழுவும் என்னை பின் தொடர, என் பட வேலைகளும் தள்ளிப்போக அந்தத் தலைப்பை கே.ஜே.ஆர் நிறுவனத்துக்கு மாற்றிக் கொடுக்க சம்மதம் தெரிவித்தேன். அதற்கான, என்.ஓ.சி (தடையில்லா கடிதம்) தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடந்த ஜனவரி மாதம் கொடுத்தேன். இதையடுத்து, சிவகார்த்திகேயன் டீம் இதைப் பதிவு செய்தனர். பிப்ரவரி மாதம் நடந்த செயற்குழு கூட்டத்தில்தான் இந்தத் தலைப்பு சிவகார்த்திகேயன் படத்துக்கு ஒதுக்கப்பட்டது’’ என்றார்.

படத்தின் டைட்டிலை தயாரிப்பாளர் சங்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அந்த டைட்டில் வேறு தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒதுக்கப்படவில்லையென்றால் விண்ணப்பித்த தயாரிப்பாளருக்கே தரப்படும். தரவுகள் அனைத்தும் சரிபார்த்து, செயற்குழு கூட்டத்தில் வைத்து இறுதியாகத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அல்லது செயலாளர் கையெழுத்திட்டுத் தருவார்கள்.

அப்படி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறைப்படி தனது பட `ஹீரோ’ டைட்டிலைப் பதிவு செய்து, அதற்கான கவுன்சிலின் அங்கீகார கடிதத்தையும் கையில் வைத்து இருக்கிறது சிவகார்த்திகேயன் தரப்பு. தேவரகொண்டா தரப்போ கவுன்சிலின் ரசீதை வைத்துக்கொண்டு `ஹீரோ’  தலைப்பு சொந்தம் என்று இருக்கிறது.

 `உண்மையில் `ஹீரோ’ டைட்டில் சிவகார்த்திகேயனுக்குத்தான் முறைப்படி சொந்தமானது. தேவரகொண்டா படத்துக்கு வேண்டுமானால் `ரியல் ஹீரோ’ என்று வைத்துக்கொள்ளுங்கள். அதேசமயம் தெலுங்கில் `ஹீரோ’ டைட்டிலைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள், தமிழில் மட்டும் `ரியல் ஹிரோ’ என்று தலைப்பு வைத்துக்கொள்ளுங்கள்’ என்று யோசனை சொல்லி இருக்கிறதாம் தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கம்.