Published:Updated:

ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்பதைச் சொல்ல அவசியம் வந்திருக்கிறது!’’ - ரோகிணி

ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்பதைச் சொல்ல அவசியம் வந்திருக்கிறது!’’ - ரோகிணி
ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்பதைச் சொல்ல அவசியம் வந்திருக்கிறது!’’ - ரோகிணி

நடிகை - இயக்குநர் ரோகிணி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்துப் பேசியிருக்கிறார்.

பொள்ளாச்சி சம்பவம் அடுத்தடுத்து பகீர் விஷயங்களைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. ``200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் என்னைக் கடந்த சில நாள்களாகத் தூங்கவிடவில்லை!’’ வேதனையுடன் பேச ஆரம்பிக்கிறார் நடிகை ரோகிணி. 

``இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் பெண்கள் அவர்களுக்கான தேவை என்ன என்பதைத் தேடி அடைய என முட்டிமோதி வெளியே வர ஆரம்பித்திருக்கிறார்கள். போராடிப் போராடி நகர்ந்து வந்திருக்கும் இந்த நேரத்தில் இப்படியான சம்பவங்கள், முன்னேறி வரும் பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்துவிடும். காதல் பற்றிய புரிதல், பயத்தினால்தான் பல பெற்றோர்கள் பெண்களை இன்னும் மிரட்டி வளர்த்து வருகிறார்கள். இப்படிப் பயந்து, ஒதுங்கி வாழும் பெண்களையே ஆண்கள் கொடூரமான செயல்களைச் செய்து வாழ்க்கையை அழிக்கிறார்கள்.  

இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பு ஆண்களுக்குத்தான் இருக்கிறது. இது தெரிந்தும்... எப்படிப் பெண்களையே பொறுப்பு சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. பெண்களை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டாம், வெளியே வாங்க, நல்லா பேசுங்கள், பழகுங்கள் எனச் சொல்றோம். ஆண்கள் செய்கிற தவறுக்கு பெண்கள்மேல் குற்றம் சொல்வதால் மீண்டும் பெண்களுக்கான சட்ட திட்டங்கள் வர ஆரம்பித்துவிடும். 

ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்பதைச் சொல்ல அவசியம் வந்திருக்கிறது!’’ - ரோகிணி

யாரையும் நம்பாதீங்க எனச் சொல்லித்தான் பெண் குழந்தைகளை வளர்க்கிறோம். நம்புற மாதிரி பேசும்போது, என்ன செய்வது? தங்கையின் தோழிகள் எனவும் பார்க்காமல் எல்லோரையும்தானே டார்கெட் செய்திருக்கிறார்கள். அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். செய்யும் தவறுகளுக்கு வீட்டில் உள்ள பெண்களையும் பயன்படுத்தியிருக்காங்க. ஏதோ ஒரு நோக்கத்துக்காக வீட்டில் உள்ளவர்களும் பலியாடாகி யிருக்கிறார்கள். விஷயம் வெளியே வந்த பின்பு, கத்திக் கூப்பாடுபோட்டு என்ன பயன்? ஆண் பிள்ளைகளையும் எப்படி வளர்ப்பது என்பதைக் கவனிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். வீட்டில் இருந்துதான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். வீட்டில் அம்மாவை அப்பா அடிப்பதிலிருந்து தொடங்குகிறது ஆண் பிள்ளைகளின் ஆதிக்க குணம். 

இவ்வளவு நடந்தது போதும், இனி இதுபோல் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஆண்களும் பெண்களும் சரிசமமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தவறு செய்தவர்கள் எந்தக் கட்சியாக இருந்தால் என்ன, இப்படியொரு மாபெரும் தவறு செய்திருப்பவர்கள்  மனிதர்கள்தானே? அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதைத் தாண்டி, தண்டிக்க வேண்டியது அவசியம். கேட்டாலே உடல் நடுங்க வைக்கும் சம்பவம் அயனாவரத்தில் நடந்தேறிய பிறகு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதுவும் நடக்கவில்லை. யாரும் கேட்கமாட்டங்க, கண்டுபிடிக்க மாட்டாங்க என்ற தைரியத்தில்தானே இப்படிச் செய்திருக்கிறார்கள். பவர் இருக்கிற இடத்தில் இன்னும் அதிகமாகப் பண்றாங்க. அதுதான் வித்தியாசம்.

இந்த நேரத்தில் அந்தப் பெண்களின் மன உளைச்சலை எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டும். எங்கே பெயரையோ, படத்தையோ வெளியிட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அவர்கள் இருப்பார்கள். அப்படிச் செய்துவிடாதீர்கள். கடைசியில் குற்றம் செய்தவர்களைத் தாண்டி அந்தப் பெண்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். `இனி படிக்க வேண்டாம்’ என்ற தடை வரும், `அந்தக் குடும்பத்தில் பெண் எடுக்க வேண்டாம்’ என்ற கட்டுப்பாடு ஊரில் வரும். அந்தப் பெண் வெளியே வந்துவிட்டால், அவளுடைய வாழ்க்கை அவ்வளவுதான் என்கிற கட்டமைப்பு உள்ள சமுதாயத்தில்தானே இருக்கிறோம்... அந்த சமூகத்தின் பார்வையை, கட்டமைப்பை மாற்றாமல் எதுவும் மாறாது. எல்லோரும் அந்தப் பெண்களுக்கு ஓர் அரணாக இருக்க வேண்டிய அவசியம் இப்போது இருக்கிறது. பிரபலங்களும் மீடியாக்களும் அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைக் கொடுத்தாலே போதும், அந்தப் பெண்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்’’ என்றார் நடிகை ரோகிணி.

அடுத்த கட்டுரைக்கு