டைட்டில் கார்டு - 3

“ஜுன் 14, 1989. சேகுவேரா, டொனால்டு டிரம்ப் ரெண்டுபேரும் பிறந்த தேதியிலதான் நானும் பிறந்தேன். மயிலாடுதுறையில ஈழத்துத் தோழர்கள், திராவிடர் கழகத் தோழர்கள் முன்னிலையில, ஐயா கலிபூங்குன்றன் எனக்கு ‘தம்பி பிரபாகரன்’னு பெயர் வெச்சாங்க. வீட்டுல எல்லோரும் ‘தம்பி’ன்னு கூப்பிடுறாங்க. ஆனா, வளர வளர பெயரும் மாறிக்கிட்டே வந்தது. தம்பி பிரபாகரன், தம்பி, பிரபு, அருண் பிரபு, அருண் நோபல். இப்போ, அருண் பிரபுபுருஷோத்தமன். தவிர, ஏழரை, வைரஸ், வரும்/வராது, ஊடகம்... நண்பர்கள் கிண்டலா கூப்பிடுற பல பெயர்களும் எனக்கு இருக்கு!” பெயருக்கே பெரிய வரலாறு வைத்திருக்கிறார், `அருவி’ பட இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்.

டைட்டில் கார்டு - 3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அப்பா புருஷோத்தமனுக்கு வேதாரண்யம் சொந்த ஊர். சுயமரியாதைக்காரர். ‘திலீபன் புத்தக நிலையம்’ என்ற பெயர்ல வீட்டிலேயே ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கு நடுவேதான் வாழ்றார். திராவிடர் கழகத்துல இருந்தார்.
எங்க வீட்டுக்குள்ளே நுழைஞ்சாலே ’தோழர்களே… சாகத் துணிவு கொள்ளுங்கள்!’ என்ற வாசகத்தோடு ஒரு பெரிய பெரியார் ஓவியம் உங்களை வரவேற்கும். அம்மா, லலிதா, பெரிய இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. திருவீழிமிழலை அவங்களுக்குச் சொந்த ஊர். பெரிய அக்கா உண்மை (எ) அபர்ணா. வெளிநாடுகள்ல படிக்க நினைக்கிற மாணவர்களுக்கான நிறுவனம் நடத்துறாங்க. கூடவே மக்கள் சார்ந்த களப்பணியிலும் ஈடுபட்டுக்கிட்டு வர்றாங்க. சின்ன அக்கா முனைவர்.விடுதலை (எ) விசயலட்சுமி. யோகா ஆசிரியர், உளவியல் பேராசிரியராகவும் வேலை பார்க்கிறாங்க. அக்காக்களுக்கும், எனக்கும் பத்து வயசுக்குமேல வித்தியாசம் இருக்கும். அதனால, என்னை மூணு அம்மாக்களின் அரவணைப்பில் வளர்ந்த குழந்தைன்னு சொல்லலாம். அம்மாவோட தம்பி, தாஸ் மாமா. சிறைக் கண்காணிப்பாளரா இருந்ததனால, எங்களோட விடுமுறை நாள்க ளெல்லாம் ஜெயில் வளாகத்துலதான் கழியும். நடிகர் சிவகார்த்திகேயன் தாஸ் மாமாவோட பையன், எனக்கு அண்ணன்!” என்பவர், நாத்திகம் பேசி நல்வழிப்படுத்திய அப்பாவின் நினைவுகளை இன்னும் கொஞ்சம் கூர்தீட்டிச் சொன்னார்.

டைட்டில் கார்டு - 3

“அப்பாவோட அரசியல் கூட்டங்கள், இலக்கிய விழாக்கள், நூலகம், திரையரங்குகள்... இதெல்லாம்தான் என்னோட சின்ன வயசை வழிநடத்துச்சுன்னு சொல்லணும்” என்பவருக்கு நண்பர்கள் வட்டம் பெரிதாக இல்லை.

“அக்கா விடுதலை மூலமா எனக்கு யோகாவுல ஆர்வம். உலகளவிலான யோகா, கராத்தே போட்டிகள்ல கலந்துகிட்டேன், ஜெயிக்கவும் செஞ்சேன். தினமும் 5,6 மணி நேரப் பயிற்சிங்கிறதால நண்பர்கள்கூட சுத்துறதுக்கு நேரமில்லை. தவிர, நான் கொஞ்சம் திக்கிப் பேசுற பையனா இருந்தேன். அதனால, தனியா இருக்கிறதே சந்தோஷமான மனநிலையைத்தான் கொடுத்தது. திக்கிப் பேசுறதை நிறுத்தவும், தமிழ் உச்சரிப்பு சரியா வரணும்னும் அப்பா எனக்கு சில பயிற்சிகளைக் கொடுக்க ஆரம்பிச்சார்.

சித்தர் பாடல்கள், திருமந்திரம், பாவேந்தர் மற்றும் காசி ஆனந்தன் பாடல்கள், கலைஞரின் வசனங்கள்... எல்லாத்தையும் கொடுத்து மனப்பாடம் பண்ணச் சொன்ன எங்க அப்பா, காலையில 5 மணிக்கே எழுப்பிவிட்டு அதை ஒப்பிக்கவும் சொல்வார். வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்ககிட்ட அப்பப்போ நான் பல குரல்ல பேசிக் காட்டுவேன். நான் பல குரல்ல பேசுறதைப் பார்த்து, ‘அபஸ்வரம்’ ராம்ஜி சார் அவரோட ‘இன்னிசை மழலைகள் இசைக் குழு’வுல என்னையும் சேர்த்துக்கிட்டார். நான்காம் வகுப்புல இருந்து, ஏழாம்வகுப்பு வரை... பல கோயில், கல்யாண நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டு மிமிக்ரி பண்ணியிருக்கேன். அப்படி ஒருமுறை நிகழ்ச்சியில பார்த்த ஒரு உதவி இயக்குநர், கே.பாக்யராஜ் சாரோட ‘ஒருகதையின் கதை’ நாடகத்துல நடிக்கக் கூட்டிக்கிட்டுப் போனார், நடிச்சேன். பிறகு, தொடர்ந்து பல சீரியல் வாய்ப்புகள். இதுவரை 60-க்கும் அதிகமான சீரியல்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கேன். பாலசந்தர், சமுத்திரக்கனி, சி.ஜே.பாஸ்கர், சுந்தர்.கே.விஜயன், பத்ரி... இப்படிப் பல இயக்குநர்களோட சீரியல்ல வொர்க் பண்ணியிருக்கேன். அதேசமயம், பல படங்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் வேலை பார்த்திருக்கேன். ‘ஒருகதையின் கதை’, ‘அண்ணாமலை’, ‘அண்ணி’, ‘மாங்கல்யம்’ இப்படிக் கன்னாபின்னான்னு சீரியல்ல நடிச்சுக்கிட்டிருந்த அந்த நான்கைந்து வருடம், சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டே கதின்னு ஆகிடுச்சு!” என்பவருக்கு, சினிமாமீது ஆர்வம் வராமல் இருந்தால்தானே ஆச்சர்யம்; வந்தது!

டைட்டில் கார்டு - 3

“காலேஜ் சேர்றதுக்கு முன்னாடி, அப்பாவும் நானும் ஈழத்துத் தோழர்களுடைய வாழ்வியல் கதைகளை ஆவணப்படுத்துற வேலைகளில் இருந்தோம். அந்தச் சமயத்துல நண்பர்களோடு சேர்ந்து ‘ஆடடா களத்தே!’ என்ற குறும்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, நடிச்சிருந்தேன். அந்தக் குறும்படத்தை இங்கே இருக்கிற எல்லா நல்ல இயக்குநர்களுக்கும் போட்டுக் காட்டி, அவங்க கருத்தைக் கேட்கலாம்னு அப்பாவும் நானும் நினைச்சோம். அதனால, நாங்க பல இயக்குநர்களின் அலுவலங்கங்களுக்குப் போய் குறும்படத்தைக் கொடுத்துட்டு, பதிலுக்காகக் காத்திருந்தோம். யார்கிட்ட இருந்தும் ரெஸ்பான்ஸ் இல்லை. அந்த விரக்தியில மிச்சம் இருந்த குறும்பட சிடி-களைக் கொளுத்திட்டேன். ஆனா, அடுத்த சிலநாள்ல அந்த ஆச்சர்யம் நடந்தது. ‘நான் பாலு மகேந்திரா பேசுறேன். உங்க குறும்படத்தைப் பார்த்தேன்... என்னால தூங்க முடியல. உங்களை நேர்ல சந்திக்கமுடியுமா’ன்னு கேட்டார். அவருடனான உரையாடலுக்குப் பிறகு பெரிய நம்பிக்கை வந்தது. லயோலா கல்லூரியில விஸ்காம் சேர்ந்து படிச்சேன். அங்கே முனைவர் ச.ராஜநாயகம் எனக்கு ஆசான்.  பாக்யராஜ் கோதை, யெஷ்வந்த் இன்மொழி, எட்மண்ட் ரான்சன், சஞ்சீவன், பிரகாஷ்... கருத்துப் பசியோட நண்பர்கள் ஒரு குழுவானோம். அவர்களோடு நிறைய மனிதர்களைச் சந்திப்பது, கதை எழுதுவது, விவாதிப்பது... இப்படியே நிறைவு பெற்றது கல்லூரி வாழ்க்கை” எனச் சொல்லும் அருண் பிரபு, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் உதவி இயக்குநர்.

டைட்டில் கார்டு - 3

“உதவி இயக்குநரா சேர்ந்த பிறகுதான், உண்மையாவே சினிமாவை வணிகமா பார்க்க முடிஞ்சது. ரவிகுமார் சாரும் எங்களுக்குத் தொழில்மீதான பிடிப்பை வளர்த்தெடுத்தார். கமல் சார் நடிச்ச ‘மன்மதன் அம்பு’, ரஜினி சார் நடிச்சு டிராப் ஆன ‘ராணா’ படம், ‘கோச்சடையான்’, பாலிவுட்ல சஞ்சய் தத் நடிச்ச ‘போலீஸ் கிரி’ ஆகிய படங்கள்ல உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். அந்தச் சமயத்திலேயே நான்கு திரைக்கதைகள் எழுதித் தயாரா வெச்சிருந்தேன். அதுல இருந்து ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து 2011-ல் தயாரிப்பாளரைத் தேட ஆரம்பிச்சேன். ஒன்றரை வருடங்கள். அறுபது, எழுபது தயாரிப்பாளர்கள், ஆறேழு ஹீரோக்களுக்குக் கதை சொன்னேன். எல்லோரும் கதையை ரசிச்சாங்க, கைதட்டினாங்க. ஆனா, ஒரு படைப்பா அது கைகூடி வரல. அப்போதான், புரொடக்‌ஷன் மேனேஜர் ஒருவர் ‘தம்பி, ஒரே லொக்கேஷன்; லட்சங்கள்ல பட்ஜெட்; 30 நாள்ல ஷூட்டிங். அதுதான் இப்போ டிரெண்டு! ‘பீட்சா’ படம் பார்க்கலையா நீ?’ன்னு என் அறிவுக் கண்ணைத் திறந்து விட்டார். அடுத்த ரெண்டு வாரத்துல எழுதின திரைக்கதைதான், ‘அருவி.’ அடுத்த மூணு வாரத்துல எஸ்.ஆர்.பிரபு சார் ‘அருவி’யைத் தயாரிக்க ஓகே சொன்னார். 40-வது வாரம் அதிதி பாலனை ஹீரோயினா தேர்ந்தெடுத்தோம். 70-வது வாரம் ஷூட்டிங் தொடங்கி, 90-வது வாரம் முடிஞ்சது. படம் தியேட்டருக்கு வர 160 வாரம் ஆகிடுச்சு. சின்னப் படமா இருந்தாலும் வணிகரீதியாவும் நல்ல அங்கீகாரமும் வெற்றியும் கிடைச்சது. இப்போ, அந்த 60, 70 தயாரிப்பாளர்கள்கிட்ட சொல்லித் தொடங்காத என் முதல் கதையைத்தான் சிவகார்த்திகேயன் அண்ணா தயாரிக்க, ‘வாழ்’ங்கிற என் இரண்டாவது படைப்பா வரப்போகுது’’ என்பவர், ‘வாழ்’ டைட்டிலுக்கான காரணத்தைப் பகிர்ந்தார்.

“உலகத்துல நம்மளைத் தவிர வேற எந்த ஜீவராசியும் வாழ்வது எப்படின்னு கத்துக்க ஆயிரக்கணக்குல செலவு பண்ணி பேக்கேஜ்ல யோகா க்ளாஸுக்கெல்லாம் போறதில்லை. இந்த அழகான பூமியில நமக்கு எதுக்கு இப்படி ஒரு பிறப்பு. இந்தப் பிறப்பை வெச்சுக்கிட்டு என்னத்த பண்றதுன்னு தெரியாம நாள்தோறும் புதுசு புதுசா சத்குருக்களையும், பாபாஜிக்களையும் உருவாக்கி வளர்த்துவிடுறோம். ஆனா, இன்னும் வாழத் தெரிஞ்ச பாடில்லை! அதனால, அதைப் பற்றியே படமெ டுக்கலாம்னு தான், ‘வாழ்’ தொடங்கியிருக்கோம். தலைப்புதான், படம் சொல்லப்போற கருத்தும்!”

- கே.ஜி.மணிகண்டன்; படம்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism