Published:Updated:

கேமரா முன்னாடி 'அரசியல்வாதி' சீமான் எப்படி? - ஷுட்டிங் ஸ்பாட் ரிப்போர்ட்

`அமீரா' படத்தின் இயக்குநர் சுப்பிரமணியன் படம் குறித்தும், சீமான் பற்றியும் பேசியிருக்கிறார்.

கேமரா முன்னாடி 'அரசியல்வாதி' சீமான் எப்படி? - ஷுட்டிங் ஸ்பாட் ரிப்போர்ட்
கேமரா முன்னாடி 'அரசியல்வாதி' சீமான் எப்படி? - ஷுட்டிங் ஸ்பாட் ரிப்போர்ட்

நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பைக் கூட்டியிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் வியூகத்தை வகுத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், `நாம் தமிழர் கட்சி'யின் தலைவர் சீமான், இயக்குநர் சுப்பிரமணியன் இயக்கிக்கொண்டிருக்கும் `அமீரா' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருக்கிறார். படம் குறித்து இயக்குநரிடம் பேசினேன். 

``எல்லோரும் `அமீரா' என் முதல் படம்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. நான் ஏற்கெனவே `சேவற்கொடி' படத்தை இயக்கியிருக்கேன். இயக்குநர் ராதா மோகனின் `அபியும் நானும்' படத்தில் டயலாக் ரைட்டரா வொர்க் பண்ணியிருக்கேன். `வாமனன்' படத்துக்கும் வசனம் எழுதியிருந்தேன். இடையில `சாவி' என்ற படத்தை இயக்குறதா இருந்தது. சில காரணங்களால அந்தப் படத்தோட வேலைகள் பாதியிலேயே நின்னுடுச்சு. இப்போ, `அமீரா' பட வேலைகள் போகுது."  

`` `அமீரா' என்ன மாதிரியான படம்?" 

``நம்ம சமூகத்துல பெண்களுக்கு ஒரு வட்டம் போட்டு, அதை விட்டு வெளியே வரக்கூடாதுனு ஒரு நிர்பந்தம் இருக்கு. அப்படி வந்துட்டா, அவங்க பல பிரச்னைகளைச் சந்திக்கவேண்டியதா இருக்கு. இந்தக் கருத்தை அடிப்படையா வெச்சுதான் கதை எழுதினேன். முழுக்க கற்பனைக் கதைதான். படத்தோட நாயகி, அனுசித்ரா. மலையாளத்தில் பல நல்ல படங்களில் நடிச்சிருக்காங்க. இந்தப் படத்துல இவங்க நடிச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அவங்களும் கதையைக் கேட்டு ஓகே சொன்னாங்க."  

``தலைப்புக்குக் காரணம் என்ன, நாயகியின் பெயர்தான் அதுன்னா, அதைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?" 

``தனி காரணம் எதுவுமில்லை. இது எதார்த்தமான ஒரு விஷயம்தான். தவிர, நம்ம சமூகத்துல முஸ்லிம் மக்களும்தானே இருக்காங்க. அவங்க தனி மனிதர்கள் கிடையாதே! எல்லோரும் ஒண்ணாவே வாழ்றோம். எல்லாப் பெண்களுக்கும் நடக்கிற அநீதிகள் அவங்களுக்கும் நடக்குது. அதைத்தான் படத்துல மையமா வெச்சிருக்கேன். கூடவே, மிடில் க்ளாஸ் குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கல்கள் பற்றியும் படம் பேசும். முக்கியமா, ஒரு பெண் அதையெல்லாம் எப்படி எதிர்கொண்டு வாழ்றாங்கனு இந்தப் படத்துல பார்க்கலாம். மற்றபடி, மதத்திற்கும் படத்திற்கும் சம்பந்தம் கிடையாது."  

``சீமானுக்கும் உங்களுக்குமான அறிமுகம் பற்றிச் சொல்லுங்க?"

``சீமான் அண்ணனை எனக்குப் பல வருடங்களா தெரியும். நான் அவருடைய உதவி இயக்குநர். `பாஞ்சாலக்குறிச்சி' படத்தை சீமான் அண்ணன் இயக்குன காலத்துல இருந்து, இப்போவரைக்கும் அவர்கூட இருக்கேன். எங்களுக்கிடையேயான உறவு மிகப் பெரியது. படத்தின் கதையை அவர்கிட்ட சொன்னேன். கேட்டுட்டு, `நான் பண்றேன்டா'னு சொல்லிட்டார். அவரைப் பல வருடங்களாகவே பக்கத்துல இருந்து பார்த்துக்கிட்டு இருக்கிறதுனால, எந்த மாதிரியான கேரக்டரில் அவர் நடித்தால் நல்லாயிருக்கும்னு எனக்குத் தெரியும். படத்துல ரெண்டு ஆண்களுக்கு முக்கியமான கேரக்டர். அதில், ஒரு கேரக்டர் போலீஸ். அந்த கேரக்டரில்தான் சீமான் நடிச்சிருக்கார். சராசரி ஆண் மகனா ஆர்.கே.சுரேஷை இந்தப் படத்தில் பார்க்கலாம்."  

``தேர்தல் பிஸியில இருக்கிற சீமான், எப்படி நடிக்க சம்மதிச்சார்?" 

``எல்லாம் திட்டமிட்டுதான் ஷூட்டிங் பண்ணோம். தவிர, சீமானும் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். அவர் அரசியல் வேலைகளில் பிஸியா இருக்கிறப்போ, மத்த காட்சிகளை எடுப்போம். அவரும் அதுக்குத் தகுந்தமாதிரி எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்."  

``சீமானுக்கு அரசியல் வசனம் ஏதாவது வெச்சிருக்கீங்களா?" 

``தனியா அப்படி எதுவும் இல்லை. இது சமூகம், பெண்கள் சம்பந்தப்பட்ட கதைதான். போற போக்குல சமூகத்துக்குத் தேவையான வசனங்கள் வரும். அப்படித்தான் சீமானுக்கும் கொடுத்திருக்கோம். தவிர, ஷூட்டிங் ஸ்பாட்ல சீமான் அரசியல் பேசமாட்டார். ஸ்பாட்டுக்கு வந்தா, அவர் `அரசியல்வாதி' சீமானைப் பார்க்க முடியாது."

``நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் நடிக்கிற சீமான், ஸ்பாட்ல எப்படி இருந்தார்?" 

``அவர் கேஷுவலாதான் இருந்தார். எனக்குதான் அவரை இயக்கக் கொஞ்சம் பதற்றமா இருந்தது. ஏன்னா, அவரை இயக்குநராகவே பார்த்துப் பழகிட்டேன். ஸ்பாட்லகூட `டைரக்டர் சாரைக் கூட்டிக்கிட்டு வாங்க'னுதான் சொல்வேன். சிலர், `இவர்தானே படத்தோட இயக்குநர், யாரைக் கூப்பிடச் சொல்றார்'னு குழம்பி நின்ன சம்பவமும் நடந்தது. நான் வேலை பார்த்த இயக்குநரை நானே இயக்குற வாய்ப்பு கிடைச்சதுல சந்தோஷம்!" 

``ஒளிப்பதிவாளர் செழியன் பற்றி?"

``செழியனும் எனக்கு நெருங்கிய நண்பர். பி.சி.ஶ்ரீராம் சார்கிட்ட அவர் வேலை பார்த்த காலத்திலிருந்தே எனக்கு தெரியும். `அமீரா' படத்தைப் பற்றிய டிஸ்கஷன் போய்க்கிட்டு இருந்தப்போ, ஒளிப்பதிவுக்கு செழியன்கிட்ட கேட்டுப் பார்ப்போம்னு தோணுச்சு. அவரும் சரினு சொல்லிட்டார்."