Published:Updated:

``சேது அண்ணன்கிட்ட முத்தம் கேட்க தயக்கமா இருந்தது..!’’ - லிங்கா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``சேது அண்ணன்கிட்ட முத்தம் கேட்க தயக்கமா இருந்தது..!’’ - லிங்கா
``சேது அண்ணன்கிட்ட முத்தம் கேட்க தயக்கமா இருந்தது..!’’ - லிங்கா

`சிந்துபாத்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடித்த லிங்கா, அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

”எனக்கு சின்ன வயசில இருந்தே படிப்பைத் தவிர டான்ஸ், நாடகம், விளையாட்டுனு மத்த விஷயங்கள்ல ஆர்வம் அதிகம். காலேஜ் முடிச்சுட்டு ஒரு ஐ.டி கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். செட்டாகலைனு வெளியே வந்துட்டேன். அந்த மாதிரி மூணு கம்பெனி மாறிட்டேன். ஒரு கட்டத்துல வேலை செய்யுறதே எனக்கு செட்டாகலைங்கிறது புரிய ஆரம்பிச்சது. அடுத்து என்ன பண்றதுனு யோசிச்சுட்டு இருந்தபோது, என் தம்பி ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்தான். அதுல ஒரு கேரக்டர் நடிக்க வர வேண்டியவர் வரலை. சரினு அதுல நடிக்க என்னை கூப்பிட்டான். அதுல நான் நடிச்ச அந்த கொஞ்ச நேரம் எனக்கு அவ்ளோ பிடிச்சிருந்தது. நான் அவ்ளோ சந்தோஷமா இருந்தேன். அந்த சந்தோஷம் எனக்கு கிடைச்சிட்டே இருக்கணும்னு சினிமாக்குள்ள வர முயற்சி பண்ணி வந்துட்டேன்’’  என ஆர்வமாகப் பேசத் தொடங்குகிறார் நடிகர் லிங்கா.

`` `சேதுபதி’ படத்துலதான் உங்களை மக்கள் கவனிக்க ஆரம்பிச்சாங்க. அந்தப் படத்துக்குள்ள எப்படி வந்தீங்க?’’

`` `சேதுபதி’ படத்துல நான் நடிச்ச எஸ்.ஐ மூர்த்தி எனக்கான விசிட்டிங் கார்டுனுதான் சொல்லணும். என்னுடைய முதல் படம் `சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ ரிலீஸாகி அடுத்த பட வாய்ப்புக்காகக் காத்திட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல ஒரு நாள் ஜிம்ல வொர்க் அவுட் பண்ணிட்டு வெளியே வந்து ஜூஸ் குடிச்சிட்டு இருந்தேன். அப்போ ஒருத்தர் வந்து, ``அந்தப் படத்துல சூப்பரா நடிச்சிருந்தீங்க’’னு சொன்னார். நானும் ``ரொம்ப நன்றிங்க’’னு சொல்லிட்டு ஜூஸ் குடிக்க ஆரம்பிச்சுட்டேன். அதுக்கு அப்புறம்தான், ``நான் அருண்குமார். `பண்ணையாரும் பத்மினியும்’ பட டைரக்டர்’’னு சொன்னார். எனக்கு செம ஷாக். ஏன்னா, அவரைப் பார்க்குற வரை அந்தப் படத்துடைய டைரக்டர் ரொம்ப அனுபவம் உள்ள வயசான ஆளாதான் இருப்பார்னு நினைச்சிருந்தேன். அந்தப் படத்தைப் பத்தி பேசிட்டு, ``அடுத்து ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்லுங்க’’னு சொன்னேன். ``விஜய் சேதுபதியை வெச்சு `சேதுபதி’னு ஒரு படம் பண்ணப்போறேன். ஆபீஸ் வாங்க’’னு சொன்னார். அங்கப் போய் சில நாள்லேயே மூர்த்தி கேரக்டர் எனக்கு செட்டாகிடுச்சு.’’ 

``விஜய் சேதுபதியுடைய இந்த வளர்ச்சியை ஒரு சிஷ்யனா எப்படி பார்க்குறீங்க ?’’

``ஒவ்வொரு முறையும் சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷமா இருக்கும். அவர்கூட போட்டோ எடுக்க, அவருக்கு முத்தம் கொடுக்க இருநூறு பேர் அவரை நசுக்கிட்டு இருப்பாங்க. அதை எல்லாம் பார்க்கும்போது ஒரு சின்ன பயம் இருக்கு. அவர்கிட்ட சொன்னாலும் கேட்கமாட்டேங்கிறார். அவருடைய ரசிகர்கள் சூழ்ந்ததுல அவருடைய காரே ஒடுங்கிப்போய் இருக்கு. அவரை நம்பி எவ்வளவோ பேர் இருக்காங்க. ஒரு நாள் அவர் வேலைக்கு லீவு விட்டிட்டு ரெஸ்ட் எடுக்க முடியாது. காரணம், மத்தவங்க அவர்மேல வெச்சிருக்க நம்பிக்கையைப் பூர்த்தி பண்றதுக்காக ஓடிட்டே இருக்கார். அவருடைய இந்த வளர்ச்சிக்கு அவர் சிறந்த நடிகர், பேச்சாளர் அப்படிங்கிறது மட்டும் காரணம் இல்லை. அவர் நல்ல மனுஷன். அந்தப் பண்புதான் அவரை எல்லோருக்கும் பிடிக்க காரணம்.’’

”விஜய் சேதுபதிக்கு வில்லனா நடிக்கிறீங்கன்னு இயக்குநர் சொல்லும்போது எப்படி இருந்தது?’’

``முதல்ல நம்பலை. என்னை கலாய்க்கிறாங்கன்னு நினைச்சேன். ஏன்னா, அவருக்கு இருக்கிற மாஸுக்கும் மார்க்கெட்டுக்கும் யாரை வேணாலும் வில்லனா போட்டிருக்கலாம். ஆனா, அருண் ஆரம்பத்திலிருந்தே நீதான் பண்ணணும்னு சொன்னார். அவர் என்னைவிட என்மேல நம்பிக்கை வெச்சிருந்தார். சேது அண்ணனுக்கு வில்லனா நடிக்கணும்னு உறுதியானவுடனே உள்ளே செம பீதியாக ஆரம்பிச்சிடுச்சு.’’

`` `சிந்துபாத்’ என்ன மாதிரியான கதை ?’’

``எந்த ஒரு சின்ன விஷயத்துக்குப் பின்னாலும் மிகப்பெரிய அரசியல் இருக்குனு சொல்லுவாங்க. நமக்கு சின்னதா தெரியுற தவறுக்குப் பின் நம்ம கற்பனைக்கு எட்டாத விஷயங்களைக்கூட அசால்டா பண்றாங்க. அந்த சின்ன விஷயம் என்ன, அதுக்குப் பின் என்ன அரசியல் இருக்குங்கிறதுதான் `சிந்துபாத்’ பேசும்.’’

`` `சிந்துபாத்’தில் நடித்த அனுபவம் ?’’

``எனக்கான போர்ஷன் 32 நாள் தாய்லாந்துலதான் நடந்தது. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் கால்ஷீட். ஒரு நாள்கூட பிரேக் கிடையாது. சேது அண்ணன் உட்பட எல்லோரும் காலையில ஸ்பாட்டுக்கு வந்துட்டு நைட் திரும்பிப் போகும்போது நொந்து நூடுல்சாகிதான் போவோம். அப்படி வெச்சு செஞ்சு அனுப்புவார் அருண். இந்தக் கதைக்காக 18 கிலோ ஏத்துனேன். என்னை சுத்தமா மாத்தணும்னு முடிவு பண்ணிதான் அந்த லுக்கையே கொடுத்தார் அருண். எப்படி இருக்குனு நீங்கதான் சொல்லணும்.’’

`` `சிந்துபாத்’ ஷூட்டிங்ல மறக்க முடியாத அனுபவம்?’’

``தென்காசி போர்ஷன்ல எனக்கான சீன் இல்லை. இருந்தாலும் நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிருந்தேன். திடீர்னு சேது அண்ணனை காணோம். எங்கேனு பார்த்தால் பக்கத்துல ஒரு கோயில்ல அன்னதானம் போட்டாங்கன்னு அங்க நிறைய பேர்கூட தரையில உட்கார்ந்து சாப்பிட்டுகிட்டு இருக்கார். அவர் கூட அஞ்சலியும் அவர் பையன் சூர்யாவும் உட்காந்திருந்தாங்க. என்னைப் பார்த்தவுடனே, ``டேய்... சாப்பாடு சூப்பரா இருக்குடா. நீயும் வா உட்காரு’’னு கூப்பிட்டார். சரினு அவங்களோட நானும் சேர்ந்து அன்னதானம் சாப்பிட்டேன். அந்தத் தருணத்தை மறக்கவே முடியாது. நம்ம ஆளு சாப்பாடு நல்லாயிருந்தா சுத்தி யார் என்னனு எல்லாம் பார்க்கவே மாட்டார். நேரா களத்துல இறங்கிடுவார்.’’ 

``விஜய் சேதுபதி மகன் சூர்யா எப்படி நடிச்சிருக்கார் ?’’

``எல்லோருக்கும் அவனுடைய அப்பாவித்தனம் ரொம்ப பிடிக்கும். செம க்யூட். இந்தப் படத்துல சூப்பரா ஸ்கோர் பண்ணுவான். சேது அண்ணா கூடவே பயணிக்கிற கேரக்டர். அவனை அவர் நிறைய யோசிக்க வைக்கிறார். அவனுக்கு இப்போ 14 வயசுதான். ஆனா, நமக்கு தெரியாத பல விஷயங்கள் அவனுக்குத் தெரிஞ்சிருக்கு. அதை எல்லாம் அவன் சொல்லும்போது ஆச்சர்யமா இருக்கும். அப்பாவை மாதிரியே கொடை வள்ளல். எப்போவும் ஒரு படத்துடைய  ஷூட்டிங் முடிஞ்சவுடனே யூனிட்ல இருக்கிற எல்லோருக்கும் ஏதாவது அன்பளிப்பா கொடுப்பார். அது மாதிரி `சிந்துபாத்’ ஷூட்டிங் தாய்லாந்துல முடிஞ்சவுடனே கொடுக்க ஆரம்பிச்சார். அப்போ ஒருவர் நம்ம யூனிட்ல வேலை செஞ்சவங்களுக்கு மட்டும் கொடுங்கனு சொன்னார். ``அப்போ, மீதி இருக்கவங்க எல்லாம் யார் படத்துக்கு வேலை செஞ்சாங்க’’னு கேட்டு தாய்லாந்து ஆட்களை ஒவ்வொருவரா கூப்பிட்டு எல்லோருக்கும் அன்பளிப்பு கொடுத்தான். அதை அமைதியா சேது அண்ணா உட்கார்ந்து ரசிச்சுட்டு இருந்தார்.  அவருடைய மினி வெர்ஷன்தான் சூர்யா. செமயா கலாய்ப்பான். நிறைய பேர் அவன்கிட்ட கலாய் வாங்கியிருக்காங்க. நான் அவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவேதான் இருப்பேன்.’’

``விஜய் சேதுபதியிடம் வாங்கிய முதல் முத்தம்?’’

``விஜய் சேதுபதி அண்ணன்கிட்ட எப்படி முத்தம் கேட்குறதுனு தயக்கமா இருந்தது. அதனால ரொம்ப நாள் கேட்காமலே இருந்தேன். `சேதுபதி’ ஷூட்டிங் முடியிற நேரத்துல அவரே வந்து எனக்கு முத்தம் கொடுத்தார். அப்போ அவ்ளோ சந்தோஷமா இருந்தது. அதற்குப் பிறகு, அப்பப்போ கிடைச்சிட்டே இருக்கு’’ எனப் புன்னகைக்கிறார் லிங்கா. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு