Published:Updated:

``நான் திருப்பி அடித்திருந்தால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா விமல்?’’ - அபிஷேக் கேள்வி

சில நாள்களுக்கு முன்பு விமல் தாக்கியதாகச் செய்தி வந்த நிலையில், விமல் நான் சமாதானம்தான் செய்தேன் என்று சொல்லியிருக்கும் நிலையில், எதிர் தரப்பினர் நம் லைனுக்கு வந்தனர்.

``நான் திருப்பி அடித்திருந்தால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா விமல்?’’ - அபிஷேக் கேள்வி
``நான் திருப்பி அடித்திருந்தால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா விமல்?’’ - அபிஷேக் கேள்வி

கன்னட நடிகர் அபிஷேக், தயாரிப்பாளர், இயக்குநர் பத்மாமகனின் `அவன் அவள் அது’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விமல் தாக்கியதாகக் கூறப்பட்ட அன்று நடந்த சம்பவம் குறித்து, அந்தப் படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளர் கலாநிதி விவரிக்கிறார்.  

``விருகம்பாக்கத்தில் இருக்கும் ஒரு சர்வீஸ் அப்பார்ட்மென்ட் அது. சினிமா ஆட்கள் மட்டுமே தங்கக்கூடிய அப்பார்மென்ட். டிஸ்கஷன்  அதிகமாக நடக்கும். காமெடி நடிகர் செந்திலின் இடம் அது. வெளியில் வந்து உட்கார்ந்து போனில் பேசிக்கொண்டிருக்கிறார் அபிஷேக். சிசிடிவி காட்சியில், நடிகர் விமல் மற்றும் அவருடைய நண்பர்கள் அங்கே உள்ளே நுழைகிறார்கள். அபிஷேக்கிடம் ரூம் பற்றிக் கேட்கிறது விமல் குரூப். அதற்கு உள்ளே போகும்படி சைகை காட்டுகிறார் அபிஷேக். அவருக்குத் தமிழ் தெரியாது. அதற்குப் பிறகு, விமல் மேனேஜரிடம் போனில் டிரை பண்றாங்க. அதற்குள் `யார் இவன் கால்மேல் கால்போட்டு இவ்வளவு ஹாயாக கடலைப் போட்டுட்டு இருக்கான்’ என முறைக்கிறார்கள். 

ஆனால், அபிஷேக் எதையும் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து போனிலேயே கவனமாக இருக்கிறார். அப்போது, விமலும் போன் பேசுவதுபோல அவர் அருகில் உட்காருகிறார்.  இப்போது, விமல் தன்னுடைய வலதுகாலை கால்மேல் கால் போடுவதுபோல போட்டு அவரை மிதிக்கிறார். நம்ம கால்தான் தெரியாமல் பட்டுவிட்டதோ எனத் பதறி, தள்ளி உட்காருகிறார் அபிஷேக். அடுத்த செகண்ட் மறுபடியும் அதே காலை மிதிக்கிறார் விமல். அதற்குப் பிறகுதான் கடுப்பாகி, `நான் என்ன பண்ணேன். எதற்காக என்னை இப்படி தொந்தரவு பண்றீங்க’னு கேட்கிறார். 

அப்போது, விமலுடன் வந்தவர்கள் என்னவென்று அபிஷேக்கிடம் கேட்டுக்கொண்டே இருக்கும்போது, விமல் எதிர்பாராத விதமாக அவரை அடிக்கிறார். அதன் பிறகு, மூன்றாவது ஆள் உள்ளே வந்து சிசிடிவியை மறைத்துவிடுகிறார். அதன் பிறகு கேபினில் இருக்கும் கேமராவில் மற்றக் காட்சிகள் பதிவாகிறது. அவரை மிதித்த பிறகு, அருகில் இருந்த மெட்டல் சேரை கொண்டு தாக்குகிறது விமல் குரூப். அந்தச் சேரை இப்போது போலீஸ் எடுத்துச் சென்றுவிட்டது. 

அதற்குள் மேனேஜர் வந்து, `என்ன பண்றீங்க...’ என விலக்கிவிடவும், அபிஷேக் அவரை தவறாகப் புரிந்துகொள்கிறார். விமலுக்குத்தான் சப்போர்ட் பண்றாங்க என்பதாக நினைத்துக்கொள்கிறார். இரண்டு பக்கமும் திட்டிவிட்டு, அந்த நேரத்தில் போனைக் காணவில்லை என மேலும் திட்ட ஆரம்பிக்க, காருக்குப் போனவர்கள் அபிஷேக் திட்டுவதைப் பார்த்து, காரில் இருந்த இரண்டு ராடை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஒருத்தர் கையில் ராடு, இன்னொருத்தர் கையில் இஸ்திரிக்கடை பிளைவுட் எனத் திரும்பி வருகிறார்கள். அதை மேனேஜர் தடுத்துவிடுகிறார். அதன் பிறகுதான் விமல் குரூப் அங்கிருந்து கிளம்புகிறது. 

இந்தச் சம்பவத்தால் அபிஷேக் கோவப்பட்டு ஊருக்குப் போயிருந்தால், இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு 60 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கும். பத்மாமகன் என்பவர்தான் இந்தப் படத்தின் இயக்குநர். இதற்கு முன்பு, பல்லவன், அம்முவாகிய நான், நேற்று இன்று எனப் பல படங்களை எடுத்தவர், ஆறு வருஷம் கழித்து இப்போதான் காசு கொஞ்சம் சேர்த்து `அவன் அவள் அது’ என்கிற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். இது பழைய படத்தின் டைட்டில் அதை வாங்கியிருக்கார். இப்போது இரண்டு பக்கமும் பேச முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். ஃபைனான்ஸ் வேறு வாங்கியிருக்கிறார். ஃபைனான்ஸ் ஆட்கள் வந்து கேட்டால் என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார். 

இந்தச் சம்பவம் நடந்து காலை 6 மணி வரை எந்தக் கேஸும் கொடுக்கவில்லை. பொதுவாக, பேசி முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் காத்திருந்தோம். பத்மாமகனின் போன் காலுக்காகதான் காத்திருந்தோம். அவர் போன் பண்ணி விசாரித்த பிறகு காயம் ஆகியிருந்ததால், எஃப்.ஐ.ஆர் கொடுக்கும்படி சொல்லிவிட்டார். எங்களுடைய கடைசி முயற்சி வரை இதைப் பெரிதாக்க வேண்டாம் என்றுதான் நினைத்தோம். அதன் பிறகுதான், மேனேஜரிடமிருந்து எங்களுக்குப் போன் வருகிறது. நாங்கள் அங்கு வந்து சேர்ந்தோம். ஃபுட்டேஜ் பார்த்து அபிஷேக்குக்கு நாங்கள் அவர் ஹீரோ என்பதை விளக்குகிறோம். விமலின் அப்பா, என் மகனுக்கு என்னதான் தண்டனை வாங்கித் தருகிறீர்கள் எனப் பார்ப்போம்ங்கிறார். அது இந்த ஊருக்குத் தெரியும். அவர் தாக்கியதில் ஆச்சர்யம் என்ன?’’ என முடித்தவரைத் தொடர்ந்து பேச ஆரம்பிக்கிறார் கன்னட நடிகர் அபிஷேக்,   


``அந்தக் கும்பலே குடிபோதையில்தான் வந்தார்கள். விமல் இதுவரை அந்த டைரக்டர் லைனுக்கு ஒரு முறைதான் வந்திருக்கிறார். என்கிட்ட ஒரு மன்னிப்புக்கூட இதுவரை சொல்லவில்லை. இது என்ன நாகரிகம். உங்களை முகத்தில் அடித்துவிட்டு சாரி சொன்னால், நீங்க ஒப்புக் கொள்வீர்களா, தமிழர்கள் தமிழர்களுக்கு மட்டும்தான் சப்போர்ட் பண்ணுவீர்களா. நானும் தமிழ் சினிமாவை நம்பித்தானே வந்திருக்கிறேன்.  எனக்குத் தமிழர்கள் மீதும், தமிழ் சினிமா மீதும் எப்போதும் தனிப்பட்ட மரியாதை இருக்கு. கமல் என்னுடைய ஃபேவரைட் நடிகர். இப்படி நிறைய திறமையாளர்கள் இருக்கும்போது, விமல் இவ்வளவு கீழ் இறங்கி நடந்துகொண்டிருக்கிறார். எங்களைப் போன்ற நடிகர்களுக்கு இப்படி ஒரு நிலை என்றால், சாதாரண மக்களாக இருந்திருந்தால் இந்நேரத்தில் எப்படி நடந்திருப்பார் என்பதை யோசித்துக்கூடப் பார்க்க முடியவில்லை. தேமேனு உட்கார்ந்திருந்த ஒருத்தரிடம் வம்பிழுப்பது வன்முறையின் உச்சக்கட்டம்’’ என்றார் அபிஷேக் காட்டமாக.