Published:Updated:

``நடிகை செளந்தர்யா இன்னும் என் கண் முன்னாடி நிற்கிற உணர்வு இருக்கு!’’ - ராதிகா சூரஜித்

``நடிகை செளந்தர்யா இன்னும் என் கண் முன்னாடி நிற்கிற உணர்வு இருக்கு!’’ - ராதிகா சூரஜித்
``நடிகை செளந்தர்யா இன்னும் என் கண் முன்னாடி நிற்கிற உணர்வு இருக்கு!’’ - ராதிகா சூரஜித்

``செளந்தர்யா. நான் வந்தால், உடனே எழுந்து நின்னு மரியாதை கொடுப்பாங்க. `என்னைச் சிறப்பா டான்ஸ் ஆட வெச்சீங்க. நன்றி!’னு அவங்க அனுப்பிய மெசேஜை இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன்.’’

பிரபல பரதநாட்டிய கலைஞர் ராதிகா சூரஜித்துக்கு, தமிழக அரசின் கலைமாமணி விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர, சினிமா நடன இயக்குநராகவும் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார். இது குறித்து அவரிடம் பேசினோம். 

``தற்போதைய உங்க நடனப் பயணம் பற்றி...’’ 

``குடும்பத்தில் நடனம் கற்றுக்கொண்டவங்க யாருமில்லை. ஆனா, எனக்கு நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டுச்சு. எட்டு வயசுல பரதநாட்டியம் கத்துக்கத் தொடங்கினேன். `பத்ம பூஷண்’ தனஞ்ஜெயன் - சாந்தா தனஞ்ஜெயன் தம்பதிகிட்ட முறைப்படி நடனம் கத்துகிட்டேன். தொடர்ந்து அவர்களின் நாட்டியப் பள்ளியில் ஆசிரியையாகவும், அவர்களின் நிகழ்ச்சிகளில் நடன வடிவமைப்பாளராகவும் வேலை செய்திருக்கேன். இந்நிலையில், `த்ரயி’ என்ற நாட்டியப் பள்ளியை கடந்த 25 ஆண்டுகளாக நடத்திகிட்டு இருக்கேன். நடனப் பயணம் சிறப்பாகப் போகுது.’’

``சினிமா நடன இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் பற்றி...’’

``1990-களின் தொடக்கத்தில், தூர்தர்ஷன் சேனலில் நிறைய நடன நிகழ்ச்சிகளைச் செய்தேன். இந்நிலையில், `இந்திரா’ திரைப்படத்தில் குழந்தைகளை வெச்சு ஒரு பாடலுக்கு நடன இயக்குநரா பணிசெய்ய நடிகை சுஹாசினி கேட்டாங்க. ஏ.ஆர்.ரஹ்மான் தன் ஸ்டூடியோவில் என்னை அழைச்சு, `நிலா காய்கிறது’ பாடலை ஒலிபரப்பிக்காட்டினார். எனக்குப் பிடிச்சிருந்துச்சு. பிறகு, அந்தப் பாடலை வடிவமைச்சுக்கொடுத்தேன். பாடலும் பெரிய ஹிட்டாச்சு. பிறகு, `பாட்டுச்சொல்லி பாடச்சொல்லி (அழகி)’, `இந்த நிமிடம் இந்த நிமிடம் (பள்ளிக்கூடம்)’, `மயில்போல பொண்ணு ஒண்ணு (பாரதி)’, `ராமானுஜன்’ படம்னு செலக்டிவா சினிமாவில் நடன இயக்குநரா வேலை செய்திருக்கேன். என் பாடலில் ஆபாச வார்த்தைகளோ, ஆபாச காட்சிகளோ இடம்பெறாது. சினிமாவில் முழுநேர நடன இயக்குநராகப் பணிசெய்றதில் எனக்கு விருப்பமில்லை.

சர்வதேச விழாக்களிலும் வெளிநாடுகளிலும் நிறைய டான்ஸ் நிகழ்ச்சிகளைச் செய்றேன். எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள் உட்பட பல மூத்த கலைஞர்களுக்குச் சமர்ப்பணம் செய்யும் வகையில் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். அதுபோன்ற பணிகளிலும் கவனம் செலுத்தறேன். தவிர, என் நடனப் பள்ளி வேலைகளும் இருக்கு. இதுக்கே நேரம் சரியா இருக்கு. ஓர் அறையில் கற்றுக்கொடுப்பதைத் தாண்டி, சினிமா வாயிலாகப் பரதநாட்டிய கலையைப் பிரபலப்படுத்துவது, சாஸ்திரிய நடனக் கலையை சாமானியருக்கும் கொண்டுபோறதே என் லட்சியம். அதுக்காகத்தான் நீண்டகாலமா உழைச்சுகிட்டு இருக்கேன்.’’

``நடனப் பணியில் மறக்க முடியாத நிகழ்வு...’’ 

`` `இவன்’ படத்துல மூணு கிளாசிக்கல் பாடல்களுக்கு நான் நடன இயக்குநரா வேலை செய்தேன். அப்போ எனக்கும் நடிகை செளந்தர்யாவுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டுச்சு. பிறகு `அப்தமித்ரா’ (`சந்திரமுகி’ ஜோதிகா ரோல்) படத்தில் நடிச்ச செளந்தர்யா, `ரா ரா’ பாடலுக்கு நடன இயக்குநரா வேலை செய்ய இயக்குநர் பி.வாசுகிட்ட என்னைக் கேட்டிருக்காங்க. மைசூரு அரண்மனையில ஷூட்டிங் பண்ணினோம். அதிகாலை 2 மணிவரை இடைவிடாம ஷூட்டிங் நடக்கும். கிளாசிக்கல் டான்ஸ் தெரியாட்டியும் ரொம்ப மெனக்கெட்டு ஆர்வமா கத்துகிட்டு டான்ஸ் ஆடினாங்க செளந்தர்யா. நான் வந்தால், உடனே எழுந்து நின்னு மரியாதை கொடுப்பாங்க. `என்னைச் சிறப்பா டான்ஸ் ஆட வெச்சீங்க. நன்றி!’னு அவங்க அனுப்பிய மெசேஜை இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன். இப்போ வரை அவங்க என் கண் முன்னாடி நிற்கிற மாதிரி உணர்வு இருக்கு. ஆனா, அப்படம் வெளியாவதற்குள் செளந்தர்யா இறந்துட்டாங்க. அவங்க இழப்பு என்னை ரொம்பவே பாதிச்சது.’’

``ஜெயலலிதா உடனான உங்க பழக்கம் பற்றி...’’

`` `உங்க நடனப் பணிகள் சிறப்பா இருக்குது. ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சி செய்யணும்’னு அவங்க என்னிடம் கேட்டாங்க. அதன்படி பத்து ஆண்டுகளாக, `தகதிமிதா’ நிகழ்ச்சியை இயக்கினேன். அதனால் நிறைய நடனத் திறமையாளர்களை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்த முடிஞ்சது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அவரின் சினிமா பாடல்களையெல்லாம் தொகுத்து நடன நிகழ்ச்சியைச் செய்திருந்தேன். அது அவருக்கு மிகவும் பிடிச்சிருந்துச்சு.’’

``கலைமாமணி விருது பெறப்போறீங்க. அது பற்றி...’’

``மகிழ்ச்சிதான்! இனி என் பொறுப்புகள் அதிகரிக்கும். இன்னும் ஆக்டிவாக வேலை செய்யப்போறேன்.’’
 

அடுத்த கட்டுரைக்கு