Published:Updated:

அனிமேஷன் படம் எடுத்து குறும்பட விழாவுக்கு அனுப்பிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..!

அனிமேஷன் படம் எடுத்து குறும்பட விழாவுக்கு அனுப்பிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..!
அனிமேஷன் படம் எடுத்து குறும்பட விழாவுக்கு அனுப்பிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..!

அனிமேஷன் படம் எடுத்து குறும்பட விழாவுக்கு அனுப்பிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..!

புதுச்சேரி அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 13 பேர் இணைந்து உருவாக்கியுள்ள அனிமேசன் படம் ‘முதல் பெண் ஆசிரியை’. சாவித்திரி பாய் புலேவின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஸ்டாப் மோஷன் வீடியோ தொழில்நுட்பத்தில் உருவான இப்படம் புதுச்சேரி குறும்பட விழாவில் திரையிடப்பட்டது. இது குறித்து அவர்களிடம் பேசினோம்.

முதலில் பேசத் தொடங்கிய ஆசிரியர் சங்கரதேவி, “NCERT நடத்தும் ICT குழந்தைகளுக்கான ஆடியோ வீடியோ விழாவிற்காக அனிமேஷன் படம் இயக்கத் தீர்மானித்தோம். எங்களில் ஒருவர் ஏற்கெனவே ஸ்டாப் மோஷன் பயிற்சி பட்டறைக்குப் போய் வந்ததால் அந்த முறையில் படத்தை இயக்கலாம்னு திட்டமிட்டோம். கதைக்காக யோசிக்கும் போது சாவித்திரி பாய் புலே நினைவுக்கு வந்தாங்க. ஆசிரியர் ஆன பிறகுதான் நாங்களே அவங்கள பத்தி தெரிஞ்சுகிட்டோம். எங்க மாணவர்களுக்கும் அது சென்று சேரணும்னு சாவித்திரி பாய் புலேவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முடிவு செஞ்சோம்” என்றார். 

“நாங்க வேற வேற ஸ்கூல் டீச்சர்ஸ். புத்தக வாசிப்பு தான் எங்களை ஒன்றாக இணைத்தது. புத்தக மதிப்புரைக்காக நாங்க சேருறது வழக்கம். அப்புறம் வாட்ஸ்அப் குரூப்ல பேசிக்குவோம். குழந்தைகள் ஆடியோ வீடியோ விழா போட்டிக்காக படம் எடுத்தது தான் எங்களை மேலும் இணைத்தது ” என தாங்கள் இணைந்த கதையை சொன்னார் சின்னகாரையாம்புதூர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் நாதன். 

“மாணவர்களுக்கு ஆர்வமூட்டுவதாகவும் கவரக்கூடியதாகவும் சாவித்திரி பாய் புலே பத்தி அவங்க தெரிஞ்சுக்கவும் இந்த அனிமேஷன் படம் நல்ல கருவியாக இருக்கிறது” என மகிழ்கிறார் நெல்லித்தோப்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கேசவர்த்தினி. “இது மாதிரியான அனிமேஷன் படங்களை மாணவர்களே கூட எடுக்கலாம். ஸ்டாப் மோஷன் அனிமேஷன் என்பது ரொம்ப கஷ்டமான விஷயம் கிடையாது. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையான சாவித்திரி பாய் புலே அவர் வாழ்ந்த காலத்தில் சமூகத்தின் இருளைப் போக்க ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, கணவரோடு இணைந்து நிறைய பணிகளைச் செய்திருக்கிறார். எங்களை ஈர்த்த சமூக சீர்திருத்தவாதிக்கு நாங்கள் செய்கிற மரியாதை” என்றார் காலப்பேட்டை சேர்ந்த ஆசிரியர் பச்சையம்மாள்.

“ஆரம்பிக்கும்போது 10 நிமிடம் தானே ஈசியா இருக்கும். ஒரு வாரத்திலே முடிச்சுடலாம்னு நினைச்சோம். ஆனா இதற்கான திட்டமிடலுக்கே ஒரு வாரம் ஆயிடுச்சு. நிறைய கத்துக்கிட்டோம். வேலையை எங்களுக்குள் பிரிச்சு வேலை செஞ்சோம். முழுவதும் எடுத்து முடிக்க ஒன்றரை மாசம் ஆயிடுச்சு” என்று சிவராந்தகம்பேட் ஆசிரியர் ராஜேஷ் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்ட சங்கரதேவி, “ஸ்க்ரீன்ல ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் ஏதோ ஒண்ணு தப்பாயிடுச்சுனு யோசிக்கிறோம். நிறைய சொதப்பலுக்கு பிறகு தான் அவுட்புட்டே எடுக்க முடிஞ்சது” பணியின் போதான சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

ஆசிரியர் பச்சையம்மாள், “ஒவ்வொரு பிரேம் உருவாகிறதுக்கும் ஒண்ணுல இருந்து இரண்டு மணிநேரம் ஆயிடும். வாய்ஸ் ஓவருக்கு ரொம்பவே பிரயத்தனப்பட்டு தான் பேசி முடிச்சோம் நிறைய சண்டை போட்டுகிட்டோம்கிறத மறக்காம எழுதிடுங்க” என்று சிரிக்கிறார்.

“இந்த நேரத்தில அனிமேஷன் படம் எடுப்பதற்கான உபகரணங்கள், வழிகாட்டுதல்கள், இடம் எல்லாம் கொடுத்து உதவிய அசீம் பிரேம்ஜி அறக்கட்டளைக்கு நன்றி சொல்லிக்கிறோம். அடுத்து பெரியார், அம்பேத்கர் இப்படி மாணவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய தலைவர்கள அனிமேசனாக எடுக்கலாம் என்று திட்டமிட்டிருக்கோம்” என்றார் நாதன். 

“எல்லாரும் சேர்ந்து கத்துக்கிட்டோம்னு சொல்லலாம்” என நிறைவாக முடித்தார் சுபாஷினி. இந்த அனிமேஷன் திரைப்படம் NCERT- ICT மேளாவில் சிறந்த படத்துக்குரிய விருதையும் நாற்பது ஆயிரம் ரொக்கப் பரிசையும் பெற்றுள்ளது. 

இவர்களோடு ராஜதிலகம், ஜேம்ஸ்குமார், சசிக்குமார், ராஜேந்திரன், பவானி, பத்மினி, சண்முகபிரியா ஆகிய ஆசிரியர்களும் இணைந்து உருவாக்கியதே இந்த படம். சிற்பிகள் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

கரும்பலகைகள் ஒளித்திரையாக மாறிக் கொண்டிருக்கும் போது ஆசிரியர்களும் அனிமேஷன் டைரக்டர்களாக மாற வேண்டியுள்ளது. தங்களைப் புதுப்பித்துக் கொள்கிற ஆசிரியர்களை மிகவும் பிடித்து விடுகிறது மாணவர்களுக்கு. 

வாழ்த்துகள் ஸ்மார்ட் டீச்சர்ஸ்!

அடுத்த கட்டுரைக்கு