Published:Updated:

"நல்லவர் நாஞ்சில் சம்பத், அண்ணன் ரோபோ சங்கர், யாரும் நம்பாத அந்த விஷயம்..!" - 'சுட்டி' அரவிந்த்

"நல்லவர் நாஞ்சில் சம்பத், அண்ணன் ரோபோ சங்கர், யாரும் நம்பாத அந்த விஷயம்..!" - 'சுட்டி' அரவிந்த்
"நல்லவர் நாஞ்சில் சம்பத், அண்ணன் ரோபோ சங்கர், யாரும் நம்பாத அந்த விஷயம்..!" - 'சுட்டி' அரவிந்த்

மேடை நாடகம், டிவி நிகழ்ச்சி, யூ-டியூப், சினிமா எனத் தனது பயணத்தைப் பகிர்ந்துகொள்கிறார், சுட்டி அரவிந்த்.

``முதல்ல மூணு பேர் சேர்ந்து ஒரு சின்ன ஐடியாவோடு தொடங்கிய இந்த, `பிளாக் ஷீப்' இப்போ உள்ள நுழைஞ்சாலே ஸ்கூல் மாதிரி பல பசங்க கூட்டம் கூட்டமா வேலை செய்றதைப் பார்த்தா ரொம்பவே சந்தோஷமா இருக்கு!" - எனத் தனது திரைப்படம் மற்றும்  யூ-டியூப் வேலைகளுக்கு இடையில் ரிலாக்ஸாகப் பேசினார், நடிகர் சுட்டி அரவிந்த்.

``22 வருட மேடை நிகழ்ச்சி வாழ்க்கை, 12 வருட தொலைக்காட்சிப் பயணம்... எங்கிருந்து தொடங்கியது இது?"

``சின்ன வயசுல இருந்தே  மியூசிக்னா, லவ். டிவி நிகழ்சிகளுக்கு வருவதற்கு முன்பு, இரண்டு வருடங்கள் மதுரையில் மியூசிக் கிளாஸ் நடத்தினேன். பிறகு 1997-ல் மதுரையில் ஞானசம்பந்தம் ஐயா தலைமையில் இருந்த `மதுரை ஹியூமர் கிளப்'பில் இணைந்தேன். அங்குதான் நான், ரோபோ சங்கர் அண்ணன், விஜய் டிவி ராமர் மூவரும் சேர்ந்து ஷோ செய்யத் தொடங்கினோம். கோயில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் நடந்துகொண்டிருந்த நேரத்தில், நாங்கள் மேடை போட்டு மூன்று மணிநேரம் காமெடி ஷோவை  நடத்துவோம். அதுதான் எங்க எல்லோருக்குமான ஆரம்பப் புள்ளி."

``பிளாக் ஷீப் கான்செப்ட் எங்கிருந்து உருவெடுத்தது?"

``நான், ஆர்ஜே விக்னேஷ், பிரபா (சாம் பிரபா) மூவரும் இணைந்து முதலில் ஒரு ஸ்டுடியோவைத் தொடங்கினோம். அதில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கவில்லை. பின்பு `ஸ்மைல்' வெப் ரேடியோவைத் தொடங்கினோம். அதிலும் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கவில்லை. பின்புதான் ஒரு விருது விழாவை நையாண்டி செய்து யூ-டியூப்பில் பதிவிட்டோம். அது ஹிட் அடித்ததுதான், `ஸ்மைல் சேட்டை'யைக் கொண்டு வந்தது. அதிலிருந்து உருவெடுத்ததுதான் `பிளாக் ஷீப்'." 

``சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிளாக் ஷீப் டீம் நடித்து வரும் படத்தில், நாஞ்சில் சம்பத் உடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?" 

``நாஞ்சில் சம்பத் சார் எங்கள் சேனல் நிகழ்ச்சிக்கு ஒருமுறை வந்திருந்தார். அப்போதிலிருந்தே நல்ல பழக்கம். பொங்கல், தீபாவளி அன்று அவர்தான் முதலில் அழைத்து வாழ்த்துவார். அவரோடு நடித்தது சந்தோஷமா இருந்தது. அவருக்கு இந்தப் படத்தில் ஒரு நல்ல அரசியல்வாதி ரோல். அவர் ஒவ்வொருவரது நடிப்பையும் அணு அணுவாக ரசிப்பார்."

``ரோபோ சங்கர் - சுட்டி அரவிந்த் காம்போ இப்போ எப்படி இருக்கு?"

``மக்கள் இன்னும் எங்க கூட்டணியை ரசிச்சுக்கிட்டுதான் இருக்காங்க. இப்போகூட இணைந்து நிகழ்ச்சி நடத்த எங்களை அழைக்கிறார்கள், நாங்களும் பண்றோம். இப்போ, நானும் விக்னேஷ்காந்தும் பண்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து, `உங்களுக்கு இது சூப்பரா வொர்க் அவுட் ஆகுதுடா'னு பாராட்டுவார், ரோபோ சங்கர்." 

``கார்த்திக் வேணுகோபாலனைத் தொடர்ந்து, பிளாக் ஷீப் டீம்மில் அடுத்த  இயக்குநர் யார்?"

``எங்களுடைய மேடை நாடகமான `நவயுக இரத்தக் கண்ணீரி'ன் இயக்குநர் விக்கியும், சேனல் ஹெட் கலையரசு தங்கவேலுவும் அவரவர் கதைகளுக்கான எழுத்துப் பணிகளில் இருக்கிறார்கள்."

``இதுவரையிலான உங்க பயணத்தில் மறக்க முடியாத பாராட்டு?" 

``2008-ல் கலைஞர் தொலைக்காட்சியில் செய்த `எல்லாமே சிரிப்புதான்' நிகழ்ச்சியைப் பாrத்துவிட்டு கலைஞர் ஐயா அழைத்துப் பாராட்டியது, வாழ்வில் மறக்கவே முடியாது."

``குடும்பத்தைப் பற்றி?"

``அப்பா, அம்மா ரெண்டுபேருமே கேரளா. நானும் அங்கதான் பிறந்தேன். என் மனைவியும் கேரளாதான். ஆனா, நான் சத்தியம் பண்ணிச் சொன்னாக்கூட யாரும் நான் கேரளானு நம்பமாட்டாங்க. 4 ம் வகுப்பு வரை அங்கேதான் படிச்சேன். பிறகு மதுரைக்கு வந்தோம். அப்புறம் மேடை, டிவி, சினிமானு போய், இப்போ சென்னைவாசி ஆகிட்டேன்."

அடுத்த கட்டுரைக்கு