Election bannerElection banner
Published:Updated:

``நடிகர்களுக்கு கால்... நடிகைகளுக்கு இடுப்பு... இதான் பிரச்னை!’’ - பா.இரஞ்சித்

``நடிகர்களுக்கு கால்...  நடிகைகளுக்கு இடுப்பு... இதான் பிரச்னை!’’ - பா.இரஞ்சித்
``நடிகர்களுக்கு கால்... நடிகைகளுக்கு இடுப்பு... இதான் பிரச்னை!’’ - பா.இரஞ்சித்

ஒரு நடிகனுக்கான மாஸ், அவன் காலைக் காட்டும்போது இருக்கு. அவன் கால்தான் அவன் மார்க்கெட்டா இருக்கு. ஆனா, ஒரு நடிகைக்கு இப்போவரை இடுப்புதான் மார்க்கெட்டா இருக்கு. இதுதான் இங்கே பிரச்னை

``உடல் பற்றிய உரையாடல், புரிதல் உங்களிடம் இல்லாமல் பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு போன்ற சம்பவங்களுக்கு நீங்கள் எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும், அது அர்த்தமற்றது!" என்று இயக்குநர் பா.இரஞ்சித்தின் திடமான உரையின் சாரத்திலேயே `கூகை' திரைப்பட இயக்கத்தின் உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கலந்துரையாடல் அமைந்திருந்தது.

திரைத்துறையில் இருக்கும் பெண் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என எல்லோரும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இரண்டு விதமான கலந்துரையாடல்களை `கூகை' திரைப்பட இயக்கம் நேற்று நடத்தியது. முதல் அமர்வில், `திரையுலகில் பெரும்பாலும் அறியப்பட்ட துறைகளில் பெண்கள்' என்ற தலைப்பில் நான்கு கலைஞர்கள் பங்கேற்க, அதை ஒருங்கிணைத்து நடத்தினார், நடிகையும் இயக்குநருமான ரோகிணி.

அதில் பேசிய நடன அமைப்பாளர் சாந்தி, ``நான் முதன்முதலா குரூப் டான்ஸராதான் என் பயணத்தைத் தொடங்கினேன். அந்தக் காலகட்டங்களில் கழிவறை, உடை மாற்றும் அறை... எனப் பெண்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவுமே இருக்காது. காடு, மலை, பாலைவனம்னு எங்கே ஷூட்டிங் போனாலும், மறைவான இடத்துக்குப் போய் அங்கேதான் உடை மாற்றவேண்டிய நிலைமை வரும்." என நடனக் கலைஞர்களுக்கு இருக்கும் சிக்கல்களை விவரித்தார்.

மேலும், துறையில் இருக்கும் சில ஆண்களைப் பற்றிப் பேசிய சாந்தி, ``இங்கே ஒரு பெண்ணிடம் நெருக்கமாப் பழகி உடலுறவு வெச்சுக்க ஆசைப்படும் பெரும்பான்மையான ஆண்கள் பயன்படுத்தும் ஆயுதம், `காதல்'. பேசி மயக்கி காதலிக்கிறேன்னு சொல்லிச் சொல்லியே இங்கே பல பெண்களை ஏமாற்றியிருக்காங்க." என்றார்.

``நடிகர்களுக்கு கால்...  நடிகைகளுக்கு இடுப்பு... இதான் பிரச்னை!’’ - பா.இரஞ்சித்

பின்னர் பேசிய இயக்குநர் உஷா, ``நான் எதிர்கொண்ட சவால்கள் வேறுவிதமானது. எனக்கு முதல்ல சினிமான்னா என்னன்னே தெரியாது. கால் சென்டர், ஐ.ஏ.எஸ் ஆசைன்னு பல நிலைகளைக் கடந்து கடைசியாதான் சினிமாவுக்கு வந்தேன். முதல்ல பெண் அப்படீங்கிற காரணத்தினாலேயே ஒதுக்கப்பட்டேன்." என்றவர், ``இதுல ஆண்களைக் முழுமையா குறை சொல்லிடவும் முடியாது. கிட்டத்தட்ட 80 ஆண்டுகாலமா ஆண்கள் மட்டுமே ஆக்கிரமிச்சிருந்த ஒரு பணி, இயக்குநர் பணி. அப்படிப்பட்ட ஒரு கட்டடத்தை இங்கே கட்டி வெச்சிருக்காங்க. இப்போ புதுசா ஒரு பொண்ணு வந்து உதவி இயக்குநரா சேர்ந்தா, அந்தக் கட்டடத்துக்குச் சொந்தக்காரங்க எங்களை வாடகை ஆள் மாதிரிதான் பார்ப்பாங்க. கொஞ்சம் கொஞ்சமாதான் இதெல்லாம் மாறும்." என்றவர், 

``ஆனா, பத்து அலுவலகத்துக்குப் போய் ஒவ்வொரு கதவா தட்டினா, கண்டிப்பா பதினொன்றாவது இடத்துல வாய்ப்பு கிடைக்கும். அந்த முயற்சியை மட்டும் விட்டுடக்கூடாது. அப்படித்தான் எனக்கும் கடைசியா சுசீந்திரன் சார் வாய்ப்பு தந்தார்." என்று நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசினார், உஷா.

``நடிகர்களுக்கு கால்...  நடிகைகளுக்கு இடுப்பு... இதான் பிரச்னை!’’ - பா.இரஞ்சித்

அவரை அடுத்து, நடிகை மற்றும் ஒப்பனைக் கலைஞர் ஜீவா பேசுகையில், ``நான் திருநங்கையாக இருப்பதால், எனக்கான சிக்கல் இன்னும் மோசமாக இருந்தது. சிவகாசியில் பிறந்து சென்னைக்குப் பிழைப்புத் தேடி வந்தேன். பல தரப்பட்ட வேலைகளைப் பார்த்துட்டு இருக்கும்போதுதான், சினிமா ஆசை வந்தது. ஆனா, நடிப்பு, டச்சப் என எந்த வேலைக்குப் போனாலும், அந்தந்த யூனியன் ஆளுங்க வந்து எனக்கு வாய்ப்பு தரக்கூடாதுனு சொல்லிட்டுப் போவாங்க. இதனால வாய்ப்பே கிடைக்கலை.

கடைசியில, சீனு ராமசாமி சார்தான் `தர்மதுரை' படத்துல எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். ஷூட்டிங் ஸ்பாட்ல பலரும் என்னைத் தரக்குறைவான வார்த்தையால கேலி பண்ணுவாங்க. அப்போ, நான் அழுவேன். அதைப் பார்த்து விஜய் சேதுபதி அண்ணன்தான் நம்பிக்கை கொடுத்து எனக்கு ரொம்பப் பக்கபலமா இருந்தார். இப்படிப் பல ஆண்கள்தான் என்னை இந்த இண்டஸ்ட்ரியில நிலைக்கிறதுக்குக் காரணமா இருந்தாங்க. இவ்ளோ நாள் கஷ்டப்பட்டதுக்கும், போராடுனதுக்கும் இப்போ ஒரு நல்ல நிலைமையில் இருக்கேன். அந்தப் படத்துக்குப் பிறகு இப்போ பல படங்கள்ல நடிக்க வாய்ப்பு வந்திருக்கு. ஒரு படத்துல மாதவனுக்குத் தங்கச்சியா நடிக்கிறேன். ஊரைவிட்டு என்னைத் துரத்துன எல்லோரும் இப்போ ஊருக்குப் போகும்போது, நான் தூக்கி வளர்த்த பிள்ளைனு பெருமைப்பட்டுக்கிறாங்க" எனக் கூறி நெகிழ்ந்தார்.

``நடிகர்களுக்கு கால்...  நடிகைகளுக்கு இடுப்பு... இதான் பிரச்னை!’’ - பா.இரஞ்சித்

இறுதியாகப் பேசிய நடிகை லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமெளலி, ``இத்தனை பேர் அவங்களோட பயணத்தைப் பற்றிப் பேசுனதுக்குப் பிறகு, நான் என்ன சொல்லிட முடியும். எனக்கு ஒரே ஒரு குறைதான். தமிழ் சினிமாவுல ஒரு பொண்ணு ஹீரோயினாகிறதுகூட சுலபம். ஆனா, `நடிகை'  ன்னு பெயர் வாங்குறது ஆகுறது கஷ்டம்.

எப்படின்னா, இங்கே உருவாக்கப்படுற பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் 20-30 வயதுக்குள்ளே இருக்கிறவங்களாதான் இருக்கு. அதேபோல படங்களும் அந்த வயசு ஆடியன்ஸுக்காகத்தான் எடுக்கிறாங்க. அதனாலேயே பெண் கதாபாத்திரங்களை இங்கே சரியாப் படைக்கிறதில்லை. எல்லா வயதுப் பெண் பாத்திரங்களையும் உருவாக்கி, அவங்க வாழ்க்கை, உணர்வுகள் பற்றிய நுணுக்கங்களையும் எழுதணும். அதுதான் என்னுடைய எதிர்ப்பார்ப்பு. ஏன்னா, எல்லா வயதினருக்கும்தானே அந்தப் படைப்பு!?" என்ற கேள்வியை எழுப்பினார்.

``நடிகர்களுக்கு கால்...  நடிகைகளுக்கு இடுப்பு... இதான் பிரச்னை!’’ - பா.இரஞ்சித்

இரண்டாவது அமர்வில், `திரையுலகில் பெரும்பாலும் அறியப்படாத துறைகளில் பெண்கள்' என்ற தலைப்பில் ஐந்து கலைஞர்கள் பேசினர். அதில் பேசிய `மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளர் ஷாலினி சங்கர், ``லைன் புரொடியூசர் முறை இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா தமிழுக்கு வருது. முன்னாடி ஒரு படத்துக்கு, ஃபைனான்ஸியர் தரப்பு, தயாரிப்பாளர் தரப்பு, பிறகு சில ப்ரொடக்‌ஷன் மேனேஜர்கள் இருப்பாங்க. அதனால, பணப் புழக்கத்துல நிறைய ஊழல் இருக்கும். தேவையில்லாத செலவு, முறைபடுத்தப்படாத கணக்குகள்னு பல சிக்கல்களும் இருக்கும். அதைச் சீர் செய்யத்தான் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கி, செலவையெல்லாம் சரி பண்றோம்." என்றார்.

மேலும் திரையுலகத்துக்கு வரும்போது மணிரத்னத்துக்கு உதவியாளராகத் தன் பயணத்தைத் தொடங்கியதாகக் கூறிய ஷாலினி, ``எனக்கு ஒரு கட்டத்துக்குமேல அதைவிட இந்த வேலை பிடிச்சுப்போச்சு. கணக்கு வழக்கு, புள்ளியியல்னு எனக்கு ஆர்வம் இருந்தது. அதனால, அதையே முழுநேர வேலையா மாற்றிக்கிட்டேன்." என முடித்தார்.

ஒலி வடிவமைப்பாளர் கீதா குரப்பா பேசியபோது, ``இங்கே பலருக்கும் ஒரு பெண் சவுண்ட் இன்ஜினீயரா இருக்கிறதே தெரியாது. நானும் ஷங்கர், மணிரத்னம், வெங்கட் பிரபு, இரஞ்சித் இப்படிப் பல இயக்குநர்களின் படத்துல வேலை பார்த்துட்டேன். இப்போவரை என்னை அவ்ளோ பிரபலமா வெளியே தெரியாது. சினிமா இண்டஸ்ட்ரியிலேயே முதல்ல பல வாய்ப்புகள் எனக்கு நிராகரிக்கப்பட்டிருக்கு. 

குறிப்பா, ஆரம்பக் காலகட்டத்துல ஒரு படத்துக்கான வாய்ப்பு வந்தப்போ, ஆக்‌ஷன் காட்சி இருக்கு, உங்களால அதுக்கு வொர்க் பண்ண முடியாது'னு மறுத்துட்டாங்க. நான் பெண், எனக்கு எப்படி ஆக்‌ஷன் காட்சிக்கான ஒலி வடிவமைப்பு வரும்னு சந்தேகப்பட்டு வேண்டாம்னு சொன்னாங்க. ஆனா, எனக்கு ஆக்‌ஷன் காட்சிகள்தான் ரொம்பப் பிடிக்கும். அவங்ககிட்ட, `ஒருமுறை என் வேலையைப் பாருங்க; அதுக்குப் பிறகு முடிவெடுங்க'னு சொல்லி, அந்தக் காட்சிக்கு ஒலி வடிவமைப்பு செஞ்சேன். என் வேலையைப் பார்த்துட்டு முழுப் படத்தையும் எனக்கே கொடுத்தாங்க!" என்றார்.

தனக்கும் அதைப் போன்ற சிக்கல் இருப்பதாக உதவி இயக்குநர் ப்ரீத்தி கூறினார். ``பெண் உதவி இயக்குநர்கள் என்றாலே கன்டினியூட்டி செக் பண்றது, காஸ்டியூம்ஸ் செலக்ட் பண்ற வேலைகளைத்தான் தர்றாங்க. இதுவரை நான்கு இயக்குநர்கள்கிட்ட வேலை பார்த்திருக்கேன். அதுல மூன்று பேர் எனக்குத் தந்த வேலை காஸ்டியூம்ஸ் செக்கிங்தான். அது என்னனு தெரியலை. எனக்கு அவங்க வெச்ச இன்டர்வியூவுல நான் சொன்ன விருப்பமான பணி, திரைக்கதை எழுதுவதுதான். ஆனா, எப்போவுமே காஸ்டியூம்ஸ் செக்‌ஷன்தான் கொடுத்தாங்க. உண்மையில எனக்குப் பிடிக்காத வேலை அது. கேரவன்லேயே இருந்துக்கிட்டு உடையலங்காரத்தை மட்டுமே பார்த்துக்கிட்டு இருந்தா, நான் எப்போ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து வேலையைக் கத்துக்குவேன்?!" என்றார்.

``நடிகர்களுக்கு கால்...  நடிகைகளுக்கு இடுப்பு... இதான் பிரச்னை!’’ - பா.இரஞ்சித்

கலந்துரையாடலில் இறுதியாகப் பேசிய கலை இயக்குநர் ஜெயஶ்ரீ, ``பெண்களை எல்லா வேலைகளிலிருந்தும் தள்ளித்தான் வைக்கிறாங்க. அதைவிடப் பெரிய கொடுமை, நம்மகூட வேலை பார்க்கிற ஆண்கள் சரியா மதிக்கமாட்டங்க. `இவ என்ன சொல்றது, நாம என்ன செய்றது'ங்கிற மனநிலையிலதான் இருப்பாங்க. இதையெல்லாம் தாண்டித்தான் வேலை பார்க்கவேண்டியிருக்கு." என்றார்.

விழாவின் இறுதியில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், ``பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றியெல்லாம் பேசுற பலர் முதல்ல தன்னைத்தானே கேள்வி கேட்கணும். பொள்ளாச்சி பாலியல் வல்லுறவைச் செய்த அந்த இளைஞர்கள் அடி வாங்குனதைப் பார்த்து இங்கே பலபேர் சந்தோஷப்பட்டாங்க. அவங்களைக் கொல்லணும்னு சொல்றாங்க. கொன்னுட்டா, இனிமே பாலியல் வன்முறையே நடக்காதா... அப்படிச் சொல்ல முடியாது. அதுதான் இங்கே சிக்கல்!. பெண்ணை உடலாகப் பார்க்கிறதுல தொடங்கிய சிக்கல். அவனைக் கொல்லணும்னு சொல்ற எல்லா ஆண்களும் முதல்ல உங்களுக்குள்ளே இருக்கிற ஆணைக் கொல்லத் தயாராகணும். அந்த ஆதிக்க மனப்பான்மையை அழிக்கணும். அதை அழிக்காத வரை என்ன பேசியும் பயனில்லை." என்று கோபமாகப் பேசினார்.

மேலும், திரைத்துறையில் இருக்கும் சக படைப்பாளிகளைப் பார்த்து, ``அந்தப் பொண்ணு கதறி அழுத வீடியோ இங்கே எத்தனை  கலைஞர்களைப் பாதிச்சது?! சாதாரண மக்களை விடுங்க... நீங்க ஒரு படைப்பாளி. உங்களால அந்த அழுகுரலைக் கேட்டு அந்த வலியையோ, அந்த உணர்வையோ ஒரு கதாபாத்திரமா படைக்க முடியும். ஆனா, நீங்க காலம் காலமா திரைப்படங்களில் பெண்களை ஒரு சந்தையாகவும், ஆணை வலியவனாகக் காட்டுவதற்கும்தானே பயன்படுத்துறீங்க. ஒரு நடிகனுக்கான மாஸ், அவன் காலைக் காட்டும்போது இருக்கு. அவன் கால்தான் அவன் மார்க்கெட்டா இருக்கு. ஆனா, ஒரு நடிகைக்கு இப்போவரை இடுப்புதான் மார்க்கெட்டா இருக்கு. இதுதான் இங்கே பிரச்னை. ஹீரோ கறுப்பு - வெள்ளை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனா, ஹீரோயின் கண்டிப்பா வெள்ளையாதான் இருக்கணும்னு ஒரு கட்டமைப்பை யார் உருவாக்குனது?! இதையெல்லாம் உடைத்துப் பெண்ணை ஒரு உடலாகவோ, சந்தையாகவோ பார்க்காம, பெண்ணாகப் பார்க்கப் பழகணும். அங்கிருந்துதான், மாற்றம் தொடங்கும்." என்று முடித்தார், பா.இரஞ்சித். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு