Published:Updated:

150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் லிஸ்ட் படங்கள்..! கெளதம் மேனனுக்கு என்னதான் பிரச்னை?! - முழு விவரம் #VikatanExclusive

150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் லிஸ்ட் படங்கள்..!  கெளதம் மேனனுக்கு என்னதான் பிரச்னை?! - முழு விவரம் #VikatanExclusive
150 கோடி கடன், சம்பளப் பிரச்னை, வெயிட்டிங் லிஸ்ட் படங்கள்..! கெளதம் மேனனுக்கு என்னதான் பிரச்னை?! - முழு விவரம் #VikatanExclusive

`எனை நோக்கி பாயும் தோட்டா' அப்டேட் என்ன எனக் கேட்கும் கூட்டம் இன்றுவரை இருக்கிறது. இந்தப் படத்திற்கு அப்படி என்னதான் பிரச்னை?!

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த `எனை நோக்கி பாயும் தோட்டா' படம் தொடங்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இப்படம் வெளிவருவது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பேசி வருகின்றனர். ஏப்ரல் மாதம் வெளியாகும் எனப் படத்தின் தயாரிப்பாளர் மதன் ட்விட்டரில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. கௌதம் மேனன் எதை ட்வீட் செய்தாலும், `எனை நோக்கி பாயும் தோட்டா' அப்டேட் என்ன எனக் கேட்கும் கூட்டம் இன்றுவரை இருக்கிறது. இந்தப் படத்திற்கு அப்படி என்னதான் பிரச்னை?!

2016-ம் வருடம் `அச்சம் என்பது மடமையடா' படத்தின் ரிலீஸுக்கு முன் நடந்த ஒரு பிரஸ் மீட்டில், `சிவகார்த்திகேயன் மாதிரி என்னால அழ முடியாது!' என இயக்குநர் கௌதம் மேனன் கூறியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. `` `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் தாமதத்திற்கு என்ன காரணம்?" என்ற கேள்விக்குத்தான், கெளதம் இப்படிச் சொன்னார். அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம், `அச்சம் என்பது மடமையடா' படத்தையே அவர் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளுக்கும் சேர்த்து 60 நாள்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார். நிலைமை இப்படி இருக்கும்போது, படத்தின் ரிலீஸில் ஏன் தாமதம் ஏற்படுகிறது?!

கௌதம் வாசுதேவ் மேனன், அவரது நண்பர்கள் வெங்கட் சோமசுந்தரம் மற்றும் ரேஷ்மா கட்டாலா ஆகியோர் இணைந்து தொடங்கிய தயாரிப்பு நிறுவனம், `ஃபோட்டான் கதாஸ்'. `வெப்பம்', `நடுநிசி நாய்கள்' உட்பட சில படங்களை இந்நிறுவனம் மூலம் தயாரித்தார்கள். தொடர் தோல்விகளால், இந்நிறுவனம் மூடப்பட்டது. இதே மூவர் கூட்டணி மீண்டும் `ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' என்ற புதிய பட நிறுவனத்தைத் தொடங்கி, `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்துக் கொடுப்பதாக `எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும், `ஃபோட்டான் கதாஸ்' நிறுவனத்தின் நஷ்டக் கணக்கு கெளதம் மேனனைத் தொடர்ந்து வந்துகொண்டுதானே இருக்கும்... அது தனிக் கதை. அந்தப் பிரச்னைகளையெல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு, `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார்கள். 2016 பிப்ரவரி மாதம் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டு, மார்ச் 16- ம் தேதி தொடங்கிய இந்தப் படத்தின் முதல் நாள் மேக்கிங் வீடியோ பரவலாகப் பகிரப்பட்டது. பிறகு, துருக்கியில் படமாக்கப்பட்ட பாடல் காட்சி ஒன்றின் மேக்கிங் வீடியோவும் இப்படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டியது. அதற்குப் பிறகு சில நாள்களில் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை. பணம் இல்லாததே, இந்தத் தடைக்குக் காரணமாக இருந்தது.  

பாதியில் நிற்கும் ஒரு படத்தை முடிக்கத் தேவையான பணத்தைத் தயார் செய்ய வழக்கமாக தயாரிப்பாளர்கள் கையிலெடுக்கும் யுக்தியைத்தான் கெளதம் மேனன் குழுவும் எடுத்தார்கள். அது, பெரிய ஹீரோ ஒருவரின் கால்ஷீட்டைப் பெற்று, அந்தப் படத்திற்குக் கிடைக்கும் ஃபைனான்ஸ் தொகையை வைத்து, `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை முடிப்பது. அதற்கு ஏதுவாக, நடிகர் விக்ரம், கெளதம் மேனனுக்குக் கால்ஷீட் தந்தார். `துருவ நட்சத்திரம்' என்ற படம் தொடங்கியது. இப்படத்தின் மூலம் `கொண்டாடுவோம் என்டர்டெயின்மென்ட்' என்ற நிறுவனம் உதயமானது. 

இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் வேறு யாருமல்ல, கெளதம் மேனன், ரேஷ்மா கட்டாலா, வெங்கட் சோமசுந்தரம்... இவர்களும் `எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்' மதன். அதாவது, தனித் தனி நிறுவனமாக ஒரு படங்களை உருவாக்கிக்கொண்டிருந்த இவர்கள் அனைவரும் `துருவ நட்சத்திரம்' படம் மூலம் ஒரே நிறுவனமாக இணைந்தனர். எனவே, `துருவ நட்சத்திரம்' படத்திற்குக் கிடைக்கும் ஃபைனான்ஸ் தொகையை வைத்து, `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை முடித்துவிடலாம் எனத் தீவிரமாக இறங்கினார்கள். ஆனால், இந்தச் சமயத்தில் வேறு சில படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார், தனுஷ். பிறகு, `எனை நோக்கி பாயும் தோட்டா' பட வேலைகளைத் தற்காலிகமாகத் தள்ளிவைத்துவிட்டு, விக்ரம் நடிப்பில் `துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார்கள். ஏனெனில், விக்ரம்' ஸ்கெட்ச்' மற்றும் பாலிவுட் படம் ஒன்றிலும் கமிட்டாகியிருந்தார். அவர் கொடுத்த கால்ஷீட்டைப் பயன்படுத்தவில்லையெனில், `துருவ நட்சத்திரம்' படமும் பாதிக்கப்படும். எனவே, இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. க்ளைமாக்ஸ் காட்சி தவிர, படத்தின் பெரும்பாலான பகுதிகள் படமாக்கப்பட்டன.

கிட்டத்தட்ட இரண்டு படங்களும் முடிந்த நிலையில் இருக்க, முதலில் தொடங்கப்பட்ட `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை ரிலீஸ் செய்வதில் என்ன பிரச்னை தொடர்கிறது... படத்திற்கு ஃபைனான்ஸ் கொடுத்தவரும், தமிழ் சினிமாவின் முக்கியமான ஃபைனான்ஸியருமான ஒருவரிடம் பேசினேன்.

``படத்திற்காகக் கொடுத்த கடன் லட்சங்களில் இருந்தால், இறுக்கிப் பிடித்துக் கேட்கலாம். ஆனால், `எனை நோக்கி பாயும் தோட்டா', `துருவ நட்சத்திரம்' இரண்டு படங்களுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய்க்கு அதிகமான கடன் இருக்கிறது. இந்தத் தொகையில் வட்டிதான் அதிகம். தவிர, கெளதம் மேனனின் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடனும், `எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்' மதன் அவருடைய படங்களுக்கு வாங்கிய கடனும் இந்தத் தொகையில் அடங்கும். இவையெல்லாம் சரியாகும் பட்சத்தில்தான், படம் ரிலீஸாகும்." என்கிறார், அவர். 

``தயாரிப்பாளர் மதன் சொல்வதுபோல, `எனை நோக்கி பாயும் தோட்டா' படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகுமா?" எனக் கேட்டதற்கு, ``படம் முழுமையாகத் தயார் நிலையில் இருக்கிறது. தயாரிப்பாளர் மதன், ஃபைனான்ஸியர்களைப் பார்ப்பதும், விநியோகஸ்தர்களை சந்தித்துப் பேசுவதுமாக... படத்தின் ரிலீஸ் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். இந்தப் படங்களுக்கு வாங்கிய கடன் தவிர, மதன் தயாரித்த `கொடி', `மாப்ள சிங்கம்', `நெஞ்சம் மறப்பதில்லை' விநியோகம் செய்த `தூங்காவனம்' போன்ற படங்களின் பாக்கிகளும் இருக்கிறது. இவை அத்தனையும் கணக்கில் எடுத்துதான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இப்போதைக்கு, முடித்து வைக்கப்பட்ட `எனை நோக்கி பாயும் தோட்டா', `நெஞ்சம் மறப்பதில்லை', `துருவ நட்சத்திரம்' ஆகிய மூன்று படங்களையும் ரிலீஸ் செய்யவேண்டுமானால், அது படத்திற்கு ஃபைனான்ஸ் செய்தவர்கள், விநியோகஸ்தர்களுடன் கலந்து பேசினால் மட்டுமே முடியும்.

ஆனால், அப்படி ஒரு ரிஸ்க்கை ஃபைனான்ஸியர்கள் எடுப்பார்களா என்பது தெரியாது. இல்லையெனில், வட்டியைக் குறைத்துக்கொண்டு மீதித் தொகையை தயாரிப்பு தரப்பு செட்டில் செய்தால் முடியும். இதெல்லாமே ஃபைனான்ஸியர்கள் மனது வைத்தால் மட்டுமே சாத்தியம். தவிர, இந்த இடியாப்பச் சிக்கல்கள் அனைத்தையும் கலைத்துப் பிரித்தாலும், படத்தை ரிலீஸ் செய்வதில் மற்றொரு பிரச்னை இருக்கிறது. தனுஷ் இதுவரை `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் டிரெய்லருக்கு மட்டுமே டப்பிங் பேசியிருக்கிறார். படத்திற்காக அவருக்குப் பேசப்பட்ட சம்பளத்தில் ஒரு கோடி எழுபது லட்சம் ரூபாய் பாக்கி இருக்கிறது. அதைச் சரி செய்வது குறித்து, தனுஷ் தரப்பிடம் பேசவேண்டும்." என்கிறார்.  

தயாரிப்பாளர் மதன் சந்திக்கும் இந்தப் பிரச்னைகள், பஞ்சாயத்துகள் எல்லாம் தமிழ் சினிமாவில் பொதுவாகவே தயாரிப்பாளர்கள் பலரும் சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்னைகள்தான். ஆனால், இயக்குநர் கெளதம் மேனன் தயாரிப்பாளராக மாறிய பிறகு, தனக்குக் கொஞ்சமும் கைகொடுக்காத தயாரிப்பு வேலையை மீண்டும் மீண்டும் தொடர்ந்துகொண்டிருப்பதும், பிரச்னைக்கு ஒரு காரணம்தான்.

கௌதம் தன்னை மீட்டெடுக்க நினைக்கும்போதெல்லாம், அவரைச் சுற்றி ஃபைனான்ஸ் செய்தவர்களின் குரல் இடியாய் இறங்குகிறது. பிரச்னைகளிலிருந்து மீள கெளதம் மேனன், அடுத்த இரண்டு வருடத்திற்கு மாதம் ஒரு படம் இயக்க வேண்டும். நடைமுறையில் அது சாத்தியமான ஒன்றா என்றால், இல்லை. தவிர, அப்படியே கெளதம் துணிந்தாலும் அவருக்கு முன்பணம் கொடுத்த ஃபைனான்ஸியர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் அதற்கு வழிவிட வேண்டும். அதனால்தான், பணப் பிரச்னையை சாதுர்யமாகக் கையாண்டுகொண்டிருக்கிறார், கெளதம் மேனன். `டைம்ஸ்' நிறுவனத்திற்காக தற்போது `தி குயின்' என்ற ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கிக்கொண்டிருக்கிறார். மேலும் சில இணையதளங்களில் வெப் சீரிஸ் இயக்கும் வேலைகளிலும், யூ-டியூப் வீடியோக்களுக்குமான வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார். தவிர, தற்போது கெளதம் மேனனுக்குப் பணம் கொடுத்த தயாரிப்பாளர்கள் பட்டியலில் மேலும் இருவர் இணைந்திருக்கிறார்கள். ஆம், அருண் விஜய் நடிக்க `அவளும் நானும் அமுதும் தமிழும்', சிம்பு நடிக்க `விண்ணைத்தாண்டி வருவாயா 2' ஆகிய படங்களை இயக்க அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு, இந்தப் பிரச்னைகளால் இந்தப் படங்களையும் ஓரம் கட்டி வைத்திருக்கிறார்.

ஒரு கலைஞனாகத் தன்னைப் போன்ற கலைஞர்களைக் கரையேற்றிவிடுவது என்பது உன்னதமான விஷயம்தான். ஆனால், கெளதம் கரையேறவே ஒரு அடி இருக்கும்போது, முதலில் எதைச் செய்யவேண்டும் என்பதைக் கெளதம் மேனன்தான் யோசிக்க வேண்டும். இயக்குநராக வாங்க கௌதம் கைகொடுக்க நாங்க இருக்கோம்!  

அடுத்த கட்டுரைக்கு