Published:Updated:

`ஆய்த எழுத்து’ முதல் `சர்கார்’ வரை... தமிழின் சிறந்த எலெக்‌ஷன் சினிமா எது?

`ஆய்த எழுத்து’ முதல் `சர்கார்’ வரை... தமிழின் சிறந்த எலெக்‌ஷன் சினிமா எது?
`ஆய்த எழுத்து’ முதல் `சர்கார்’ வரை... தமிழின் சிறந்த எலெக்‌ஷன் சினிமா எது?

மணிரத்னம், ஷங்கர் போன்ற டாப் இயக்குநர்கள் தொடங்கி, கோலிவுட்டின் பல படைப்பாளிகள் தேர்தலை மையப்படுத்தி, நல்லவர்கள் ஆட்சிக்கு வரும் கதைகளை அவ்வப்போது எடுப்பதுண்டு... அவற்றில் சில!

`இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்’, `படித்தவர்களை ஆட்சியில் அமரவைக்க வேண்டும்’, `ஊழல் இல்லாத அரசு வேண்டும்’ - ஒவ்வொரு முறை பாராளுமன்றத் தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தல் வரும்போதும் இதுபோன்ற சொல்லாடல்களை மக்களிடையே பரவலாகக் கேட்க முடியும். எப்படியாவது நல்லது நடந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பின் வெளிப்பாடுகள்தான் இவை. இந்தப் பொதுவான எதிர்பார்ப்பைப் படைப்பாக்கவும் தமிழ் சினிமா தவறியதில்லை. மணிரத்னம், ஷங்கர் போன்ற டாப் இயக்குநர்கள் தொடங்கி, கோலிவுட்டின் புதிய படைப்பாளிகள் வரை... பலரும் தேர்தலை மையப்படுத்தி, நல்லவர்கள் ஆட்சிக்கு வரும் கதைகளை அவ்வப்போது படமாக்குகிறார்கள். அவற்றில் சில படங்களைப் பற்றிய குட்டி ரீவைண்டு இது. 

ஆய்த எழுத்து :

`ஆய்த எழுத்து’ முதல் `சர்கார்’ வரை... தமிழின் சிறந்த எலெக்‌ஷன் சினிமா எது?

நாயகனை எப்படியாவது முதலமைச்சர் ஆக்கிவிடுவேன், 234 தொகுதியிலும் அவர் கட்சிதான் வெற்றிபெறும் என்றெல்லாம் திரைக்கதை எழுதாமல், நான்கு தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் இளைஞர்கள், அரசியலில் வெற்றிபெறும் எளிமையான கதை. இப்படி, அரசியலின் கள யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு உருவான படமாக இருந்தாலும், மணிரத்னம் படங்களுக்கே உண்டான மேட்டிமைத்தனம், திரைக்கதை மீதான நம்பகத்தன்மையைக் குறைத்தது. என்றாலும், இப்படி ஒரு மாற்றம் உருவானால் நன்றாகத்தான் இருக்கும் என்ற ஆசையையும் இப்படம் தூண்டத் தவறவில்லை. படத்தில் இடம்பெற்ற `ஜன கன மன...’ பாடல், இளைய தலைமுறை அரசியலுக்கான தேசிய கீதமாகவே இன்றும் கருதப்படுகிறது.

ஜி :

`ஆய்த எழுத்து’ முதல் `சர்கார்’ வரை... தமிழின் சிறந்த எலெக்‌ஷன் சினிமா எது?

படத்தின் பெரும் பலம், வசனங்கள். குறிப்பாக விஜயகுமார் பேசும், `ஒண்ணு திருடுறவன் தலைவனாயிடுறான். இல்ல, தலைவனே திருடனா இருக்கான்’ என்ற வசனம் இளைஞர்கள் அரசியலுக்கு வருவதில் இருக்கும் கள யதார்த்தத்தை `ஆய்த எழுத்து’ படத்தைவிட `ஜி’ தெளிவாக விளக்கியிருந்தது. கல்லூரி மாணவன் ஒருவன் தன் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற எப்படிப்பட்ட சவால்களையெல்லாம் எதிர்கொள்ள நேரிடும், வெற்றி பெற்ற பின் அது அவனுக்கு என்னென்ன சிக்கல்களையெல்லாம் தரும் என்பதைச் சொல்லும் திரைக்கதை. கல்லூரி மாணவர் அமைப்புத் தேர்தலுக்குள் அரசியல்வாதிகளின் குறுக்கீடு இருக்கும்போது, பொதுத்தேர்தல் களத்தில் மாணவர்கள் இறங்கினால் என்ன தவறு? என்ற கேள்வியையும் எழுப்பியது, இந்தப் படம்.

கோ :

`ஆய்த எழுத்து’ முதல் `சர்கார்’ வரை... தமிழின் சிறந்த எலெக்‌ஷன் சினிமா எது?

தேர்தல் அரசியல் என்றால், வெறும் அரசியல் மட்டுமல்ல... அதன் பின்னணியில் ஊடகம், அடிப்படைவாதம், சூழ்ச்சி எனப் பல அஜெண்டாக்கள் இருக்கின்றன என்பதைப் பதிவு செய்த படம். ஒரு புதிய கட்சி, அதன் தொடக்கப் புள்ளியில் இருந்து, மக்களின் அனுதாபம், ஆதரவு, நம்பிக்கை என எல்லாவற்றையும் பெறும் வரை உள்ள பயணத்தைத் திரைக்கதையாகக் கொண்ட படம். இப்போது அரசியலில் நிலவிவரும் சூழ்ச்சியையெல்லாம், மற்றொரு சூழ்ச்சியைக் கொண்டுதான் வெல்லமுடியும் என்பதை மட்டுமல்ல, அதற்கான நியாயத்தையும் சேர்த்தே சொன்னது. இளைஞர்கள் அரசியலுக்கு வர இந்தப் படமும் ஒரு பெரும் உந்துதலாக இருந்தது.

சகுனி :

`ஆய்த எழுத்து’ முதல் `சர்கார்’ வரை... தமிழின் சிறந்த எலெக்‌ஷன் சினிமா எது?

`சகுனி’ ரிலீஸானபோது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், இது ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் உள்ளது. ஒரு தனி மனித விரோதம் எப்படி அரசியல் விரோதமாக மாறி, ஒரு முதலமைச்சரை ஆட்சி இழக்கச் செய்கிறது என உள்ளாட்சித் தேர்தல் முதல், சட்டமன்றத் தேர்தல் வரை... பல நிலைகளில் இந்தப் படம் விளக்கும். செயற்கையாக நிகழ்த்தப்படும் கார் விபத்து, சாமியார்களின் ஆதரவில் களமிறங்கும் கட்சி என இந்தப் படம் நடைமுறையிலிருக்கும் தேர்தல் அரசியலை அப்படியே காட்டியிருக்கும்.

கொடி :

`ஆய்த எழுத்து’ முதல் `சர்கார்’ வரை... தமிழின் சிறந்த எலெக்‌ஷன் சினிமா எது?

தமிழ்நாட்டில் மாறி மாறி இரண்டு அரசியல் கட்சிகளுக்குத்தான் மக்கள் வாய்ப்பு தருகின்றனர். இரண்டு கட்சிகளிலுமே ஊழல், களவு, சூழ்ச்சி, மக்கள் விரோதம் என எல்லாம் தலைவிரித்து ஆடுகின்றன. அதில், எதிர் எதிர்க் கட்சிகளில் இருக்கும் காதலர்கள் அந்தச் சூழ்ச்சிகளை எப்படிக் கையாள்கின்றார்கள் என்பது இப்படத்தின் களம். அரசியலில் முன்னுக்கு வர யார் என்னவெல்லாம் செய்ய வேண்டும், வாய்ப்புகளை எப்படி உருவாக்கிக்கொள்ள வேண்டும் என முதல் பாதியிலும், அதே சூழ்ச்சிகளை நல்ல நோக்கத்துடனும் செய்ய முடியும் என இரண்டு கண்ணோட்டங்களை இந்தப் படம் காட்டியிருக்கும்.

சர்கார் :

`ஆய்த எழுத்து’ முதல் `சர்கார்’ வரை... தமிழின் சிறந்த எலெக்‌ஷன் சினிமா எது?

ஒரு படம் எடுக்கப்பட்டு, திரையரங்குகளில் அது எதிர்பார்த்த வசூலைக் குவிக்காதபோதும், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பைச் சம்பாதிப்பதைப் பெரிதளவில் பார்த்தது, `சர்கார்’ வெளியானதுக்குப் பின்தான். தேர்தல் வாக்குறுதிகள், இலவசங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள் என ஒரே ஒரு காட்சி இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்ததால், பல சிக்கல்களைச் சந்தித்தது. அது ஒரு புறமிருக்க, தேர்தலில் இருக்கும் 49-ஓ சட்டத்தை மட்டுமே அறிந்திருந்த மக்களிடம் 49-P சட்டப்பிரிவு பற்றிய விழிப்பு உணர்வையும் இந்தப் படம் கொடுத்தது. அதற்குப் பிறகுதான் இந்தியத் தேர்தல் ஆணையமும் 49-P பற்றிய பரப்புரைகளையும் மேற்கொண்டது. முழுக்க முழுக்க வணிகரீதியிலான இந்தப் படத்தில் இருந்த ஒரு சில அரசியல் காட்சிகள் ஓரளவுக்குக் கள யதார்த்தத்தைப் பதிவு செய்ய முயற்சி செய்திருந்தது.

இப்படிப் பல தேர்தலை மையமாக வைத்து இயக்கப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருக்கின்றன. இன்றைய அரசியலைப் பிரதிபலிக்கும் வகையிலான படங்கள் என்னென்ன, அதில் இடம்பெற்ற காட்சிகள் குறித்து கமென்ட் பாக்ஸில் பகிர்ந்துகொள்ளலாம்!

loading...
அடுத்த கட்டுரைக்கு