Published:Updated:

``தி.நகர், மெரினா பீச், எலெக்ட்ரிக் டிரெயின்...'' `குக்கூ’ போட்டோஷூட் அனுபவம் சொல்லும் அருண் டைட்டன்! - #5YearsOfCuckoo

``தி.நகர், மெரினா பீச், எலெக்ட்ரிக் டிரெயின்...'' `குக்கூ’ போட்டோஷூட் அனுபவம் சொல்லும் அருண் டைட்டன்! - #5YearsOfCuckoo
``தி.நகர், மெரினா பீச், எலெக்ட்ரிக் டிரெயின்...'' `குக்கூ’ போட்டோஷூட் அனுபவம் சொல்லும் அருண் டைட்டன்! - #5YearsOfCuckoo

'குக்கூ' படம் வெளியாகி, ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இந்தப் படம் குறித்த ஒரு குட்டி ரீவைன்ட் இது.

ழ்கடல் ஆழத்தில் புதைந்திருக்கும் முத்து முதல் தோண்டி எடுக்கப்படும் தங்கம் வரை... அரிதான பொருள்களைக் கடவுள் ஆழமாகத்தான் வைத்திருக்கிறார். அவற்றை அடைவதற்குள் ஒரு போராட்டமே வந்து செல்லும். அதேபோல்தான், காதலிலும் ஓர் ஆழமான புரிதலை அடைய கோபம், சண்டை, ஈகோ எனப் பல கட்டங்களைத் தாண்டி வர வேண்டும். சிலருக்குப் பார்த்தவுடன் காதல் வரும், சிலருக்குப் பல நாள்கள் பழகிய பின்பு வரும். இவற்றில் காணாமலேயே ஏற்படும் காதலானது, தொலைதூரக் காதலாக இருக்கலாம். ஆனால், பார்வைக் குறைபாடு கொண்ட இரு குருவிகளுக்கிடையில் உருவம், நிறம், உயரம் என எதுவும் அறியாமல் குணத்தின் மேல் கொள்ளும் அழகிய காதலை யதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் தனது முதல் படமான `குக்கூ’ மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் பார்வைக்குப் படரவிட்டிருந்தார் இயக்குநர் ராஜுமுருகன்.

இவர்களுக்கு வெளியுலகம் எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆனால், இவர்கள் மனதுக்குள் வாழும் உலகம் மிகவும் அழகானது. இதுதான், படத்தின் ஒன்லைன். தமிழ் - சுதந்திரக்கொடி... இருவரின் நேர்த்தியான நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் உணர்ச்சிகளைத் தட்டிச்சென்றதுபோல பார்வையற்ற நெஞ்சங்களின் காதலைக் கலர்ஃபுல்லாகக் காட்டியிருந்தனர். படத்தின் ஒளிப்பதிவும் போஸ்டர்களும் பெரிதளவில் வரவேற்பைப் பெற்றன. இத்திரைப்படம் வெளியாகி 5 வருடங்கள் ஆனதையொட்டி, இப்படத்துக்காகப் போட்டோகிராபி செய்த அருண் டைட்டனிடம் பேசினோம்.

`` `குக்கூ’ வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?’’

``என் கரியர்ல மிக முக்கியமான படம் இது. ஸ்ட்ரீட் போட்டோகிராபி பண்ணிக்கிட்டு இருந்த நேரத்தில், நான் எடுத்த புகைப்படங்களைப் பாா்த்து ராஜுமுருகன் இந்த வாய்ப்பைக் கொடுத்தார்.’’

`` `குக்கூ’வில் எதிர்பாராத விதமாக எடுத்த க்ளிக்ஸ் பற்றி?’’

`` `நிறைய இருக்கு. மெட்ராஸ் பிரெசிடென்சி காலேஜ்ல ஷூட் எடுக்கப்போனோம். அங்கே அனுமதி தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. அதனால, திரும்பி காா்ல ஏற வர்ற நேரத்துல தினேஷ் - மாளவிகா இருவரையும் நடந்து வரச்சொன்னேன். அப்போ, யாதார்த்தமா எடுத்த க்ளிக் எல்லோருக்கும் பிடிச்சுப்போச்சு.’’

`` `குக்கூ’ போஸ்டர் ஸ்பெஷல்ஸ்?’’

`` `ஸ்ட்ரீட் போட்டோகிராபிதான்! இந்தப் படத்துக்கு ஸ்ட்ரீட் போட்டோகிராபி ஸ்டைல்தான் செட் ஆகும்னு இயக்குநர் சொன்னார். என் ஐடியாவும் அதுதான். `குக்கூ’ படத்துக்கு நாங்க காா்ல ரெண்டு நாள் இரவு, பகல்னு போட்டோஸுக்காகவே சுத்துனோம். நான் ஸ்ட்ரீட் போட்டோகிராபி செய்ய தி.நகர், மூர் மார்க்கெட், மெரினா பீச், எலெக்ட்ரிக் டிரெயின்னு எல்லா இடத்துக்கும் கூட்டிக்கிட்டுப் போனேன். அவங்களை யதாா்த்தமா நடிக்கச் சொல்லிட்டு, நான் தூரத்துல டெலி லென்ஸ் மூலமா போட்டோஸ் எடுத்தேன்.’’

``உங்களுக்கும் ராஜுமுருகனுக்குமான நட்பு?’’ 

``அவருக்கும் எனக்கும் செம்மையா சிங்க் ஆகும். எப்படின்னா, ஆனந்த விகடன்ல அவர் `ஜிப்ஸி’ தொடர் எழுதும்போது என்கிட்ட போட்டோஸ் வாங்கினார். அவர் பல வருடங்களா சுற்றிய அனுபவங்களின் தொகுப்பும் நான் பல இடங்களில் சுற்றி எடுத்த புகைப்படங்களும் நல்லாவே செட் ஆச்சு. அதேமாதிரி, நான் ஒரு போட்டோ எடுக்குறேன்னா அதை ராஜுமுருகன் என் போக்குல எடுக்கச் சொல்லி விட்டுடுவார். சமயங்களில் அவருக்குத் தேவையான விஷயங்களை மட்டும் சொல்வார். என்னை நல்லாப் புரிஞ்சிகிட்ட ஒரு நல்ல நண்பர்.’’

`` `குக்கூ’ உங்க வாழ்க்கையில் கொடுத்த மாற்றம் என்ன?’’ 

`` ‘குக்கூ’ என் லைஃப்ல நடந்த ஒரு மேஜிக்! ராஜுமுருகனுக்கு என் வொர்க் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் போஸ்டர்ஸைப் பாா்த்துட்டு நல்லா இருக்குனு சொன்னார். `குக்கூ’ போஸ்டர்ஸ் பாா்த்துட்டு பல வாய்ப்புகள் வந்தன. ஆனால், நான் `குக்கூ’ போன்ற யதார்த்தமான திரைப்படங்களையே தேர்வு செய்தேன். `குக்கூ’ போஸ்டர்ஸ் பாா்த்துட்டுதான், `பக்ரீத்’ படத்துக்கும் கூப்பிட்டாங்க, அதுவும் நல்லா வந்திருக்கு.’’

``அடுத்து?’’ 

``ராஜுமுருகனோட `ஜிப்ஸி’, விக்ராந்த்தின் ‘பக்ரீத்’, ஹன்சிகா நடிக்கும் `மஹா’ படங்கள்ல வொர்க் பண்ணியிருக்கேன்.’’

அடுத்த கட்டுரைக்கு