Published:Updated:

``ஏழு ஊருக்கு ஒரு ராஜாவாம்..!’’ `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஒரு க்விக் அறிமுகம்! - அத்தியாயம் 1

தார்மிக் லீ
``ஏழு ஊருக்கு ஒரு ராஜாவாம்..!’’ `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஒரு க்விக் அறிமுகம்! - அத்தியாயம் 1
``ஏழு ஊருக்கு ஒரு ராஜாவாம்..!’’ `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஒரு க்விக் அறிமுகம்! - அத்தியாயம் 1

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரிஸின் எட்டாவது மற்றும் இறுதி சீஸன் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இதற்கு முன் வெளியான ஏழு சீஸன்களிலும் என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தவே இந்த மினி தொடர்.

`கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நாடகத்துக்குப் பெரிதாக அறிமுகம் தேவையில்லை. சிலர் இதைச் சுய விருப்பத்தின்படி பார்த்திருந்தாலும், பலர் இதை நண்பர்களின் உந்துதலால்தான் பார்த்திருப்பார்கள். இந்த சீரிஸின் எட்டாவது மற்றும் இறுதி சீஸன் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கவிருக்கிறது. அதனால், இதற்கு முன் வெளியான ஏழு சீஸன்களிலும் என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தவே இந்த மினி தொடர்.

1996-ல் ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் என்பவர் எழுதிய நாவல் தொடர்தான், `A song of Ice and Fire.’ இந்த நாவலில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒவ்வொரு பின்புலக் கதைகளும் உண்டு. இதில் வரும் கதாபாத்திரங்களை வாசகர்களை ரசிக்க வைத்துவிட்டு, அவர்களைக் கொன்று கதையை நகர்த்துவதுதான், மார்ட்டின் ஸ்டைல். இந்தக் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட சீரிஸ்தான், `கேம் ஆஃப் த்ரோன்ஸ்.’ டேவிட் பெனியோஃப் மற்றும் டி.பி.வெயிஸ் ஆகிய இருவரும்தான் இதன் கிரியேட்டர்ஸ். நாவலில் இருப்பதை அப்படியே படமாக்காமல், கதையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பார்கள். `கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ எனும் டைட்டிலின் அர்த்தம், `அரியணைக்கான ஆட்டம்.’ டைட்டில் சொல்லும் இந்த அர்த்தம்தான் கதைக்களமும்கூட!  

இந்த சீரிஸை முதலில் பார்க்கப்போகிறவர்களுக்கும் இந்தக் கட்டுரை உதவலாம். அதேசமயம், முதல் சீஸனைப் பார்க்காமல் இந்தத் தொடரின் அடுத்த அத்தியாயத்தைப் பார்க்க வேண்டாம் (ஸ்பாயிலர் அலெர்ட்!) இந்த நாடகத்தின் ஒரு சீஸனைத் தாண்டிவிட்டால்போதும், நம்மைத் தொடர்ந்து பார்க்க வைத்துவிடும். 2011, ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த சீரிஸ் ஒளிபரப்பாகத் தொடங்கியது. இதுவரை ஏழு சீஸன் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு சீஸனிலும் 10 எபிசோடுகள். ஏழாவது சீஸனில் மட்டும் 7 எபிசோடுகள். மொத்தம் 67 எபிசோடுகளைக் (இதுவரை) கொண்டது, இந்த `கேம் ஆஃப் த்ரோன்ஸ்.’ இதில், ஒரு எபிசோடைப் பார்க்கத் தவறினாலும் கதையே புரியாமல் போய்விடும். ஒரு விஷயம் எதற்காக நடக்கிறது என்பதே புரியாது. அதேபோல், காரணமில்லாத சில காட்சியமைப்புகளுக்குப் பின்னால்கூட பல சுவாரஸ்யமான திருப்பங்களை ஜஸ்ட் லைக் தட் தந்திருப்பார், ஜார்ஜ் மார்ட்டின். அதுதான், `கேம் ஆஃப் த்ரோன்ஸி'ன் ஸ்பெஷலும்கூட! 

`கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ உண்மையில் நடந்ததா என்றால், இல்லை. இது அனைத்துமே கற்பனைதான்; ஃபேன்டஸிதான். இதுவரை பார்த்திடாத, இனிமேலும் பார்க்க முடியாத ஒரு விஷயத்தைப் பார்க்கும் ஓர் எளிய வழிதான், கற்பனை. அதற்கு அளவுகோல் கிடையாது. எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் ஒருவர் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம். அதையே திரையில் பார்க்கும்போதும், புத்தகங்களில் படிக்கும்போதும் அங்கேயே நாம் இருப்பதைப் போன்ற ஓர் உணர்வைக் கொடுக்கும். இந்த ஃபார்முலாவுக்கு எப்போதுமே மவுசு உண்டு. தவிர, இதில் காட்டப்பட்டிருக்கும் பிரமாண்டம். அயர்லாந்து, கனடா, குரோஷியா, மால்டா, மொராக்கோ, ஸ்காட்லாந்து, ஸ்பெயின் எனப் பல்வேறு நாடுகளில் ஷூட்டிங் நடந்தது. அந்த லொக்கேஷன்களோடு சேர்த்து மேலும் அழகு சேர்த்தது, பிரமாண்ட பொருள்செலவிளாலான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ். 

2011, ஏப்ரல் மாதம் ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்த சீரியஸ், ஹெச்.பி.ஓ டிவியிலும் இந்தியாவில் ஹாட் ஸ்டார் இணையதளத்திலும் ஒளிபரப்பானது. ஹாட் ஸ்டாரில் எப்போது வேண்டுமானாலும் இதைப் பார்க்கலாம். ஒருமுறை பார்த்தவர்கள், ரிப்பீட் மோடில் பார்த்தவர்கள் என இதுவரை ஒவ்வொரு எபிசோடும் பல கோடி வியூஸ்களைக் கடந்துள்ளது. இனிமேல் பார்க்கப்போகும் நண்பர்களுக்கும் ஒரு சின்ன முன் குறிப்பு. இதைப் பார்க்க ஆரம்பித்தால், வேறெந்தப் பக்கமும் திரும்பிப் பார்க்க வேண்டாம், பார்க்கவும் மாட்டீர்கள். ஒருவேளை நீங்கள் புத்தகப் பிரியராக இருந்தால், உங்களுடைய புத்தக மூட்டையைத் தற்காலிகமாக மூட்டைகட்டி வைத்துவிட்டால், நல்லது. எட்டாவது சீஸனையும் முடித்த பின்னர், அதை மீண்டும் அவிழ்த்துக்கொள்ளலாம். 

கதைப்படி, வெஸ்ட்ரோஸ் மற்றும் எஸ்ஸோஸ் என இரு இடங்கள். வெஸ்ட்ரோஸை ஆட்சி செய்வது ஒரே அரியணை. அவர்களுக்குப் பாதுகாவலர்களாகச் சில போர் வீரர்கள். 700 அடி சுவர்... என இவர்களைச் சுற்றியேதான் கதை பயணிக்கும். இடம் இரண்டாக இருந்தாலும், ஒட்டுமொத்தக் கதை என்னவோ வெஸ்ட்ரோஸை நோக்கித்தான் பயணிக்கும். ஏழு ராஜ்ஜியங்களைக் கொண்ட கண்டத்தை, ஆட்சி செய்வது ஒரே மன்னன். அந்த அரசன் இறந்த பிறகு, அரியணையை அபகரிக்கப் பல்வேறு ராஜ குடும்பங்கள் போரிடுவதுதான், இதன் கதை. மொத்தம் பதினெட்டு குடும்பம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஸ்டார்க், பராத்தியன், லானிஸ்டர், டார்கேரியன், வொயில்டுலிங்க்ஸ், க்ரேஜாய், நைட்வாட்ச், ரீட், போல்டன், ஃப்ரே, மோர்மன்ட், டல்லி, மார்டல், டைரல், அர்ரின், டார்த் என வெவ்வேறு பெயர்கள். நாடகத்தைப் பார்க்கும்போது, மேற்கூறிய பெயர்கள்தான் காதில் விழுந்துகொண்டே இருக்கும். 

ரு குடும்பத்துக்கும் மற்றொரு குடும்பத்துக்கும் என்ன உறவு... ஆங்கிலத்தில் `இன்செஸ்ட்’ எனச் சொல்லப்படும் உறவை இதில் எப்படிக் காட்டியிருக்கிறார்கள்.. 1,000 வருடங்களுக்கு முன்பு அழிந்துவிட்டதாகச் சொல்லும் ஒயிட்வாக்கர்ஸ் மீண்டும் எங்கிருந்து வந்தார்கள்... எதற்காக வந்தார்கள்... டிராகன்கள் எவ்வாறு மீண்டும் உயிர் பெறுகின்றன... 700 அடியில் அரண் அமைத்து எதற்காக நைட்வாச்சர்ஸ் ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கிறார்கள்... இழந்த புகழை மீட்டெடுக்க ஒரு பெண் என்னவெல்லாம் செய்கிறார்... காதல், வன்மம், துரோகம், நட்பு, சோகம், மகிழ்ச்சி, இழப்பு, அருவருப்பு, குரோதம், கொடூரம் என இந்த நாடகத்தில் காட்டப்பட்டிருக்கும் அனைத்தையும் பின்வரும் அத்தியாயங்களில் விரிவாகப் பார்க்கலாம்! 

வின்டர் வந்துகொண்டிருக்கிறது...

அடுத்த கட்டுரைக்கு