Published:Updated:

``பிக் பாஸ் ஸ்கிரிப்ட்ல இல்லாம கமல் பேசுனதுலாம்...?’’ - இயக்குநர் மதுமிதா

லண்டன், நியூயார்க் திரைப்பட விழாக்களில் தன்னுடைய `KD என்கிற கருப்புதுரை’ படம் திரையிடப்படுவது, `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கமல் ஹாசனை இயக்கியது ஆகியவற்றை குறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர் மதுமிதா.

``பிக் பாஸ் ஸ்கிரிப்ட்ல இல்லாம கமல் பேசுனதுலாம்...?’’ - இயக்குநர் மதுமிதா
``பிக் பாஸ் ஸ்கிரிப்ட்ல இல்லாம கமல் பேசுனதுலாம்...?’’ - இயக்குநர் மதுமிதா

`பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி, தமிழில் `வல்லமை தாராயோ’, `மூணே மூணு வார்த்தை’ ஆகிய படங்களை இயக்கியவர் மதுமிதா. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் `KD என்கிற கருப்புதுரை’ படம் லண்டன் வேர்ல்ட் ப்ரீமியர் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இந்தப் பட அனுபவம் குறித்து மதுமிதாவிடம் பேசினேன். 

`` `மூணே மூணு வார்த்தை’ படத்துக்குப் பிறகு, ஏன் இந்த இடைவெளி?’’

``அந்தப் படத்துக்குப் பிறகு, வேறொரு கதையை எழுதிக்கிட்டு இருந்தேன். அப்புறம், `பிக் பாஸ்’ முதல் சீஸன்ல கமல் சார் வர்ற எபிசோடுகளுக்குக் கிரியேட்டிவ் டைரக்டரா வேலை பார்த்தேன். இப்போ, மலேசியாவுல பெண்களுக்கான டிஜிட்டல் சேனல் ஒன்றை ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன். அடுத்தடுத்து நான் பிஸியாதான் இருந்தேன். நமக்குத் தோணுகிற கதையை மக்களுக்குச் சொல்லியே ஆகணும்னு நினைக்கும்போது மட்டும்தான் சினிமா பக்கம் வருவேன். அதனால, இதை நான் இடைவெளியா நினைக்கிறதில்லை.’’ 

`` `KD என்கிற கருப்புதுரை’ என்ன கதை?’’

``சில வருடங்களுக்கு முன், `தலைக்கூத்தல்’ பற்றி பத்திரிகையில வந்த ஒரு செய்திதான், இந்தப் படத்துக்கான ஆரம்பப் புள்ளி. `தலைக்கூத்தல்’ பற்றியும் கருணைக் கொலைகள் எப்படியெல்லாம் நடக்குதுனும் விரிவா எழுதியிருந்தாங்க. தலைக்கூத்தல் பற்றி ஆராய்ச்சிகள் பண்றப்போ, பல சுவாரஸ்யமான விஷயங்கள் தெரியவந்தன. வயதாகி உடல்நிலை சரியில்லாம உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கிறவங்களை நல்லா எண்ணெய் தேச்சுக் குளிக்க வெச்சு, அவங்களுக்கு இளநீர் மாதிரியான குளிர்ச்சியான பொருள்களைக் கொடுத்தா, அவங்க உயிர் சீக்கிரமா பிரிஞ்சிடும். அதைத்தான், `தலைக்கூத்தல்’னு தமிழ்நாட்டுல சொல்றாங்க. வெவ்வேறு ஊர்கள்ல இதை சம்பிரதாயமா நடத்திக்கிட்டு இருக்காங்க. அதை நான் படமா பண்ணியிருக்கேன்.’’ 

``நடிகர், நடிகைகள்?’’ 

``80 வயது முதியவருக்குக் தலைக்கூத்தல் பண்றதுக்கு அவங்க வீட்டுல திட்டமிடுறாங்க. அதை அவர் தெரிஞ்சுக்கிட்டு வீட்டைவிட்டு வெளியே வர்றார். அப்படி வரும்போது, 8 வயதுப் பையனை சந்திக்கிறார். இவங்க இருவருக்குமான பயணம்தான் படம். முதல் பத்து நிமிடம்தான் சீரியஸா இருக்கும். பிறகு, அவங்க ரெண்டுபேரும் வாழ்க்கையை எப்படி என்ஜாய் பண்றாங்கன்னு ரொம்ப ஜாலியா போகும். கருப்புதுரை கேரக்டர்ல மு.ராமசாமி ஐயா நடிச்சிருக்கார். அவர்கூட, நாக விஷால்னு ஒரு சின்னப் பையன் நடிச்சிருக்கான். ரெண்டுபேருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பரா வொர்க் அவுட் ஆகியிருக்கு.’’

``எந்தெந்தத் திரைப்பட விழாக்களில் படம் தேர்வாகியிருக்கு?’’

``படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் போகுது. அதுக்குள்ள நாங்க சில திரைப்பட விழாக்களுக்குப் படத்தை அனுப்பி வச்சோம். அதுல, லண்டன்ல வேர்ல்டு ப்ரீமியர் திரைப்பட விழாவில் தேர்வாகியிருக்கு. அங்கேதான் படத்தை முதல்முறையா திரையிடப்போறோம். அப்புறம், மே மாதம் நடக்கப்போற நியூயார்க் திரைப்பட விழாவுக்கும் தேர்வாகியிருக்கு.’’

``கமல்ஹாசனை இயக்கிய அனுபவம்?’’

``எல்லா இயக்குநர்களுக்கும் ரஜினி சாரையும் கமல் சாரையும் இயக்கிடணும்னு ஆசை இருக்கும். அதுல எனக்குக் கமல் சாரை இயக்கும் வாய்ப்பு கிடைச்சது. `பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு என்னைக் கூப்பிட்டதுமே ஓகே சொல்லிட்டேன். காரணம், கமல் சார்தான். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை சில எபிசோடுகள் பார்த்திருக்கேனே தவிர, அதைப் பத்தி அவ்வளவா தெரியாது. முதல் ரெண்டு எபிசோடு அந்த மொழியில என்ன பண்ணியிருக்காங்களோ, அதைப் பார்த்துப் பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். ஆனா, அது நம்ம மக்கள்கிட்ட வொர்க் அவுட் ஆகலை. அப்புறம் நம்ம மக்களுக்கு எது பிடிக்கும்னு ஆலோசனை பண்ணி நாங்களே நிகழ்ச்சியை வடிவமைச்சோம். பிறகுதான் ஷோ ஹிட் ஆனது. ஒவ்வொரு டிஸ்கஷன்லேயும் கமல் சாருடைய இன்புட்ஸ் நிறைய இருக்கும். இத்தனை வருடமா சினிமாவுல இருந்தும் அவருக்கு சினிமா மீதான காதல் கொஞ்சம்கூட குறையலை. எதையுமே அசால்டா டீல் பண்ண மாட்டார். சின்னச் சின்ன விஷயங்களையும் ரசிச்சுப் பண்றார். கமல் சாரை இயக்கியது என் வாழ்நாள்ல மறக்க முடியாத தருணங்கள்.’’ 

`` `பிக் பாஸ்’ நிகழ்ச்சியின்போதுதான், கமல்ஹாசன் நிறைய அரசியல் பேச ஆரம்பிச்சார். உங்களிடம் அதைப் பற்றி ஷேர் பண்ணுவாரா?’’

``டிஸ்கஷன்ல, நிகழ்ச்சியில என்னென்ன பேசப்போறோம், அதை என்ன கோணத்துல பேசப்போறோம்னு விவாதிப்போமே தவிர, அங்கே அரசியல் பேசமாட்டார். தவிர, கமல் சார் ஸ்கிரிப்ட்படி நிகழ்ச்சியில பேசுற ஆள் கிடையாது. அவர்கிட்டயிருந்து வந்த அரசியல் பேச்சுகளெல்லாம் ஆன் தி ஸ்பாட்ல பேசியதுதான். அவருடைய கட்சியின் பெயரை மதுரையில அறிவிச்ச நிகழ்ச்சியையும் நான்தான் இயக்கினேன். சினிமா, டிவினு இருந்த எனக்கு அரசியல் நிகழ்வை இயக்கிய அனுபவம் புதுசா இருந்தது.’’ 

``கமல்ஹாசனின் அரசியல் கொள்கையில் உங்களுக்குப் பிடிச்சது என்ன?’’ 

``எனக்கு அரசியல் அவ்வளவா தெரியாது. ஆனா, கட்சிக்காக முழுநேரமும் ரொம்ப உழைக்கிறாங்க. மத்த கட்சிகள்ல எப்படினு தெரியலை. ஒரு படம் எடுக்கிறதுக்கு முன்னாடி எல்லோரும் நிறைய பேசுவோம், விவாதிப்போம்ல... அந்த மாதிரி மக்களைப் பற்றியும், ஒரு விஷயத்துல நான் இதைத்தான் முடிவெடுக்கப்போறோம்னு பெரிய விவாதத்துக்குப் பிறகுதான், அறிக்கையே வரும். டாக்டர், வழக்கறிஞர்... இப்படி எல்லாத் துறையில இருக்கிறவங்களும் சேர்ந்து ஒரு பிரச்னையைப் பற்றி பேசுறதைப் பார்க்கும்போது, நிச்சயமா அதுக்கான தீர்வு கிடைக்கும்னு நமக்கும் தோணும்.’’

``சினிமா, டிவி நிகழ்ச்சிகள், டிஜிட்டல் சேனல்... எப்படி எல்லாத்தையும் சமாளிக்கிறீங்க?’’ 

``எல்லாத்துக்கும் என் குடும்பம்தான் காரணம். கடின உழைப்பு இருந்தால், என்ன வேணாலும் சாதிக்கலாம்னு சொல்லித்தான் வளர்த்தாங்க. என் கணவரும் எனக்கு ரொம்ப சப்போர்ட். அவர் ஒரு ஃபிலிம் எடிட்டர். இப்போ, நெட்ஃபிளிக்ஸுக்காக வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கார். என் கனவுக்கு என் குடும்பம் தடைபோட்டதே இல்லை. இந்தத் துறையில வேலை பார்க்கிறது ரொம்பவே கஷ்டம். ஒரு படம் சரியா போகலைனா மனசு உடைஞ்சிடாம, அந்தத் தோல்வியை அடுத்த படத்தின் வெற்றிக்கான முதல் படியா மாத்திக்கணும். அதைத்தான் பல பெண் இயக்குநர்கள் தவறவிட்டுறாங்க.’’ 

``அடுத்து என்ன?’’

``இந்தப் படத்தை தயாரித்த `சரிகம’ நிறுவனம், அடுத்த படத்தை பாலிவுட்ல தயாரிக்கிறதாவும், கதை இருந்தா சொல்லுங்கன்னும் சொல்லியிருக்காங்க. அதுக்காக, டூயல் ஹீரோ சப்ஜெக்ட்ல ஒரு த்ரில்லர் கதையை எழுதிக்கிட்டிருக்கேன்.’’