Published:Updated:

தமிழுக்கு வரும் `ஆதி' வில்லன் சாய் குமார் மகன் ஆதி!

சந்தோஷ் மாதேவன்
தமிழுக்கு வரும் `ஆதி' வில்லன் சாய் குமார் மகன் ஆதி!
தமிழுக்கு வரும் `ஆதி' வில்லன் சாய் குமார் மகன் ஆதி!

`ஆதி', `இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்', `தெனாவட்டு' போன்ற தமிழ்ப் படங்களில் வில்லனாக நடித்தவர் சாய் குமார். தெலுங்கு சினிமாவின் முன்னணி வில்லன்களில் ஒருவரான இவர் கன்னட மொழியிலும் பல படங்களில் நடித்தவர். இவர் மகன் ஆதி தெலுங்கில் வளர்ந்து வரும் கதாநாயகன். தற்போது, தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் ஒரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் பதிக்கிறார்.

தமிழுக்கு வரும் `ஆதி' வில்லன் சாய் குமார் மகன் ஆதி!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தை எம்.ஜி. ஆரா சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் காவ்யா மகேஷ், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி.குமார் மற்றும் நியூ ஏஜ் சினிமா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். வேதிகா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை கார்த்திக் - விக்னேஷ் சகோதரர்கள் இயக்குகிறார்கள். 

இது தொடர்பாக தயாரிப்புத் தரப்பிலிருந்து வந்த அறிவிப்பில், ``கார்த்திக் மற்றும் விக்னேஷ் சொன்ன கதையை தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி, ஒரு பார்வையாளராக மிகவும் ரசித்தோம். சினிமா மீதான அவர்களின் பேரார்வம் மற்றும் புதுமையான கூறுகளை முடிந்தவரை  படத்தில் சேர்க்கும் அவர்களின் முயற்சி மிகச் சிறப்பானது" என்று சொல்லப்பட்டது.

மேலும், இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் கூறும்போது, ``தென்னிந்திய சினிமாவில் மொழி மற்றும் எல்லை போன்ற தடைகள் குறைந்து கொண்டு வரும் வேளையில், தமிழ் ரசிகர்களையும் கவரும் வகையில் படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறோம். இயற்கையாகவே, இந்தப் படத்தின் கதை மற்றும் கூறுகள் உலகளாவிய ஒரு விஷயம், இது அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பார்வையாளர்களையும் ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு சி.சத்யா இசையமைக்கிறார். மேலும், `2.0' படத்தில் நீரவ் ஷாவிடம் உதவியாளராகப் பணிபுரிந்த கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தலக்கொண்டா மற்றும் சித்தூருவின் அழகிய இடங்களில் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

சந்தோஷ் மாதேவன்