Published:Updated:

"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்!" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி மாளவிகா அவினாஷ்

'கே.ஜி.எஃப்' படத்தில் நடித்த அனுபவத்தையும், 'கே.ஜி.எஃப் 2' படம் குறித்த தகவல்களையும் பகிர்ந்துகொள்கிறார், நடிகை மாளவிகா அவினாஷ்.

"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்!" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி மாளவிகா அவினாஷ்
"எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்கனு சொன்னார், இயக்குநர்!" - 'கே.ஜி.எஃப் 2' பற்றி மாளவிகா அவினாஷ்

த்து வருடங்களுக்கு முன்பு ஒரு கன்னட சேனலில், 'பதுக்கு ஜடக்காபண்டி' என்ற சட்ட நிகழ்ச்சியை நடத்தினார், மாளவிகா அவினாஷ். பிறகு, பல கன்னடப் படங்களில் நடித்தார். தமிழில் 'ஜேஜே' உட்பட எண்ணிக்கையில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் தனக்கான இடத்தைப் பெற்றிருக்கிறார். சில வருடங்களுக்கு முன் முடிந்த 'செல்லமே' தொடரில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். நடிகை, வழக்கறிஞர், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்ட மாளவிகாவிற்கு, 'KGF' ஜாக்பாட்டாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து, மாளவிகாவிடம் பேசினேன்.

"என் சினிமா அனுபவத்தில், இவ்வளவு பிரமாண்டமான ஒரு படத்தைப் பார்த்ததில்லை. இந்தப் படத்தில் என்னைக் கமிட் பண்றதுக்கு, ரெண்டு வருஷம் முன்னாடியே கிட்டத்தட்ட பெரும்பகுதி படப்பிடிப்பை முடிச்சிருந்தாங்க. பிறகு என்னை எதுக்கு இயக்குநர் பிரஷாந்த் கூப்பிட்டார்னு தெரியாம போனேன். ஏற்கெனவே அவர் இயக்கிய 'Ugramm' படத்தைப் பார்த்திருக்கேன். எனக்குப் பிடிச்ச படம் அது.  'கே.ஜி.எஃப்'ல என் கதாபாத்திரம், தீபா. ஒரு சேனலில் பேட்டி எடுக்கும் இடத்தில் இருப்பேன். கதைப்படி, நான் எந்தவித காம்ப்ரமைஸூம் ஆகாத ஆள். சுலபத்தில் யார் சொல்றதையும் நம்பமாட்டேன். கிட்டத்தட்ட அர்னாப் கோஸ்வாமி மாதிரி கம்பீரமா, நேர்மையா இருக்கணும்... இப்படி கேரக்டரைப் பற்றி விளக்கிச் சொன்னதும், ஓகே சொல்லி நடிச்சேன். அதை சிறப்பாகவே பண்ணியிருக்கேன்னு நம்புறேன்." என்றவர், தொடர்ந்தார்.

"இந்தப் படம் நல்ல படமா வரும்னு என்னால ஸ்பாட்லயே கணிக்க முடிஞ்சது. ஏன்னா, எவ்வளவு பெரிய நடிகர், நடிகையா இருந்தாலும், அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாம, அவருக்குத் தேவையான காட்சி வர்ற வரைக்கும் உழைப்பார், இயக்குநர் பிரஷாந்த். படத்துல வொர்க் பண்ண யாரையும் ஷூட்டிங் ஸ்பாட்ல செல்போன் பயன்படுத்த அனுமதிக்கமாட்டார். படத்துல நடிச்ச ஆனந்த் நாக் பல வருட சீனியர். ஆனால், அவர்கிட்டகூட எந்தக் காம்ப்ரமைஸும் ஆனதில்லை அவர். டப்பிங் வொர்க்லகூட அந்த அர்ப்பணிப்பு இருந்தது. இன்னும் பலமுறை அந்தப் படத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது எவ்வளவுப் பெரிய விஷயம். ஹீரோ யாஷ்கூட நான் பல படங்கள்ல வொர்க் பண்ணியிருக்கேன். அவர் எனக்குத் தம்பி! அவருக்கும், படத்துல நானும் நடிக்கிறேன்னு கடைசியிலதான் தெரியும்." என்றவர், 'கே.ஜி.எஃப் 2' அனுபவங்களைச் சொன்னார்.

"'கே.ஜி.எஃப் - இரண்டாவது சேப்டரி'ல் என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும்னு இயக்குநர் சொல்லியிருக்கிறார். கன்னட சினிமாவைப் பொருத்தவரை, இவ்வளவு கோடி செலவு பண்ணி, இவ்வளவு ஆள்களை வெச்சுப் பண்ண படத்தை இதுவரை யாரும் பார்த்திருக்கமாட்டாங்க. சின்ன மார்க்கெட் உள்ள கன்னடப் படங்களில் இப்படி ஒரு பிரமாண்டத்தைக் கொடுப்பதற்கெல்லாம் மிகப்பெரிய தைரியம் வேணும். அது, பிரஷாத்துக்கு நிறைய இருக்கு.

கன்னடத்துல மட்டுமில்ல, படத்தை பல மொழிகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கார். இந்தப் படத்துக்குப் பிறகு, கன்னடத்துல பல பெரிய பட்ஜெட் படங்கள் வரும்னு எதிர்பார்க்கலாம். 2016-ல் ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்ட படம் 'கே.ஜி.எஃப்'. படத்தோட ப்ரீ-ப்ரொடக்‌ஷன் வேலைகளுக்கு மட்டுமே நிறைய நேரத்தை செலவழிச்சிருக்காங்க. இப்போ, இரண்டாவது சேப்டர்ல, 'நிறைய வேலைகள் இருக்கும், பல நாள்கள் வேலை பார்க்கவேண்டி இருக்கும்... எல்லாத்துக்கும் தயாராகிக்கோங்க'னு சொல்லியிருக்கார், இயக்குநர். 'கே.ஜி.எஃப் 2' படமும் பெரிய அளவில் பேசப்படும்!" என்று முடிக்கிறார், மாளவிகா.