Published:Updated:

``படம் பார்த்துட்டேன்... `ஆஹான்’னு எப்போ சொல்லலாம்னா..?’’ - `சூப்பர் டீலக்ஸ்’ டிசைனர் கோபி பிரசன்னா

`சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் போஸ்டர் டிசைனர், கோபி பிரசன்னா. இப்படத்துக்குப் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.

``படம் பார்த்துட்டேன்... `ஆஹான்’னு எப்போ சொல்லலாம்னா..?’’ - `சூப்பர் டீலக்ஸ்’ டிசைனர் கோபி பிரசன்னா
``படம் பார்த்துட்டேன்... `ஆஹான்’னு எப்போ சொல்லலாம்னா..?’’ - `சூப்பர் டீலக்ஸ்’ டிசைனர் கோபி பிரசன்னா

``எனக்கும் தியாகராஜன் குமாரராஜாவுக்கும் 18 வருட நட்பு...’’ என்கிறார் கோபி பிரசன்னா. `கத்தி’, `மெர்சல்’, `சர்கார்’, `விவேகம்’, `சூப்பர் டீலக்ஸ்’ எனப் பல பெரிய படங்களின் போஸ்டர் டிசைனர் இவர். விஜய் சேதுபதி திருநங்கை கேரக்டரில் நடித்திருக்கும் `சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நாளிலிருந்தே படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது. இப்படத்தின் போஸ்டர் டிசைன் அனுபவம் குறித்து கோபி பிரசன்னாவிடம் பேசினேன். 

``காலேஜ் முடிச்சுட்டு டிசைனரா பல கம்பெனிகள்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போதான், குமாரராஜா `ஆரண்ய காண்டம்’ பற்றி சொல்லிக்கிட்டிருந்தார். கதையைக் கேட்டுக்கிட்டிருந்தப்போவே, `படத்துக்கு இப்படி டிசைன் பண்ணா நல்லா இருக்கும்’னு ஒரு ஐடியா சொன்னேன். `அப்படியா... எங்கே பண்ணிக்காட்டு’னு சொன்னார். அப்படியே நானே டிசைனர் ஆகிட்டேன். அந்தப் படத்துக்கு போஸ்டர் டிசைன் பண்றப்போ, சினிமா நம்ம வாழ்க்கையா மாறும்னு நினைக்கவே இல்லை. தவிர, `ஆரண்ய காண்டம்’ல வொர்க் பண்றப்போ, எனக்கு சினிமாவுல இப்படி ஒரு ஃபீல்ட் இருக்குன்னே தெரியாது. குமாரராஜா முதல் படம் எடுத்து ரிலீஸ் பண்ணி, ரெண்டாவது படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் இருந்தப்போ, நான் 45 படங்களுக்கு போஸ்டர் டிசைன் பண்ணி முடிச்சிருந்தேன். `சூப்பர் டீலக்ஸ்’ படத்தோட ஒன்லைன் தொடங்கி, சந்திச்சுப் பேசுறப்போ எல்லாம் இந்தக் கதையைப் பத்தி பேசிக்கிட்டிருப்பார் தியாகராஜன். அதனால, படத்தோட கதை, எதை நோக்கிப் போகும், திரைக்கதை எப்படி இருக்கும்... எல்லாமே தெரியும்’’ என்றவரிடம் சில கேள்விகள் கேட்டேன். 

``படத்தின் போஸ்டர் டிசைன்ல, பூனைக்குட்டி முதற்கொண்டு இருக்கே?’’ 

``இந்தப் படத்தைப் பொறுத்தவரை படத்துல வர்ற எல்லோருமே ஹீரோதான். இதுவரை ரெண்டு போஸ்டர் ரிலீஸாகியிருக்கு, இன்னும் சில சீக்கிரமே வரும். மத்த படங்களுக்கு இயக்குநர்கள் குவான்டிட்டியை எதிர்பார்ப்பாங்க; தியாகராஜன் குவாலிட்டிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.’’  

``80 டேக் நடிக்கச் சொல்லி திருப்தியாகக்கூடிய நபர் தியாகராஜன். போஸ்டர் டிசைன்ஸ் பொறுத்தவரை எப்படி?’’

``குமாரராஜாவும் நானும் ஒரே வேவ் லென்த்ல இருப்போம். அதனால, எங்களுக்குள்ள பெரிய விவாதங்களெல்லாம் வராது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு மட்டும் ரெண்டு மூணு ஃபார்மேட்ல வொர்க் பண்ணோம், அதுல ஒரு போஸ்டரை ஃபைனல் பண்ணார்.’’ 

``விஜய் சேதுபதியோட சமீபத்திய படங்களுக்கு நீங்கதான் போஸ்டர் டிசைனர். அவருடனான இந்தப் பயணம் எப்படியிருக்கு?’’

``அவரோட ஐந்து படங்களுக்கு வொர்க் பண்ணியிருக்கேன். ஆறாவது படத்துக்கான வேலைகள் போய்க்கிட்டிருக்கு. நான் ஆச்சர்யப்படுற விஷயம் என்னன்னா, அவருடைய ஒவ்வொரு படத்துக்கும் வொர்க் பண்றப்போ அது விஜய் சேதுபதி படத்தின் போஸ்டர் அப்படீங்கிற எண்ணம் இருக்காது. ரசூல், ராம், ஷில்பா இப்படி அந்ததந்தக் கேரக்டர்கள்தான் வரும். `செக்கச்சிவந்த வானம்’, `96’, `சீதக்காதி’, `சூப்பர் டீலக்ஸ்’ படங்களின் போஸ்டர் வொர்க்ஸ் எல்லாம் ஒரே நேரத்துல நடந்தது. எல்லாத்தையும் முடிச்சுட்டுப் பார்க்கிறப்போதான், இது அத்தனையும் விஜய் சேதுபதி படம்ங்கிறதே ஞாபகத்துக்கு வந்தது.’’  

``அதிக மெனக்கெட்டு வொர்க் பண்ண டிசைன் எது?’’

`` `சூப்பர் டீலக்ஸ்’தான். ஏன்னா, பெரும்பாலும் போஸ்டர் டிசைன் வேலையை ரெண்டுநாள்ல முடிச்சிடுவேன். இந்தப் படத்தின் செகண்ட் லுக் போஸ்டருக்கு எனக்கு ஒன்றரை மாசம் தேவைப்பட்டுச்சு!’’ 

`` `சூப்பர் டீலக்ஸ்’ படம் பார்த்துட்டீங்களா..?’’ 

``தியாகராஜன் கதையைச் சொல்றப்போவே படம் பார்க்கிற ஃபீல் கிடைக்கும். நான் படத்தைப் பார்த்துட்டேன். சொன்ன கதை, காப்பி பேஸ்ட் பண்ண மாதிரி அப்படியே ஸ்கிரீன்ல இருந்தது! டிரைலர்ல வர `ஆஹான்’னு சொல்றதுக்கான வாய்ப்பு படத்துல நிறைய இருக்கு.’’