Published:Updated:

ராதாரவி - நயன்தாரா விவகாரத்தில் நடிகர் சங்கத்தில் என்ன நடக்கிறது? - விளக்குகிறார் நடிகர் பொன்வண்ணன்

ஆ.சாந்தி கணேஷ்

``திரைத்துறையிலும் உள் புகார் கமிட்டி அமைக்க வேண்டுமென்று லட்சுமி, ஸ்ரீப்ரியா, சுஹாசினி, ரோகிணி போன்ற ஆளுமைகளிடம் தென்னிந்திய நடிகர் சங்கம் பேசியது உண்மை.’’

ராதாரவி - நயன்தாரா விவகாரத்தில் நடிகர் சங்கத்தில் என்ன நடக்கிறது?  - விளக்குகிறார்  நடிகர் பொன்வண்ணன்
ராதாரவி - நயன்தாரா விவகாரத்தில் நடிகர் சங்கத்தில் என்ன நடக்கிறது? - விளக்குகிறார் நடிகர் பொன்வண்ணன்

டிகை நயன்தாராவைப் பற்றிய நடிகர் ராதாரவியின் விமர்சனமும், அதற்கு நயன்தாரா வெளியிட்ட அறிக்கையும்தான், நேற்று முழுக்க சமூகத்தின் பேசு பொருளாக இருந்தது. இதில் நம்முடைய கண்களுக்கும் கருத்துக்கும் மிக மிக முக்கியமானதாகத் தென்பட்டது, நயன்தாராவின் அறிக்கையில் இருந்த குறிப்பிட்ட இரண்டு வரிகள்தான். `தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் ஒரு தாழ்மையான கேள்வியைக் கேட்கிறேன். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி உள் புகார் கமிட்டியை நிறுவுவீர்களா? விசாகா வரையறைப்படி விசாரணை நடத்தப்படுமா?' என்று அழுத்தம் திருத்தமாக இரண்டு கேள்விகளைத் தன்னுடைய கண்டன அறிக்கையில் நடிகை நயன்தாரா எழுப்பியிருந்தார். நயன்தாரா சார்பில், இந்தக் கேள்விகளை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொன்வண்ணனிடம்  கேட்டோம். 

``ஏற்கெனவே பெப்சி, தயாரிப்பாளர் சங்கம் போன்றவை திரைத்துறையில் இருக்கிற பெண்களின் பிரச்னைகளைக் கவனித்து வந்தாலும்கூட, மீ டூ பிரச்னைக்குப் பிறகு, இதற்கென்று தனியாக ஒரு அமைப்பு வேண்டுமென்கிற விழிப்புணர்வு வந்திருக்கிறது.  

திரைத்துறையைப் பொறுத்தவரை பெண்கள்,  நடிகைகள், துணை நடிகைகள், உதவியாளர்கள் என மூன்று பிரிவுகளில்தான் இருக்கிறார்கள். இதில், நடிகைகளுக்கு மேக்கப் மேன், மேனேஜர் என ஒரு பாதுகாப்பு வட்டம் இருக்கிறது. இதேபோல, துணை நடிகைகளாக இருக்கிற பெண்களும் தங்களுடன் நடனமாடுகிற ஆண்களோ அல்லது டான்ஸ் மாஸ்டர்களோ தங்களிடம் தவறாக நடக்க முயன்றால், அவர்களுடைய யூனியனில் புகார் கொடுத்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ரெட் கார்டு போடுவார்கள். அடுத்து, மேக்கப் செய்பவர்கள், ஹேர் டிரெஸ் செய்கிற பெண்கள், உணவு பரிமாறுகிற பெண்கள் போன்ற உதவியாளர்களுக்கு ஒரு பிரச்னை வந்தால், அவர்களுக்கென்று இருக்கிற யூனியனில் போய் புகார் கொடுப்பார்கள். உதாரணத்துக்கு, `இந்த மேக்கப் மேன் என்கிட்டே தவறா நடந்துக்கப் பார்க்கிறார்’ என்று புகார் செய்கிற உரிமையை அவர்களுடைய யூனியனே அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது. 

புதுமுகமாக நடிக்க வந்த நடிகைகளுக்குத்தான் இந்தப் பாதுகாப்புகள் இருக்காது. இவர்களுக்கு வாய்ப்புத் தருவதாக ஆசை காட்டி தவறாகப் பயன்படுத்துகிற மனிதர்கள், எல்லாத்துறைகளைப் போலவும் சினிமாத்துறையிலும் இருக்கிறார்கள். இந்தப் பெண்கள்தான் தங்கள் நிலைமையை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருபவர்கள்’’ என்றவரிடம், உச்ச நீதிமன்ற ஆணைக்கிணங்க நடிகர் சங்கத்தில் உள்விவகார புகார் ஆணையத்தை நிறுவுவீர்களா என்கிற நடிகை நயன்தாராவின் கேள்வியை முன் வைத்தோம். 

``மீ டூ மாதிரியான விழிப்புணர்வு பெண்களுக்கு வந்த பிறகு, பாதிக்கப்பட்ட  திரைத்துறைப் பெண்கள் யூனியனில் வந்து புகார் கொடுப்பதைவிடப் பொதுவெளியில் தங்களுக்கு நிகழ்ந்த பிரச்னையைச் சொல்வதற்கே விரும்புகிறார்கள். அதனால், தென்னிந்திய நடிகர் சங்கம், திரைத்துறையிலும் உள் புகார் கமிட்டி அமைக்க வேண்டுமென்று முடிவெடுத்தது. லட்சுமி, ஸ்ரீப்ரியா, சுஹாசினி, ரோகிணி என்று  கடந்த காலத்தில் திரைத்துறையில் ஆளுமையாக இருந்த பெண்களை வைத்து ஒரு கமிட்டி அமைக்கலாம் என்று அவர்கள் எல்லோரிடமும் பேசியது. அந்தக் கமிட்டி முறையாக விதிப்படி திட்டமிடப்படவில்லையே தவிர, அந்தக் கமிட்டி செயல்பாட்டில்தான் இருக்கிறது. 

எங்களுடைய  நிர்வாக வேலைகள் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்தக் காலகட்டத்தில் ஒரு விஷயத்தைச் செய்து, மறுபடியும் ஒரு நிர்வாகம் வந்து, அது கலைத்து என்று இருக்க வேண்டாமே. ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, இந்தக் கமிட்டி அமைப்பதற்கு முறையாகச் செய்ய வேண்டியவற்றை செய்து, அதைப் பதிவும் செய்யலாம் என்பது எங்களுடைய எண்ணம். எதுவாக இருந்தாலும் ஏப்ரலுக்குப் பிறகு, புதிய நிர்வாகம் இதைச் செய்யும்’’ என்றவர் நயன்தாராவைப் பற்றிய ராதாரவியின் விமர்சனம் பற்றி பேச ஆரம்பித்தார்.

``நயன்தாரா விஷயத்தில், தார்மிக அடிப்படையில் நடிகர் சங்கம் நேற்றைக்கே தன்னுடைய கண்டனத்தை ராதாரவிக்குத் தெரிவித்துவிட்டது. தவிர, அதே தார்மிக அடிப்படையில்தான்,  ராதாரவியுடன் இணைந்து வேலைபார்க்க மாட்டோம் என்று சொன்னதும். மற்றபடி, சட்டப்படி ராதாரவி திரைத்துறையில் வேலைபார்ப்பதைத் தடுக்க முடியாது. அவருக்குத் தண்டனை கொடுக்கவும் நடிகர் சங்கத்துக்கு அதிகாரம் கிடையாது. ராதாரவியின் பேச்சுக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டும் அல்லது அவர் மீது மான நஷ்ட வழக்கு போட வேண்டும் என்றால், கோர்ட்டுக்குத்தான் போக வேண்டும்’’ என்றவரிடம், விசாகா வரையறைப்படி விசாரணை நடத்தப்படுமா என்கிற நயன்தாராவின் வேண்டுகோளை நினைவுபடுத்தினோம். 

``நயன்தாராவின் வேண்டுகோள் மிக நியாயமானது. ஆனால், இதற்கான பதிலை நாசர் சார்தான் சொல்ல முடியும். தவிர, இதைப்பற்றி நயன்தாரா நடிகர் சங்கத்துக்குக் கடிதம் எழுதினால்தான், மேற்கொண்டு எதையும் செய்ய முடியும். நயன்தாரா இதுவரை கடிதமாக புகார் எதுவும் தரவில்லை. நடிகர் சங்கம் தார்மிக நடவடிக்கை என்பது வேறு; நயன்தாரா புகார் சொல்லி நடவடிக்கை எடுப்பது என்பது வேறு’’ என்று தன் பேச்சை முடித்துக்கொண்டார் பொன்வண்ணன். நயன்தாராவின் வேண்டுகோளுக்கான பதிலைத் தெரிந்துகொள்ள நடிகர் நாசருக்குப் போன் மற்றும் மெசேஜ் செய்தும், அவரிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.