Published:Updated:

"இதுமட்டுமல்ல, அந்தப் படமும் பாபி சிம்ஹா பிரச்னை பண்ணதாலதான் தோல்வி!" - 'அக்னி தேவி' பிரச்னை

செ.சல்மான் பாரிஸ்
உ. சுதர்சன் காந்தி.

'அக்னி தேவி' படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என நீதிமன்றம் தடை விதிக்கவே இல்லை என பாபி சிம்ஹாவுக்கு எதிராக அப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஸ்டாலின் கொந்தளிக்கிறார்.

"இதுமட்டுமல்ல, அந்தப் படமும் பாபி சிம்ஹா பிரச்னை பண்ணதாலதான் தோல்வி!" - 'அக்னி தேவி' பிரச்னை
"இதுமட்டுமல்ல, அந்தப் படமும் பாபி சிம்ஹா பிரச்னை பண்ணதாலதான் தோல்வி!" - 'அக்னி தேவி' பிரச்னை

'அக்னி தேவி' படத்தின் ஹீரோ பாபி சிம்ஹாவுக்கும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்னையாகி போலீஸ் புகார், நீதிமன்ற வழக்கு என மிகப்பெரிய மல்லுக்கட்டு நடந்துகொண்டிருக்கிறது.

இப்படத்தை, ஜான் பால்ராஜ் - ஷாம் சூர்யா ஆகிய இருவரும் தயாரித்து, இயக்கியுள்ளனர். இதில், பாபி சிம்ஹா போலீஸ் அதிகாரியாகவும், மதுபாலா வில்லியாகவும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 300-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ''இயக்குநர்  ஜான் பால்ராஜ் என்னிடம் 'அக்னி தேவ்' கதையைச் சொல்லி வேறு ஒரு கதையைப் படமாக எடுத்ததாலும், நான் நடித்த காட்சிகளைப் போட்டுக் காட்ட மறுத்ததாலும், அப்படத்தில் தொடர்ந்து நடிக்கவில்லை. இது சம்பந்தமாக கோவை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால், படத்தை ரீலிஸ் செய்துள்ளனர்.'' என்று இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததுடன், படத்தை வெளியிட தடை கோரி புதிய மனு ஒன்றையும்  கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். "பல காட்சிகளில் என்னைப்போல மார்ஃபிங் செய்து எடுத்துள்ள இப்படம் வெளியாகக்கூடாது எனத் தடை வாங்கியிருதேன். ஆனால், தடையை மீறி படத்தை ரீலிஸ் செய்துள்ளனர்.'' என்கிறார், அவர்.   

இப்படத்தின் பிரச்னை குறித்து படத்திற்கு ஃபைனான்ஸ் செய்தவரும், இணை தயாரிப்பாளருமான ஸ்டாலினிடம் பேசினோம். ''இப்படத்தின் கதையில் பாபி சிம்ஹா தலையீடு அதிகமாக இருந்தது. அவர் ஐந்து நாள்கள்தான் ஷூட்டிங் வந்ததாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் 13 நாள்கள் நடித்ததற்கான ஆதாரம் உள்ளது. அவர் கோபப்பட்டுப் போனவுடன், அவரிடம் இது குறித்துப் பேச பலமுறை அழைத்தோம். அவர் வரவில்லை. டப்பிங் பேச அழைத்தபோதும் ரெஸ்பான்ஸ் இல்லை. அதனால், அவர் இருந்த காட்சிகளுக்கு மற்றொருவரை டப்பிங் பேசவைக்க முடிவு செய்தோம். அதேபோல, இவர் வராததால் இரண்டு ஆக்‌ஷன் காட்சிகளுக்கு வழக்கமாக இவருக்கு டூப் போடும் நபரை வைத்து எடுத்து முடித்தோம். இவரைத் தவிர படத்தில் எல்லாம் சரியாகத்தான் நடந்தது. படத்தின் இயக்குநர் ஜான் பால்ராஜ் மீது ஜாமீனில் வெளிவரமுடியாதபடி வழக்கைப் பதிவு செய்துள்ளார், பாபி சிம்ஹா. இப்போது இயக்குநர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. படம் முடிந்து திரைக்கு வரும் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் நடந்த பேச்சுவார்த்தையில், பாபி சிம்ஹா நடந்துகொண்ட விதம் அநியாயமானது.

முறைப்படி போட்ட ஒப்பந்தத்தைக் கிழித்துவிட்டு, அவர் சொல்லும்படி ஒப்பந்தம் போடவேண்டும், படத்தின் எடிட்டிங்கை நான்தான் இறுதி செய்வேன், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான ஜான் மன்னிப்பு கேட்டுக் கடிதம் கொடுக்கவேண்டும், எடுத்த காட்சிகளை நீக்கிவிட்டு, மீண்டும் புதிதாகப் படப்பிடிப்பை நடத்த வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் நடிப்பேன் என்று சொல்லியிருக்கிறார். இந்தப் படத்துக்கு நீதிமன்றம் தடை செய்ததுள்ளது என்று ஊடகங்களுக்குப் பொய்யான தகவலைப் பரப்பினார். உண்மையாகவே நீதிமன்றம் படத்துக்குத் தடை விதித்திருந்தால், சென்சார் கிடைத்திருக்காது, க்யூபில் ரிலீஸ் செய்யவே விட்டிருக்கமாட்டார்கள். படத்தை நம்பி ஒருத்தர் தயாரிக்கிறார், இதற்குப் பின் வேலை பார்த்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி அவர் கொஞ்சம்கூட யோசிக்கவில்லை." என்றார், ஆதங்கத்துடன்!  

இந்தப் படத்தை விநியோகம் செய்த வேல்முருகன் என்பவரைத் தொடர்புகொண்டோம். "படத்துல இவ்ளோ பிரச்னை இருக்குனு எனக்குத் தெரியாது. அவர் அமைதியா இருந்திருந்தாலே மக்கள் எப்போவும்போலப் படம் பார்க்க வந்திருப்பாங்க. இவராலதான் மக்கள் வரலை. 'Status Quo' தவிர எந்த ஒரு நோட்டீஸும் நீதிமன்றம் எங்களுக்கு அனுப்பவில்லை. நீதிமன்றம் தடை விதித்திருந்தால் எப்படி ரிலீஸ் பண்ணமுடியும்?! இதேமாதிரி அவர் பலமுறை பண்ணியிருக்கார். 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படத்துக்கும் இதேதான் நடந்தது. அந்தப் படம் சரியா போகாததுக்கும் இவர் ஐந்து நாள் நடிக்காததுதான் காரணம். கடைசியா பாதிக்கப்படுறது அவங்களை நம்பிப் பணம்போட்ட நாங்கள்தான்." என்றார்.    

இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த கூட்டத்தில் இருதரப்பும் ஆஜராகியுள்ளது. சங்க நிர்வாகிகள், அவரது படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை எனவும், ஒரு படத்தைக் ஓடவிடாமல் தடுக்க நீதிமன்ற உத்தரவு எனப் பொய் சொன்ன பாபி சிம்ஹா மீது 'அக்னி தேவி' தயாரிப்பாளர் வழக்கு போட்டு நஷ்டஈடு  கோரவேண்டும். இது போன்றவர்களால் புதிய தயாரிப்பார்கள், இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் பாதிக்கப்படுவது தடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார்களாம்.