Published:Updated:

``ஒன்லைன் வாய்ப்பு, ஊட்டி மழை, ரஜினி சொன்ன சஜஷன்!" - ஆர்.சுந்தர்ராஜன் #30YearsOfRajathiraja

``ஒன்லைன் வாய்ப்பு, ஊட்டி மழை, ரஜினி சொன்ன சஜஷன்!" - ஆர்.சுந்தர்ராஜன் #30YearsOfRajathiraja

இளையராஜா தயாரிப்பில், ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற `ராஜாதி ராஜா' படம் வெளியாகி, 30 ஆண்டு நிறைவடைந்திருக்கிறது. இப்படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார், படத்தின் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன்.

``ஒன்லைன் வாய்ப்பு, ஊட்டி மழை, ரஜினி சொன்ன சஜஷன்!" - ஆர்.சுந்தர்ராஜன் #30YearsOfRajathiraja

இளையராஜா தயாரிப்பில், ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற `ராஜாதி ராஜா' படம் வெளியாகி, 30 ஆண்டு நிறைவடைந்திருக்கிறது. இப்படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார், படத்தின் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன்.

Published:Updated:
``ஒன்லைன் வாய்ப்பு, ஊட்டி மழை, ரஜினி சொன்ன சஜஷன்!" - ஆர்.சுந்தர்ராஜன் #30YearsOfRajathiraja

ஜினி இரட்டை வேடத்தில் நடித்து `சில்வர் ஜூப்ளி' கொண்டாடிய திரைப்படம், `ராஜாதி  ராஜா'. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 1989-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான இப்படம் இப்போது டிவியில் ஒளிபரப்பப்படும்போதும் ரசிக்கப்படுகிறது. ரஜினி, ராதா, நதியா, ராதாரவி எனப் பல நட்சத்திரங்கள் அணிவகுத்த `ராஜாதி ராஜா' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார், படத்தை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜன்.

`` `அம்மன் கோவில் கிழக்காலே' படத்தின் கதையை ரஜினியை மனதில் வைத்துதான் உருவாக்கினேன். அப்போது முரளி நடித்த `பூ விலங்கு' திரைப்படம் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருந்தது. அதனால், முரளியையும் அவருக்கு ஜோடியாக ரேவதியையும் ஒப்பந்தம் செய்ய நினைத்து பெங்களூரு சென்று முரளி அப்பாவிடம் அட்வான்ஸ் பணமும் கொடுத்துவிட்டு வந்தேன். முரளி நடித்த கன்னடப் படம் ரிலீஸான பிறகே தமிழ்ப் படத்தில் நடிப்பார் என்று அவர் அப்பா சொன்னார். அப்போது, என் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த `வைதேகி காத்திருந்தாள்' படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்ததால், `அம்மன் கோவில் கிழக்காலே' படத்தில் விஜயகாந்தையும், அவருக்கு ஜோடியாக ராதாவையும் ஒப்பந்தம் செய்து படத்தை எடுத்தேன். 

நான் `ராஜாதி ராஜா' படத்தை இயக்குவதற்கு முன்பே `பயணங்கள் முடிவதில்லை', `வைதேகி காத்திருந்தாள்', `குங்குமச் சிமிழ்' போன்ற சில்வர் ஜூப்ளி படங்களை இயக்கியிருந்தேன். சினிமாவில் உள்ள எல்லா இயக்குநர்களுக்கும் சூப்பர் ஸ்டாரை இயக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. எனக்கும் இருந்தது. இந்தப் படத்துக்கு முன்பே சினிமா ஷூட்டிங்கில் இரண்டு முறை ரஜினியைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அப்போது, `` `வைதேகி காத்திருந்தாள்', `நான் பாடும் பாடல்' படங்களின் காமெடி டிராக் நீங்க எழுதியதா?"னு கேட்டார். `என் எல்லாப் படத்துக்கும் நான்தான் காமெடி டிராக் எழுதினேன்'னு சொன்னேன். எனக்கும், பஞ்சு அருணாச்சலம் அண்ணனுக்கும் நல்ல பழக்கம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரைச் சந்தித்துப் பேசுவேன். ஒருமுறை பஞ்சு அண்ணனைப் பார்க்கச் சென்றபோது, தீவிர யோசனையில் இருந்தார். `என்ன அண்ணே கடுமையான சிந்தனை?' என்று கேட்டேன். `இளையராஜா தயாரிக்கும் படத்துல நடிச்சுக் கொடுக்கிறதா ரஜினி சொல்லியிருக்கார். எஸ்.பி.முத்துராமன் டைரக்‌ஷன். கதைதான் அமையலை, யோசிச்சுக்கிட்டிருக்கேன்' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடனே நான், ``ரஜினிக்கு கதை அமைக்கணும்னா, `எங்கள் வீட்டுப் பிள்ளை' எம்.ஜி,ஆர் மாதிரி இரட்டை வேடம் போடுற ஆள்மாறாட்டக் கதை யோசிக்கலாம். இல்லைனா, டான் கதையை எழுதலாம்"னு சொன்னேன். அப்போ, `ஏம்பா சுந்தர்ராஜா.. உங்ககிட்ட அதுமாதிரி ஏதாவது கதை இருக்கா?' என்றார். கொஞ்சமும் தயங்காமல், ``உலகமே தெரியாத கிராமத்து அப்பாவியா ஒரு ரஜினி. சொந்தமா சம்பாதிச்சு 50,000 ரூபாய் பணம் கொடுத்தால்தான் உனக்குக் கல்யாணம்னு மாமனார் மிரட்டுகிறார். ஜெயிலில் இருக்கிறார், இன்னொரு ரஜினி. 15 நாளில் சாகப்போகும் தூக்குத் தண்டனைக் கைதி. அவர், அப்பாவி ரஜினியிடம் `நான் உனக்குப் பணம் தர்றேன். அதற்குப் பதிலா எனக்காக ஜெயிலில் நீ இருக்கவேண்டும்' என்று சொல்ல, ஆள்மாறாட்டம் ஏற்படுகிறது." இப்படி ஒரு ஒன்லைன் சொல்ல, பஞ்சு அண்ணன் முகம் மலர்ந்தது. `இந்த ஒன்லைன் நல்லாயிருக்கே! இந்தக் கதையை நடிக்கப்போற ரஜினியிடமும், டைரக்‌ஷன் பண்ணப்போற எஸ்.பி.முத்துராமனிடமும் சொல்லட்டுமா... உனக்கு ஆட்சேபனை இல்லையே?!'னு கேட்டார். `தாராளமாகச் சொல்லுங்க!'னு நான் சொன்னேன். 

மறுநாள் நான் சொன்ன ஒன்லைனை ரஜினியிடம் அவர் சொல்ல, அவருக்கும் என் கதை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அன்று இரவு முழுக்க கதையைப் பற்றியே யோசித்து ஒரு முடிவுக்கு வந்த ரஜினி, பஞ்சு அண்ணனுக்கு போன் பண்ணி, `சார் யோசிச்சுப் பார்த்தேன்.. கதையைச் சொன்ன சுந்தர்ராஜனே டைரக்‌ஷனும் பண்ணட்டுமே!' எனச் சொல்லியிருக்கிறார். பிறகு, பஞ்சு அண்ணன் எனக்குப் போன் பண்ணி விவரத்தைச் சொன்னார். நான், `அண்ணே,  தேவையில்லாம என்னால உங்களுக்கும், முத்துராமன் சாருக்கும் மனஸ்தாபம் வந்துடப்போகுது'னு தயங்கினேன். `அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நீங்க டைரக்‌ஷன் பண்ற வேலைகளைப் பாருங்க. மத்ததை நான் பார்த்துக்கிறேன்'னு பச்சைக்கொடி காட்டினார். 

பிறகு, `ராஜாதி ராஜா' பட வேலைகளில் இறங்கினேன். இளையராஜாவின் சொந்தத் தயாரிப்பு என்பதால், ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி இருக்கட்டும் என்று ராஜா சொல்ல, நானும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டேன். ஒருநாள் என்னிடம் கதை கேட்பதற்காக தோட்டா தரணி வருவதாகச் சொல்லியிருந்தார்கள். பாம்குரோவ் ஹோட்டலில் அவருக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். அவர் வராமல் உதவியாளர் ஒருவரை அனுப்பி வைத்தார். நான் ஏற்கெனவே இயக்கிய படங்கள் பற்றி வந்தவரும், தோட்டா தரணி பணியாற்றிய படங்களின் கலை வேலைகள் குறித்து நானும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தோம். ரஜினி நடிக்கும் படத்தின் கதையைச்  சொல்ல, நான் தயாரானேன். திடீரெனக் குறுக்கிட்டவர், `சார். ஒரு விஷயத்தை முன்கூட்டியே சொல்லிடுறேன்' என்று பீடிகை போட்டுப் பேசினார். நானும், `என்ன சொல்லுங்க?' என்று கேட்டேன். `நீங்க சொல்லப்போற கதை நல்லாயிருந்தாதான் நாங்க வேலை செய்வோம். இல்லைன்னா, முடியாது' என்று சொல்ல, எனக்குச் சுருக்கென இருந்தது. `நீங்க சொல்றதை நான் கேட்டுக்கிட்டேன். இப்போ நான் சொல்றதை நீங்க கேளுங்க. என்கூட இந்தப் படத்துல ஆர்ட் டைரக்டரா வேலை செய்ய உறுதி கொடுத்தா, கதையைச் சொல்றேன். இல்லைனா ஒன்லைன்கூட சொல்ல முடியாது, நீங்கள் கிளம்பலாம்' என்று கறாராகச் சொல்லி, அவரை அனுப்பிவிட்டேன்.

ஏனென்றால், சினிமா உலகம் விசித்திரமானது. எல்லோருக்கும் பிடித்த ஒரு கதையைப் புதுசாகக் கேட்கிற ஒருவர், `கதை சரியில்லை' என்று குழப்பத்தை உண்டு பண்ணிவிடுவார்கள். ஏற்கெனவே பஞ்சு அண்ணன், ரஜினி, இளையராஜா என எல்லோருக்கும் பிடித்த கதையைப் படப்பிடிப்புக்குக் கிளம்பும் தறுவாயில், இவர் நல்லா இல்லையெனச் சொல்லிவிட்டால், அது எல்லோரது மனதிலும் குழப்பத்தைக் கொடுக்கும் என்பதால், தோட்டா தரணியின் உதவியாளரிடம் கதையைச் சொல்லவில்லை.

`ராஜாதி ராஜா' ஒரு ரஜினிக்கு ஜோடியாக ராதா. இன்னொரு ரஜினிக்கு, நதியா என்று நான்தான் தேர்வு செய்தேன். ரஜினியும், இளையராஜாவும் மறுப்பு சொல்லாமல் ஒப்புக்கொண்டனர். `ராஜாதி ராஜா' படத்தில் இடம்பெற்ற பாடல் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரஜினியும், ராதாவும் இடம்பெறும் `வா வா மஞ்சள் மலரே..' பாடலை ஊட்டியில் படமாக்கத் திட்டமிட்டு, அங்கே போனோம். எங்களைக் கடுமையான மழை வரவேற்றது. 

ஏற்கெனவே அங்கு பாக்யராஜின் `ரத்தத்தின் ரத்தமே' ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த காரணத்தால், அவருக்குப் போன் செய்து விசாரித்தேன். 'பயங்கரமான மழை. அதனால, ரெண்டுநாளா ஷூட்டிங் நடத்தல!' என்றார். ரஜினியும், ராதாவும் மேக்கப் போட்டு ரெடியாகக் காத்திருந்தார்கள். மழை அதிகமாகிக்கொண்டிருந்ததே தவிர, குறைந்தபாடில்லை. திடீரென எனக்குள் ஒரு யோசனை. குன்னூரில் உள்ள ஒருவருக்குப் போன் போட்டேன். `இங்கேயும் மழை' என்றார். அதற்குக் கீழே உள்ள கோத்தகிரிக்கு போன் போட்டேன். 'இங்கே மழை இல்லை' என்ற பதில் வந்தது. அடுத்த நிமிடமே மொத்த யூனிட்டும் கோத்தகிரிக்குக் கிளம்பி, படப்பிடிப்பை முடித்துவிட்டு ஊட்டிக்குத் திரும்பினோம். மறுநாள் காலையில் விசாரித்தபோது, 'கோத்தகிரியில் மழை; குன்னூரில் இல்லை' என்றார்கள். இரண்டாவது நாள் ஷூட்டிங் குன்னூரில் நடந்தது. மூன்றாவது நாள் ஊட்டியில் மழை இல்லை. அதனால், அங்கேயே பாடல் காட்சியைப் படமாக்கி முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். அதேநேரம், `ரத்தத்தின் ரத்தமே' ஷூட்டிங்கை ஐந்து நாள்கள் நடத்தத் திட்டமிட்டு ஊட்டிக்கு வந்து, மழை காரணமாக படப்பிடிப்பு நடத்தாமலேயே சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார், பாக்யராஜ்." என்றவர், தொடர்ந்தார்.

``பொள்ளாச்சியிலிருந்து மேலே போனால் ஆழியார் டேம், மங்கி ஃபால்ஸ், அடுத்து அட்டக்கட்டி பகுதியில் ஈபி கெஸ்ட் ஹவுஸில்தான் `ராஜாதி ராஜா', `குங்குமச் சிமிழ்', `திருமதி.பழனிச்சாமி', 'என் ஆசை மச்சான்' படங்களின் படப்பிடிப்புகளை நடத்தினேன். வழக்கமாக நான் இயக்கும் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு வேலை செய்வதில் சிரமமே இருக்காது. ஜாலியாகப் படப்பிடிப்பில் கலந்துகொள்வார்கள். ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்த `ராஜாதி ராஜா' படத்தை ஐம்பதே நாள்களில் இயக்கி முடித்தேன். சமயத்தில், நான் படமாக்கிய காட்சிகள் நடிகர்களுக்கே தெரியாது.  

`சார், அந்தப் பாட்டை ஷூட் பண்ணலையா?' எனக் கேட்பார், ரஜினி. 'அதை அந்த வீட்டிலேயே ஷூட் பண்ணிட்டோம் சார்' எனப் பதில் சொல்வேன். ஆச்சர்யமாகப் பார்ப்பார். சின்ராசு கேரக்டர் காமெடி கலந்தது. அதனால், அவர் பயந்து ஓடும் காட்சியை நடித்துக்காட்டச் சொன்னார், ரஜினி. நானும் நடித்துக்காட்ட, அதைத் திரும்பத் திரும்பக் கேட்டார். பிறகு, அந்தக்காட்சியை தனக்கே உரிய பிரமாதமான பாடிலாங்குவேஜில் நடித்ததைப் பார்த்து, அசந்துவிட்டேன். தியேட்டரில் அந்தக் காட்சிக்கு எழுந்த கைதட்டலே அதற்குச் சாட்சி. 

கல்யாண வீட்டில் நதியாவின் அப்பா வினுசக்ரவர்த்தியிடம் கோபமாகப் பேசும் காட்சியில், 'நான் 50 ஆயிரம் கொண்டுவந்து கொடுப்பேன்' என்று ரஜினி சவால் விடும் வசனம் இருந்தது. அந்த வசனத்தைக் கூர்ந்துகேட்ட ரஜினி, `சார், இந்த வசனத்தை நான் பேசுறதுக்குப் பதிலா, எங்க அம்மா பேசினால் நல்லா இருக்கும்' என்றார். அந்த யோசனை எனக்கும் பிடித்திருந்தது, அப்படியே படமாக்கினோம். ரஜினியிடம் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த விஷயம், ஒரு முடிவை லேசில் எடுக்கமாட்டார்; ஆயிரம் முறை யோசிப்பார். முடிவெடுத்துத் தீர்க்கமாக இறங்கிவிட்டால், அதை வெற்றிகரமாக முடிக்கும்வரை ஓயமாட்டார். சினிமாவில் பொதுவாக, ஹீரோக்களுக்கு அந்தப் படம் மனசுக்குப் பிடிக்கவில்லையெனில், ஷூட்டிங் வராமல் அந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளரைக் கழுத்தறுப்பார்கள். ரஜினியைப் பொறுத்தவரை, ஷூட்டிங் வந்தபிறகு, அந்தப் படம் அவருக்குப் பிடிக்காமல் போனாலோ அல்லது இயக்குநர், தயாரிப்பாளருடன் கருத்து மோதல் ஏற்பட்டாலோ... ஒப்புக்கொண்டபடி படத்தை சீக்கிரமாக முடித்துக்கொடுத்துவிட்டு, இயக்குநர் - தயாரிப்பாளருக்குத் தொல்லை தராமல் ஒதுங்கிவிடுவார். அவரிடம் நான் வியந்து பார்க்கும் உயர்ந்த பண்பு இது.'' என்கிறார், ஆர்.சுந்தர்ராஜன்.