Published:Updated:

கட்டணக் கழிப்பறை, பேப்பர்மேன், கர்சீப் விற்பவர்.. ரங்கநாதன் தெருவின் குட்டிக் கதைகள்..! அங்காடித் தெரு சுவாரஸ்யம் - #9YearsOfAngadiTheru

கட்டணக் கழிப்பறை, பேப்பர்மேன், கர்சீப் விற்பவர்.. ரங்கநாதன் தெருவின் குட்டிக் கதைகள்..! அங்காடித் தெரு சுவாரஸ்யம் - #9YearsOfAngadiTheru
கட்டணக் கழிப்பறை, பேப்பர்மேன், கர்சீப் விற்பவர்.. ரங்கநாதன் தெருவின் குட்டிக் கதைகள்..! அங்காடித் தெரு சுவாரஸ்யம் - #9YearsOfAngadiTheru

ரங்கநாதன் தெரு ஜவுளிக் கடைகளையும், நகைக் கடைகளையும் கடந்து செல்லும்போது, அந்தக் கட்டடத்திலிருந்து குளு குளுவென வரும் ஏ.சி. காற்றை அனுபவித்து மகிழ்ந்த நமக்கு, அந்தக் கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் உஷ்ணத்தையும் உணரச்செய்தது, `அங்காடித் தெரு' படத்தின் வெற்றிதான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டல் போல் எங்கும் மக்கள் கூட்டம் விரிந்துகிடக்கும் ரங்கநாதன் தெரு. சமோசா முதல் சாண்ட்விஜ் வரை, 100 ரூபாய் காட்டன் சேலை முதல் லட்சம் ரூபாய் பட்டுப் புடவை வரை... இங்கே விற்கப்படாத பொருள்களே இல்லை. விற்கப்படும் பொருள்களையும், அதன் விலைகளையும் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த நம்மை, அதையெல்லாம் விற்கும் மனிதர்களையும் கொஞ்சம் தலைதூக்கிப் பார்க்கவைத்து, `இவருக்கும் ஒரு வாழ்க்கை, சொல்ல ஒரு கதை இருக்கு!' என யோசிக்க வைத்த படம், `அங்காடித் தெரு'. யோசிக்க வைத்தவர், இயக்குநர் வசந்தபாலன். இந்தப் படம் வெளியாகி 9 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்படம் குறித்த ஒரு ரீவைண்டு!

ஓர் அடுக்குமாடி பல்பொருள் அங்காடியில் பணிபுரிய, கொத்தடிமையாகக் கொணரப்படும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும், அந்நிறுவனங்களில் உள்ள மனிதாபிமானமற்ற நிர்வாகப் போக்குகளையும் சொன்னது, படத்தின் களம். இந்தப் படத்திற்காகப் பல மாதங்கள் அங்கேயே தங்கி ஒரு புலனாய்வு நிருபரைப்போல், நடப்பதைக் கவனித்து உண்மைச் செய்திகளைச் சேகரித்து, அதையே திரைக்கதையாக்கியிருக்கிறார், வசந்தபாலன்.

கிராமத்தில் எந்தக் கவலையும் இல்லாமல் நண்பர்களுடன் கிரிக்கெட்டும், கோலியுமாக விளையாடி வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், ஜோதிலிங்குவும், மாரி முத்துவும்! குடும்பச் சூழல் காரணமாக சென்னைக்கு வேலைதேடி வருகிறார்கள். பெரிய கடையில் வேலை செய்யப்போகிறோம் என்ற பெருமையும், கனவையும் சுமந்து வந்தவர்களுக்கு முதல்நாளே காத்திருந்தது கொத்தடிமைக் கொடூரம்.

`கண்ணில் தெரியும் வானம்..' - இந்தப் பாடல் போதும். ரங்கநாதன் தெருவில் இவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறதென்று சொல்ல! இந்தப் பாடலைப் படத்தின் கதையோட்டக் குறியீடாகக் கூறலாம். `பூமியில் ஏழைகளின் ஜனனம், கடவுள் செய்த பிழையில்லையா, பசிதான் மிகப்பெரும் மிருகம் அதை அடக்கிட வழிகள் இங்கில்லையா' என்ற நா.முத்துக்குமாரின் உணர்ச்சிமிகு வரிகள், அந்த உற்சாக இசையைத் தாண்டி, அவர்களின் வறுமையையும், வலிகளையும் உணரச் செய்தன. உயர்ந்து நிற்கும் கட்டடம், வண்ணமயமான பொருள்கள், துணிகள் என வெளியிலிருந்து பார்க்கப் பிரமாண்டமாக இருக்கும். அந்தப் பிரமாண்டத்திற்கு நடுவே, அந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை நேரெதிராக இருக்கும். இதன் மூலமாகவே சமூக ஏற்றத்தாழ்வுகளைக் காட்டியிருப்பார்கள். 

அஞ்சலியின் ஆகச்சிறந்த நடிப்பிற்கு, இப்படம் ஓர் உதாரணம். அதட்டல், கெஞ்சுதல், துறுதுறுக் குறும்பு என மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, நம்ம ஊர் பெண்ணாகவே கண்ணுக்குத் தெரிவார். `திருச்செந்தூர்காரிகிட்ட வெச்சுக்காதலே' எனத் தெனாவட்டாக இருப்பதாகட்டும், `எப்படி நீ தப்பிச்ச' என லிங்கு கேட்டதற்கு, `மார கசக்கினான்; பேசாம இருந்தேன் போதுமா' எனச் சொல்லிவிட்டு, அடுத்தநொடியே கஸ்டமரிடம் `இந்த டிசைன்ல இந்த ஒரு சேலைதான்மா இருக்கு' எனக் கண்ணீர் மறைத்துப் பதில் சொல்லும் காட்சியாகட்டும்... `கனி'யாகவே வாழ்ந்திருப்பார், அஞ்சலி. இந்தப் படத்திற்காகப் பல விருதுகளும் அவர் கைகளை அலங்கரித்தன. லிங்குவாக நடித்த மகேஷுக்கு இது முதல் படம் என்றால், நம்பமுடியாது. படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் கச்சிதமான தேர்வு.

`நீ யாருன்னு என் தங்கச்சி கேட்டுக்கிட்டே இருந்தா', `நீயென்ன சொன்ன', `சிரிச்சேன்' - இதுபோன்ற காதல் வசனங்கள், `இந்த ஒரு ஆம்பளகிட்டயாவது மான ரோசத்தோடு இருந்துக்கிறேனே' போன்ற அழுத்தமான குரல்... ஜெயமோகனின் உரையாடல்கள் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்தன. பாடல்கள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இன்றும் காதலர்களின் தேசியகீதமாக விளங்குகிறது, `அவள் அப்படி ஒன்றும் அழகில்லை', `கதைகளைப் பேசும்' பாடல்கள். 

படத்தில் பல சமூக அவலங்களைக் கதையோட்டத்திலேயே பேசியிருப்பார், இயக்குநர். லிங்கு படிப்பு சரிவராத காரணத்தால் இந்த வேலைக்குச் சேரவில்லை. 12-ஆம் வகுப்பில் 1108 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே முதல் இடம் பிடித்தும், வறுமை காரணமாகவே படிக்க முடியாமல் சென்னைக்கு வருவது, தீட்டு என்ற பெயரில் நாயைவிட மோசமாக நடத்துவது... என இந்தச் சமூகத்தில் இருக்கும் பிழைகளைப் பதிவு செய்திருப்பார், இயக்குநர்.

`மனுஷன நம்பிக் கடை விரிச்சேன். இன்னிக்குவரைக்கும் குறையில்லை' எனக் கைக்குட்டை விற்கும் பார்வையற்றவர். `இனிமே இது இந்தக் குள்ளனுக்குப் பொறக்கலைனு யாரும் சொல்லமாட்டாங்களேனே' எனச் சொல்லும் குள்ளனின் மனைவி, பேப்பர் பொறுக்கும் பெரியவர், இலவசக் கழிப்பறையைச் சுத்தம் செய்து கட்டணக் கழிப்பறையாக மாற்றிப் பிழைக்கும் இளைஞர்... எனத் தெரு முழுக்க ஆயிரம் வாழ்வின் துளிகள். இந்தக் குட்டிக் குட்டி கிளைக் கதைகள்தாம் அங்காடித் தெருவை இன்னும் நெருக்கமாக உணரச்செய்தது.

இந்தப் படத்திற்காக இயக்குநர் வசந்தபாலன் பல விருதுகளை வாங்கினார். அப்படி ஒரு விருது வாங்கும்போது சொன்னார், `இந்த வெற்றி, அந்த மக்களின் வலிக்குக் கிடைத்த வெற்றி'. நிஜம்தான். ரங்கநாதன் தெரு ஜவுளிக் கடைகளையும், நகைக் கடைகளையும் கடந்து செல்லும்போது, அந்தக் கட்டடத்திலிருந்து குளு குளுவென வரும் ஏ.சி. காற்றை அனுபவித்து மகிழ்ந்த நமக்கு, அந்தக் கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் உஷ்ணத்தையும் உணரச்செய்தது, `அங்காடித் தெரு' படத்தின் வெற்றிதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு