Published:Updated:

``இன்னும் நூறு வருடமாவது வாழும் மகேந்'திறன்' - நினைவுகளைப் பகிரும் நடிகர் பார்த்திபன்!

வே.கிருஷ்ணவேணி
``இன்னும் நூறு வருடமாவது வாழும் மகேந்'திறன்' - நினைவுகளைப் பகிரும் நடிகர் பார்த்திபன்!
``இன்னும் நூறு வருடமாவது வாழும் மகேந்'திறன்' - நினைவுகளைப் பகிரும் நடிகர் பார்த்திபன்!

இயக்குநர் மகேந்திரனின் இறப்பு, மீட்டெடுக்க முடியாத இழப்பு' என்கிறார் நடிகர் பார்த்திபன்.

`தையல்காரன்' படத்தில் நானும் அவரும் முதன் முதலாக எஸ்.முத்துராமன் சாருடைய டைரக்‌ஷனில் பணிபுரிந்தோம். அந்தப் படத்துக்கு டைரக்டர் யாருனு முடிவு செய்யாமல் இருந்தது. அப்போது மகேந்திரன் சாரைத்தான் மனதில் நினைத்திருந்தேன். அவரை எப்படியாவது உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதற்காக, வசனம் வாயிலாக உள்ளிழுத்தேன். அப்போது அவருக்குப் பட வாய்ப்புகள்  பெரிதாக அமையவில்லை. `தையல்காரன்' படமும் சரியாகப் போகவில்லை. அதற்குப் பிறகு இருவரும் இணைந்து எதாவது படம் பண்ணுவோம் என்று பேசுவோம். அது பாதியிலேயே நின்றுவிடும். இப்படியே எங்களுடைய காலங்கள் கடந்தே விட்டது. நடக்கவே இல்லை என்கிற வருத்தம் இப்போதுவரை உண்டு. இப்படிப்பட்ட மரியாதைக்குரிய, அன்புக்குரியவர்களை வெறும் சால்வைக்குள், மரியாதைக்குள் மட்டுமே அடக்கிவிடாமல் அதை மீறி எதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன்'' என்றவர், 

`` `கைகொடுக்கும் கை' படம் கூட அவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனால், அவருடைய இறுதிக்காலத்தில் அவருடைய நடிப்பு அவருக்கு கைகொடுத்தது. விஜய் படத்தில் பார்க்கும்போதுதான் பிரமாதமான ஆக்டராகத் தெரிந்தார். கூச்ச சுபாவம் உள்ளவர். என்னுடைய `கதை, திரைக்கரை வசனம்' படத்துக்கான விமர்சனம் எழுதிய அவருடைய கடிதத்தைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். கடைசி வரைக்கும் அவர் நாம் தொடமுடியாத இடத்தில்தான் இருக்கிறார். கடந்த இரண்டு மாதத்துக்கு முன்புதான் சந்தித்தேன்.

வயசைத்தாண்டி, மனத்தளர்ச்சிதான் அதிகமாக இருக்கும் ஒரு கலைஞனுக்கு. எதாவது நிகழ்ச்சிக்கு கிளம்பும்போதுகூட, நான் எப்போ படம் பண்ணி என்னுடைய படத்துக்காக எப்போது போகப்போறேன்னுதான் அவர் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கும். அவருடன்தான் என்னால் வேலை பார்க்க முடியவில்லை. அவருடைய மகனுடனாவது பணியாற்ற வேண்டும் என்கிற எண்ணம் காலையிலிருந்து ஓடிக்கொண்டே இருக்கிறது.

சாகிற வரை சாதிக்கவில்லையே எனப் பல பேருடைய மரணம் வருத்தம் அளிக்கும். இவருடைய புகழ் இன்னும் நூறு வருடங்கள் போனாலும் சாகாதது. ஒரு வாரமோ, பத்து நாளோ இருப்பார்கள்; பொதுவான துக்கத்துடன் இருப்பார்கள். ஆனால், இவருடைய சாதனை சினிமா இருக்கும் வரை இருக்கும். இன்றைய இளைஞர்களுக்கு அவர் மீதான மரியாதை எப்போதும் இருக்கிறது. எனக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் அவர். இன்றைக்கும் கல்லூரி விழாக்களில் பார்க்கும்போது ரஜினிக்கு வரும் கைத்தட்டல்கள், மகேந்திரன் சாருக்கும் உண்டு. சினிமா என்பது கமர்ஷியல் மட்டுமல்ல. காசு மட்டுமே சம்பாதிக்க மட்டுமல்லாமல், மைல் ஸ்டோனைப் பதித்தவர்களில் மிகச்சிலரில் மகேந்திரனும் ஒருவர். `தங்கப் பதக்கம்' போன்ற கமர்ஷியல் படங்களை எழுதி அவரே இயக்குநராக மாறும்போது அவரே கேரக்டராக மாறினார். பெருமையும், சந்தோஷத்தையும் கொடுக்கக்கூடிய மரணம் மகேந்திரன் சாருடைய மரணம். இதை மாற்றுச் சிந்தனையாகச் சொல்றேன்'' என்று முடித்தார் பார்த்திபன். 

வே.கிருஷ்ணவேணி

வெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.