Published:Updated:

`` ‘மிஸ்டர் அருள்’னு அவர் கூப்பிடுறது அவ்ளோ அழகு!” - மகேந்திரன் குறித்து நெகிழும் அருள்நிதி 

உ. சுதர்சன் காந்தி.
`` ‘மிஸ்டர் அருள்’னு அவர் கூப்பிடுறது அவ்ளோ அழகு!” - மகேந்திரன் குறித்து நெகிழும் அருள்நிதி 
`` ‘மிஸ்டர் அருள்’னு அவர் கூப்பிடுறது அவ்ளோ அழகு!” - மகேந்திரன் குறித்து நெகிழும் அருள்நிதி 

இயக்குநர் கரு.பழனியப்பன் இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவாகிவரும் ’புகழேந்தி என்னும் நான்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இயக்குநர் மகேந்திரன். 

அவருடன் தான் பணியாற்றிய அனுபவத்தைப் பற்றி பேசிய அருள்நிதி, ” ’புகழேந்தி என்னும் நான்’ படந்தோட ஷூட்டிங்லதான் மகேந்திரன் சாரை முதன்முதல்ல பார்த்தேன். அவருடைய படங்களைப் பார்த்திருக்கேன். வீட்டுல இருக்கிறவங்க சொல்லி அவரைப் பத்தி கேள்விபட்டிருக்கேன். ஆனா, இதுக்கு முன்னாடி அவரை சந்திச்சது இல்லை. அவர் கார்ல கூலிங் கிளாஸ் போட்டு வரும்போது, அப்படியே ரஜினி சாரை பார்க்கிற மாதிரி இருக்கும். அவர் நடை, பேச்சு, குரல் எல்லாமே செம ஸ்டைலா இருக்கும். அந்த வெள்ளைச் சட்டை - வெள்ளை பேன்ட் இவ்வளவு அழகா வேற யாருக்கும் பொருந்தி நான் பார்த்ததில்லை. எல்லோரையும் ’மிஸ்டர்’னு சொல்லிதான் கூப்பிடுவார். ’மிஸ்டர் அருள்’னு அவர் கூப்பிடுறதே அழகா கம்பீரமா இருக்கும். ’மிஸ்டர்.அருள், நீங்க இந்தப் படம் பார்த்திருக்கீங்களா? இதை மிஸ் பண்ணாம பாருங்க’ன்னு மத்த மொழி படங்களைப் பத்தி என்கிட்ட நிறையப் பேசுவார். 

எங்க படந்தோட ஷூட்டிங்ல இருக்கும்போதே சாருக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. அவ்ளோ முடியாம இருக்கும்போதும், எங்களை தொந்தரவு பண்ணக்கூடாதுனு, அவரும் அவர் மனைவியும் மட்டும் ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டாங்க. அப்புறம் தகவல் தெரிஞ்ச பிறகு தான் நானும் கரு.பழனியப்பன் சாரும் போனோம். ஐ.சி.யூல அட்மிட்டாகி இருந்தபோதுகூட ’மிஸ்டர்.கரு.பழனியப்பன், நாளைக்கு ஷூட் போலாமா?’னு கேட்டார். தொடர்ந்து ஃபைட் சீன்கள் நடிக்கிற மாதிரி இருந்தால், ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டுதான் ஷூட்டிங்கே போவோம். ஆனா, ஐ.சி.யூல இருந்துக்கிட்டு ஷூட்டிங் போகலாம்னு அவர் சொன்னபோது, நான் அசந்துபோயிட்டேன். ”நீங்க நடிச்ச ’மெளனகுரு’ எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

அது மாதிரி மீண்டும் ஒரு படம் பண்ணுங்க”னு அடிக்கடி சொல்வார். ஃபகத் ஃபாசிலுடைய ’தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும்’ படத்தை பார்க்கச் சொல்லிட்டே இருந்தார். நானும் சரினு சொன்னேன். ’நாளைக்கு பாக்குறியா அருள்?’னு கேட்டவர், மறுநாளே... அந்தப் படத்துடைய ஒரிஜினல் பிரின்ட்டை  கையில கொடுத்து பார்த்துட்டு சொல்லுங்கன்னு சொன்னார்.  ’நிமிஷத்துக்கு ஒருமுறை அருள் தலைமுடியை சீவிக்கிட்டே இருக்காருப்பா’னு என்னை கிண்டல் பண்ணுவார். அவருடன் இருந்த நாள்களை என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாது. இப்படி ஒரு லெஜண்ட்கூட நடிச்சதை நான் பாக்கியமா நினைக்கிறேன். ஆனா, இனி ‘மிஸ்டர்.அருள்’னு அவர் குரல்ல கேட்க முடியாதுனு நினைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு ” என்றார் வருத்தத்துடன்.