Published:Updated:

``விஜயகாந்த் சாரை திட்டாதேனு சொன்னேன்; வடிவேலு கேட்கல!'' - நடிகர் சுப்புராஜ்

``விஜயகாந்த் சாரை திட்டாதேனு சொன்னேன்; வடிவேலு கேட்கல!'' - நடிகர் சுப்புராஜ்
``விஜயகாந்த் சாரை திட்டாதேனு சொன்னேன்; வடிவேலு கேட்கல!'' - நடிகர் சுப்புராஜ்

`சாரப்பாம்பு’ என்றாலே நினைவுக்கு வருவது காமெடி நடிகர் சுப்புராஜ்தான். அவருடைய பாடி லாங்குவேஜ், குரல்... இவரைத் தனித்துவமாக அடையாளம் காட்டும். சினிமாவில் பெரிதாகச் சாதிக்க வேண்டுமென நினைத்தவர், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என அவர் வீட்டுக் கதவைத் தட்டி ஜாலியாகப் பேசிய விஷயங்கள் இதோ!

`சாரப்பாம்பு’னு எப்படி பேரு வந்தது. `மருதமலை’ படத்தில் ஒரு சீனுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பேரு வெச்சுக்கிட்டாங்க. எனக்கு என்ன பேரு வைக்கிறதுன்னு நானே யோசிச்சேன். அப்போது, `சாரப்பாம்பு’னு வைத்தா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. அது எல்லோருக்கும் பிடிச்சுப் போச்சு!’’ எனத் தன் பெயருக்கான காரணத்தை விளக்கிய `சாரப்பாம்பு’ சுப்புராஜ், தனது சினிமா பயணம் பற்றி பகிர்கிறார். 

``கலைஞன் என்பவன் எப்போதும் ஒரு தாகத்தோடு இருப்பான். அந்தத் தாகம், பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே எனக்கு வந்திடுச்சு. புதுக்கோட்டை மாவட்டம் வையாபுரிப்பட்டி அரசுப் பள்ளியில படிச்சேன். ஸ்கூல்ல ஒரு நிகழ்ச்சிக்காக நாடகம் போட்டேன். அந்த நாடகமும் என் நடிப்பும் பலருக்குப் பிடிச்சிருந்தது. ஒருநாள் எங்க வாத்தியார், `வளர்ந்த பிறகு என்னாகப்போற?’னு கேட்டார். ஒவ்வொரு ஆளும் போலீஸ், மிலிட்டரி, டாக்டர்னு சொல்ல, `நான் இயக்குநர் ஆவேன்’னு சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க. ஆனா, வாத்தியார் 'வெரிகுட்'னு சொல்லி உட்கார வெச்சார். அப்புறம் எனக்குப் பள்ளிக்கூடத்தில் நாடகம் போடுற, நடிக்கிற வாய்ப்பைத் தொடர்ந்து கொடுத்தாங்க. அப்போ நான் சிவாஜியின் வெறித்தனமான ரசிகன். அவர் படத்தை மட்டும்தான் பார்ப்பேன். படம் பார்க்கிறதுக்காகவே அப்பா பாக்கெட்ல இருந்து பணத்தைச் சுட்டிருக்கிறேன். சிவாஜி படம் அறந்தாங்கி, காரைக்குடி, திருச்சினு எந்த ஊர்ல போட்டாலும் பஸ் பிடிச்சுப் பார்த்துட்டு வந்திடுவேன். அப்பா எப்போ சட்டையைக் கழட்டிப்போடுவார், எப்போ காசைக் களவாடலாம்னு நானும் எங்க அண்ணனும் குறியா இருப்போம். 

ஒரு கட்டத்துல அப்பாகிட்ட என் சினிமா ஆசையைச் சொன்னேன். எங்க அப்பா மாணிக்கம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய சர்வர். மதுரை வரைக்கும் ஃபேமஸ் ஆனவர். ஒருமுறை காரைக்குடிக்கு கண்ணதாசன் ஐயா வந்திருந்தார். அப்பா அவர்கிட்ட, 'சுப்பு ஏதோ எழுதுறான், டைரக்டர்னு சொல்றான். என்னனு தெரியல. கொஞ்சம் விசாரியுங்களேன்'னு சொல்லி அறிமுகப்படுத்தினார். அப்போ நான் பத்தாம் வகுப்பு படிச்சுக்கிட்டிருந்தேன். 'படிப்பைப் பாரு முதல்ல'னு கண்ணதாசன் சொன்னார். 'எனக்கு படிப்பு வரல.. நடிக்கத்தான் வருது'னு பிடிவாதமா நின்னேன். அப்புறம் நான் கண்ணதாசன் ஐயாகிட்ட கதை சொன்னதும் அவருக்குப் பிடிச்சுப்போய் சென்னைக்கு கூட்டிக்கிட்டு வந்துட்டார். சென்னைக்கு வந்த பிறகு, பாரதிராஜா இயக்கிய 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். அங்கிருந்துதான் என் சினிமா பயணம் தொடங்கியது. பிறகு பஞ்சு அருணாச்சலம், சி.என்.சண்முகம்னு பல பெரியாளுங்ககிட்ட வேலை பார்த்தேன். பலருடைய அறிமுகம் கிடைச்சது. அப்படியே பல படங்கள்ல வேலை பார்த்து, இதோ நான் சினிமாவுக்கு வந்து 43 வருடம் ஆகிடுச்சு. ஐ.வி.சசி, சிராஜ், லியாகத் அலிகான், ஆர்.கே.செல்வமணி எனப் பல பேரிடம் வேலை பார்த்துட்டேன்'' என்றவர், தான் காமெடி நடிகனானது, ராஜ்கிரணை நடிகராக அறிமுகப்படுத்தியது எனப் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிரத் தொடங்கினார்.  

''`கிழக்கே போகும் ரயில்’, 'வருவான் வடிவேலன்', 'ஏணிப்படிகள்' படங்களில் பணியாற்றியிருக்கேன். 'ராசாவே உன்னை நம்பி', 'என் ராசாவின் மனசிலே', 'அரண்மனைக் கிளி' எனப் பல படங்களில் அசோசியேட்டா வேலை பார்த்தேன். அப்போ ராஜ்கிரண் பெரிய தயாரிப்பாளர். 'ராசாவே உன்னை நம்பி', 'என் ராசாவின் மனசிலே', 'அரண்மனைக் கிளி', 'எல்லாமே என் ராசாதான்'னு பல படங்களைத் தயாரித்தவர். 'என் ராசாவின் மனசிலே' படத்தின் இயக்குநர் கஸ்தூரி ராஜா அந்தப் படத்துக்கான ஹீரோவைத் தேடிக்கிட்டிருந்தார். தயாரிப்பாளர் ராஜ்கிரண்கிட்ட கதையைச் சொல்றப்போ, கூர்ந்து கவனிச்ச அவர், 'கதையை நான் சொல்லிப் பார்க்கட்டுமா'னு அவரே கூட இருந்தவங்ககிட்ட சொன்னார். அந்தக் கதையைச் சொல்லும்போதே, அவர் முகத்துல அப்படி ஒரு ஆக்‌ஷன்! கிட்டத்தட்ட 'மாயாண்டி' கேரக்டராவே மாறியிருந்தார். அவர் கதையைச் சொல்லி முடிச்சதும், ராஜ் கிரண்கிட்ட, 'நமக்கு ஹீரோ கிடைச்சுட்டார் சார்'னேன். 'யார்யா?'னார். 'நீதான் சார்'னேன். அப்போ அவருக்கு 41 வயசு. 'தம்பி அவருக்கு மூக்கு பெருசு... இவரைப்போய் ஹீரோங்கிறீங்களே'னு அங்கிருந்தவங்க சொன்னாங்க. அப்போ 'கிருஷ்ண மூர்த்தி'ங்கிறதுதான் கஸ்தூரி ராஜா பெயர். 'என்ன சுப்புராஜு என் கதையைக் கெடுத்திட்டீங்களே'னு கிருஷ்ண மூர்த்தி வருத்தப்பட்டார். 'இல்லங்க... நீங்க என்ன சொன்னாலும் சரி, ராஜ் கிரண்தான் ஹீரோ. நீங்கவேணா பாருங்க. இந்தக் கேரக்டர் அவரை எங்கேயோ கொண்டுபோகப் போகுதுனு சொல்லிட்டு வந்துட்டேன்" என்றவர், பிரமிப்போடு அடுத்தடுத்த சம்பவங்களைச் சொல்கிறார்.  

"முதல் நாள் ஷூட், முதல் டேக் எடுத்து முடிச்சதும் 'இந்தப் படம் பெரிய ஹிட்'னு ஒரு லைட் மேன் சொல்றார். அப்படி ஒவ்வொரு ஷாட்டுக்கும் கிளாப்ஸ் அள்ளுது; நடிப்புல வெளுத்து வாங்குறார் ராஜ்கிரண். அந்தப் படத்தை எடுத்து முடிச்சப்போ 45 லட்சம் செலவாகியிருந்தது. இளையராஜாகிட்டதான் மியூசிக் பண்ணச் சொல்லி கேட்டிருந்தோம். படத்தைப் பார்த்த மனுஷன், 'பாட்டே வேண்டாம்யா'னு சொல்லிட்டார். ஆனா, நாங்க பாட்டு வேணும்னு கேட்டோம். மொச்சைக் காய் சாப்பிடுற இடம், பச்சைத் தண்ணியில கால் வைக்காத பொண்ணு, கணவனுக்குக் கறி சமைக்கிறது, ஹீரோயின் செத்த பிறகு ஹீரோ பாடுற பாட்டுனு ஒவ்வொரு இடத்திலும் பாட்டு போடச்சொல்லிக் கேட்டோம். அப்படி இளையராஜா ஐந்து பாடல்களைப் போட்டுக் கொடுத்தார். 'போடா போடா புண்ணாக்கு', 'குயில் பாட்டு' என அத்தனை பாடலிலும் மனுஷன் (இளையராஜா) வாழ்ந்திருப்பாப்ல! ரிலீஸ் பண்ண பணம் தேவைப்பட்டப்போ, இளையராஜா உதவினார். அதே நேரத்தில், 'சின்னத்தம்பி', 'கேப்டன் பிரபாகரன்' படங்களும் ரிலீஸ் ஆகியிருந்தன. ஒவ்வொரு படத்தையும் அலங்கரித்திருப்பார் இளையராஜா. மூன்று படங்களும் இறுதி நாள்கள் வர வர ஒரே மாதிரியான வசூலைப் பெற்றிருந்தது. அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி, என்னைக்கும் சரி... இளையராஜா பாட்டுதான் எங்களுக்கு உயிர்'' என்றவர், இளையராஜாவுக்கும் தனக்குமான அறிமுகத்தைச் சொன்னார். 

''இன்னைக்கும் அவர் எங்கேயாச்சும் என்னைப் பார்த்தா, 'பெரிய இயக்குநரா வருவான்'னு நினைச்சேன், இப்படி ஆகிட்டியே'னு வருத்தமா கேட்பார். முதல் முதல்ல நான் இயக்கிய 'புண்ணியவதி' படம் இன்னும் ரிலீஸ் ஆகாம பெட்டிக்குள்ளே முடங்கிக் கிடக்கு. இதுவரை கிட்டத்தட்ட 49 படங்களுக்கு அசோசியேட் டைரக்டரா வேலை பார்த்திருக்கேன். இப்போ, ஒரு பேய் படம் டைரக்ட் பண்ற வேலையில பிஸியா இருக்கேன்" என்பவர், சமீபகாலமாக நடிகர் வடிவேலுவுடன் பேசுவதில்லை, நடிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறாராம்.  

''நான் நடிக்க வந்ததுல இருந்து இப்போ வரை எனக்கு அம்மா, அப்பா, தெய்வத்துக்குமேல ஒருத்தர் இருக்காருன்னா, அது நடிகர் விஜயகாந்த் சார்தான். எனக்கு சோறு போட்டு வளர்த்த கடவுள் அவர். அவரை அரசியல் காரணங்களுக்காக ஒருமுறை வடிவேலு திட்டிப் பேசிட்டார். 'என் பின்னாடி நீ என்ன வேணாலும் பேசு, என் முன்னாடி அவரைத் திட்டாதே'னு சொல்லிப் பார்த்தேன்; கேட்கலை. கடைசி வரைக்கும் அண்ணன் - தம்பி உறவோடு இருந்துப்போம்னு விலகிட்டேன். இனி அவரே என்னைக் கூப்பிட்டாலும் சேர்ந்து நடிக்க மாட்டேன். வடிவேலுவை 'போடா போடா புண்ணாக்கு' பாடலுக்கு நடிக்க வைத்து, அறிமுகப்படுத்தி வைத்தேன். இன்னைக்கும் அவருக்கு என்மேல அந்த மரியாதை இருக்கு. பெரும்பாலும் வடிவேலுகூட நடிக்கும் காமெடி நடிகர்களை அடிப்பார். ஆனா, இதுவரை என்னை ஒரு படத்துலகூட அடிச்சிருக்க மாட்டார். அந்தளவுக்கு என்மேல மரியாதை. அந்த அன்பு எனக்கும் எப்போவும் உண்டு. இப்போ வர்ற காமெடி நடிகர்கள் கொடுக்கிற வேலையை அப்படியே செஞ்சுட்டுப் போயிடுவாங்க, வடிவேலு அப்படி கிடையாது. அவர் ஒரு கிரியேட்டர். ஆன் தி ஸ்பாட்டில் பல வசனத்தைச் சேர்த்து அந்தக் காமெடிக்குப் புத்துயிர் கொடுப்பார்" என்பவர், சீரியல் அனுபவம், குடும்பம் பற்றியும் சொன்னார்.

" 'சின்னப்பாப்பா பெரியபாப்பா', 'அக்னி நட்சத்திரம்', 'அரசி', 'செல்வி', 'ஜிமிக்கி கம்மல்'னு பல சீரியல்ல நடிச்சிருக்கேன். என் நண்பர்கள் இயக்குநரா இருக்கும்போது, 'நடிச்சுத் தந்தா நல்லாயிருக்கும்'னு கேட்பாங்க. அவங்க அன்பை மறுக்க முடியாம நடிப்பேன். என்னதான் வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், மனைவி சரியாக அமைந்தால் பெரிய கொடுப்பினை. அது என் மனைவி விஜயலட்சுமி மூலமா எனக்குக் கிடைச்சிருக்கு. எனக்கு ரெண்டு பசங்க. பெரியவன் ராஜகுமாரன் பிசினஸ் பண்றார். சின்னவன் மனோஜ் பிரபாகர் விஷூவல் கம்யூனிகேஷன் படிச்சுட்டு பேராசிரியரா வேலை பார்க்கிறார். ஹிருதிக் ரோஷன், நிஷாந்த் ரோஷன்னு ரெண்டு சமத்துப் பேரன்கள். மருமகள்கள் பிரியா, எழிலரசி என அழகான வாழ்க்கையை, நகைச்சுவை உணர்வோடு நடத்திக்கிட்டிருக்கேன். சமீபத்துல, அ.தி.மு.க-வுல சேர்ந்தேன். தலைமைக் கழக பேச்சாளராவும் இருக்கேன்" எனச் சிரிக்கிறார் சுப்புராஜ்.

அடுத்த கட்டுரைக்கு