Published:Updated:

`இந்தக் காட்சி பார்ப்பவர்களை ஊக்கப்படுத்தும்!'‍- மோகன்லாலுக்கு எதிராக பினராயிடம் புகார்

`இந்தக் காட்சி பார்ப்பவர்களை ஊக்கப்படுத்தும்!'‍- மோகன்லாலுக்கு எதிராக பினராயிடம் புகார்
`இந்தக் காட்சி பார்ப்பவர்களை ஊக்கப்படுத்தும்!'‍- மோகன்லாலுக்கு எதிராக பினராயிடம் புகார்

நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கி மோகன்லால் நடிப்பில்  `லூசிஃபர்' திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது. மஞ்சு வாரியர், தொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், கலாபவன் சஜோன், ஜான் விஜய் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் வில்லனாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். மலையாள மக்களின் எதிர்பார்ப்புக்குரிய படமாய் இருந்ததால் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசியலை மையமாகக் கொண்ட இப்படத்துக்குத் தேர்தல் நேரத்திலும் அந்த ஒரு எதிர்ப்பும் வராத நேரத்தில், நேற்று வெளியான போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது.

மோகன்லால் சீருடை அணிந்திருக்கும் காவல்துறை அதிகாரி மார்பின் மீது கால் வைத்திருப்பதுபோல் படத்தில் இருக்கும் காட்சியைக்கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த போஸ்டர் போலீஸ் அதிகாரிகளுக்கிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், படத்தின் விளம்பரத்துக்காக வெளியிடப்பட்ட இந்த போஸ்டரை தடை செய்ய வேண்டும் எனக் கேரள போலீஸ் கூட்டமைப்பு முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில் கேரளாவில் காவல்துறை மீது நடத்தப்படும் தாக்குதல் அதிகரித்து வருவதைக் குறித்தும் பேசியிருக்கிறார்கள். ``முன்பெல்லாம் பெரும் குற்றவாளிகளே போலீஸ் மீது கைவைக்கப் பயப்படும் நிலையிருந்தது. தற்போது, பொதுமக்கள்கூட காவல்துறையைத் தாக்க அஞ்சாத நிலை வந்துள்ளது. சோதனைச் சாவடிகளில் நிற்காமல் செல்வது, குடித்துவிட்டுக் காவல் துறையினரைத் தாக்குவது என இருக்கும் நிலையில், மோகன்லால் போன்ற சமுதாயத்தில் செல்வாக்குள்ள நடிகர் இதுபோல் காட்சிகள் நடிப்பது பார்ப்பவர்களை ஊக்கப்படுத்துவதுபோல் அமையும்" எனத் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஹெல்மெட் அணிவதைக் கட்டாயப்படுத்துதலுக்கு திரைப்படங்களில் அறிவிப்பு வாக்கியங்கள் வருவது போல `காவல்துறை அதிகாரிகளைத் தாக்குவது தவறு' என்ற வாசகமும் திரைப்படங்களில் இடம்பெற வேண்டும் எனக் கேரள முதல்வரிடம் கோரிக்கையும் வைத்துள்ளனர்.